'தன்பாலினம் குறித்து பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்’ – கிராமப்புற தன்பாலின தம்பதி வேண்டுகோள்

- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் இருந்து சுமார் 40கி.மீ தொலைவில் உள்ள ஒரு புறநகர் பகுதியில் தற்போது வசித்து வரும் சரவணன் மற்றும் அவரது காதலர் கவியரசன் இருவருமே தமிழகத்தின் இருவேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்களது வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கு கிராமப்புறத்தின் மண்வாசம் வீசிக் கொண்டிருந்தது. வாசலில் சில சேவல்களும் கோழிகளும் மேய்ந்துகொண்டிருக்க, குருவிகளின் கீச்சொலிகள் நிறைந்திருந்தன.
தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில் வந்துள்ள தீர்ப்பு குறித்து அவர்கள் இருவருமே கவலை தெரிவிக்கின்றனர். ஆனால், அதேவேளையில், பொதுமக்களிடையே தன்பாலினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற தலைமை நீதிபதியின் கருத்தை அவர்கள் வரவேற்கின்றனர்.
தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில், தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு மறுத்துள்ளது.
‘பள்ளிப் பாடத்திட்டத்தில் தன்பாலினம் சேர்க்கப்பட வேண்டும்’

தீர்ப்பளிக்கும்போது உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தன்பாலினத்தவர்கள் நகர்ப்புறங்களில் வாழும் மேல்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இல்லையென்றும் அவர்கள் கிராமங்களிலும் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அந்தக் கூற்றுக்குச் சான்றாக விளங்குகின்றனர் சரவணன், கவியரசன் தம்பதி. இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், மக்கள் மத்தியில் தன்பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டதை வரவேற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி, சரவணன், கவியரசன் இருவருமே ஒருமனதாக, தன்பாலினத்தவர் குறித்த பாடங்களைப் பள்ளிப்படிப்பின் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர்.
“நான் ஏழாவது படிக்கும்போதுதான் முதன்முதலில் நான் இதை உணரத் தொடங்கினேன். சக வயது மாணவர்களுக்குப் பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்ட நேரத்தில் எனக்கு ஆண்கள் மீது ஏற்படத் தொடங்கியது.
ஆனால், அந்த நேரத்தில் எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது எனத் தெரியாமல் நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன். அந்த நிலை எதிர்காலத்தில் மாணவர்களுக்கு வராமல் இருக்க பாடத்திட்டத்தில் தன்பாலினத்தவர் குறித்துச் சேர்க்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
‘பெண்கள் மீது ஈர்ப்பு இருந்ததே கிடையாது’
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் சிறுவயதில் தான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் என்பதை உணரத் தொடங்கிய காலகட்டத்தில் அதைப் பற்றிய சரியான புரிதல் இன்றித் தவித்ததாகக் குறிப்பிடுகிறார்.
இதன் காரணமாக, தனது அடையாளத்தை வலிய மறைத்துக்கொண்டு, மற்றவர்களைப் போல் வாழ முற்பட்டதாகவும் பிபிசி தமிழிடம் பேசியபோது சரவணன் தெரிவித்தார்.
“ஆனால், நான் வளர வளர இது மேலும் தீவிரமடைந்தது. வீட்டிலும் இதுகுறித்துப் பேச முடியாது, நண்பர்களிடமும் பேச முடியாது, சமுதாயத்தில் யாரிடமும் இது பற்றிப் பேச முடியாது."
"ஒரு கட்டத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன். பிறகு இதைச் சரிசெய்துகொள்ள வேண்டுமென நினைத்து, என்னை நானே கட்டாயப்படுத்தி பெண்களை வலிய பார்ப்பது, ஈர்ப்பு வர வைக்க முயல்வது போன்ற முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், அது மேன்மேலும் மன அழுத்தத்திற்குத்தான் வழி வகுத்தது,” என்று தான் மனதளவில் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பகிர்ந்துகொண்டார் சரவணன்.
இறுதியாக கல்லூரிப் படிப்பை முடிக்கும்போதுதான், தன்னைப் போலவே பலரும் இருப்பது குறித்தும் மனோவியல் ரீதியாகத் தன்னை மாற்றிக்கொள்ள இதுவொன்றும் மனநோய் இல்லை என்பதையும் தெரிந்துகொண்டார் சரவணன்.
‘கண்களைத் திறந்த 2018 தீர்ப்பு’

