தாலிபன்களுக்கு பயந்து தனது மகளை ஆண் பிள்ளையாக வளர்த்த தந்தை

ஆப்கானிஸ்தான், தாலிபன், பெண்ணுரிமை

பட மூலாதாரம், NILOFAR AYUBI

வடக்கு ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் நகரின் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நிலோஃபர் அய்யூபி, பலமாக அறையப்பட்டவுடன் தரையில் விழுந்தார். அவரது முகம் நீண்ட நேரம் சிவந்திருந்தது.

அப்போது நீண்ட தாடியுடன் ஒரு உயரமான நபர் அச்சுறுத்தக்கூடிய வகையில் அவளை நெருங்கி, அவளது மார்பில் கை வைத்த போது நிலோஃபருக்கு வயது வெறும் நான்கு தான்.

அந்த நபருக்கு அவள் பெண்ணா என அடையாளம் காண வேண்டும். அவளை கன்னத்தில் அறைந்த பிறகு, அந்த நபர் நிலோஃபரை பார்த்து இனி வரும்காலங்களில் அவளை பர்தா இல்லாமல் பார்த்தால், அவளுடைய தந்தை சிறையில் அடைக்கப்படுவார் என்று மிரட்டினார்.

இந்தச் சம்பவம் நடந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு, பிபிசி வானொலி நிகழ்ச்சியான அவுட்லுக்கிற்கு அளித்த பேட்டியில் நிலோஃபர், "நான் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தேன். அப்பாவின் முகம் கோபத்தில் சிவந்தது. அவர் கோபத்தில் சீறத் தொடங்கினார்," எனக் கூறுகிறார்.

"எனது தந்தை அறையில் அங்குமிங்கும் 'உன்னைத் தொடுவதற்கான தைரியம் எங்கிருந்து அவனுக்கு வந்தது' என முணுமுணுத்தவாறே நடந்தது எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது," எனக் கூறுகிறார் நிலோஃபர்.

தொடர்ந்து பேசிய நிலோஃபர், "இதற்கு பிறகு எனது தந்தை ஒரு பெரிய முடிவை எடுத்தார். எனது அம்மாவிடம் கத்திரிக்கோலை கொண்டு எனது முடியை வெட்டுமாறு கூறினார்," என்றார்.

"ஆண் பிள்ளைகளுக்கான உடைகளை அவளுக்கு உடுத்தி விடு என அம்மாவிடம் கூறினார்," என்றார்.

ஷரியா சட்டத்திலிரிந்து தப்பிக்க போட்ட வேடம்

தாலிபான் ஆட்சியின் முதல் காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் வளர்ந்தார் நிலோஃபர்.

இது 1996 மற்றும் 2001-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலம். தாலிபான்களின் ஷரியா சட்டத்தில் இருந்து தப்பிக்க, நிலோஃபர் தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஒரு சிறுவனாக வாழ்ந்தார்.

"ஷரியா சட்டங்களை தலிபான்கள் தங்களுக்கு ஏற்றார் போல புரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும் இதன் கீழ் பெண்களின் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன," என நிலோஃபர் கூறுகிறார்.

நிலோஃபர் இப்போது போலந்தில் வசிக்கிறார். தனது குழந்தைப் பருவத்தில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்த அவர், "அந்த நாட்களில் ஆப்கானிஸ்தானில் வளர்ந்தது, ஏதோ உலகின் மிகவும் பழமைவாத பிராந்தியத்தில் வளர்ந்தது போல் இருந்தது," என்கிறார்.

மேலும் "அங்கு உங்களுக்கான உரிமைகள் நீங்கள் ஆணா அல்லது பெண்ணா என்பதை வைத்து தீர்மானிக்கப்பட்டது," எனச் சொல்கிறார்.

ஆப்கானிஸ்தான், தாலிபன், பெண்ணுரிமை

பட மூலாதாரம், NILOFAR AYUBI

படக்குறிப்பு, நிலோஃபர் ஆயுபி

ஆண்கள் இல்லாத குடும்பங்களின் நிலை

பிறந்த வருடம் 1993 என பாஸ்போர்ட்டில் இருந்தாலும், நிலோஃபர் பிறந்தது 1996-ஆம் ஆண்டில்.

2001-இல் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்கு வந்து தாலிபான்கள் பின்வாங்கியவுடன், நிலோபரின் தந்தை அவளைப் பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கினார். தன் மகள் சீக்கிரமாக படிப்பைத் தொடங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

"குந்தூஸ் பெண்களுக்கு ஏற்ற நகரம் அல்ல. பெண்களை விடுங்கள், ஆண்கள் வாழக் கூட மிகவும் கடினமான ஒரு நகரம் அது," எனக் கூறுகிறார் நிலோஃபர்.

தொடர்ந்து அவர், "ஆப்கானிஸ்தானில் ஒரு ஆணாக இருப்பது மிகப்பெரிய ஒரு பலத்தை அளிக்கிறது. இரண்டு வயது சிறுவனாக இருந்தால், பெற்ற தாயை விட அதிக மரியாதை அவனுக்குக் கிடைக்கும். நான்கு வயது சிறுவனாக இருந்தாலும் கூட, அவனைப் பெற்ற தாயின் பாதுகாவலனாக அவன் மாறி விடுகிறான். அவள் அடிமை போன்றவள். ஒரு பெண்ணாக நீங்கள் முற்றிலும் கண்ணுக்கு தெரியாத ஒரு உயிரினம் போல தான் இருக்க வேண்டும்," என்றார்.

இதன் காரணமாக தான் பல குடும்பங்களில் தங்களது மகள்களுக்கு, ஆண்கள் போல உடை அணிவித்து வளர்ப்பது வழக்கமாக இருந்தது என்று நிலோஃபர் கூறுகிறார்.

அவர் மேலும், "ஒரு குடும்பத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல ஆண் இல்லை என்றால், எந்தவொரு வசதியான நபரும் அந்த குடும்பத்தின் பெண் உறுப்பினரை அணுகி அவளை மனைவியாக்க முயற்சிப்பார்," கூறினார்.

ஆனால் தன்னுடைய குடும்பத்தில் அந்த நிலை இல்லை எனவும். குடும்பத்தில் ஆண்கள் இருந்ததால் தன்னால் சுதந்திரமாக வாழ முடிந்ததாக நிலோஃபர் கூறுகிறார்.

ஆப்கானிஸ்தான், தாலிபன், பெண்ணுரிமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலோஃபர் அவரது சகோதரர்களைப் போலவே நடத்தப்பட்டார். சிறுவர்களின் ஆடையை அணிந்து கொண்டு, தனது தந்தையுடன் சந்தைக்குச் செல்வார்

சிறுவனாக வாழ்வதன் சுதந்திரம்

முடி வெட்டிக் கொண்டு, தனது சகோதரனின் உடைகளை அணியத் தொடங்கிய பிறகு, தனது வாழ்க்கை எவ்வாறு மாறப் போகிறது என்பதைக் குறித்து அவர் அறிந்திருக்கவில்லை.

"நான் என் சகோதரர்களைப் போலவே நடத்தப்பட்டேன். சிறுவர்களின் ஆடையை அணிந்து கொண்டு, எனது தந்தையுடன் சந்தைக்குச் செல்வேன். என்னால் பேருந்தில் செல்ல முடிந்தது. விளையாட முடிந்தது. எனது பகுதியில் இருந்த சிறுவர்கள் எனது நண்பர்களானார்கள். நான் எப்போதும் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தேன்," என நிலோஃபர் கூறுகிறார்.

ஆனால் நிலோஃபரின் பிற சகோதரிகளின் வாழ்க்கை, ஆப்கானிஸ்தானின் மற்ற பெண்களது போலவே இருந்தது. அவர்கள் தலையை மூடிக்கொண்டு நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியிருந்தது. உடலின் எந்த பாகமும் தெரியாத வகையில் அவர்கள் ஆடைகளை அணிய வேண்டும். தனது தந்தை அதை வெறுத்ததாக நிலோஃபர் கூறுகிறார்.

