பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை 2022: வெற்றியாளரின் பெயர் மார்ச் 5-இல் அறிவிப்பு

தங்களுக்குப் பிடித்த சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனையை தேர்ந்தெடுப்பதற்கான பிபிசியின் விருதுக்கு இந்தியா முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பலரும் வாக்களித்துள்ளனர். இந்த விருக்கான பரிந்துரை பட்டியலில் உள்ள ஐந்து வீராங்கனைகளின் பெயர்கள் பிப். 06 அன்று அறிவிக்கப்பட்டது.

அந்த பட்டியலில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகாட், பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த விருதை பெறும் வெற்றியாளரின் பெயர் மார்ச் 5 அன்று அறிவிக்கப்படும்.

விளையாட்டுத்துறையில் புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் ஐந்து வீராங்கனைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். யார் இவர்கள்?

மீராபாய் சானு

பட மூலாதாரம், CLIVE BRUNSKILL

படக்குறிப்பு, மீராபாய் சானு

மீராபாய் சானு

பளு தூக்குதல் சாம்பியனான சாய்கோம் மீராபாய் சானு 2021ஆம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் விளையாட்டு வரலாற்றில் தனது பெயரைப் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து 2022இல் உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

2016ஆம் ஆண்டு ரியோ விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பிட்ட எடையைத் தூக்கத் தவறியதில் இருந்து மீராபாயின் பயணம் நெடுந்தூரம் வந்துள்ளது. கிட்டத்தட்ட அவர் விளையாட்டில் இருந்து விடை பெற்றுவிட்டார். ஆனால், 2017 உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், அவர் தனது திறமையை நிரூபித்தார்.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஒரு தேநீர் கடை உரிமையாளரின் மகளாகப் பிறந்தவர் மீராபாய். அவர் தனது விளையாட்டு வாழ்க்கையின் ஆரம்பக் கட்டங்களில் அதிகமான நிதி நெருக்கடிகளைச் சந்தித்தார். ஆனால், அனைத்து சோதனைகளையும் சமாளித்த அவர், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் ஆனார். மீராபாய் சானு 2021ஆம் ஆண்டிற்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார்.

சாக்ஷி மாலிக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாக்ஷி மாலிக்

சாக்ஷி மாலிக்

2016 ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் சாக்ஷி. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நான்காவது இந்தியப் பெண் இவர். சாக்ஷி எப்போதும் விளையாட்டில் ஆர்வமாக இருந்தார்.

அவருடைய தாத்தாவும் ஒரு மல்யுத்த வீரர் என்பதை அறிந்ததும் உத்வேகம் கொண்டார். அவர் பதக்கம் வென்ற ரியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு, சாக்ஷியின் விளையாட்டு வாழ்க்கை பின்னடைவை சந்தித்தது.

ஆனால், அவர் 2022இல் பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று அசத்தலான மறுபிரவேசத்தை நிகழ்த்தினார். சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வினேஷ் போகாட்

வினேஷ் போகாட்

மல்யுத்தத்தில் இரண்டு உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண், வினேஷ் போகாட். இவர், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை.

பல்வேறு எடைப் பிரிவுகளில் பதக்கங்கள் வந்திருந்தாலும், வினேஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 53 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது, அவரது சமீபத்திய வெற்றி.

அவரது உறவினர்களான கீதா, பபிதா போகாட் ஆகியோரும் சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளனர். இதன்மூலம் பல சர்வதேச பதக்கங்களை வென்ற பெண் மல்யுத்த வீரர்களைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவராகத் திகழ்கிறார் வினேஷ் போகாட்.

பிவி சிந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிவி சிந்து

பிவி சிந்து

பேட்மிண்டன் வீராங்கனை புசர்லா வேங்கட சிந்து (பி.வி.சிந்து), ஒலிம்பிக்கில் இரண்டு தனிநபர் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண். டோக்கியோவில் வெண்கலப் பதக்கம் வென்றது, அவருடைய இரண்டாவது ஒலிம்பி வெற்றி. அவர் 2016இல் ரியோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பி.வி.சிந்து 2022 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார்.

முன்னதாக, அவர் 2021இல் உலக பேட்மின்டன் கூட்டமைப்பின் சர்வதேச டூர் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். 2019ல் சிந்து உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியராக வரலாறு படைத்தார். அவர் செப்டம்பர் 2021இல் தனது 17 வயதில் உலகத் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தார்.

பொது மக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு முதல் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார்.

நிகத் ஜரீன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிகத் ஜரீன்

நிகத் ஜரீன்

2011ல் ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை வென்ற நிகத் ஜரீன், 2022ல் பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியனாக உயர்ந்தார். பர்மிங்ஹாம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஃப்ளைவெயிட் பிரிவில் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கத்தையும் நிகத் வென்றார்.

அவர் இந்தியாவில் நடந்த தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்துடன் 2022ஆம் ஆண்டை முடித்தார். தனது ஆற்றல் மிக்க மகள், அவருடைய ஆற்றல் முழுவதையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்க வேண்டும் என்பதற்காக, ஜரீனின் தந்தைதான் அவரை விளையாட்டில் அறிமுகப்படுத்தினார்.

12 வயதில் சண்டையின்போது கண்களில் கருவளையம் ஏற்பட்டது, திருமண வாய்ப்பு குறித்து உறவினர்கள் முன்வைத்த மோசமான கருத்துகள் ஆகியவற்றால் அவரது தாய் அடைந்த ஆரம்ப கால கவலைகளை ஒதுக்கிவிட்டு, அவருடைய கனவுகளைப் பின்பற்றுமாறு அவரை ஊக்குவித்தார் அவரது தந்தை. அதன் பிறகு நிகத் தயக்கமின்றி ஓடிக் கொண்டிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: