You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது ஏன்?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியைச் சேர்ந்த பலரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம் என்ன?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக், பாக்கியராசன், சுனந்தா ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் நேற்று மாலையிலிருந்து இந்தியாவில் முடக்கப்பட்டன.
இந்தக் கணக்குகள் எதற்காக முடக்கப்பட்டுள்ளன என்று அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், இந்தியாவின் தகவல் தொடர்பு சட்டத்தை மீறியதால் இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் நிறுவனம் கூறியிருக்கிறது.
சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பிலுள்ள 12 பேரின் ட்விட்டர் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. எந்த ட்வீட்டிற்காக இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
மே 17 இயக்கத்தின் ட்விட்டர் கணக்கும் முடக்கம்
"கடைசியாக மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்த அறிக்கைதான் வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகே கணக்குகள் முடக்கப்பட்டன," என்கிறார் நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளரான சே. பாக்கியராசன்.
அதேபோல, மே 17 இயக்கத்தின் @may17movement என்ற அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. சட்டபூர்வமாக வந்த கோரிக்கையை ஏற்று இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்குகள் இரண்டு ஏற்கெனவே முடக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த அமைப்பின் கணக்கும் முடக்கப்பட்டிருக்கிறது.
"ட்விட்டரில் பதிவு செய்யப்படும் கருத்து தவறாக இருந்தால் அந்த ட்வீட்டை மட்டும் தடை செய்யலாம். ஆனால், அந்தக் கணக்கையே முடக்குவதென்பது வாய்ப்பூட்டுச் சட்டத்தைப் போல இருக்கிறது.
நாங்கள் தொடர்ந்து சமூக ஒற்றுமைக்கு ஆதரவாகவும் கலவரங்கள், தனிநபர் தாக்குதல்கள், மதவெறி, சாதிய படுகொலைகளுக்கு எதிராகவும் பதிவிட்டு வருகிறோம்.
தனிநபர்களைக் கொச்சைப்படுத்தவோ சமூக விரோத செயல்பாட்டுக்கு ஆதரவாகவோ எங்கள் கணக்குகளைப் பயன்படுத்துவதில்லை. அதேபோல, நாங்கள் வெளியிட்ட ட்வீட்டில் ஏதாவது தவறான கருத்து இருக்கிறது என்று, எந்த வழக்கும் எங்கள் மீது கிடையாது.
எங்கள் கருத்துகளையும் அறிக்கைகளையும் வெளியிடவே ட்விட்டர் கணக்கைப் பயன்படுத்துகிறோம். ஏதாவது ஒரு சம்பவம் குறித்து முதல்வரின் கவனத்திற்கோ அதிகாரிகள், காவல்துறையினரின் கவனத்திற்கோ கொண்டு செல்ல ட்விட்டரைப் பயன்படுத்துகிறோம்.
சமூக அநீதிகள் குறித்து நாங்கள் கவனப்படுத்துகிறோம். எங்கள் கணக்குகளை முடக்குவதன் மூலம் ட்விட்டர் சமூக அநீதியை விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது. ட்விட்டர் மட்டுமல்ல ஃபேஸ்புக்கும் இதைத்தான் செய்கிறது," என்கிறார் திருமுருகன் காந்தி.
ட்விட்டர் கணக்கை முடக்கும் முடிவு
ஒரு ட்விட்டர் கணக்கை முடக்கும் அதிகாரம், ட்விட்டர் நிறுவனத்திற்கு மட்டும் இருக்கக்கூடாது என்கிறார் திருமுருகன் காந்தி.
"ஒரு கணக்கை முடக்கும் அதிகாரம் ட்விட்டருக்கு மட்டுமே சொந்தமானதாக இருப்பது எதேச்சதிகாரமானது. கருத்துகளைச் சொல்பவரின் பிரபலத்தை ட்விட்டர் பயன்படுத்துகிறது.
பயனாளர்கள்தான் ட்விட்டருக்கு 'கன்டென்ட்' கொடுக்கிறார்கள். ஆகவே, ஒரு கணக்கை முடக்க விரும்பினால், ஒரு தீர்ப்பாயத்தின் மூலம்தான் செய்ய வேண்டும்," என்கிறார் அவர்.
மே 17 இயக்கத்தின் ட்விட்டர் கணக்கில் கடைசியாக, ஈழப் போர் குறித்த நினைவேந்தல் நிகழ்ச்சி குறித்த தகவல்கள்தான் பதிவுசெய்யப்பட்டிருந்தன. அந்த நிகழ்ச்சி அரசின் அனுமதியோடுதான் நடந்தது என்கிறார் திருமுருகன்.
மு.க.ஸ்டாலின் கண்டனம்
இப்படி ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கி, சமூக ஊடகத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்," என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினரின் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு திமுகவே காரணம் என்றும் சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் சிலர் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதற்கு சென்னை மாநகர காவல்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், "நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல் துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது," எனக் கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்