"என் உடையில் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது" - ஒடிஷா ரயில் விபத்தில் உயிர் பிழைத்த சென்னை பயணி

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்
ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோரமான ரயில் விபத்தில் உயர் பிழைத்தவர்களில் ஒருவர் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி.
தனது 12 வயது குழந்தையுடன், கோரமண்டல் ரயில் பெட்டியின் ஜன்னலை உடைத்து வெளியில் வந்தபோது உயிருடன் இருப்பதை எண்ணி நிம்மதி அடைந்தாலும், அவர் கண்ட காட்சி அவரை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது.
''நான் நின்றிருந்த இடத்தில் சிதறிய நிலையில் கைகள், உடைந்த கால்கள் கிடந்தன. ஒருவரின் தலைப்பகுதி நொறுங்கிய நிலையில் கிடந்தது.
என் குழந்தையுடன் பாதுகாப்பாக நிற்பதற்கு ஓர் இடத்தைத் தேடி சென்றேன். அந்த வழியில் கிடந்த உடல்களில் இருந்து வந்த ரத்தவாடை எனக்கு மயக்கத்தைத் தந்தது.
ஒரு நடைமேடையில் சென்று நான் நின்றபோது, என் உடையில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது,'' என்று தான் கண்ட காட்சிகளை விவரிக்கிறார் சிவரஞ்சனி.
"இந்த ரயில் பயணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது"
மத்திய ரயில்வே அமைச்சக தகவல்களின்படி, தற்போதுவரை 250க்கும் மேற்பட்டவர்கள் இந்த ரயில் விபத்தில் இறந்துள்ளனர். 700க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
மரண ஓலம் நிறைந்த அந்த பாலசோர் ரயில் நிலையத்தில் ஆறு மணிநேரம் காத்திருந்த அவர், தன்னுடன் பயணித்த சில தமிழர்களைத் தேடியபோது, ஒருவரையும் கண்டறிய முடியவில்லை என்றார்.
வெள்ளியன்று விபத்து நடந்திருந்தாலும், அந்தக் காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக அவரது கண்களில் வந்துபோவதாகக் கூறுகிறார்.
''தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்க்கும் காட்சியைவிட பயங்கரமான காட்சிகளை நான் கண்டேன். கைகளை இழந்த ஒருவர், உடல் நடுங்கியபடி, கண்ணீருடன் அமர்ந்த நிலையில் இருந்தார்.
ஒரு குழந்தை இருந்தது, குழந்தையின் தாயார் இறந்துவிட்டார். ஒரு நபர் உடலின் கீழ் பகுதி முழுவதும் புரண்டு கிடந்த ரயில் பெட்டியின் கீழ் இருந்தது, உதவி கேட்க அவர் நீட்டிய கரமும், தலையும்தான் தெரிந்தது. அவரின் சட்டைப் பகுதியில் ரத்தம் வழிந்திருந்தது,'' என விளக்கியபோது சிவரஞ்சனியின் குரலில் சோகம் ததும்பியது.
கோரமண்டல் ரயிலில் ஷாலிமரில் இருந்து சென்னை திரும்பும் அந்தப் பயணம் வாழ்க்கையில் மறக்கமுடியாத பயணமாக சிவரஞ்சினிக்கு அமைந்துவிட்டது.

பட மூலாதாரம், TNDIPR
"இன்று உயிருடன் இருக்கிறோம்"
இரண்டு மாதம் கோடை விடுமுறையை முடித்துக்கொண்டு சிவரஞ்சனி தனது மகளுடன் சென்னை திரும்பிய நேரத்தில் நடந்த ரயில் விபத்து அவரை உலுக்கிவிட்டது.
''என் கணவர் சதீஸ்குமார், எல்லை பாதுகாப்புப் படையில் வேலை செய்கிறார். என் மகளின் கோடை விடுமுறையை அசாமில் கழித்தோம். விடுமுறை முடிந்து, சென்னைக்குத் திரும்பும் நேரத்தில் இந்த விபத்து நடந்ததால், நாங்கள் கோடை விடுமுறையைக் கழித்த அந்த அனுபவத்தைவிட நாங்கள் இன்று உயிருடன் இருக்கிறோம் என்பதைதான் நாங்கள் நினைத்துப் பார்க்கிறோம்.
உண்மையில், நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். நாங்கள் ஏசி கோச்சில் இருந்தோம். பலமான சத்தம் கேட்டது, மேலே வைத்திருந்த பெட்டிகள் எங்கள் மீது விழுந்தன. ரயில் பெட்டி வேறு தடத்தில் மோதிவிட்டது என்றுதான் நினைத்தோம்.
ஆனால், அங்கு கேட்ட சத்தம் என்ன என்பதும், நாங்கள் கண்ணாடியை உடைத்து வந்து பார்த்தபோதுதான் நாங்கள் உயிருடன் இருப்பது பெரிய அதிர்ஷ்டம் என்பதும் புரிந்தது,'' என விவரித்தார் அவர்.

பட மூலாதாரம், TNDIPR
அச்சத்தில் மகள்
சிவரஞ்சனி தனது அலைபேசியை தனது சிறிய கைப்பையில் வைத்திருந்ததால், அதை மட்டும் எடுத்துக்கொண்டு பிற பொருட்களைப் பற்றிய கவலையின்றி ரயில் பெட்டியில் இருந்து வெளியேறியதாகக் கூறுகிறார்.
விபத்து நடந்த 15 நிமிடங்களில் பாலசோர் பகுதியில் இருந்த பொதுமக்கள் பலரும் காயமடைந்தவர்களுக்கு உதவ வந்தனர் என்கிறார்.
''நான் என் கணவரிடம் நடந்த விவரங்களைத் தெரிவித்தேன். ரயில் நிலையத்தில் பாதுகாப்பாக இருக்கச் சொல்லிவிட்டு, எங்களுக்கு தைரியம் கொடுத்தார். அரசாங்கத்தின் மீட்பு நடவடிக்கை மூலமாக பாதுகாப்பாக சென்னை திரும்பலாம் என்றார்.
அதனால், அந்த ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். ஆறு மணிநேரத்திற்கு பிறகு, அங்கிருந்து புவனேஷ்வருக்கு ஒரு பேருந்தில் சென்றோம். அங்கிருந்து பத்ரக் ரயில் நிலையத்திற்குக் கூட்டி வந்தார்கள். அங்கிருந்து சிறப்பு ரயிலில் இன்று காலை (ஞாயிற்றுக் கிழமை) சென்னை வந்தோம்,'' என்றார்.
சிவரஞ்சனியின் மகள் சஞ்சனாஸ்ரீ ரயில் தடம் புரண்ட நிலையைப் பார்த்து மிகவும் அச்சப்பட்டதாகக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
தமிழக பயணிகளின் நிலை
''நாங்கள் மீண்டும் ஒரு ரயிலில்தான் வந்தோம். ஆனால் நானும் குழந்தையும் தூங்கவில்லை. நாங்கள் வந்த ரயில் பாதுகாப்பாக சென்னை வந்த பின்னர்தான் எங்களுக்கு நிம்மதி கிடைத்தது,'' என்கிறார் சிவரஞ்சனி.
தற்போது வரை, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு விவரங்களைப் பெற்றதன் அடிப்படையில், தமிழ் பெயர்கள் மற்றும் தமிழ்நாட்டை இருப்பிடமாகக் கொண்ட 5 பேரின் நிலைமை என்னவெனத் தெரியவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் முன்பதிவு செய்த 127 பேரில் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இருந்து 122 பேரைத் தொடர்பு கொண்டு பேசி, அவர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
பத்ரக்-சென்னை சிறப்பு ரயிலில் வந்த 36 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 34 பயணிகள் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு நாம் சென்றுபார்த்தபோது, பெரும்பாலான பயணிகள் மருத்துவ சோதனை முடிந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். மூன்று பயணிகள் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, சில மணிநேர சிகிச்சைக்குப் பிறகு சாதாரண அறைக்கு மாற்றப்பட்டனர் என்று தெரியவந்தது.
ஒடிஷா ரயில் விபத்தில் சிக்கியவர்கள் குறித்த தகவல்களைப் பெற அழைக்க வேண்டிய உதவி எண்:
044- 25330952, 044- 25330953
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












