You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"நீருக்கடியில் சத்தம், வேகமாக கரையும் ஆக்சிஜன்" - டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கியில் 5 பேருக்கும் என்ன ஆனது?
- எழுதியவர், காரேத் ஈவான்ஸ் & லாரா கோஸி
- பதவி, பிபிசி நியூஸ்
அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை பார்க்கும் ஆழ்கடல் சுற்றுலாவின் ஒரு பகுதியாக 5 பேருடன் சென்ற நீர்மூழ்கி காணாமல் போய் 3 நாட்கள் கடந்துவிட்டன. அது காணாமல் போன பகுதியில், நீருக்கடியில் இருந்து சத்தம் எழுந்ததை கனடிய கடற்படைக்குச் சொந்தமான பி-3 விமானம் கேட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசின் உள்ளீடு ஆவணங்களை சுட்டிக்காட்டி, அது மோதும சத்தமாக இருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த சத்தம் எப்போது, எவ்வளவு நேரத்திற்கு கேட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று சி.என்.என். தொலைக்காட்சி செய்தி கூறுகிறது.
நீர் மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன் ஆழ்கடல் ஆய்வு செய்யும் தனியார் நிறுவனங்களும் இணைந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
அட்லாண்டிக் பெருங்கடலில் 19,650 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இந்தியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக வன்முறை நீடிக்கும் மணிப்பூர் மாநிலத்தின் பரப்பளவுக்கு இது கிட்டத்தட்ட சமமாகும்.
காணாமல் போன நீர்மூழ்கியில் உள்ள 5 பேரும் இன்னும் 30 மணி நேரத்திற்கு சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் மட்டுமே எஞ்சியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடும் என்பதால் விரைந்து அவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வு நிறுவனமான மெகல்லனின் உதவியையும் ஓஷன்கேட் நிறுவனம் கேட்டுள்ளது.
காணாமல் போன நீர்மூழ்கியில் உள்ள 5 பேரும் இன்னும் 30 மணி நேரத்திற்கு சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் மட்டுமே எஞ்சியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடும் என்பதால் விரைந்து அவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வு நிறுவனமான மெகல்லனின் உதவியையும் ஓஷன்கேட் நிறுவனம் கேட்டுள்ளது.
தேடுதல் பணி மிகவும் சிக்கலாக இருந்தாலும், நீர்மூழ்கி எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்ததுமே அதனை மீட்டு வெளியே கொண்டு வர தேவையான அனைத்தையும் செய்ய நிபுணர்கள் தயாராக இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
காணாமல் போன நீர்மூழ்கியை கப்பல்கள், விமானங்கள் மூலம் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டைட்டானிக்கை நேரில் பார்க்க 8 நாள் சுற்றுலா
ஹாலிவுட் சினிமா வடிவில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்ட 'டைட்டானிக்' கப்பல் நியூ ஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸ் நகருக்குத் தெற்கே சுமார் 700 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக ஆழ்கடலில் ஆழ்ந்த துயில் கொண்டிருக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்ப்பதற்கென தனியாக சுற்றுலாவே நடத்தப்படுகிறது. அத்தகைய நிறுவனங்களில் ஒன்று ஓஷன்கேட் (Oceangate).
தற்போது, ஆழ்கடலில் காணாமல் போன சிறிய சுற்றுலா நீர்மூழ்கி அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டன் என்ற நீர்மூழ்கி என்று கூறப்படுகிறது. ஒரு லாரி அளவிலான இந்த நீர்மூழ்கியில் 5 பேர் வரை பயணிக்க முடியும். அதில், வழக்கமாக 4 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.
ஆழ்கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் இந்த சுற்றுலா 8 நாட்கள் கொண்டது. அதற்கு கட்டணமாக ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த நீர்மூழ்கியில் வழக்கமாக ஒரு பைலட், 3 சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் பயணிப்பார்கள்.
விபரீதத்தில் முடிந்த இந்த பயணம், நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியுள்ளது.
பயணத்தை தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
நீர்மூழ்கியில் உள்ள 5 பேரையும் பத்திரமாக மீட்க அனைத்து வாய்ப்புகளை பயன்படுத்தி வருவதாக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன.
காணாமல் போன நீர்மூழ்கி தனது பயணத்தை நியூபவுண்ட்லாந்தில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியிருந்த நிலையில், மீட்புப் பணிகள் மசாசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் இருநது ஒருங்கிணைக்கப்படுகின்றன.
நீர்மூழ்கியில் 96 மணி நேரத்திற்கு ஆக்சிஜன் இருக்க வாய்ப்பு
"நீர்மூழ்கியில் 70 முதல் 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பில் இருக்கலாம்" என்று அமெரிக்க கடலோர காவல்படையின் ரியர் அட்மிரல் ஜான் மாவ்கர் தெரிவித்தார்.
2 விமானங்கள், ஒரு நீர்மூழ்கி மற்றும் சோனார் மிதவைகளைக் கொண்டு, நீர்மூழ்கியை தேடும் பணிகள் நடைபெறுவதாகவும், நீர்மூழ்கி காணாமல் போன இடம் தொலைதூர பகுதி என்பதால் தேடுதல் பணி கடினமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மீட்புக் குழுவினர் இந்த பணியை தனிப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு, நீர்மூழ்கியில் உள்ள 5 பேரையும் உயிருடன் மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீர்மூழ்கியில் இருந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர் கதி என்ன?
ஆழ்கடலில் காணாமல் போன நீர்மூழ்கியில் பிரிட்டனைச் சேர்ந்த 58 வயது கோடீஸ்வரரான ஹாமிஷ் ஹார்டிங் என்பவரும் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வார இறுதியில் ஹார்டிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில். டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்கப் போவதாக பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், நியூபவுண்ட்லாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிர்காலம் மிக மோசமாக இருப்பதால் 2023-ம் ஆண்டில் அவரது பயணமே மனிதர்கள் அங்கே செல்லும் ஒரே பயணமாக இருக்கக் கூடும் என்றும் அவர் கூறியிருந்தார்.
பின்னர் அவரே, "வானிலை சற்று மேம்பட்டிருக்கிறது. ஆழ்கடல் பயணத்தை நாளை மேற்கொள்ளவிருக்கிறோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீர்மூழ்கிக்குள் இருந்த 5 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது மட்டுமே தங்களது முழு கவனமும் இருப்பதாக ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது.
"காணாமல் போன நீர்மூழ்கியுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் பல அரசு அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் செய்து வரும் உதவிகளுக்கு பெரிய அளவில் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
"உங்களது வழக்கமான அன்றாட வாழ்க்கையில் இருந்து விடுபட்டு வெளியே வந்து உண்மையிலேயே அசாதாரணமான ஒன்றை கண்டடையு ம் வாய்ப்பு" என்று அந்நிறுவனம் கார்பன்-பைபர் நீர்மூழ்கியில் மேற்கொள்ளும் இந்த 8 நாள் சுற்றுலாவை விளம்பரப்படுத்துகிறது.
இந்த பயணத்திற்குப் பிறகு, அடுத்த ஆண்டில் இதுபோன்ற மேலும் 2 சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அதன் இணையதளம் கூறுகிறது.
டைட்டானிக் நீர்மூழ்கி
ஓஷன்கேட் நிறுவனம் தங்களிடம் 3 நீர்மூழ்கிகள் இருப்பதாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் டைட்டன் நீர்மூழ்கி மட்டுமே டைட்டானிக் மூழ்கியுள்ள ஆழத்திற்குச் செல்லக் கூடியது.
10,432 கிலோகிராம் எடை கொண்ட அந்த நீர்மூழ்கியால் 13,100 அடியாழம் வரை செல்ல முடியும், அதில் 5 பேருக்கு 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இஇருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
போலார் பிரின்ஸ் என்ற போக்குவரத்து நீர்மூழ்கியே இந்த பயணத்தில் ஈடுபட்டதாக அதன் உரிமையாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆழ்கடலில் டைட்டானிக் மூழ்கியுள்ள இடத்திற்குச் சென்று திரும்பி வர 8 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
டைட்டானிக் கப்பல் விபத்து
டைட்டானிக் கப்பல் அது கட்டப்பட்ட காலத்தில் இருந்த உலகின் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமையைப் பெற்றது. 1912-ம் ஆண்டு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மேற்கொண்ட கன்னிப் பயணத்தின் போதே, அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. பயணிகள், பணியாளர்கள் என அதில் இருந்த 2,200 பேரில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர்.
1985-ம் ஆண்டு அதன் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டைட்டானிக் மீதான ஆர்வம் உலகெங்கும் அதிகரித்தது.
ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் இரு பாகங்களாக 2,600 அடி இடைவெளியில் கிடக்கின்றன. கடந்த மாதத்தில் ஆழ்கடல் வரைபடக் கலை மூலம் டைட்டானிக் சிதைவுகளின் முழுமையான டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்பட்டது. கப்பலின் பிரமாண்டம், அதன் ஒரு புரொபல்லரில் குறிப்பிடப்பட்டிருந்த வரிசை எண் போன்றவை அதன் மூலம் தெரியவந்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்