You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காந்தி அமைதி விருது கீதா பிரஸிற்கு அறிவிக்கப்பட்டதில் சர்ச்சை ஏன்?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்த ஆண்டின் காந்தி அமைதி விருது கோரக்பூரிலிருந்து செயல்படும் கீதா பதிப்பகத்திற்கு (Gita Press) அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாவர்க்கருக்கு இந்த விருதை அளித்ததற்கு ஒப்பானது எனக் கடுமையாக விமர்சித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இந்த விருது அறிவிப்பு இவ்வளவு சர்ச்சையாவதற்கு காரணம் என்ன?
இந்த ஆண்டிற்கான காந்தி அமைதி விருது (Gandhi Peace Prize) கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகத்திற்கு (Gita Press) வழங்கப்படுவதாக ஜூன் 18ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான தேர்வுகுழு அறிவித்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் "கீதா பதிப்பகம் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அனைவரின் நல்வாழ்வுக்காகவும் பாடுபடுகிறது. காந்திய கொள்கைகளான அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் கீதா பதிப்பகத்தின் பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்கிறார். கீதா பதிப்பகம் நிறுவப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்த நிலையில், காந்தி அமைதி விருது வழங்கப்படுவது, சமூக சேவையில் அந்நிறுவனம் ஆற்றி வரும் பணிக்கான அங்கீகாரம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விருது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், கடந்த நூறு ஆண்டுகளில் மக்களிடையே சமூக, கலாசார மாற்றத்தை ஏற்படுத்தியதில் கீதா பிரஸ் குறிப்பிடத்தகுந்த பங்கை ஆற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.
காந்தி விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
சர்வதேச காந்தி அமைதி விருது என்பது மகாத்மா காந்தியின் 125வது பிறந்த நாளை ஒட்டி 1995ல் உருவாக்கப்பட்டது. அகிம்சை முறையிலும் காந்திய வழியிலும் சமூக, அரசியல், பொருளாதார மாற்றத்திற்காக பாடுபடுபவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய விருது இது. இந்த விருது என்பது ஒரு கோடி ரூபாய் பணமும் சான்றிதழையும் உள்ளடக்கியது. குடியுரிமை, இனம், பாலினம் போன்ற பாகுபாடுகள் இன்றி இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது.
இதற்கான தேர்வுக் குழுவில் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், இந்தியாவின் தலைமை நீதிபதி, இரண்டு முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள். முக்கியமான பிரமுகர்களிடமிருந்து இந்த விருதுக்கான பரிந்துரைகள் கோரி பெறப்படும். அந்தப் பரிந்துரைகளில் இருந்தே விருதுக்கு உரியவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். அந்தப் பரிந்துரைகளில் தகுதியானவர்கள் இல்லாவிட்டால், அந்த ஆண்டு விருதை நிறுத்திவைக்க தேர்வுக் குழுவுக்கு உரிமை உண்டு.
2006ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டுவரை இந்த விருது வழங்கப்படவில்லை. இதற்கு முன்பாக இந்த விருதை நெல்சன் மண்டேலா, டெஸ்மண்ட் டூடு போன்ற சர்வதேச பிரபலங்களும் கிராமீன் வங்கி, இஸ்ரோ போன்ற அமைப்புகளும் பெற்றுள்ளன. ஆனால், ராமகிருஷ்ணா மிஷின், பாரதிய வித்யா பவன், விவேகானந்தா கேந்திரா, அக்ஷய பாத்ரா ஃபவுண்டேஷன், ஏகல் அபியான் டிரஸ்ட் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டபோது, இந்துத்துவம் சார்ந்து இந்த விருதுகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
தற்போது, கீதா பிரஸிற்கு இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதும் இதே போன்ற விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
காந்தி அமைதி விருதை கீதா பதிப்பகத்திற்கு வழங்கியதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் தகவல் தொடர்பு பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்திருக்கும் செய்தியில், ’கீதா பிரஸிற்கு இந்த விருதை அளிப்பது சாவர்க்கருக்கும் கோட்சேவிற்கும் இந்த விருதை அளிப்பதைப் போல’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி அமைதி விருதை கீதா பிரஸிற்கு வழங்குவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து.ரவிக்குமாரும் கண்டித்துள்ளார். "கீதா பிரஸ் பதிப்பகத்தின் நிறுவனர் ஜெய்தயாள் கோயந்த்கா, அந்தப் பதிப்பகம் வெளியிடும் கல்யாண் என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியர் பிரசாத் போதார் ஆகியோர் மகாத்மா காந்தியுடன் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தார்கள் என்றபோதிலும் கோயில் நுழைவு, தீண்டாமை ஒழிப்பு, மதச்சார்பின்மை குறித்த காந்தியின் கருத்துகளோடு அவர்கள் உடன்படவில்லை.
