You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொன்முடியை அமைச்சராக்க மறுப்பு - முதல்வரின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த போதும் அவரை மீண்டும் அமைச்சராக்க ஆளுநர் மறுத்துள்ளார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் வெற்றிபெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தண்டனையை எதிர்த்து பொன்முடியும் அவரது மனைவியும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடியை குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது.
இதன் காரணமாக, அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். அவரது தொகுதி காலி என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
அவரை மீண்டும் அமைச்சராக நியமிக்க, மார்ச் 13ம் தேதி அல்லது 14ம் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கக் கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர் என் ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை.
பொன்முடி மீது ஊழல் கறை படிந்துள்ளதால் அவருக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று ஆளுநர் ஆர் என் ரவி தமிழக முதல்வருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, ரத்து செய்யப்படவில்லை என்று ஆளுநர் சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்கிறது தமிழ்நாடு அரசு. முதல்வர் பரிந்துரைத்த பிறகும், பதவி பிரமாணம் செய்து வைக்காத ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஆளுநர் தவறான விளக்கம் அளிக்கிறார் என்றும் வேண்டுமென்றே உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுகிறார் என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன் கூறுகிறார். உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பாக மனு தாக்கல் செய்த வில்சன், “உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தீர்ப்பை நிறுத்தி வைத்ததற்கான காரணமே இது தகுதி நீக்கமாக கருதப்படக் கூடாது என்பது தான். ஆனால், ஆளுநர் இதற்கு தவறான விளக்கத்தை வழங்குகிறார். தண்டனை “நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, ரத்து செய்யப்படவில்லை” என்று கூறுவது அபத்தமானது. ஆளுநரின் இந்த செயல் சட்ட அறியாமையினால் இல்லாமல், வேண்டுமென்றே உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்து விட்டால், சட்ட ரீதியாக அணுகுவது மட்டுமே ஒரே வழி என்கிறார் திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி கண்ணதாசன். “ ஆளுநர் பதவி காலியாக இருந்தால் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கலாம். ஆனால் தமிழ்நாட்டுக்கு இன்று அது பொருந்தாது. அரசமைப்புச் சட்டம் எழுதப்படும் போது, ஆளுநர்கள் பொறுப்பானவர்களாக நடந்து கொள்வார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் ஆளுநர்கள் இன்று அரசியல்வாதிகளாக உள்ளனர். சட்டம் எங்கெல்லாம் அமைதியாக இருக்கிறதோ அதை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.” என்றார்.
“மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(3)-கருத்தில் கொண்டு, ‘தற்காலிக நிர்வாரணமாக’ தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். எனவே குற்றவாளி என்ற தீர்ப்பு நீடிக்கிறது, ஆனால் தற்போது அமலில் இல்லை” என்று ஆளுநர் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என்று கூறுவதற்கு அதிகாரம் இல்லை என்று விளக்குகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன். “இந்த வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்படவில்லை. அவர் குற்றவாளி என வழங்கப்பட்ட தீர்ப்பே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்க அனுமதி உண்டு. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு “தற்காலிக தீர்வு” மட்டுமே என்று சுட்டிக் காட்டுகிறார் ஆளுநர். தற்காலிக தீர்வுக்கு என்ன அர்த்தம்? சட்டத்தின் கண் முன் இந்த உத்தரவு தள்ளி வைக்கப்படுகிறது என்பது தான் அர்த்தம்” என்றார்.
அரசு பரிந்துரைக்கும் நபரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என ஆளுநர் கூறுவது தமிழ்நாட்டில் கேள்விப்படாதது என்கிறார் கண்ணதாசன். 2001ம் ஆண்டு, ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த போது கூட, அவருக்கு ஆளுநர் ஃபாத்திமா பீவி பதவி பிரமாணம் செய்து வைத்திருந்தார் என்று அவர் குறிப்பிடுகிறார்.
1997-2001 காலக்கட்டத்தில் தமிழகத்தின் ஆளுநராக இருந்தவர் ஃபாத்திமா பீவி. 2001ம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்திருந்தார் ஃபாத்திமா பீவி. அக்டோபர் மாதம் 2000ம் ஆண்டு டான்சி வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தார் ஜெயலலிதா. எனவே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.
2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற முறையில், ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜெயலலிதா. அவருக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்திருந்தார் ஃபாத்திமா பீவி. அவரது இந்த செயலை உச்சநீதிமன்றம் கண்டித்தது, மத்திய அரசு அவரை ஆளுநர் பொறுப்பிலிருந்து திரும்பப் பெற்றது.
ஆளுநர் ஆர் என் ரவியின் செயல் அரசியல் ரீதியாக தூண்டப்பட்டது என்கிறார் வில்சன். “ஆளுநர் முதல்வரிடம் கொண்ட அணுகுமுறையை குடியரசுத் தலைவர் பிரதமரிடம் கொண்டிருந்தால், என்ன நடந்திருக்கும்? அப்படி குடியரசு தலைவரால் நடந்து கொள்ள முடியுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
ஜார்ஜ் கோட்டையில் பாஜக காலூன்ற முடியாத காரணத்தால் ஆளுநர் மாளிகையிலிருந்து ஒரு அரசை நடத்த முயல்கிறார் ஆளுநர் என்றும் குற்றம் சாட்டினார். எனவே ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரினார்.
பொன்முடி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்கள் மிக தீவிரமானவை என்பதால், ஊழல் கறை படிந்திருக்கும் போது, அவரை மீண்டும் அமைச்சராக்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருந்தார்.
“கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிரான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து அவரது பதவி நீக்கம் ரத்து செய்யப்பட்டது. அதே போன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பதவி நீக்கமும், நீதிமன்ற உத்தரவை அடுத்து ரத்து செய்யப்பட்டது. எனவே அதே விதி தான் இந்த வழக்கிலும் பொருந்தும்” என்று நீதிபதி அரி பரந்தாமன் கூறுகிறார்.
பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குவது அரசியலமைப்புச் சட்டத்தின் தார்மீகத்துக்கு எதிரானது என்று ஆளுநர் கூறுவதை மறுக்கும் வில்சன், ஆளுநர் சட்டத்தையும், உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறுகிறார் என்றார்.
“முதல்வரின் கோரிக்கையை நிராகரித்திருப்பது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 164 (1) ஐ (164(1) – ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆளுநரால் நியமிக்கப்படுவார், மற்ற அமைச்சர்கள் முதல்வரின் ஆலோசனையின் பெயரில் ஆளுநர் நியமிப்பார் என்று கூறுகிறது) மீறிய செயலாகும். மேலும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142&144 -ன் (நிர்வாக மற்றும் நீதித்துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்துக்கு உதவும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரிவுகள் 142 மற்றும் 144 கூறுகின்றன) படி, அவர் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டவர் ஆவார்.” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)