தீபாவளி சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எந்த ஊருக்கான பேருந்து எங்கே நிற்கும்? ஏற்பாடு எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை வாழ் மக்கள் தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்குப் பயணிக்கும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஒவ்வோர் ஆண்டும் அச்சுறுத்தக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது.
இந்த ஆண்டு அந்த நெரிசலைச் சமாளிக்க சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெருநகரத்தின் ஐந்து இடங்களில், பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
அதோடு தமிழ்நாடு முழுவதும் தீபாவளி நேரத்தில் பயணிகளின் வசதிக்காக சுமார் 10,000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அது ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால், பலரும் வார இறுதி நாளுக்காகக் காத்திருக்காமல், வியாழக்கிழமை முதலே ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். அதனால், நவம்பர் 9ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 13ஆம் தேதி வரை பலரும் பொதுப் போக்குவரத்து பேருந்துகளைப் பயன்படுத்துவர்.

தீபாவளி முடிந்த அடுத்த நாள், நவம்பர் 13ஆம் தேதி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், பண்டிகை முடிந்து திரும்பும் வரை தேவைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து சாதாரண நாட்களில் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகள் ஐந்து இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த ஊர்களுக்குச் செல்ல எந்தெந்த பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும்?
மாதவரம் புதிய பேருந்து நிலையம்: செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திரா மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகள்.
கே.கே.நகர் பேருந்து நிலையம்: ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்
தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்: கும்பகோணம், தஞ்சாவூர் வழியாகச் செல்லும் பேருந்துகள்

பட மூலாதாரம், SS Sivasankar / Twitter
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்: திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
பூந்தமல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம்: வேலூர், ஆரணி, ஆற்காடு, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, தர்மபுரி, ஓசூர் செல்லும் பேருந்துகள்.
இந்த ஐந்து பேருந்து நிலையங்களைத் தவிர்த்து, சென்னை கோயம்பேடு வழியாகவும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, பெங்களூரு, அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகள்.

பட மூலாதாரம், Getty Images
சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் கிண்டி கத்திப்பாரா, அசோக் பில்லர், எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம், ரோகிணி திரையரங்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, ஆலந்தூர் கோர்ட் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் நிற்கும்.
தீபாவளி சிறப்புப் பேருந்தில் முன்பதிவு
தீபாவளி பண்டிகையை ஒட்டி இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை, 1.20 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அதில், சென்னையில் இருந்து மட்டும் செல்ல 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்காக சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்வார்கள் என்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அரசு இயக்கும் விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர், 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும் என்ற வசதி இருந்ததால், தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக, கடந்த அக்டோபர் மாதம் முன்பதிவு செய்துகொள்ள அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
அதன்படி, வெள்ளிக்கிழமை நவம்பர் 10ஆம் தேதி பயணம் மேற்கொள்ள அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முன்பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை நவம்பர்11ஆம் தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்றது. அதனால், சிறப்புப் பேருந்துகளில் தற்போது முன்பதிவு செய்ய முடியாது.
சிறப்புப் பேருந்துகளில் தற்போது பெரும்பாலான இருக்கைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டதால், கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், நேரடியாக பேருந்து நிலையத்திற்குச் சென்று தினசரி பயணப்படும் பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை உதவி எண் அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
சிலர் பதிவு செய்த இருக்கையை ரத்து செய்தால், சிறப்புப் பேருந்துகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு போக்குவரத்துக் கழக www.tnstc.in இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலியில் பதிவு பக்கத்தில் அந்த விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் ஆம்னி பேருந்துகளின் நிறுத்தம் எங்கே?

பட மூலாதாரம், getty images
நவம்பர் 9, 10, 11ஆம் தேதிகளில் சென்னை நகரத்தில் தாம்பரம்- பெருங்களத்தூர் வரை ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என ஏற்கெனவே போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை நகரத்திற்குள் ஏற்படும் நெரிசலைச் சமாளிக்க ஆம்னி பேருந்துகள் நகரத்தில் பல இடங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அதனால், சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்ல பதிவு செய்தவர்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் சென்றுதான் ஆம்னி பேருந்தில் செல்ல முடியும்.
வடபழனி, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட நிறுத்தங்களில் பேருந்துகள் நிறுத்தப்படாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் உதவி எண்: 08066006572 / 9513948001
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய உதவி எண்: 18004256151/9840350066
பயணத்தின்போது பெண்களுக்கு பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்பட்டால் புகார் அளிக்கவேண்டிய எண்: 181
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












