சந்திர சேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு: சம்பவம் குறித்து ஓட்டுநர் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

உத்தர பிரதேசத்தில் அசாத் சமாஜ் கட்சியின் (கன்ஷி ராம் ) தலைவர் சந்திர சேகர் ஆசாத் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கும் சம்பவம் தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் புதன்கிழமையன்று அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தியோபந்தில் உள்ள தன்னுடைய ஆதரவாளர் ஒருவரின் வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, சந்திரசேகர் ஆசாத்தின் மீது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்திற்கு, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காரணமென எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் உத்தர பிரதேசத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு குறித்தும் அவர்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

”காரில் வந்த சில ஆயுதம் ஏந்திய நபர்கள், சந்திர சேகர் ஆசாத்தின் வாகனத் தொடர்வரிசை மீது தாக்குதல் நடத்தினர்” என சஹரன்பூரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் விளக்கம் என்ன?

”சந்திர சேகர் ஆசாத்தின் உடம்பில் உரசிய துப்பாக்கிக் குண்டுகள், அதுவாகவே வெளியே வந்துவிட்டன எனவும், அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் எனவும்” மூத்த காவல் கண்காணிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சந்திர சேகர் ஆசாத் தற்போது சிகிச்சைக்காக தேவ்பந்த் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தியோபந்த் பகுதியில் நடைபெற்றிருப்பதால், அப்பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

”சந்திர சேகர் ஆசாத்தின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து காவல்துறையினருக்கு மாலை 5.15 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். இந்தச் சம்பவத்தில் அவரது வயிற்றுப்பகுதியைத் தாக்கிய துப்பாக்கிக் குண்டு வெளியே வந்துவிட்டது. அதனால் அவர் பாதுகாப்பான நிலையில்தான் இருக்கிறார். அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை,” என்று சஹரன்பூரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாகவும், மருத்துவர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் குழுக்களும் விசாரணையில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

சந்திர சேகர் ஆசாத் துப்பாக்கியால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அவரது உதவியாளர் ஒருவர், பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷாவிடம் உறுதிப்படுத்தினார்.

தன்னுடன் சேர்த்து மற்றொரு நபரும் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று சந்திர சேகர் ஆசாத் கூறுகிறார்.

தாக்குதலுக்குப் பிறகு சந்திர சேகர் ஆசாத் கூறியது என்ன?

”என் மீது நடத்தப்படவிருந்த தாக்குதலை நான் கவனிக்கவில்லை. ஆனால் என்னுடன் பயணித்த சகாக்கள் கவனித்துவிட்டனர்,” என்று சந்திர சேகர் ஆசாத் கூறுகிறார்.

“சஹரன்பூர் செல்லும் சாலையை நோக்கித் தாக்குதல் நடத்தியவர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எங்களுடைய வாகனத்தில், என்னுடைய சகோதரர் உட்பட மொத்தம் 5 பேர் பயணித்துக் கொண்டிருந்தோம்.

இந்தத் தாக்குதலில் என்னுடன் சேர்த்து, உடன் பயணித்துக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவரையும் துப்பாக்கிக் குண்டுகள் தாக்கின. எனக்கு என்ன நடக்கிறது எனப் புரியவில்லை. மிகவும் பதற்றமான நிலையில் இருந்தேன். சஹரன்பூரில் உள்ள மூத்த அதிகாரி ஒருவரை அழைத்து என் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறினேன்,” என சந்திரசேகர் ஆசாத் தெரிவித்திருக்கிறார்.

சம்பவத்திற்குப் பிறகு சந்திரசேகர் ஆசாத் சஹரன்பூரின் மூத்த காவல் காண்காணிப்பாளரைத் தொடர்புகொண்டு தாக்குதல் குறித்து தகவல் தெரிவித்ததாகத் தெரிய வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்ற கேள்வியை சந்திர சேகர் ஆசாத்திடம் முன்வைத்தபோது, “எனக்கு யாரிடமும் எந்தத் தகராறும் இல்லை” என அவர் பதிலளித்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து காவல்துறை என்ன கூறுகிறது?

”எஸ்யூவி காரில் வந்துகொண்டிருந்த சந்திரசேகர் ஆசாத்தை, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் தாக்கினர்,” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

சந்திர சேகர் ஆசாத்தின் வாகனத் தொடர்வரிசை மீது துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

எஸ்வியூவின் வலது பக்கத்திலிருந்து தாக்குதல் நடைபெற்றதில், காரின் கதவுகள் துளைக்கப்பட்டு துப்பாக்கிக் குண்டுகள் சந்திரசேகர் ஆசாத்தின் வயிற்றைத் தாக்கியதாகத் தெரிய வருகிறது.

மேலும் இந்தத் தாக்குதலில் எஸ்வியூவின் பின்பக்க கண்ணாடிக் கதவு நொறுக்கப்பட்டிருக்கிறது. காரின் இருக்கை ஒன்றில் துப்பாக்கி்க குண்டுகள் துளைக்கப்பட்டிருப்பதற்கான அடையாளம் தெளிவாகத் தெரிகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண் ஹரியானாவை சேர்ந்தது என்பது தெரிய வந்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அபிமன்யு மங்லிக் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் காரணமாக மாவட்டத்தின் எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வாகன ஓட்டுநர் அளித்த தகவலின்படி வழக்குப் பதிவு

இந்தச் சம்பவம் குறித்து தற்போது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தின்போது சந்திர சேகர் ஆசாத்துடன் இருந்த வாகன ஓட்டுநர் மனிஷ் குமார் அளித்துள்ள தகவலின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை சந்திர சேகர் ஆசாத் தரப்பு வழக்கறிஞர் ராஜேஷ் குமார் கௌதம் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

"கொலை முயற்சி, திட்டமிட்ட சதி மற்றும் எஸ்.சி, எஸ்.டி., சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டறிந்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்,” என ராஜேஷ் குமார் கௌதம் குறிப்பிடுகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து வாகன ஓட்டுநர் மனிஷ் குமார் கூறுகையில், “நான்தான் வாகனம் ஓட்டினேன். எங்கள் கட்சியின் உறுப்பினர் ஒருவருடைய தாயார் இறந்துவிட்டார். தியோபந்தில் நடந்த அந்த துக்க நிகழ்வில் கலந்துகொண்டு நாங்கள் திரும்பிக்கொண்டிருந்தோம்,” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அப்போது மணி 4.50 இருக்கும். காந்தி காலனியின் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அங்கே ஒரு வேகத்தடை இருந்ததால் மெதுவாகச் சென்றேன்.

அந்த நேரத்தில் எங்களுக்கு இடது பக்கத்தில் வெள்ளை நிற மாருதி ஸ்விஃப்ட் கார் ஒன்று வந்து நின்றது. திடீரென கார் டயர் வெடிப்பது போன்ற சப்தம் கேட்டதோடு, எங்கள் மீது தாக்குதலும் நடக்கத் தொடங்கியது,” என்று குறிப்பிடுகிறார்.

தாங்கள் சென்ற காரில் மொத்தம் 5 பேர் இருந்ததாகக் கூறும் மனிஷ்குமார், தங்கள் மீது தாக்குதல் நடத்திய அந்த காரின் பின் இருக்கையில் 2 இளைஞர்கள் இருந்ததாகக் கூறுகிறார்.

அதேநேரம் அந்த காரை ஓட்டி வந்த வாகன ஓட்டுநரின் முகம் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

சம்பவத்தின்போது சந்திர சேகர் ஆசாத்துடன் காரில் பயணித்த சுக்விந்தர் சிங் கூறும்போது, “இந்தத் தாக்குதல் திடீரென நடைபெற்று விட்டது. அப்போது ஓட்டுநர் மனிஷ் குமார் வாகனத்தை உடனடியாக யூ டர்ன் செய்ததால் நாங்கள் தப்பித்தோம்,” என்று சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

உத்தர பிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது

சந்திர சேகர் ஆசாத் மீது நடைபெற்றிருக்கும் இந்தத் தாக்குதலுக்கு எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு குறித்து சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உபி.,யின் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் , “உத்தர பிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறதா?” என டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சந்திர சேகர் ஆசாத் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது எனவும், இது ஒரு கோழைத்தனமான செயல் எனவும் அகிலேஷ் யாதவ் சாடுகிறார்.

மேலும், ’பாஜகவின் ஆட்சியில் மக்களின் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த நிலை என்ன?’ எனவும் அவர் கேள்வியெழுப்புகிறார்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

”ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தைரியமாகப் போராடி வரும் சந்திர சேகர் ஆசாத் போன்ற இளம் தலைவர் மீது பட்டப்பகலில் நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவம், உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் காட்டாட்சியின் எதார்த்த நிலையைக் காட்டுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என சஞ்சய் சிங் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: