You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
10 பேரை கொலை வழக்கில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு 90 வயதில் சிறைக்குச் சென்ற நபர் - இந்த தாமதம் ஏன்?
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி செய்திகள், டெல்லி
42 ஆண்டுகளுக்கு முன் சாதி மோதலில் 10 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கடந்த வாரம் கிராமவாசி ஒருவருக்கு 90 வயதில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இத்தீர்ப்பு மிகவும் காலதாமதமாக நீதி வழங்கியிருப்பதாக, கொலை செய்யப்பட்ட நபர்களின் குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதற்கான மிகச் சிறந்த உதாரணமாக இந்த வழக்கு இருப்பதாக சட்ட வல்லுனர்கள் விமர்சித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சாத்பூரில் நடந்த அந்த தாக்குதல் சம்பவம் 1981ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதியன்று நடந்ததாக அக்கிராமத்தைச் சேர்ந்த வயதான நபர்கள் கூறுகின்றனர்.
"மாலை 6.30 மணி இருக்கும். எனது வீட்டு வாசலுக்கு வந்த ஒரு கும்பல் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டது," என்கிறார் பிரேம்வதி. அவருக்கு என்ன வயதிருக்கும் என்பது குறித்து துல்லியமான அவருக்கே தெரியாத நிலையில், 75 வயது இருக்கலாம் என பொதுவாக அவர் நம்புகிறார்.
"அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் மழை பெய்வதைப் போல் துப்பாக்கி தோட்டாக்களால் சுடத் தொடங்கினர்," என்கிறார் அவர். மேலும், அந்த தாக்குதலின் போது, ஒரு சில நிமிடங்களில் தமது பத்து மற்றும் எட்டு வயது மகன்களும், 14 வயது மகளும் துடிதுடித்து இறந்துவிட்டனர் என்றும், அவர்களது பிணங்கள் தம்மைச் சுற்றிலும் கிடந்ததாகவும் அவர் அந்த சோகமான நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின் அந்த கிராமத்துக்கு சென்று புகைப்படம் எடுத்தவர்களிடம் பிரேம்வதியின் வலது காலில் குண்டடி பட்டு காயமான தழும்பைக் காட்டியிருக்கிறார்.
அந்த தாக்குதலில் அவரது குழந்தைகள் மூவர் உள்பட தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்து பேர் கொல்லப்பட்டனர். பிரேம்வதிக்கும் மற்றொரு பெண்ணுக்கும் படுகாயம் ஏற்பட்டது.
ஃபிரோசாபாத் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வெளியான இந்த தீர்ப்பில், நீதிபதி ஹர்வீர் சிங் தண்டனை விவரங்களை அறிவித்தார். இதன்படி, கொலை குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் உயிருடன் இருக்கும் ஒரே ஒரு நபரான கங்கா தயாளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 55,000 ரூபாய் தொகையை அபராதமாக தயாள் செலுத்தவேண்டும் என்றும், அதைச் செலுத்தவில்லை என்றால் மேலும் 13 மாத கூடுதல் தண்டனையை அவர் அனுபவிக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்ட பத்து பேரில் ஒன்பது பேர் விசாரணையின் போது உயிரிழந்து விட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு சாட்சிகளில் ஏராளமானோர் விசாரணை நடந்த காலத்தில் உயிரிழந்து விட்டதாக இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய ராஜீவ் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
குற்றம் நடந்த காலத்துக்கும் தீர்ப்பு வெளியான காலத்துக்கும் இடையில் 40 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளி இருப்பதால் வழக்கின் பெரும்பாலான வரையறைகள் தெளிவற்றவையாக மாறிவிட்டிருந்தன.
பிரேம்வதியும், அந்த கிராமத்தைச் சேர்ந்த பிற தலித் சமூகத்தினரும், தங்களுக்கு யாரிடமும் பகை உணர்வு இருந்ததில்லை எனத் தெரிவித்தனர். ஆனால், யாதவ் சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நடத்திவந்த நியாயவிலைக் கடை மீது தலித் இளைஞர்கள் சிலர் புகார் அளித்ததால் இரு சாதியினருக்கு இடையே நிலவிய உறவுகள் மோசமடைந்ததாகவும் இதன் விளைவாகவே இந்த வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டதாகவும் அரசு வழக்கறிஞர் உபாத்யாய் தெரிவிக்கிறார்.
இந்த படுகொலைச் சம்பவம் செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்ற நிலையில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், முதலமைச்சர் விஸ்வநாத் பிரதாப் சிங்கும் நேரடியாக இந்த கிராமத்துக்குச் சென்று, உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை விதித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தனர்.
எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பேயும் அந்த கிராமத்துக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
"உயிரிழந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்ற போதிலும், அதற்கான நீதியைப் பெற்றுத்தர உதவுவதாக அவர் எங்களிடம் தெரிவித்தார்," என பிரேம்வதி சொன்னார். மேலும் தற்போது நீதிமன்றம் தண்டனை விதித்த விவரமே, அந்த கிராமத்துக்கு பத்திரிக்கையாளர்கள் சென்ற பின் தான் தமக்குத் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
"இதில் எங்களுக்கு உரிய நியாயம் வழங்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்," என்றார் அவர்.
பிரேம்வதியின் வீட்டுக்கு மிக அருகில் வசிக்கும் மஹராஜ் சிங், மிகவும் இளையவராக இருப்பதால், 42 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைச் சம்பவத்தைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஆனால் "அந்த மாலைநேரத்து படுகொலைகள்" குறித்து தனது வீட்டுப் பெரியவர்கள் தெரிவித்த தகவல்கள் மூலம் தெரிந்துகொண்டுள்ள அவர், "கடைசியில் எங்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது என்பதில் சந்தோஷப்படுகிறேன். ஆனால் அது சரியான நேரத்துக்கு கிடைக்கவில்லை. சரியான நேரத்துக்கு அது கிடைத்திருந்தால் இன்னும் அதிக சந்தோஷப்பட்டிருப்போம்," என்றார்.
"இந்த வழக்கில் தீர்ப்பளிக்க நீதிமன்றங்கள் 42 ஆண்டுகளை எடுத்துக்கொண்டுள்ளன. இந்த தீர்ப்பு ஒரு 5 அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் வந்திருந்தால் எங்கள் குடும்பத்தில் ஏற்கெனவே இறந்து போனவர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும்," என்று மேலும் பேசிய அவர் கூறினார்.
இந்த படுகொலைச் சம்பவம் நடந்த கிராமமான சாத்பூர் ஒரு காலத்தில் மெய்ன்பூர் மாவட்டத்தில் இருந்ததாகவும், பின்னர் 1989ல் அந்த ஊர் புதிதாக உருவாக்கப்பட்ட ஃபிரோசாபாத் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதால் தான் வழக்கு விசாரணை இவ்வளவு தாமதமாக நடந்துள்ளதாகவும் வழக்கறிஞர் உபாத்யாய் தெரிவிக்கிறார்.
2001ம் ஆண்டு வரை அந்த வழக்கு குறித்த ஆவணங்கள் மெய்ன்பூரில் இருந்த நிலையில், அந்த ஆவணங்களையே அதிகாரிகள் மறந்துவிட்டிருந்தனர். பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவை அனைத்தும் ஃபிரோசாபாத் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் 2021ம் ஆண்டு, பழைய வழக்குகளை அவசரகாலத்தில் விசாரித்து தீர்வு காண அரசு மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாகத் தான் ஃபிரோசாபாத் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது என உபாத்யாய் சொல்கிறார்.
"நீங்கள் தவறு செய்திருந்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பமுடியாது என்பதை உங்களுக்கு உணர்த்தவே அரசும், நீதிமன்றமும் முயல்கின்றன," என்கிறார் உபாத்யாய்.
இருப்பினும், சரியான நேரத்தில் நீதி வழங்கப்படவேண்டும் என வழக்கறிஞர் அக்ஷத் பாஜ்பாய் கருதுகிறார்.
"இது உண்மையில் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கருத்துக்கு ஏற்ற தீர்ப்பாகவே இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் காலதாமதம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் 40 ஆண்டுகள் என்றால்?" என அவர் கேட்கிறார்.
பிரேம்வதி போன்ற எளிய மக்களுக்கு "சரியான நீதியை சரியான நேரத்துக்கு வழங்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அவர்கள் இந்நாட்டில் வாழும் தலித் என்பதாலும், விளிம்பு நிலை மக்கள் என்பதாலும் இந்த பொறுப்பு மேலும் அதிகரிக்கிறது," என்கிறார் பாஜ்பாய்.
மேலும், "குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள், சரியான நீதி கிடைக்காமல் 42 ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் என்பது இந்திய குற்றவியல் நீதி பரிபாலன முறையின் குறைபாடு என்பதை மறுக்கமுடியாது," என்கிறார்.
வழக்குகளை விசாரிக்க இத்தனை ஆண்டுகள் தேவைப்படுகின்றன என்பது நீதிமன்றத்தை பொறுத்த பிரச்சினை மட்டுமல்ல. அது இந்திய குற்றவியல் நீதி பரிபாலன முறையில் காணப்படும் மிகப்பெரும் குறைபாட்டையே காட்டுகிறது. இந்த குறைபாட்டினால் ஏராளமான குடிமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நீதிவேண்டி, ஆண்டுக்கணக்கில் அல்லது பல தசாப்தங்களுக்குக் காத்துக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது.
இதன் காரணமாகவே ஏராளமான வழக்குகள் தேங்ககிக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. நாடு முழுவதும் சுமார் 5 கோடி வழக்குகள் இது போல் நிலுவையில் இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்திடம் இந்திய அரசு தெரிவித்திருந்தது.
போதுமான எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லாத நிலையே இது போன்ற பிரச்சினைகளுக்குப் பெரும் காரணமாக அமைந்துள்ளது என லைவ் லா (Live Law) என்ற இணையதளத்தை நிறுவியவரும், பிரபல சட்ட நிபுணருமான ரஷித் கூறுகிறார்.
"இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் நீதிபதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதனால் வழக்கு விசாரணைகள் மிக மெதுவாக நடத்தப்படுகின்றன. இதனால் தீர்ப்புகளும் தாமதமாகவே அளிக்கப்படுகின்றன," என்கிறார் அவர்.
மேலும், "பழமையான நடைமுறைகளை" தொடர்ந்து புழக்கத்தில் வைத்திருப்பது இப்பிரச்சினையை மேலும் வலுவாக்குகிறது. குறிப்பாக சாட்சிகளை விசாரணை செய்யும் போது, தற்போதைய நவீன வசதிகளைப் பின்பற்றும் வாய்ப்பு இல்லாதததால், சாட்சிகள் சொல்வதை அப்படியே கைப்பட எழுதவேண்டிய நிலை காணப்படுகிறது. இதுவும் காலதாமதத்துக்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது என்கிறார் அவர்.
உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீட்டு மனுக்கள் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கே ஐந்து முதல் பத்து ஆண்டுகள் ஆகின்றன. இதே போன்ற நிலை உச்ச நீதிமன்றத்திலும் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
"இதனால், தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனையை ரத்து செய்வதற்கு கூட 20 அல்லது 30 ஆண்டுகள் ஆவதாகவும், இதனால் ஏராளமான வழக்குகளில் ஏராளமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்றும் அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்