முடிவுக்கு வரும் ரோஜா சீரியல் - 4 ஆண்டு கால நினைவுகளை பகிரும் நடிகர்கள்

பிரியங்கா நல்கார்

பட மூலாதாரம், @nalkarpriyanka/Instagram

தனியார் தொலைக்காட்சியில் நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற ரோஜா என்ற தொலைக்காட்சித் தொடர் முடிவுக்கு வருவதாக அதில் நடிப்பவர்கள் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

சன் டிவியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ரோஜா என்ற தொலைக்காட்சித் தொடர் வெளியாக ஆரம்பித்தது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்தத் தொடர் தினமும் இரவு 9 மணியளவில் ஒளிபரப்பானது.

இதில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நதியா, அனுராதா, ஒய்.ஜி. மகேந்திரன், நளினி ஆகியோர் சிறப்புத் தோற்றமாக வந்து போயினர்.

ஆரம்பத்தில் இந்தத் தொடர், பிற்பகல் மூன்று மணிக்கு ஒளிபரப்பானது. மதிய நேரம் ஒளிபரப்பாகும் தொடர்களிலேயே அதிக பார்வையாளர்களைப் பெற்றிருந்த தொடர் என்பதால், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியது.

இந்தத் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய பிறகு, கொரோனா பரவல் காரணமாக 2020 ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதிவரை ஒளிபரப்பாகவில்லை. அதற்குப் பிறகு தொடர்ந்து ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் தற்போது 600 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

Roja serial

பட மூலாதாரம், Roja serial/Facebook

தனுஷ், சதாசிவம் ஆகிய இருவர் இந்தத் தொடரை இயக்கினர். ஆரம்பத்தில் இருந்தே முதலிடத்தில் இருந்த இந்த ரோஜா தொடர் சமீப காலமாக டி.ஆர்.பியில் பின்தங்க ஆரம்பித்ததாக செய்திகள் வெளியாகின. முதலிடத்தில் இருந்த அந்தத் தொடர் மூன்றாவது இடத்திற்குச் சென்றது.

ரோஜா ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர். அந்த ஆதரவற்றோர் இல்லம் தொடர்பான ஒரு வழக்கிற்காக அவர் அர்ஜுனை சந்திக்கிறார். அப்போது, அர்ஜுன் வீட்டில் உள்ள அத்தை மகளான அனுவை அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென வீட்டில் நெருக்கடி இருக்கிறது.

இதனால், ரோஜாவும் அர்ஜுனும் ஓர் உடன்படிக்கைக்கு வருகிறார்கள். அதன்படி, ரோஜாவை திருமணம் செய்துகொண்டிருப்பதாக அர்ஜுன் போலியாகக் கூறுகிறான்.

ஆனால், உண்மையிலேயே ரோஜா அர்ஜுனின் அத்தை மகள்தான். ஒரு விபத்தின்போது அத்தையும் மகளும் பிரிக்கப்படுகின்றனர். மகள் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார்.

அதே ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த மற்றொரு பெண்தான் அனு. அவள் ரோஜாவின் உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டு தாம் தான் அர்ஜுனின் அத்தை மகள் எனக் கூறிக்கொண்டு அந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்.

போலியாக கணவன் -மனைவியாக இருந்த ரோஜாவுக்கும் அர்ஜுனுக்கும் உண்மையிலேயே காதல் ஏற்படுகிறது. இதையடுத்து, அர்ஜுனின் தம்பியை திருமணம் செய்ய விரும்புகிறார் அனு.

ஆனால், அர்ஜுனின் தம்பி வேறொரு பெண்ணைக் காதலிக்கிறான். இரு ஆண்டுகளுக்குப் பிறகு உண்மை வெளியாகி அந்த வீட்டிலிருந்து போலி அத்தை மகள் துரத்தப்படுகிறார். அவர், ரோஜாவை பழிவாங்க முயல்கிறார் என்று இந்தத் தொடரின் கதை நீண்டு செல்கிறது.

இந்தத் தொடர் ஆரம்பத்திலிருந்து விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இதில் இருந்த பல காட்சிகள், கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாயின.

ஒரு காட்சியில், ரோஜா இறந்துவிட்டதாகக் காட்டுவதற்கு, இறந்துபோன ஏதோ ஒரு பெண்ணின் சடலத்தைக் கொண்டு வருகின்றனர். அந்தச் சடலத்தை எப்படி என்னுடைய சடலம் எனச் சொல்ல முடியுமென ரோஜா கேட்கும்போது, காகிதத்தால் செய்தது போன்ற முகமூடி ஒன்றை அந்தச் சடலத்தின் மீது வைக்கின்றனர். உடனே, சடலத்தின் முகம் ரோஜாவின் முகத்தைப் போல மாறிவிடுகிறது. இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பெரும் கிண்டலுக்கு உள்ளானது.

இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக இந்தத் தொடரில் நடித்து வருபவர்கள், தங்களுடைய கடைசி நாள் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாகவும் ரோஜா தொடர் முடிவுக்கு வருவதை எண்ணி வருந்துவதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

"எவ்வளவு அற்புதமான பயணமாக இது இருந்தது! 4க்கும் மேற்பட்ட வருடங்கள், நூற்றுக்கணக்கான நினைவுகள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ஏகப்பட்ட அன்பு. அன்பும் ஆதரவும் காட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றிகள். மீண்டும் சந்திக்கலாம்" என்று இந்தத் தொடரில் நாயகனாக நடித்த சிபு சூரியன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்தத் தொடரில் நாயகியாக நடித்த பிரியங்கா நல்கரும் இது தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

"என் வாழ்க்கையில் இந்த நான்கு ஆண்டுகளும் மறக்க முடியாத பயணம். ஒரு வார்த்தைகூட தமிழ் தெரியாமல் வந்த என்னை, நீங்கள் எல்லோரும் உங்கள் வீட்டுப் பெண்ணாக ஏற்றுக்கொண்டீர்கள். இந்த நான்கு ஆண்டுகளில் நிறைய நிறைய அன்பைக் கொடுத்துள்ளீர்கள். உங்களுடைய அன்புக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. இந்த அன்புக்கு ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.

ரோஜாவாக நடிக்க என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்த சரிகமவுக்கும் சன் டிவிக்கு்ம நன்றி. நிறைய நல்ல நியாபகங்கள். நிறைய நல்ல உள்ளங்களுடைய அன்பு, ஆசீர்வாதங்களுடன் ரோஜா முடிவடைகிறது.

இது முடிவல்ல. இன்னொரு புதிய துவக்கம்தான். மீண்டும் சந்திப்போம்" என்று கூறியிருக்கிறார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில், கயல், சுந்தரி, வானத்தைப் போல தொடர்கள் முன்னணி இடத்தைப் பிடித்து வரும் நிலையில், பல வார டிஆர்பி தரவரிசையில் ரோஜா தொடர்ந்து ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில்தான் இந்தத் தொடர், முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காணொளிக் குறிப்பு, 20 அடி உயரத்தில் கேமரூன் வீரர் அடித்த நம்ப முடியாத கோல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: