நீரவ் மோதி, விஜய் மல்லையாவுக்கு சாதகமாக விதிகளை மாற்றியுள்ளதா ஆர்பிஐ?

    • எழுதியவர், ராகவேந்திர ராவ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள், தங்களின் கடன் நிலுவைத் தொகையை திரும்ப செலுத்த வழிவகை செய்யும் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

“சமரச தீர்வு மற்றும் தொழில்நுட்ப ரீதியான கடன் தள்ளுபடிக்கான நடவடிக்கை” (Framework for Compromise settlements and Technical Write -offs) என்ற தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 8 ஆம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், “வங்கிக் கடன்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடன் நிலுவை தொகை திரும்ப பெறுவது தொடர்பாக, சமரச தீர்வையும் வங்கிகள் காணலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆர்பிஐயின் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வங்கி கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் அல்லது மோசடியில் ஈடுபட்ட நிறுவனம், வங்கி உடன் சமரச தீர்வு ஏற்படுத்திக் கொண்ட தேதியில் இருந்து 12 மாதங்களுக்கு பிறகு மீண்டும் புதிதாக கடன் பெறலாம்.

ஆர்பிஐயின் இந்த அறிவிக்கை, இதுதொடர்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த அறிவிக்கையில் இருந்து முரண்பட்டு இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

வங்கிக் கடன்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதோர், வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் ஆகியோருடன் வங்கிகளின் நிர்வாகம் எவ்வித சமரச முயற்சியிலும் இறங்காது என்று 2019 ஜூன் 7ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில் ஆர்பிஐ தெளிவுபடுத்தி இருந்தது.

2022 மார்ச் மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவலின்படி, ‘வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாத 50 பெரிய கடனாளிகளிடம் இருந்து வங்கிகளுக்கு மொத்தம் 92 ஆயிரத்து 570 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வர வேண்டியுள்ளது. இவற்றில் மெஹுல் சோக்சியின் நிறுவன வங்கிக் கடன் நிலுவைத் தொகை மட்டும் 7,848 கோடி ரூபாய்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, 2022 டிசம்பர் வரை, வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் தொடர்பாக மட்டும் நாட்டில் மொத்தம் 15, 778 வங்கிக் கணக்குகள் இருந்தன. இந்த கணக்குகளின் மொத்த கடன் தொகை மதிப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்து 570 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இவற்றில் 85 சதவீதம் அளவிலான கடன்கள் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளை சேர்ந்தவை.

மத்திய பாஜக அரசை சாடும் காங்கிரஸ்

ஆர்பிஐயின் இந்த நடவடிக்கையை வைத்து மத்திய பாஜக அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

“வங்கிக் கடனை திட்டமிட்டு திரும்ப செலுத்தாதவர்கள் மற்றும் மோசடியாளர்கள் குறித்த விதிமுறைகள் திடீரென தற்போது ஏன் மாற்றப்பட்டுள்ளன என்பது குறித்து ஆர்பிஐ உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ், அண்மையில் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியிருந்தார்.

“கடன் மோசடியாளர்கள் தொடர்பான ஆர்பிஐயின் விதிமுறை மாற்றம், வங்கிகள் மீதான பொது மக்கள் மற்றும் வைப்புத்தொகை (Depositors) செலுத்துவோரின் நம்பிக்கையை சீர்குலைத்து விடும் என்று அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கவலை தெரிவித்திருந்தன” என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.

மேலும், “விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு, குறு தொழில் முனைவோர் போன்ற வங்கிக் கடனை நேர்மையாக திரும்பச் செலுத்துவோர், மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தொகையால் (இஎம்ஐ) நிதிச் சுமைக்கு ஆளாக நேர்ந்தால், அந்த சுமையை குறைக்கும் விதத்தில் அவர்களுக்கு ஒருபோதும் இதுபோன்ற சமரச வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால், பணக்கார முதலாளிகளான நீரவ் மோடி. மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா போன்ற மோசடியாளர்களுக்கு சமரச தீர்வை ஆர்பிஐ தற்போது வழங்கி உள்ளது” என்றும் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.

அத்துடன், “வங்கிக் கடன் மோசடியாளர்களுக்கு சாதகமான இந்த முடிவை எடுக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி, தற்போது இந்த அறிவிப்பை வெளியிட என்ன காரணம் என்பதை ஆர்பிஐ விளக்க வேண்டும். இந்த நடவடிக்கையை எடுக்குமாறு பிரதமர் மோதி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஏதேனும் அழுத்தம் கொடுத்ததா? என்பது குறித்தும் ஆர்பிஐ விளக்கமளிக்க வேண்டும்” என்றும் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி இருந்தார்.

வங்கி தொழிற்சங்கங்கள் அதிருப்தி

வங்கி கடன் மோசடியாளர்களுக்கு சமசர தீர்வு எனும் வாய்ப்பை வழங்கும் ஆர்பிஐயின் நடவடிக்கைக்கு அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆறு லட்சம் வங்கிப் பணியாளர்களின் ஒட்டுமொத்த குரலாக, தங்களது கண்டனத்தை இவ்விரு சங்கங்களும் ஒலித்துள்ளன.

ஆர்பிஐயின் இந்த நடவடிக்கை, வங்கிக் கடன் வாங்கிக் கொண்டு நேர்மையற்ற முறையில் செயல் படுவோருக்கு வெகுமதி அளிப்பது போல் அமைந்துவிடும். அதுமட்டுமின்றி, ஒழுங்காக கடனை திருப்பிச் செலுத்துபவர்களுக்கும் தவறான செய்தியை உணர்த்துவதாகிவிடும் என்று இரு வங்கிப் பணியாளர்கள் அமைப்புகளும் சுட்டிக்காட்டி உள்ளன.

கடன் மோசடியாளர்களை சமரச தீர்வுக்கு அனுமதிப்பதன் மூலம், அவர்களின் தவறுகளை ஆர்பிஐ மன்னிப்பதுடன், அவர்களால் ஏற்படும் நிதிச் சுமையை சாதாரண குடிமக்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் சுமக்க கூடும் எனவும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

மேலும், வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்களுக்கு ஆர்பிஐ காட்டும் இந்த கருணை, வங்கிகளின் நிதி நிலைமை மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் இந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.

'குறிப்பிட்ட சிலருக்கு பயனளிக்கும் நடவடிக்கை'

ஆர்பிஐயின் இந்த நடவடிக்கை தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு பயனளிக்கும் முயற்சி என்று விமர்சித்துள்ளார் பொருளாதார நிபுணரும், ஜேஎன்யு பல்கலை கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான அருண் குமார்.

"விவசாயிகள் வங்கிக் கடனை திரும்பச் செலுத்த முடியாதபோது அவர்களுக்கு இதுபோன்ற சமரச வாய்ப்பு தரப்படுவதில்லை. இப்படியொரு வாய்ப்பை தருவது சரியான அணுகுமுறையாக தெரியவில்லை" என்றார் அவர்.

தாங்கள் வாங்கிய கடனை முறையாக திரும்பச் செலுத்தி வந்த நிலையில், பொருளாதார மந்த நிலையின் காரணமாக, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உண்மையில் சிக்கலை சந்திக்கும் நிறுவனங்களுக்கு வேண்டுமானால் இதுபோன்ற வாய்ப்பு அளிக்கப்படலாம். ஆனால், கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவர்களுடன் வங்கி நிர்வாகங்கள் சமசர முயற்சியை மேற்கொள்ளும் வாய்ப்பை ஆர்பிஐ அளிக்கக் கூடாது. மாறாக, கடன் மோசடியாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையெனில், வங்கிக் கடன் வாங்குவோர் மத்தியில் சமரச தீர்வு எண்ணம் வளர்ந்து கொண்டே தான் போகும் என்கிறார் பேராசிரியர் அருண் குமார்.

வங்கியில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவர்கள் பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். மேலும் தொழிலதிபர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையேயான பரஸ்பர உறவால் இந்தியாவில் ‘க்ரோனி கேப்பிடலிசம்’ வளர்ந்துள்ளது.

இவற்றின் விளைவாக வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து, ஒரு கட்டத்தில் கடன் கொடுக்க முடியாத சூழலுக்கு வங்கிகள் தள்ளப்படுகின்றன. இது வங்கிகளின் வணிக சூழலை பாதிப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார் அவர்.

அதேநேரம், சிக்கலில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு பயனளிக்கும் விதத்தில் ஆர்பிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது எனக் கூறும் அருண் குமார், அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

'நீரவ் மோடி, மல்லையாவுக்கு எந்த பலனும் இல்லை'

கடன் சமரச தீர்வு தொடர்பான ஆர்பிஐயின் சமீபத்திய நடவடிக்கையை சிலர் வேண்டுமென்றே விமர்சிக்கின்றனர் என்று கூறுகிறார் வலதுசாரி அரசியல் சிந்தனையாளர் மற்றும் பொருளாதார நிபுணருமான டாக்டர் சுவ்ரோக்மல் தத்தா.

"ஆர்பிஐயின் இந்த நடவடிக்கையை விமர்சிப்பதில் பெரும்பாலானவை அரசியல் சார்ந்தவை எனக் கூறும் தத்தா, விவசாயிகள் துயரத்தில் இருந்த போது, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தது" என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"ஆர்பிஐயின் இந்த நடவடிக்கையை பயன்படுத்தி, வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாததுடன், அத்தொகையை தவறாக பயன்படுத்திய நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்கள் தப்பிக்க வழியில்லை. ஏனெனில் அவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர்களை இந்தியாவுக்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது" என்றும் அவர் கூறுகிறார்.

கோவிட் தருணத்தில் பல சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பொருளாதாரரீதியாக பிரச்சனைகளை எதிர்கொண்டன. மேலும் கொரோனா காரணமாக அவற்றின் செயல்பாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டன. இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் தாங்கள் நஷ்மடைந்துள்ளதாகவும், நெருக்கடியில் இருந்து மீள்வது தங்கள் கையில் இல்லை என்றும் அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

"சூழ்நிலை தங்களுக்கு சாதகமாக இருந்திருந்தால், கடனை திரும்ப செலுத்தாமல் இருந்திருக்கமாட்டோம் என்பதை சட்டப்பூர்வமாக நிரூபிப்பவர்களுக்கு பயனளிக்கும் நோக்கத்தில் தான் ஆர்பிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது."

"ஒரு நிறுவனம் அல்லது தனி நபர் கடந்த காலங்களில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாமல் இருந்திருக்கிறார்களா அல்லது கோவிட் போன்ற எதிர்பாராத சூழல் காரணமாக உண்மையில் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதா? கடந்த காலங்களில் ஒரு நிறுவனம் அல்லது தனிநபர் வங்கிக் கடனை முறையாக திருப்பிச் செலுத்தி இருப்பது, கடனை முறைகேடாக பயன்படுத்தி உள்ளது உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு தான், சம்பந்தப்பட்டவர்கள் கடன் சமரச தீர்வில் பயன்பெற வாய்ப்பு அளிக்கப்படலாம்" என்கிறார் தத்தா.

தத்தாவின் கூற்றுப்படி, "நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்களுக்கு விலக்கு அளிக்க போவதாக ஆர்பிஐ அறிவிக்கவி்ல்லை. கடந்த காலங்களில் கடனை முறையாக திருப்பிச் செலுத்தி வந்த நிலையில், கொரோனா போன்ற காரணங்களால் முதல்முறையாக கடனை திருப்பிச் செலுத்த தவறியவர்கள் ஆர்பிஐயின் இந்த சமரச தீர்வு மூலம் மன்னிக்கப்பட வேண்டும்" என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: