ஆண் குழந்தைகளுக்கான பொன் மகன் சேமிப்புத் திட்டம் மூலம் சேமிக்கும் வழிகள்

    • எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்ற ஒன்று மத்திய அரசால் 2015இல் கொண்டு வரப்பட்டது. அப்போது, ஆண் குழந்தைகளை வைத்திருப்பவர்களும்கூட தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு திட்டம் வேண்டும் என அஞ்சலகங்களை அணுகிக் கேட்பது அதிகரித்தது.

எனவே, ஏற்கெனவே உள்ள PPF என்ற பொது வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் மைனர் என வரைமுறைப்படுத்தப்படும் 18 வயது பூர்த்தி ஆகாதோருக்கான திட்டத்தின் கீழ் சேமிப்பைத் தொடங்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.

எனவே, ஆண் குழந்தைகளைப் பெற்றவர்களும், தங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காகவும், படிப்புக்காகவும் சிறு சேமிப்பாக இத்திட்டத்தில் இணைந்து வருகின்றனர்.

இந்தத் திட்டத்தில் யார் யார் சேரலாம்? எவ்வளவு வட்டி? முதிர்வுக்காலம் மற்றும் பிற சலுகைகள் என்னென்ன? இந்தத் திட்டம் குறித்து அஞ்சலக அதிகாரி தரப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு.

எவ்வளவு சேமிக்கலாம்?

இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை சேமிக்கலாம்.

வட்டி எவ்வளவு?

இந்தத் திட்டத்தில் தற்போதைக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. ஆயினும் இது, ஒவ்வொரு நிதிக் காலாண்டு அதாவது 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும்.

மத்திய நிதியமைச்சகத்தால் மாற்றப்படும் வட்டி விகிதங்களை அஞ்சலகங்களிலோ அல்லது இந்தியா போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ (Post Office Saving Schemes (indiapost.gov.in) தெரிந்துகொள்ளலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக 7 %க்கும் குறையாமல்தான் வட்டி வழங்கப்படுவதாக அஞ்சலக சேமிப்பு வங்கி அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்வமகள் சேமிப்புத் திட்டத்தைவிட தற்போது உள்ள வட்டி விகிதம் இத்திட்டத்தில் 1.1% குறைவு.

எப்படி கணக்கிடுவார்கள்?

உதாரணத்துக்கு மாதம் ரூ.1,000 செலுத்தினால், 15 ஆண்டுகளில் ரூ.1,80,000 செலுத்தியிருப்போம். அதற்கு வட்டியாக ரூ.1,35,578 கிடைக்கும். முதிர்வுத் தொகையாக ரூ.3,15,572 பணம் 15 ஆண்டுகளில் கிடைக்கும்.

எவ்வளவு செலுத்தினால், முதிர்வுத் தொகை எவ்வளவு கிடைக்கும் என்று கால்குலேட்டர் போஸ்ட் இன்ஃபோ என்ற ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எப்போது பணம் செலுத்த வேண்டும்?

ஒரு நிதியாண்டில் ஒரு முறையாவது பணம் செலுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஏப்ரல் 1ஆம் தேதி இந்த நிதியாண்டில் பணம் செலுத்திய ஒருவர், மறு நிதியாண்டின் மார்ச் 31க்குள் அடுத்த தவணையைச் செலுத்த வேண்டும். தவறினால், அபராதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும்.

திட்டத்தின் காலம் எவ்வளவு?

இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும். அதன் பின்பு, ஒவ்வோர் 5 ஆண்டுகளுக்கும் முதிர்வோடு சேமிப்பை எடுக்காமல் புதுப்பிப்பு செய்யும்போது, அந்த 5 ஆண்டு காலத்துக்கும் உண்டான வட்டி சேர்த்து வழங்கப்படும்.

எப்படி இணைவது?

அஞ்சலகத்துக்குச் சென்று நேரில் சென்றும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து இந்தக் கணக்கைத் தொடங்கலாம். அல்லது அஞ்சலகத்தின் இன்டர்நெட் பேங்கிங் வசதி மூலம் ஆன்லைனில் கணக்கைத் தொடங்கவும் முடித்துக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

அத்துடன், இன்டர்நெட் பேங்கிங் அல்லது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என்ற ஆப் மூலமும் ஆன்லைனில் பணம் செலுத்திக் கொள்ளலாம்.

யாருக்கான திட்டம்?

பொன்மகன் சேமிப்புத் திட்டம் என்றாலும், இது ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் PPF திட்டம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் சேரலாம்.

இத்திட்டத்தில் பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சேர்வதற்கான தகுதி உண்டு. வயது வரம்போ, கல்வித் தகுதியோ கிடையாது என அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். NRI என்ற வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், அயல்நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது.

யார் பணம் கட்டலாம்?

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு குழந்தையின் பெயரில் பெற்றோரோ, பாதுகாவலரோ அல்லது யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.

வரிச் சலுகை எப்படி?

வருமான வரி விலக்கில் 80சி வரம்பின் கீழ், சேமிப்பு மற்றும் முதலீட்டின் வகைப்படி அதிகபட்சம் ரூ.1,50,000 வரை ஒரு நிதியாண்டுக்கு வரி விலக்கு சலுகையுண்டு. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்கள் இத்திட்டத்தில் இணைந்தாலும்கூட இதே வரிச்சலுகை பொருந்தும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார், பான், உள்ளிட்டவற்றின் நகல்கள், புகைப்படம் கேட்கப்படும். நாமினியின் பெயர் விவரங்கள் தேவை.

வட்டியின் வகை?

இது கூட்டு வட்டியின் கீழ் கணக்கிடப்படும். அதாவது நாம் செலுத்திய பணத்துக்குக் கிடைத்த வட்டியோடு சேர்த்தே முதலீடாகக் கணக்கில் கொண்டு, அடுத்த நிதியாண்டில் வட்டி கூட்டு வட்டியாக வரும். ஆண்டுதோறும் இது கேரி ஃபார்வேர்ட் ஆகி தொடரும்.

பணம் எடுக்க முடியுமா?

சேமிப்புக் கணக்கு தொடங்கியதில் இருந்து 7 ஆண்டுக்குப் பின் பணம் எடுக்க முடியும். ஆனால், 4வது நிதியாண்டின் முடிவில் இருக்கும் பணத்தில் 50% மட்டும்தான் எடுக்க முடியும்.

கடன் வசதி உண்டா?

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் வசதியும் உண்டு என்பது கூடுதல் சிறப்பம்சம். அதற்கு கணக்குத் தொடங்கி 3வது நிதியாண்டு தொடங்கியிருக்க வேண்டும். 2வது நிதியாண்டு முடிவில் உள்ள தொகையின் 25% மட்டும்தான் கடனாகப் பெற முடியும்.

கடனுக்கான வட்டி எவ்வளவு?

அப்படிப் பெறும் கடனை 36 மாதங்களுக்கு முன் கடன் அடைத்துவிட்டால், 1 சதவீதம் மட்டும்தான் வட்டியாக வசூலிக்கப்படும். அதற்கு மேல் 6 சதவீதம் வட்டி வரலாம்.

ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே கடன் எடுக்க முடியும், இரண்டாவது கடன் எடுக்கும் பட்சத்தில் முதல் கடன் முழுமையாக அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இருப்பினும், இடையில் பணம் எடுத்தல், கடனாக வாங்குதல் என எவ்வித சலனமும் இன்றி பணம் செலுத்தி வந்தால்தான் முழு சேமிப்புப் பலன் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறப்பு நேர்ந்தால்?

பணம் செலுத்திக் கொண்டிருக்கும் காலத்தில் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் இறந்தால், குழந்தை 18 வயதைப் பூர்த்தியடைந்திருக்கும் பட்சத்தில், குழந்தைக்குப் பணம் கிடைக்கும். இல்லாவிட்டால், அவரது பாதுகாவலர் பணத்தைப் பெறலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)