You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பணத்தின் உளவியல்: குறைந்த வருமானம் பெறுவோரை கோடீஸ்வரர்களாக மாற்றும் உத்தி எது? - நிபுணரின் விளக்கம்
- எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா
- பதவி, பிபிசிக்காக
தனிநபர் நிதி சார்ந்த புத்தகங்கள் பெரும்பாலும் முதலீட்டுக் கொள்கைகள் அல்லது பங்குச் சந்தை நிலவரங்களை எவ்வாறு அளவிடுவது என்பதில் கவனம் செலுத்துகின்றன. வேறு சில புத்தகங்கள், பிரபல முதலீட்டாளர்கள் சிலரின் அனுபவங்களை அவர்கள் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆனால், பணம் அல்லது செல்வத்துடன் மனிதனின் மனநிலையின் தொடர்பை மிகச் சில படைப்புகளே விளக்குகின்றன. இந்த உறவு `நடத்தை நிதி` (behavioral finance) என்று அழைக்கப்படுகிறது.
மோர்கன் ஹவுஸலின் `சைக்காலஜி ஆஃப் மனி` (Psychology of Money) என்பது அத்தகைய ஒரு புத்தகம். நடுத்தர வர்க்க அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஹவுஸல், தற்போது 250 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தில் முக்கியப் பதவியை வகிக்கிறார்.
செல்வத்துடன் மனிதனின் உறவைப் பற்றி விவாதிப்பதே இந்நூலின் மையம். ஹவுஸ்ல் 2018-ல் நிதி சார்ந்த முடிவுகளில், மிகவும் பொதுவான 20 தவறுகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். இந்நூலிலும் இதே விஷயம் பல உதாரணங்களைச் சேர்த்து இன்னும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
வருமானத்தை மதிக்காமல் கண்மூடித்தனமாக செலவு செய்த இருவர் எப்படி திவாலானார்கள் என்பதை புத்தகத்தின் அறிமுகமே குறிப்பிடுகிறது. மறுபுறம், சில தசாப்தங்களாக சேமித்த சிறு தொழிலாளி ஒருவர், ஓய்வு பெறுவதற்குள் எப்படி பல கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆனார் என்பதையும் விளக்குகிறார்.
இந்த இரண்டு மனநிலைகளையும் அலசும்போது, நமது எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவை வருமானத்தை விட நமது நிதி இலக்குகளையே அதிகம் பாதிக்கிறது என்ற செய்தியை ஹவுஸல் நமக்கு தருகிறார்.
முதல் அத்தியாயம் - சுவாரஸ்யமான உதாரணங்கள்
பகுத்தறிவு இருந்தும் மக்கள் ஏன் தீங்கிழைக்கும் செயல்களை செய்கிறார்கள் என்பதை முதல் அத்தியாயம் சில சுவாரஸ்யமான உதாரணங்களுடன் விளக்குகிறது.
அமெரிக்காவில் லாட்டரி சீட்டுகளை வாங்கும் பெரும்பாலான மக்கள் குறைந்த நடுத்தர வர்க்கத்தினர் அல்லது ஏழைகளாக அடையாளம் காணப்படுகிறார்கள்.
பேரிடர் ஏற்பட்டால் செலவு செய்வதற்கு 400 டாலர்கள்கூட இல்லாதவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 412 டாலர்களை லாட்டரி சீட்டுகளுக்காகச் செலவிடுகிறார்கள்.
இந்த வளர்ச்சியை விளக்கும் மனிதனின் சிந்தனை முறையை ஆசிரியர் அலசுவது, சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.
இரண்டாம் அத்தியாயம் - அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம்
பொதுவாகவே, தனிநபர் நிதி சார்ந்த புத்தகங்களில் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டத்திற்கு இடம் இல்லை. ஆனால், இந்த புத்தகத்தில் இரண்டாவது அத்தியாயம் முழுவதுமே அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டத்திற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்கப்பட்ட ஒரே புத்தகம் இதுவாகத்தான் இருக்கும்.
முதலீட்டாளர்களின் பயணத்தில் பல எதிர்பாராத நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. இதனை எதிர்கொள்ள நிதி திட்டமிடல் மிகவும் அவசியம்.
மூன்றாவது அத்தியாயம் - செல்வத்தால் திருப்தி
மூன்றாவது அத்தியாயம், ஒருவருடைய எல்லாச் செல்வங்களாலும் மனநிறைவு அடைவது குறித்து கையாள்கிறது. இந்திய அமெரிக்கர்கள் ரஜத் குப்தா, ராஜரத்தினம், அமெரிக்க பங்குச் சந்தை தரகர் பெர்னி மடோஃப் ஆகியோர் குறித்து இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.
நூறு மில்லியன் டாலர் சொத்து வைத்திருக்கும் ரஜத் குப்தா பண பேராசையால் சிறையில் அடைக்கப்பட்டதை நாம் அறிவோம்.
பெரும் புகழ் பெற்ற பெர்னி மடோஃப் பின்னர் நிதிக் குற்றங்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
வயது மற்றும் அந்தஸ்துக்கு ஏற்ப மாறும் நிதித் தேவைகளின் தீய விளைவுகள் எடுத்துக்காட்டுகளுடன் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
நீண்ட கால தொலைநோக்கு, முதலீட்டு பாதுகாப்பு, முதலீட்டு விருப்பங்கள்
அடுத்த மூன்று அத்தியாயங்கள் நீண்ட கால தொலைநோக்கு, முதலீட்டு பாதுகாப்பு மற்றும் பல்வேறு முதலீட்டு விருப்பங்களை நிலைநிறுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
உலகப் புகழ்பெற்ற வாரன் பஃபெட்டைப் போல் மூன்று மடங்கு வட்டி சம்பாதித்தவர், நீண்ட கால முதலீட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி இதில் அலசுகிறார். பஃபெட்டின் வருமானம் அவரது வருமானத்தில் 2% மட்டுமே என்பதை இந்த அத்தியாயங்களில் விளக்குகிறார்.
தனிநபர் நிதியின் மையத்தில் நீண்ட காலக் கண்ணோட்டத்தை எடுத்துக்காட்டுவது ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மறுபுறம், பல்வேறு முதலீட்டு வழிகளில் முதலீடு செய்வது, எப்படி முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் என்பதை விளக்குகிறார்.
நிதி சுதந்திரமே இறுதி இலக்கு
ஏழாவது அத்தியாயம் ஒட்டுமொத்த பொருளாதார சுயசார்பு பற்றி விவாதிக்கிறது. ஆசிரியரின் எண்ணங்கள் தனிப்பட்ட நிதியின் இறுதி இலக்காக நிதி சார்ந்த சுயசார்பின் அம்சங்களை பிரதிபலிக்கின்றன.
ஆசிரியர் குறிப்பிடும் உதாரணங்களும் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் என்பது ஆசிரியரின் வாதத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.
எட்டு மற்றும் ஒன்பதாம் அத்தியாயங்கள் நமது சமூகத்தில் அந்தஸ்து என்ற கற்பனைக் காரணி எவ்வாறு நமது நிதி முடிவுகளை பாதிக்கிறது என்பதை விளக்குகிறது.
தொடர்ந்து வரும் அத்தியாயங்களில், நிதி ஒழுக்கத்தின் முக்கியத்துவம் பல அம்சங்களில் பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் கூறப்பட்டுள்ளது. எல்லா முதலீட்டாளர்களும் இயற்கையாகச் செய்யும் பல தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைச் செய்யாமல் இருப்பதன் பலன்களைக் குறிப்பிடுகிறார்.
கடைசி அத்தியாயங்களில் ஆசிரியர் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றி வாசகர்களிடம் கூறுகிறார். குறைந்த நடுத்தர வர்க்க மட்டத்திலிருந்து தொடங்கி, சரியான நிதி இலக்குகள் மற்றும் நேர்மறையான அணுகுமுறையுடன் தான் உயர்ந்ததை அவர் நன்றாக விளக்கியுள்ளார்.
பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள்
பல தனிநபர் நிதி சார்ந்த புத்தகங்களைப் போலவே, இந்தப் புத்தகமும் வாரன் பஃபெட், சார்லி முங்கர் மற்றும் பெஞ்சமின் கிரஹாம் போன்ற பிரபலமானவர்களின் எண்ணங்களைக் குறிப்பிடுகிறது.
மேலும், இந்நூலின் தனிச்சிறப்பு என்னவென்றால், இதுவரை அறியப்படாத பல நிகழ்வுகளை இது எடுத்துக்காட்டுகிறது.
பில்கேட்ஸின் உயிர் நண்பர் கேட்ஸைப் போல கணினி குறியீட்டு முறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த சஹாத்யாய், இளம் வயதிலேயே தற்செயலாக இறந்து போனார் என்பது பலருக்குத் தெரியாது. பெர்க்ஷயர் நிறுவனத்தில் மூன்றாவது பெரும்பான்மை பங்குதாரர், பஃபெட் மற்றும் முங்கருடன் சேர்ந்து, பஃபெட்டுக்கு குறைந்த விலையில் தனது பங்குகளை ஏன் விற்றார் என்பதும் அதிகமாக அறியப்படவில்லை.
இவற்றோடு 1929 பொருளாதார மந்தநிலையிலிருந்து 2008 நிதி நெருக்கடி வரை நடந்த முக்கியமான நிகழ்வுகளிலிருந்து முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை ஆசிரியர் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
ஆசிரியர் பலமுறை குறிப்பிட்ட பேராசை தற்போதைய மோசடிகளுக்கும் பொருந்தும். பேராசையால் குற்றவாளிகளுக்கு தனிப்பட்ட தகவல்களைத் தரும் பாதிக்கப்பட்டவர்கள் நம்மைச் சூழ்ந்துள்ளனர்.
அந்த குற்றவாளியின் முக்கிய பலம் பாதிக்கப்பட்டவரின் பேராசை. குற்றவாளிகளின் கைகளில் மக்கள் எளிதான லாபத்தை பெற நினைப்பது பல பத்தாண்டுகளாக, ஏன் பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஒரு போக்கு.
இந்நூலின் ஆசிரியர் ஹவுஸல் இந்த விஷயத்தை திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு வாசகர்களின் மனநிலையை மாற்ற முயல்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)