You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கல்வித்துறையை விமர்சித்ததாகக் கூறி அரசுப்பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் - என்ன நடந்தது?
- எழுதியவர், மாயகிருஷ்ணன். க
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாடு அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி, அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிடை நீக்கம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகின்றன.
ஆசிரியை தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் அவரை பணியிடை நீக்கம் செய்ததாக, தமிழ்நாடு அரசு மீது விமர்சனம் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் செவிடனூர் கிராமத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் கணினி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
ஆசிரியை உமா மகேஸ்வரி, ‘வஞ்சிக்கப்படும் பொதுக் கல்வி’, ‘கல்விச் சிக்கல்கள் - தீர்வை நோக்கி’, ‘இன்றைய சூழலில் கல்வி’ உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். பள்ளிக்கல்வி குறித்து ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வந்தார். இவருடைய செயல்பாடுகளுக்காக, 2023-ஆம் ஆண்டு, சுதந்திர தின விழாவில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இவருக்கு விருது வழங்கினார்.
இவர், தொடர்ந்து கல்வித்துறை குறித்து விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தார். குறிப்பாக, சமீபத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டன. இதுபோன்ற இவரது பதிவுகளை மேற்கோள் காட்டித்தான் இந்த தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆசிரியை உமா மகேஸ்வரி என்ன சொல்கிறார்?
இதுகுறித்து உமா மகேஸ்வரியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட கருத்தை அறிய பிபிசி முயற்சி செய்தது. ஆனால், பணியிடை நீக்கம் குறித்து உமா மகேஸ்வரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
'மக்களாட்சி மாண்புகளுக்கு ஏற்றது அல்ல'
இவ்விவகாரம் தொடர்பாக, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர், பிரின்ஸ் கஜேந்திர பாபு பிபிசி தமிழிடம் கூறுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 21 வழங்கும் வாழ்வுரிமை வெறும் உயிர் வாழும் உரிமையன்று. கண்ணியமிக்க வாழ்க்கைக்கான உத்தரவாதம்.
"ஒரு மனிதன் தன் சிந்தனையை வெளிப்படுத்தும் உரிமையை உள்ளடக்கியதுதான் கண்ணியம்மிக்க வாழ்க்கைக்கான உத்தரவாதம்.
"விவாதிப்பது, விமர்சிப்பது, மக்களின் தேவைகளை அரசுக்கு உணர்த்துவது போன்றவை மக்களாட்சி உயிர்ப்புடன் இருப்பதற்கான அடையாளம்,” என தெரிவித்தார்.
மேலும், அரசு ஊழியர்கள் அரசின் எந்தச் செயல் குறித்தும் விமர்சனம் செய்யக் கூடாது என்று கூறுவது மக்களாட்சி மாண்புகளுக்கு ஏற்புடையது அல்ல என்றும் அதிலும் ஆசிரியர்கள் பொதுநலன் கருதி வெளிப்படுத்தும் கருத்துக்களை அரசுக்கு எதிரானதாகக் கருதுவது நியாயமான அணுகுமுறை கிடையாது என்றும் அவர் கூறினார்.
'இது மனித உரிமை மீறல்'
அதேபோன்று, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் மாவட்ட கல்வி அலுவலரும் உமா மகேஸ்வரியை நடத்திய விதம் அப்பட்டமான மனிதவுரிமை மீறல்," என்று தெரிவித்திருக்கின்றனர்.
"விமர்சனத்தையும் அவதூறையும் வேறுபடுத்திப் பார்க்கும் ஜனநாயக முதிர்ச்சி துளியுமற்றவர்களாக இந்த அலுவலர்கள் அவரை நடத்தியுள்ளனர். அவரது அலைபேசியை பிடுங்கி அணைத்து வைத்துக்கொண்டதுடன் தேசிய கல்விக் கொள்கையை விமர்சிக்கக் கூடாதென்றும் பள்ளிக்கல்வித்துறையில் நிலவும் சிக்கல்கள் குறித்து பேசவோ எழுதவோ கூடாதென்றும் மிரட்டியுள்ளனர்," என்று அவ்வறிக்கையில் தெரிவித்தனர்.
மேலும், "அவரது தரப்பு விளக்கத்தை ஏற்காமல், மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுக்கும் படி அலுவலர்கள் பணித்துள்ளனர். மேலும், அலைபேசியை உயிர்ப்பித்து முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்த அவரது பதிவுகள் அனைத்தையும் தங்களது கண்முன்னேயே அழிக்கும்படி மிரட்டி அழிக்க வைத்துள்ளனர்,” என குற்றம்சாட்டியுள்ளனர்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விளக்கம்
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம் பிபிசியிடம் பேசுகையில், “ஆசிரியை உமா மகேஸ்வரி செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பள்ளிக் கல்வி குறித்து எழுதி வருகிறார். அரசு ஊழியரான இவர் அரசின் திட்டங்களுக்கு அரசின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதன் பேரிலும் அரசு ஊழியராக இருந்து கொண்டு, அரசுக்கு எதிரான அவருடைய கருத்துகளுக்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்," என்று தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)