“அந்த மஞ்சள் பாரம்பரிய உடைகளை நாங்கள் அணிவதில் என் தந்தைக்கு ஒருபோதும் விருப்பம் இருந்ததில்லை. நாங்கள் ஏன் நல்ல உடைகளை அணியவில்லை என்று அம்மாவிடம் எப்போதும் தகராறு செய்து வந்தார். ஏன் இத்தகைய தளர்வான மற்றும் பெரிய ஆடைகளை அணிய கட்டாயப்படுத்தப்படுகிறோம் என அவர் கேள்வி எழுப்புவார்," என்றார்.

ஆப்கானிஸ்தான், தாலிபன், பெண்ணுரிமை

பட மூலாதாரம், NILOFAR AYUBI

படக்குறிப்பு, மஞ்சள் பாரம்பரிய உடைகளை நாங்கள் அணிவதில் நிலோஃபரின் தந்தைக்கு ஒருபோதும் விருப்பம் இருந்ததில்லை

யதார்த்தத்தை உணர்ந்த தருணம்

பதின்மூன்று வயதில், கடுமையான ஜூடோ பயிற்சிக்குப் பிறகு நிலோஃபர் சோர்வாக வீடு திரும்பினார். கால்களில் அதிகமான வலி இருந்ததால் எப்படியாவது படுக்கைக்குச் செல்ல வேண்டுமென விரும்பினார். குளியலறையில் நுழைந்தவுடன், அவரது கால்களுக்கு இடையில் இரத்தம் வழிவதைக் கண்டு மிகவும் பயந்தார். தன் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்படப்போவதை அவர் உணரவே இல்லை.

"அடுத்த நாள் இதைப் பற்றி என் தோழியிடம் சொன்னேன், அவள் சிரித்துக் கொண்டே என்னிடம், அட முட்டாளே, உன் சகோதரிகள் இதைப் பற்றி உன்னிடம் சொல்லவில்லையா எனக் கேட்டாள்?" எனக் கூறுகிறார் நிலோஃபர்.

அதேத் தோழி இந்த 'ரகசியத்தை' அவருக்குத் தெரிவித்து, தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்க்கும் சானிட்டரி பேட்களின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார்.

"நான் வீடு திரும்பிய போது, என்னுடைய உடைகளில் ஏதோ ஒன்றை அம்மா கவனித்து விட்டார். ஆனால் என்னிடம் அன்பாக பேசுவதற்கு பதிலாக நான் ஏன் இவ்வளவு வேகமாக வளர்கிறேன் என என்னை சபிக்கத் தொடங்கினார்," என நினைவு கூறுகிறார் நிலோஃபர்.

நிலோஃபரின் வாழ்க்கையும் தன்னைப் போல மற்றும் தனது மற்ற மகள்களின் வாழ்க்கையைப் போல மாறும் என்பதை அறிந்து அவரின் தாய் அழுது கொண்டே இருந்தார்.

"எனது தாயின் வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை," எனக் கூறுகிறார் நிலோஃபர்.

ஆப்கானிஸ்தான், தாலிபன், பெண்ணுரிமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலோஃபரின் பிற சகோதரிகளின் வாழ்க்கை, ஆப்கானிஸ்தானின் மற்ற பெண்களது போலவே இருந்தது. அவர்கள் தலையை மூடிக்கொண்டு நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியிருந்தது

போராட்ட குணம் நிறைந்த பதின்பருவம்

நிலோஃபரின் பதின்பருவ வாழ்க்கை அவரை போராட்ட குணம் கொண்டவராக மாற்றியிருந்தது. பெண்கள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள அவர் குழுக்களை உருவாக்க இதுவே காரணம்.

இந்த போராட்ட குணமே அவரை இந்தியாவுக்கு வந்து படிக்கத் தூண்டியது, மேலும் திருமண வாழ்க்கையைப் பற்றிய அவரது கருத்துக்களையும் வடிவமைக்க உதவியது.

“எனக்கு பல திருமண வரன்கள் வந்தன. நான் சிறுவயதில் இருந்தபோதே வரன்கள் வர ஆரம்பித்தன. ஆனால் என் தந்தை என்னை மிகவும் பாதுகாத்தார். அவள் இப்போது திருமணத்திற்குத் தயாராக இல்லை, முதலில் அவள் படிப்பை முடித்துவிட்டு பிறகு என்ன செய்வது என்று யோசிப்பாள், இவ்வாறு என் தந்தை கூறினார்," என சொல்கிறார் நிலோஃபர்.

