You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடகா போல தமிழ்நாட்டிலும் கோபி மஞ்சூரியனுக்கு தடை வருமா? அதில் என்ன பிரச்னை?
பலருக்கும் ரோட்டுக்கடையில் கிடைக்கும் கோபி மஞ்சூரியன் ஃபேவரைட்டாக இருக்கும். மாலை நேரங்களில் கிடைக்கும் இந்த சிற்றுண்டியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ருசிக்கின்றனர்.
சுவையாக இருந்தாலும் புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகக் கூறி கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனுக்கு அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. விதிகளை மீறினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தடை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குன்டு ராவ், “பஞ்சுமிட்டாய் போன்றே கோபி மஞ்சூரியனிலும், அதிக சிந்தடிக் நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் வந்ததும் மாதிரிகளைச் சேகரிக்கத் தொடங்கினோம். மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் உள்ள உணவகம், சாலையோரக் கடைகள், தள்ளுவண்டிகள் என 171 இடங்களில் கோபி மஞ்சூரியன் மாதிரி சேகரித்ததில், 107 மாதிரிகளில் செயற்கை நிறமூட்டிகள் சேர்த்திருப்பது ஆய்வக பரிசோதனையில் தெரிய வந்தது. அதேபோல் 25 பஞ்சுமிட்டாய் மாதிரிகளில் 15இல் சிந்தடிக் டை சேர்ப்பு கண்டறியப்பட்டது,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “யார் யாருக்கு சிந்தடிக் டை விற்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்கவும், அதிக நிறமுள்ள உணவுப் பொருட்களை மக்கள் வாங்கிச் சாப்பிடுவதைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அந்த நிறமிகளால் புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்கள் வரும் என்பதால் கர்நாடக உணவுப் பாதுகாப்புத்துறை விதிகளை கண்டிப்போடு பின்பற்ற அறிவுறுத்தியிருக்கிறது. அதிரடி நடவடிக்கைகள் தொடரும்,” என்று அவர் தெரிவித்தார்.
“சிந்தடிக் டை எனப்படும் செயற்கை நிறமூட்டிகள் கேக், பேஸ்ட்ரிக்கள், ஐஸ்க்ரீம்களில் மிக மிகக் குறைந்த அளவே சேர்க்க அனுமதியுண்டு. அதேபோல், சமைத்து தயாரிக்கும் பிற உணவில் அந்த நிறமிகள் அதிகம் சேர்க்க ஒருபோதும் அனுமதியில்லை. எனவே, தடையை அறிவித்த பின்பும், விதிகளை மீறி செயற்கை நிறமிகள் சேர்த்து சமைத்து விற்றால், 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோபி மஞ்சூரியனில் என்ன பிரச்னை? தமிழ்நாட்டிலும் இதற்கு தடை விதிக்கப்பட்டுமா? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)