சரவணனைப் போலவே கோவையில் மிகவும் உள்ளார்ந்த பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் கவியரசனும், தான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் என்பதைப் புரிந்துகொள்ளவே மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதுதான் முதன்முதலில் நான் இதை உணரத் தொடங்கினேன் என்கிறார் கவியரசன். பெண்களுடன் விரைவாகவே நெருங்கிவிடுவதும் ஆண்களிடம் ஒருவித தயக்கம் இருப்பதையும் பார்த்து பெற்றோரிடம் ஒருவித அச்சம் ஆரம்பத்திலேயே எழத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தன்பாலின உறவுகளை அங்கீகரித்து, சட்டப்பிரிவு 377ஐ நீக்கியது. தன்பாலின உறவுகளை குற்றமற்றதாக அறிவித்த அந்தத் தீர்ப்பு குறித்து செய்தித்தாள்களில் படித்தபோதுதான் கவியரசன் இதுகுறித்த அடிப்படைப் புரிதலையே பெறத் தொடங்கினார்.
“நான் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் கிளாஸ் லீடராக இருந்ததால், தினமும் செய்தித் துணுக்குகளைப் படிப்பேன். அப்போது இந்தச் செய்தியைப் படிக்கும்போது எனக்குள் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அதுதான் என் கண்களைத் திறந்து வைத்தது,” என்று அந்தத் தருணம் குறித்து விவரிக்கிறார்.
வீட்டிலும் கிராமத்திலும் ஏற்பட்ட பிரச்னை

பட மூலாதாரம், Getty Images
“அதற்குப் பிறகுதான் நான் தன்பாலினம் என்றால் என்ன என்பது குறித்துத் தேடத் தொடங்கினேன். அதற்குப் பிறகு கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது என் நண்பர்கள் மத்தியில் இதுகுறித்துப் பேசியபோது அவர்களுக்குமே இது புதியதாக இருந்தது.
நாங்கள் அனைவருமே கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அனைவரும் இதைப் புதிதாகவே பார்த்தார்கள். இருப்பினும், என் பாலின தேர்வைப் புரிந்துகொண்டு எனக்கு ஆதரவு தெரிவித்தார்கள்,” என்று கூறும் அவர், தனது நண்பர்கள் அளித்த ஆதரவே தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளும் தைரியத்தை வரவழைத்ததாக அவர் கூறுகிறார்.
இருப்பினும் வீட்டில் சொல்லும் தைரியம் இல்லாமலேயே கவியரசன் இருந்துள்ளார். ஆனால், அவர் பகுதிநேர பணிக்குச் சென்றுகொண்டிருந்த டியூசன் சென்டரில் இருந்த ஆசிரியர் ஒருவர், வீட்டில் புரிய வைக்க முயன்று நேரடியாகப் பேசியபோது, கவியரசன் அதனால் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
“எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் இதுகுறித்து என் வீட்டில் புரிய வைப்பதாகக் கூறினார். நான் மறுத்துவிட்டேன். ஆனால், அதையும் மீறி அவர் என் வீட்டில் வந்து பேசிவிட்டார்.
அதற்குப் பிறகு, என் வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் பரவலாக என்னைப் பற்றி மறைமுகமாகப் பேசப்பட்டது. நான் இப்படித்தான் இருப்பேன், என் நடத்தைகள் இப்படித்தான் இருக்குமென்று தவறாகப் பேசினார்கள்,” என்று கூறுகிறார் கவியரசன்.
பாட்டி கொடுத்த தைரியம்

கிராமமே அவரைப் பற்றித் தவறாகப் பேசியபோதும் அவரது பாட்டி அவருக்கு ஆதரவாக இருந்ததாகவும் உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார் கவியரசன்.
“எனது நிலைமையை என் பாட்டியிடம் கூறியபோது, அவர் எனக்கு ஆதரவளித்தார். ‘நீ இங்கே இருந்து வேறு எங்கேயாவது போய்விடு. எங்கே இருந்தாலும் சரி உன் விருப்பம் போல் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நிம்மதியாக இரு’ என்றார் என் பாட்டி.
அவர் கொடுத்த தைரியத்திலேயே வீட்டைவிட்டுப் பிரிந்து சரவணனுடன் வந்தேன்,” என்று தனது பாட்டி கொடுத்த தைரியம் மற்றும் அதன்மூலம் தனது வாழ்வில் தான் தொடங்கிய புதிய அத்தியாயம் பற்றிப் பேசினார் கவியரசன்.
இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு, தனது காதலருடன் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்த கவியரசன், இன்று முதுநிலைப் படிப்பையும் முடித்துவிட்டு, சென்னையின் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இருவரும் தம்பதிகளாகத் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கடைசிவரை வாழ வேண்டுமென்ற வைராக்கியம்

சரவணனின் குடும்பத்தைப் பொறுத்தவரை, அவருடன் சேர்த்து அவரது பெற்றோருக்கு மொத்தம் 10 பிள்ளைகள். அதில் கடைசி மகனாகப் பிறந்தவர் சரவணன். அவருக்கு பத்து பேரில் இரண்டாவதாகப் பிறந்த அண்ணனும் 8 மூத்த சகோதரிகளும் உள்ளனர்.
“எங்கள் தந்தை இறந்த பிறகு, அண்ணன் தான் எங்கள் அனைவருக்கும் தந்தையாக இருந்து கவனித்துக்கொண்டார். நான் எனது பாலின தேர்வு குறித்துக் கூறியபோது அம்மா மிகவும் கவலைகொண்டார்.
ஆனால், என் அண்ணனிடம் இதுகுறித்த புரிதல் இருந்தது. அவர் அம்மாவிடம் இதைப் புரிய வைக்க முயன்றார்,” என்று கூறுகிறார் சரவணன்.
பல்வேறு இன்னல்களைக் கடந்து, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பிறகு, தற்போது சரவணனின் வீட்டில், அவர்கள் இருவருக்கும் ஓரளவுக்கு ஆதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
“அம்மாவுக்கு மட்டும் இன்னும் என்னைப் பற்றிய கவலை இருக்கவே செய்கிறது. ஆனால், அவரையும் மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்று மன உறுதியுடன் கூறுகிறார் சரவணன்.

ஆனால், கவியரசனின் வீட்டில் நிலைமை சற்று குழப்பமானதாக இருக்கிறது. அவர்கள் இருவரையும் அவரது வீட்டில் ஏற்றுக்கொண்டதைப் போலவே நடத்துகிறார்கள். ஆனால், இதிலிருந்து மீண்டு என்றாவது ஒருநாள் கவியரசன் தங்களிடமே திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்போடு அவர்கள் காத்திருப்பதாகவும் கவியரசன் கூறுகிறார்.
“என் பெற்றோர், எங்கள் இருவரையும் வீட்டில் நன்றாகவே கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால், என் அம்மா என்னிடம் பேசும்போதெல்லாம், ‘இது ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கே நீடிக்கும், பிறகு சரியாகிவிடும். சீக்கிரமே திரும்பி வந்துவிடு’ என்று சொல்லிக்கொண்டே இருப்பதாக” தெரிவித்தார்.
ஆனால், “இது தற்காலிகமான பிரச்னையல்ல, இது எங்கள் வாழ்க்கை என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். அதே வைராக்கியத்தோடு வாழ்ந்து காட்டுவோம்,” என்று மன உறுதியுடன் கூறுகிறார்கள் சரவணன், கவியரசன் தம்பதி.
ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள காதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, தங்கள் வாழ்வில் தொடங்கியுள்ள இந்தப் புதிய அத்தியாயத்திற்கு உச்சநீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்பு உறுதுணையாக இருக்கும் எனக் காத்திருந்த அவர்கள், அது தங்களை ஏமாற்றிவிட்டதைப் போல் உணர்கின்றனர்.
இருப்பினும், எதிர்காலம் ஒளி நிறைந்ததாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகவே உள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