“அமைதி, அகிம்சை மற்றும் மனிதத் துன்பங்களைப் போக்க தன்னலமின்றி உழைத்த ஒருவருக்கு, குறிப்பாக சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர், சமூக நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட ஒருவர் - அவர் உயர் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படலாம்” என இந்தப் பரிசுக்கான தகுதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறாக அப்பட்டமான பழமைவாத, வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனத்துத்துக்கு மகாத்மா காந்தியடிகளின் பெயரால் உள்ள இந்தப் பரிசை வழங்குவது மகாத்மா காந்தியடிகளையும், மதச்சார்பின்மையையும் ஒருசேர அவமதிப்பதாகும்.
இந்தப் பரிசுக்கானவர்களைத் தேர்வு செய்யும் ஐந்து நபர்களைக் கொண்ட குழுவுக்கு பிரதமர் தலைவராக இருப்பார், இந்தியத் தலைமை நீதிபதி, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என அங்கீகரிக்கப்பட்டவர் அல்லது அப்போது அத்தகைய எதிர்க்கட்சித் தலைவர் இல்லாவிட்டால், அந்த அவையில் உள்ள தனிப் பெரும் கட்சியின் தலைவர்; மற்றும் இரண்டு முக்கிய நபர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அந்தக் குழு கூடித்தான் இந்த முடிவை எடுத்ததா? உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவரும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டார்களா? இதுபற்றிய விவரங்களை ஒன்றிய அரசு வெளியிடவேண்டும்" என்கிறார் ரவிக்குமார்.
கீதா பிரஸின் தோற்றம் குறித்து ஒரு விரிவான ஆய்வு நூலை பத்திரிகையாளர் அக்ஷய் முகுல் ’Gita Press and the Making of Hindu India’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம்தான் இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படை என்கிறார் பதிப்பாளரான பத்ரி சேஷாத்ரி.
"கீதா பிரஸ் குறித்து அக்ஷய் முகல் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில்தான் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. வட இந்தியாவில் சமூக, மத ஒருங்கிணைப்பை கீதா பிரஸ் மூலமாகச் செய்தார்கள் என்பதுதான் அக்ஷய் முகிலின் கருதுகோள். இந்த அடிப்படையில்தான் காங்கிரஸ் உள்ளிட்ட தாராளவாதிகள், இந்த விருது கீதா பிரஸிற்கு வழங்கப்படுவதை எதிர்க்கிறார்கள் எனப் பார்க்கிறேன்" என்கிறார் அவர்.
இந்த ஒரு புத்தகத்தை வைத்துமட்டும் இந்த முடிவுக்கு வந்துவிட முடியுமா? "ஏனென்றால் கீதா பிரஸ் குறித்து வேறு புத்தகங்கள் ஏதும் வரவில்லை. கீதா பிரஸ் சென்னை புத்தகக் கண்காட்சியில் பெரிய அளவில் பங்கேற்கிறார்கள்.
ஆனால், அவர்களின் இந்தப் பின்னணி குறித்து அக்ஷய் முகுலின் புத்தகம் வரும்வரை யாருக்கும் தெரியாது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அக்ஷய் முகலின் நூலுக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்டோரின் எதிர்ப்பை கேள்விக்குட்படுத்த வேண்டுமானால், அந்தப் புத்தகத்தை விரிவாக ஆராய்ந்து, அதனை மறுக்க வேண்டும். அதற்கு இதுதான் சரியான தருணம்" என்கிறார் பத்ரி சேஷாத்ரி.
கீதா பிரஸ் இந்த விருதுப் பணத்தை ஏற்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறது. “இது எங்களுக்கு மிகப் பெரிய கௌரவம். ஆனால், எங்கள் கொள்கைப்படி பணத்தை ஏற்கமாட்டோம். இதன் பணப் பலன்களை ஏற்கவேண்டாமென அறக்கட்டளை வாரியம் முடிவுசெய்துள்ளது. ஆனால், இந்த விருதைப் பெற்றுக்கொள்வோம்” என கீதா பிரஸின் நிர்வாகி லால்மாணி திரிபாதி கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கீதா பிரசின் தோற்றமும் வளர்ச்சியும்
கீதா பிரஸின் தோற்றம் குறித்து ஒரு விரிவான ஆய்வு நூலை பத்திரிகையாளர் அக்ஷய் முகுல் எழுதியிருக்கிறார். இந்த நூல், இந்தியாவில் இந்துத்துவத்தின் வளர்ச்சியில் கீதா பிரஸின் பங்களிப்பைச் சொல்வதோடு, அந்த காலகட்டத் தலைவர்களோடு இந்த அமைப்பிற்கு இருந்த உறவையும் மிக விரிவாக விவரிக்கிறது. 'கீதா பிரஸ் அண்ட் தி மேக்கிங் ஆஃப் ஹிந்து இந்தியா' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியான இந்த நூலை விடியல் பதிப்பகம் தமிழில் 'இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த நூல், இந்த அமைப்பைப் பற்றிய பல விரிவான தகவல்களைத் தருகிறது.
1920களில் இரண்டு மார்வாரி தொழிலதிபர்களான ஜெய்தயாள் கோயந்த்கா மற்றும் அனுமன் பிரசாத் போதார் ஆகிய இருவரும் இணைந்து கீதா பிரஸ்-ஐ நிறுவினர். ஜெய் தயாள் கோயந்த்காவிற்கு நீண்ட காலமாகவே பகவத் கீதையின் மீது ஆர்வம் உண்டு. கீதையின் அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பை வெளியிடவும் இந்து மத நூல்களை வெளியிடவும் இருவரும் ஆர்வம் கொண்டனர்.
இதையடுத்து 1923 ஏப்ரலில் கீதா பிரஸ் பகவத் கீதையின் முதல் மொழியாக்கத்தை வெளியிட்டது. 1926வாக்கில் இந்தி பதிப்பக உலகில் தன்னை வலுவாக காலூன்றிக் கொண்ட கீதா பிரஸ், கல்யாண் என்ற மாத இதழை வெளியிட முடிவுசெய்தது. இந்தத் தருணத்தில் கீதா பிரஸின் தலைமையகம் கல்கத்தாவில் கோவிந்த் பவன் என்ற அலுவலகத்தில் இருந்து செயல்பட்டுவந்தது.
லாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல் சனாதன இந்து மதத்தை பரப்புவதை அடிப்படையாகக் கொண்டு இந்த பதிப்பகம் செயல்பட ஆரம்பித்தது. கல்யாண் இதழ் வழியாக, சனாதன கோட்பாடுகளை இந்தி மொழி பேசும் இடங்களுக்கெல்லாம் பரப்பியதோடு, இந்தியில் மிகத் தரமாக அச்சிடப்பட்ட ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, இந்துப் புராணங்கள் உள்ளிட்டவற்றை மிக மலிவான விலையில் விற்றது. பிறகு, இதே பதிப்பகத்தில் இருந்து கல்யாண கல்பத்ரு என்ற ஆங்கில இதழும் வெளியிட துவங்கினார்கள்.
அந்த காலகட்டத்தில் புரோகித வகுப்பினரிடம் மட்டுமே இருந்த ராமசரிதமானஸ் நூலை இந்த பதிப்பகம் வெளியிட்டதும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. 1983வாக்கில் ராமசரிதமானஸ் நூல் 57 லட்சம் பிரதிகளை விற்பனை செய்திருந்தது.
தற்போது 'கல்யாண்' மாத இதழ் இரண்டு லட்சம் பிரதிகளும் ‘கல்யாண கல்பதரு’ ஒரு லட்சத்திற்கு அதிகமான பிரதிகளும் விற்பனையாகின்றன.
கீதா பிரஸ் தொடர்புடையோர் காந்திய வழியை பின்பற்றினார்களா?
பொதுவாக காந்தி அமைதி விருது என்பது காந்திய வழியைப் பின்பற்றுவோருக்கும் முன்னெடுத்துச் செல்வோருக்கும் வழங்கப்படும் ஒரு விருதாகக் கருதப்படுகிறது. ஆனால், அக்ஷய் முகுலின் நூல், கீதா பிரஸின் நிறுவனரான அனுமன் பிரசாத் போத்தார், எப்படி காந்தியோடு கடுமையாக முரண்பட்டார் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
காந்தி முன்னெடுத்த சமபந்தி விருந்தையும் ஆலய நுழைவையும் போத்தார் கடுமையாக எதிர்த்தார். "பல இடங்களில் வருண ஜாதியினர் தலித்துகளோடு அமர்ந்து உணவருந்துகிறார்கள். அவர்கள் ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இது எங்கு கொண்டு செல்லும்? அவர்கள் தங்களை தூய்மைப்படுத்திக் கொண்டுள்ளார்களா என்று உங்களது சமபந்தி மற்றும் ஆலய நுழைவு இயக்கங்கள் உறுதிசெய்வதுகூட இல்லை" என்று காந்திக்கு எழுதிய கடித்ததில் குறிப்பிட்டார் போத்தார். ஆலயத்தில் நுழைய தலித்துகள் விரும்பினால், அவர்களுக்காக தனியாக ஏன் ஆலயங்களைக் கட்டக்கூடாது என்றும் கேள்வியெழுப்பினார்.
தீண்டாமை குறித்த போத்தாரின் கருத்துகளை மாற்றுவதற்கு காந்தி செய்த முன் முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தன. காந்தியைப் பற்றிய கடுமையான விமர்சனங்கள் கல்யாண் இதழில் 1948வரை வெளிவந்தன.
1946ஆம் ஆண்டு கோரக்பூரில் நடந்த இந்து மகா சபா ஆண்டு பொதுக்குழுவின்போது போத்தார் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராகவே பணியாற்றினார். இதுவும் கல்யாண் இதழின் காந்தி மீதான காட்டமான தாக்குதல்களும் இணைந்து நாட்டு விடுதலைக்குப் பின் பெரும் தீமைகளாக முடிந்தன. நாதுராம் கோட்சே மற்றும் இந்து மகா சபை, ஆர்எஸ்எஸ் இயக்கங்களைச் சேர்ந்த சிலர் இணைந்து திட்டமிட்டு 1948 ஜனவரி 30ஆம் நாள் தில்லி பிர்லா ஆலயத்தில் காந்தியை கொலைசெய்தனர். அதன் விளைவாக நாடு முழுவதும் 25,000 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் போத்தாரும் அவரது குரு ஜெய் தயாள் கோயந்த்காவும் அடங்குவார். அவர்கள் இருவருக்கும் உதவ மறுத்த ஜி.டி. பிர்லா, அவர்களது வழக்கை சர் பத்ரிதாஸ் கோயங்கா எடுத்து நடத்தியதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர்கள் இருவரும் சனாதன மதத்தைப் பரப்பவில்லை. மாறாக சாத்தான் தர்மத்தையே பரப்புகிறார்கள் என்றும் பிர்லா கண்டித்துரைத்தார்.
போத்தாரின் வாழ்க்கை வரலாற்று கையெழுத்துப்படி ஒன்றில் காந்தி கொலை பற்றிய சிறு குறிப்பு உள்ளது. கொலை நடந்த 1948 ஜனவரி 30ஆம் தேதி போத்தார் தில்லியில் இருந்தார் என அந்தக் குறிப்பு கூறுகிறது. கீதா பிரஸின் முன்னாள் மேலாளர் மகாவீர் பிரசாத். அவர் அனுமன் பிரசாத் போத்தார் மற்றும் கோய்ந்த்கா ஆகியோரின் உதவியாளராகவும் பணியாற்றியவர். அவர்கள் இருவரும் காந்தி கொலையில் தொடர்புடையவர்கள் என ஊகங்களை மகாவீர் பிரசாத் பரப்பியதாக அந்தக் கையெழுத்துப்படி குற்றம்சாட்டுகிறது. அந்த கையெழுத்துப் படி காந்தி கொலை பற்றி தாழ்ந்த குரலில் கூறுவதெல்லாம், "வருந்தத்தக்க நிகழ்வு" என்பது மட்டுமே.
காந்தி கொலை பற்றி கீதா பிரஸ் திட்டமிட்ட மௌனத்தைக் கடைப்பிடித்தது. 1948 ஏப்ரலில் போத்தார் காந்தியுடன் தனக்கு ஏற்பட்ட மோதல்கள் குறித்து கல்யாண் இதழில் எழுதுவும்வரை, காந்தி பற்றி கீதா பிரஸ் எதுவும் பேசவில்லை. கல்யாண் இதழின் பிப்ரவரி, மார்ச் மாத இதழ்களில் காந்தி குறித்து எவ்விதக் குறிப்பும் இல்லாது போனது ஏன்?" என அக்ஷய முகுல் கேள்வி எழுப்புகிறார்.
தற்போது கீதா பிரஸிற்கு காந்தி அமைதி விருதை வழங்குவதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்ற தருணங்களில் காங்கிரஸ் போத்தாருடன் நெருக்கமாகவே இருந்தது. கோவிந்த் வல்லப பந்த் இந்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, போத்தாருக்கு பாரத் ரத்னா விருதை வழங்க முன்வந்ததாகவும் அதனை அவர் மறுத்து கடிதம் எழுதியதாகவும் அக்ஷய் முகுலின் நூல் குறிப்பிடுகிறது.
அதேபோல 1951 மார்ச்சில் காங்கிரசில் ஆதிக்கம் பெற்றிருந்தவர்கள் நடத்திய இந்தியப் பண்பாட்டுக் கழக மாநாட்டில் போத்தாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்து தனிநபர் சட்ட மசோதாக்கள் மீதான விவாதம் நடந்தபோது, கீதா பிரஸ், ஜவஹர்லால் நேரு மற்றும் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மீது பல மாதங்களாக கடுமையான தாக்குதல்களை நடத்தியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்