You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
4 குழந்தைகளைக் கொன்றதாக கூறப்பட்ட தாய்க்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு வழங்கப்பட்டது ஏன்?
- எழுதியவர், டாம் ஹூஸ்டென்
- பதவி, பிபிசி செய்திகள், சிட்னி
ஒரு காலத்தில் "ஆஸ்திரேலியாவின் மிக மோசமான தொடர் கொலைகாரி" என விமர்சிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய ஆதாரங்களின் படி, அவர் தமது நான்கு குழந்தைகளைக் கொலை செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கேத்தலீன் ஃபோல்பிக் தனது மகன்கள் காலேப், பாட்ரிக் ஆகியோரையும், மகள்கள் சாரா, லாரா ஆகியோரையும் பத்து ஆண்டுகளில் கொலை செய்ததாக ஒரு நடுவர் அவருக்கு தண்டனை விதித்த பின் இதுவரை இருபது ஆண்டுகளாக சிறையில் இருந்தார்.
ஆனால் அந்த நான்கு குழந்தைகளும் இயற்கையாக உயிரிழந்திருக்கக் கூடும் என அண்மையில் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த 55 வயது பெண்ணின் கதை ஆஸ்திரேலிய வரலாற்றில் நீதித்துறையின் மிகத்தவறான தீர்ப்பை வெளி உலகுக்குக் காட்டியுள்ளது.
ஆனால், கடந்த 2003ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட ஃபோல்பிக், தான் ஒரு நிரபராதி என்பதை எப்போதும் வலியுறுத்திவந்துள்ளார். அவரது மூன்று குழந்தைகளை அவர் சாதாரணமாக கொலை செய்ததாகவும், மூத்த மகன் காலேப்பை கொடூரமாகக் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
10 ஆண்டுகளில் 4 குழந்தைகளைக் கொன்ற தாய்?
1989 மற்றும் 1999ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த நால்வரில் ஒவ்வொருவரும் திடீர், திடீரென மரணமடைந்திருக்கின்றனர். விசாரணையின் போது, அவர்களை மூச்சு திணறடித்து ஃபோல்பிக் கொலை செய்ததாக போலீசார் குற்றம் சாட்டினர். உயிரிழந்த நால்வரும் 19 நாட்கள் முதல் 19 மாதங்கள் வரை வயதுடையவர்களாக இருந்தனர்.
இதற்கு முன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை மற்றும் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட தனி விசாரணைகளில் ஃபோல்பிக்கின் குழந்தைகள் உயிரிழந்ததற்கு வேறு எந்த காரணமும் இருந்ததாகத் தெரியவரவில்லை என்பதுடன், ஃபோல்பிக்கின் மீதான முந்தைய குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதத்திலேயே அவை இருந்தன.
ஆனால் ஓய்வுபெற்ற நீதிபதி டாம் பாதர்ஸ்ட்டின் தற்போதைய ஒரு புதிய விசாரணையில், மரபணுக்களில் ஏற்படும் ஒரு சில மாற்றங்களின் காரணமாக அவர்கள் நால்வரும் இறந்திருக்கலாம் என புரிந்துகொள்ளப்பட்டது.
ஃபோல்பிக் குற்றவாளி தான் என உறுதிப்படுத்துவதில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி பாதர்ஸ்ட் உறுதியாகச் சொல்கிறார். அவர் மீதான ஒவ்வொரு குற்றச்சாட்டிலும் அவர்தான் குற்றவாளி என முடிவெடுக்கமுடியாது என்றும் அவர் இன்று அறிவித்தார்.
இதன் விளைவாக ஃபோல்பிக்குக்கு மன்னிப்பு அளிப்பதாக அறிவித்துள்ள நியூசவுத்வேல்ஸ் ஆளுனர் டேலி, சிறையில் இருந்து அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
"இந்த 20 ஆண்டுகளும் அவருக்கு மிகப்பெரும் சோதனைக் காலமாக இருந்திருக்கிறது.... விடுதலைக் காலத்தை அவர் அமைதியாகக் கழிக்கட்டும்," என டேலி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த நால்வரின் தந்தையான க்ரெய்க் ஃபோல்பிக் குறித்து அக்கறை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். .
2022ம் ஆண்டு நடைபெற்ற விசாரணையின் போது, ஒரே குடும்பத்தில் இரண்டு வயதுக்குக் குறைவான நான்கு குழந்தைகள் இயற்கையாக மரணிக்க வாய்ப்புக்கள் இருக்கமுடியாது என க்ரெய்க் ஃபோல்பிக்கின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
தற்போது அளிக்கப்பட்டுள்ள நிபந்தனையற்ற மன்னிப்பு என்பது ஃபோல்பிக் மீதான வழக்கை எந்த விதத்திலும் பாதிக்காது. ஒருவேளை அந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி பாதர்ஸ்ட் வேறு ஒரு நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தால் அந்த வழக்கு குறித்த இறுதி தீர்ப்பை ஒரு குற்றவியல் நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்யமுடியும். ஒருவேளை அந்த வழக்கு ஒரு நீதிமன்றத்துக்குச் சென்றால் அதில் தீர்ப்பு வர ஓராண்டு காலம் ஆகும்.
தவறான தண்டனை என்றால் இழப்பீடு கோர முடியும்
அதே நேரம் ஃபோல்பிக் மீது விதிக்கப்பட்ட தண்டனை தவறானது என தீர்ப்பளிக்கப்பட்டால், அரசிடமிருந்து இழப்பீடாக அவர் பலகோடி ரூபாய் பணம் கேட்கமுடியும்.
இதற்கு மாற்றாக, லிண்டி சேம்பெர்லெய்ன் என்பவர் அவரது மகள் அசாரியாவைக் கொலை செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் நடந்தது போல் இங்கும் நடக்கலாம். அந்த வழக்கில் தவறுதலாக லிண்டி சேம்பெர்ரெய்னுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், இழப்பீடாக அவருக்கு 8,58,000 அமெரிக்க டாலர் தொகையை அரசு அளித்ததைப் போல, இவருக்கும் ஒரு தொகை அளிக்கப்படலாம்.
ஒரு சில வழக்கறிஞர்கள் அளித்துள்ள தகவலின் படி, ஃபோல்பிக்கின் வழக்கை சேம்பெர்லெய்னுடைய வழக்குடன் ஒப்பிடமுடியாது. அவர் வெறும் மூன்றாண்டுகள் தான் சிறையில் இருந்தார்.
"கேத்தலீன் ஃபோல்பிக் கடந்த 20 ஆண்டுகளில் அடைந்த பாதிப்பை கணக்கிடமுடியாது. அவருடைய குழந்தைகளை இழந்தது மட்டுமல்ல, அறிவியல்பூர்வமாகப் பார்த்தால், நடக்காத கொலைகளுக்காக உயர்பாதுகாப்புடன் கூடிய சிறைச்சாலைக்குள் 20 ஆண்டுகள் பரிதவித்துக்கொண்டிருந்திருக்கிறார்," என்கிறார் அவருடைய வழக்கறிஞர் ரானீ ரெகோ.
சிறைச்சாலை முன்பு ஃபோல்பிக்கின் நீண்ட காலத்திய நண்பர்கள் குழுமியிருந்த நிலையில், அவரை தனிமையில் ஓய்வெடுக்க அனுமதிக்குமாறு அவர்களிடம் ஆளுனர் டேலி வேண்டுகோள் விடுத்தார்.
சட்டம் அறிவியலுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்
2003ம் ஆண்டு நடைபெற்ற விசாரணையின் போது, சந்தர்ப்ப சாட்சியங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டன. குறிப்பாக, நான்கு குழந்தைகளை வளர்ப்பதில் ஃபோல்பிக் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து அவர் டயரியில் எழுதிவைத்திருந்த குறிப்புக்களும் சாட்சியமாக எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஆனால் குழந்தைகளை மூச்சுத்திணறவைத்து கொலை செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் அந்த விசாரணையின் போது முன்வைக்கப்படவில்லை.
இருப்பினும், இந்த வழக்கு குறித்து அண்மையில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டபோது, டயரியில் எழுதப்பட்டிருந்த தகவல்கள், போதுமான ஆதரவின்றித் தவிக்கும் தாய் ஒருவர் தன்னைத் தேற்றிக்கொள்வதற்காக எழுதப்பட்ட தகவல்களாகவே இருந்திருக்கவேண்டும் என கண்டறியப்பட்டது. மேலும், ஒரு தாய் நான்கு குழந்தைகளையும் மூச்சுத்திணறடித்துக் கொலை செய்ய முடியாது என்றும் இந்த முடிவுகளில் கூறப்பட்டிருந்தன.
அண்மையில் புதிதாக நோய் எதிர்ப்பு சக்தி மருத்துவ நிபுணர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி, ஃபோல்பிக்கின் மகள்கள் சாராவும், லாராவும் CALM2 G114R என்ற மரபணு மாற்றம் காரணமாக திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனத்தெரியவந்துள்ளது.
அவருடைய மகன்கள் காலேப் மற்றும் பேட்ரிக் ஆகிய இருவருக்கும் வேறு மாதிரியான மரபணு கோளாறுகள் இருந்தன. அது எலிகளுக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்படுவதுடன் தொடர்புடையதாக இருந்தது.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட குழுவின் தலைவரான பேராசிரியர் கரோலா வினுசியாவின் கூற்றுப்படி, குழந்தைகளின் மரபணு சோதனைக்கு முன்பே சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஃபோல்பிக்கின் டிஎன்ஏவில் விவரிக்க முடியாத மரபணுத் தொகுதி ஒன்று கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் முதலில் சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான மரபணு கண்டுபிடிக்கப்பட்டது... அதற்குப் பின்னரும், குழந்தைகளின் மரணத்துக்கு இது தான் காரணமாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம். உண்மையில் குழந்தைகளின் உடலில் இந்த மரபணு இருந்திருந்தால் அது தான் அவர்களின் உயிருக்கு எமனாக இருந்திருக்கவேண்டும்," என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார். பேராசிரியர் வினுசியாவின் கருத்துப்படி, மரபணுவில் உள்ள மாற்றங்களின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் உலகம் முழுவதும் 134 இடங்களில் தெரியவந்துள்ளதாக கூறினார்.
ஃபோல்பிக் விடுவிக்கப்பட்டிருப்பது ஒரு அருமையான முன்னுதாரணம் எனத்தெரிவித்துள்ள வினுசியா, அவரைப் போலவே சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ள பிற பெண்களுக்கும் இது ஒரு விடிவுகாலத்தைக் கொடுக்கும் என்றார்.
"குழந்தைகளை இழந்த பெண்கள், குழந்தைகளின் உடலில் பாதிப்புக்களுடன் தவிக்கும் பெண்கள் என பலதரப்பட்ட வழக்குகளிலும் இதே போல் குழந்தைகளின் உடலிலும் பாதிப்புடன் கூடிய மரபணுக்கள் இருக்கும் என்றே தோன்றுகிறது," என்றார் அவர்.
சட்டம் என்பது முழுக்க முழுக்க அறிவியலின் பார்வையில் உருவாக்கப்படவேண்டும் என ஆஸ்திரேலிய அறிவியல் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதே கருத்தைத் தான் ஃபோல்பிக்கின் வழக்கறிஞரும் வலியுறுத்துகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்