இறுதியாக, 2016-இல், அவர் தனது 19-ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார். அதற்கு முந்தைய ஆண்டு அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை அவரது கணவர் நிரப்பினார்.

"அவர் நிச்சயமாக என் தந்தையின் இடத்தை முழுமையாக நிரப்பவில்லை, ஆனால் என் தந்தையை போல நடந்து எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்," எனக் கூறுகிறார் நிலோஃபர்.

ஆப்கானிஸ்தான், தாலிபன், பெண்ணுரிமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021-ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் படைகள் வெளியேறியவுடன், தாலிபான்கள் மீண்டும் திரும்பினர்

தாலிபன்களிடமிருந்து தப்பிக்க கிடைத்த வழி

நிலோஃபரின் குடும்பம் வளர்ச்சியடைந்து, இறுதியில் அவர்கள் தலைநகர் காபூலை அடைந்தார்கள். அங்கு நிலோஃபர் பல ஃபர்னிச்சர் கடைகளைத் தொடங்கினார். ஒரே நேரத்தில் அவரது தொழிலில் 300 பேர் வேலை செய்தனர். அதில் பெரும்பாலானோர் ஆண் துணை இல்லாத பெண்கள்.

ஆனால் 2021-ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் படைகள் வெளியேறியவுடன், தாலிபான்கள் மீண்டும் திரும்பினர். நிலோஃபர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டம்னர்.

காபூலின் தெருக்களில் குழப்பம் அதிகரித்ததால், அவர் தனது வணிக அலுவலகத்திற்கு அருகில் தங்குமிடம் தேட திட்டமிட்டார். அவரது தாயும் சகோதரிகளும் நகரின் மறுபுறத்திற்கு சென்றனர். ஆனால் அவர்கள் நிலோஃபரால் தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில் இருந்தனர்.

அப்போது நிலோஃபர் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

போலந்து பத்திரிகையாளர் ஒருவர் நிலோஃபரிடம், யாரெல்லாம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனும் பட்டியலில் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளதா என்று கேட்டார்.

"நான் இல்லை என்றேன், அதற்கு அவர் ஒரு மணிநேரம் அவகாசம் கொடுங்கள் எனக் கேட்டார்," என அன்று நடந்ததை நினைவு கூறுகிறார் நிலோஃபர்.

அதன் பிறகு, அவரது பெயர் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் காபூல் விமான நிலையத்தை அடையுமாறும், இரண்டு பைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வருமாறும் நிலோஃபரிடம் சொல்லப்பட்டது.

“என் அம்மா குர்ஆனுடன் நின்று கொண்டிருந்தார். அன்று தான் என் அம்மாவையும் வீட்டையும் கடைசியாகப் பார்த்தேன்", என நிலோஃபர் கூறுகிறார்.

போலந்தில் புதிய வாழ்க்கை

நிலோஃபர் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது போலந்தில் வசித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விமானம் ஏறும் முன், அவர் போலந்தைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.

ஆனால் அத்தனை சிரமங்களையும் மீறி, அவர் தனது நாட்டிலும் உலகிலும் உள்ள பெண்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞரானார். பிரஸ்ஸல்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவுக்குப் பயணம் செய்துள்ள அவர், அங்குள்ள மக்களிடம் தனது வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

"எனது வாழ்க்கையை ஒரு சபிக்கப்பட்ட வாழ்க்கை என்றும் சொல்லலாம், ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்றும் சொல்லலாம்," என்கிறார் அவர்.

"சாபம் என்றால், அது என் மனதை உடைத்துவிட்டது. என்னால் முழுமையான பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ வாழ முடியவில்லை. ஆனால் இதுவே ஒரு ஆசிர்வாதமாகவும் இருக்கிறது. எனக்கு இரு விதமான அனுபவங்கள் கிடைத்தன. அது என்னை மேலும் பலமான பெண்ணாக மாற்றியது. இன்றும் அப்படியே தான் இருக்கிறேன், பலமாக," என புன்னகையுடன் சொல்கிறார் நிலோஃபர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)