ஃபாஸ்டேக்: 'ரூ. 3000 செலுத்தினால் 200 ட்ரிப்' - புதிய அறிவிப்பு குறித்த சந்தேகங்களுக்கான பதில்கள்

    • எழுதியவர், நித்யா பாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஜூன் 18 அன்று, ஃபாஸ்டேக் (FASTag) தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் என்ற திட்டம் ஒன்றை அறிவித்த அவர், ரூ.3,000 கட்டணம் செலுத்தி இந்த பாஸை பெற்றால், 200 முறை தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் ஏதும் செலுத்தாமல் பயணிக்க இயலும்.

இது அனைவருக்கும் கட்டாயமா, எந்தெந்த வாகனங்களில் இதனை பயன்படுத்த இயலும், புதிய ஃபாஸ்டேக் இதற்காக வாங்க வேண்டுமா, மாநில நெடுஞ்சாலைகளில் இந்த பாஸை பயன்படுத்தி பயணிக்க இயலுமா என்று பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமும் விளக்கம் அளித்து வருகிறது. உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் என்றால் என்ன?

ரூ. 3,000 செலுத்தி இந்த வருடாந்திர பாஸை பெற்றுக்கொள்ள இயலும். இதன் மூலம், நீங்கள் 200 பயணங்களை சுங்கக்கட்டணம் இன்றி மேற்கொள்ள இயலும்.

இதனை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதிவிரைவு சாலைகளில் (expressway) மட்டுமே பயன்படுத்த இயலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த பாஸை ஆகஸ்ட் 15 முதல் பயனர்கள் பெற்றுக் கொள்ள இயலும்.

இந்த பாஸை எங்கே வாங்குவது?

வருடம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் தொடர்ச்சியாக சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த பாஸை வாகன ஓட்டிகள், ராஜ்மார்க் யாத்ரா என்ற செல்போன் செயலியிலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளத்திலும் பெற்றுக் கொள்ள இயலும்.

ஒரு பயனர் ஒரு ஆண்டுக்குள் 200 முறை பயணங்களை மேற்கொண்டுவிட்டால், மீண்டும் ரூ. 3,000 செலுத்தி வருடாந்திர பாஸை பெற்றுக்கொள்ள இயலும் என்று குறிப்பிட்டுள்ளது.

'பாஸ் ஆக்டிவேட்' போன்ற முக்கிய அப்டேட்கள் குறுஞ்செய்திகள் வாயிலாக உங்களால் பெற்றுக்கொள்ள இயலும்.

யாரெல்லாம் இந்த பாஸை வாங்கலாம்?

அதே போன்று கார்கள், ஜீப்கள் மற்றும் வேன்கள் போன்ற இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே இந்த வருடாந்திர பாஸ் வழங்கப்படுகிறது. கமர்ஷியல் வாகனங்களுக்கு, கனரக வாகனங்களுக்கு இந்த பாஸ் வழங்கப்படவில்லை. மோசடி செய்து பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக, அந்த பாஸ் டி-ஆக்டிவேட் செய்யப்படும்.

முறையாக தங்களின் வாகனங்களில் ஃபாஸ்டேக்கை பொருத்தியுள்ள பயனர்கள் இந்த பாஸை பெற்றுக்கொள்ள இயலும். ஏற்கெனவே வாகன ஓட்டிகள் அவர்களின் காரில் பொருத்தியிருக்கும் ஃபாஸ்டேக் மற்றும் அது முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கும் வாகனத்துக்கான ஃபாஸ்டேக் தானா என்பதை உறுதி செய்த பிறகு, அதே கணக்கில் புதிய திட்டத்தை செயல்படுத்திக் கொள்ள இயலும்.

அதே போன்று, வாகன பதிவு எண் (VRN) இல்லாமல், சேஷிஸ் எண் (Chassis - VIN) கொண்டு ஃபாஸ்டேக் பதிவு செய்யப்பட்டிருந்தால், பாஸ் கிடைக்காது. எனவே, ஃபாஸ்டேகில் வாகன பதிவு எண்ணை அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்துகிறது சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம்.

200 - ட்ரிப்கள் எப்படி கணக்கிடப்படுகிறது?

ரூ.3,000 செலுத்தினால், 200 ட்ரிப்கள் வரை அந்த பாஸை பயன்படுத்திக் கொள்ள இயலும் என்று கூறப்படுகிறது. ஆனால், 200 ட்ரிப்கள் என்பது எதைக் குறிக்கிறது? எப்படி கணக்கிடப்படுகிறது?

இந்த கேள்விக்கு விளக்கம் அளித்திருக்கும் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம், சுங்கங்களின் தன்மையைக் கொண்டு இதனை கணக்கிடுவதாக குறிப்பிட்டுள்ளது.

புள்ளிகள் அடிப்படையிலான கட்டணங்களை வசூலிக்கும் (point-based fee plazas) சுங்கச்சாவடியை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒவ்வொரு ட்ரிப்பாக கணக்கிடப்படுகிறது.

உதாரணத்துக்கு தற்போது நீங்கள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்று திரும்புகிறீர்கள் என்றால், தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இத்தகைய சுங்கச்சாவடிகளில் சென்று திரும்புவது (entry and exit) இரண்டு 'ட்ரிப்களாக' கருதப்படும்.

க்ளோஸ்ட் டோலிங் கட்டண முறைகளைக் கொண்ட சுங்கச்சாவடிகளில் ஒரு பயணத்தின் போது சென்று திரும்பும் இரு வழிப் பயணமும் (round trip) ஒரே ட்ரிப்பாக கருதப்படும்.

அனைவருக்கும் இது கட்டாயமா?

இந்த வருடாந்திர பாஸ் அனைத்து தனியார் வாகனங்களுக்கும் கட்டாயம் இல்லை. விருப்பம் இருப்பவர்கள் இதனைப் பெற்றுக் கொண்டு பயணிக்க இயலும். இல்லையென்றால், தற்போது நடைமுறையில் இருக்கும் அதே ஃபாஸ்டேக் திட்டம் தொடரும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி சுங்கச்சாவடியை கடக்கும் போது, அவர்களது கணக்கில் இருந்து அந்த பயணத்துக்கு தேவையான சுங்கக் கட்டணம் வழக்கம் போல் வசூலிக்கப்படும்.

மாநில நெடுஞ்சாலைகளில் பயன்படுத்த இயலுமா?

இந்த பாஸ் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய எக்ஸ்பிரஸ் வே பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும். மாநிலங்களின் கீழ் வரும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் வேக்களுக்கு இது பொருந்தாது. அதே போன்று, உள்ளூர் நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படும் சாலைகளிலும் இந்த பாஸை பயன்படுத்த இயலாது.

இத்தகைய சாலைகளில் போல் வழக்கமாக ஃபாஸ்டேக்கில் இருந்து கட்டணம் கழிக்கப்படும்.

பத்திரிக்கை தகவல் பணியகத்தின் படி, ஃபாஸ்டேக் 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சுங்கச்சாவடிகளில் அதிக நேரம் காத்திருப்பதைத் தடுக்கவும், எரிபொருளை சேமிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பிறகு 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-முதல் கட்டாயமாக்கி அறிவித்தார் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி.

மக்களுக்கு பயனளிக்குமா?

மாநில நெடுஞ்சாலைகள் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே இத்தகைய பாஸ் வழங்கப்பட்டிருப்பது, உள்ளூர் மாவட்டங்களில் தொடர்ச்சியாக பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது என்று கூறுகிறார், நுகர்வோர் நலன் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை கையாளும் வழக்கறிஞர் எஸ். நடராஜன்.

"ஃபாஸ்டேக் என்பதை மக்கள் ஏற்கெனவே இரட்டை வரிச்சுமையாக உணர்கின்றனர். வாகனங்கள் வாங்கும் போது அவர்கள் சாலை வரியை செலுத்துகின்றனர். பிறகு ஒவ்வொரு சுங்கத்துக்கும் சுங்க கட்டணத்தையும் செலுத்துகின்றனர்.

சில நேரங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு அவர்கள் அளிக்கும் கட்டணம் ஒவ்வொரு சுங்கச் சாவடிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. சாலை பராமரிப்புக்காக வசூலிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனால். பராமரிப்பு பொதுவாக இருக்கும் போது சுங்கச்சாவடி கட்டணம் மட்டும் ஏன் வெவ்வாறாக இருக்கிறது என்ற கேள்வியும் மக்கள் மனதில் நிலவுகிறது" என்றார்.

சில இடங்களில் ஒப்பந்தம் முடிந்த பிறகும் மக்களிடம் கட்டணங்களை வசூலிக்கும் நிகழ்வுகளும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது எனக்கூறும் அவர், தீர்க்க வேண்டிய சவால்களே நிறைய இருக்கின்ற நிலையில் இந்த அறிவிப்பானது அடிக்கடி உள்ளூர்களில், ஒரே மாநிலத்தில் சில மாவட்டங்களில் பணிகளுக்காக பயணிக்கும் நபர்களுக்கு பயனளிக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.

மேற்கொண்டு பேசிய அவர், தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ்வேக்கள் போன்றவை வெவ்வேறு மாநிலங்களுக்கு, வெவ்வேறு பிரதான நகரங்களுக்கு செல்லவே உருவாக்கப்பட்டவை. என்று தெரிவித்தார்.

"பெரும்பாலும் கனரக வாகனங்கள் செல்லும். கார்கள், வேன்கள் மற்றும் ஜீப்கள் போன்றவை மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே செல்லும் என்பதால் இதனால் மக்களுக்கு பலன் இருக்கிறதா என்பது கேள்வி தான். ஒரு முறை 3,000 செலுத்திவிட்டு, குறைவான அளவே பயணங்கள் மேற்கொண்டிருந்தால், அடுத்த ஆண்டுக்கு மீதம் உள்ள பணத்தை மக்கள் பயன்படுத்த இயலாது. மாநில சாலைகளை பயன்படுத்துப்பவர்களுக்கும் இத்தகைய பாஸ்களை அறிமுகம் செய்தால், அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு, இது ஒரு நல்ல சலுகை போன்று இருக்கும்," என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு