சாதிவாரி கணக்கெடுப்பு: எஸ்.சி., எஸ்.டி.யை கணக்கெடுக்கும் மத்திய அரசு ஓ.பி.சி.க்கு தயங்குவது ஏன்?

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்புக்கான தங்கள் நீண்ட கால கோரிக்கையை வலுவாக முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. “இப்போது நிலவும் பெரிய கேள்வி - இந்தியாவில் எத்தனை பிற்படுத்தப்பட்டோர், எத்தனை தலித்துகள், எத்தனை பழங்குடியினர் இருக்கிறார்கள் என்பது தான். பிரதமர் அவர்களே, நீங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்து பேசுகிறீர்கள். எத்தனை பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் இந்தியாவில் உள்ளனர் என இந்த நாடு அறிந்து கொள்ளட்டும்,” என்று பேசினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கோரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணங்கள் இருக்கின்றன. கடந்த 92 ஆண்டுகளாக சாதிவாரியான கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை.

எனினும் பட்டியிலனத்தவர் (எஸ்.சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்.டி) மக்களின் கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்தாண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. எனவே, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் அரசு திட்டங்களிலும் பெரிய குழப்பம் இல்லை. ஆனால் முறையான கணக்கெடுப்பு இல்லாததால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும் அமல்படுத்துவதிலும் தடைகள் இருப்பதாக கட்சிகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், மகாராஷ்ட்ராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருகிறார். “பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவித்துள்ளனர். அதே போன்று பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டியுள்ளது. அதற்கு கணக்கெடுப்பு அவசியம்” என்று பேசியுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை அறிவித்து விட்டு, தன் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 21% லிருந்து 27% ஆக உயர்த்தியுள்ளார்.

நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு அல்லாமல் சாதிவாரி ஆய்வை மாநில அரசே நடத்துகிறது. அதற்கான அனுமதியையும் மாநில அரசு நீதிமன்றத்தில் பெற்றுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு - திமுக கோரிக்கை

தமிழ்நாட்டின் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான குரல்களை தேசிய அளவில் உயர்த்த தொடங்கியுள்ளன.

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தாத நிலையில், அதை மாநிலங்களே நடத்துவதற்கான அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க எழுப்பியுள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் இது தொடர்பாக தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளார். தனித்தனி நபர்களாக கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம், அரசியல் சாசன சட்டத்தில், மத்திய அரசுக்கு மட்டுமேயான அதிகாரங்களை வழங்கும் பட்டியல் 1 இல் உள்ளது. மாநிலங்களும் கணக்கெடுப்பு நடத்தும் வகையில் அதிகாரம் அளிக்க, அதனை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதே இந்த மசோதாவின் சாரம் ஆகும்.

“முறையான சாதிவாரி கணக்கெடுப்பே, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இருக்கும் சாதி பிரநிதித்துவத்தின் உண்மை நிலவரத்தை தெரிவிக்கும். அதன் அடிப்படையிலேயே உண்மையாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களை மேம்படுத்த தேவையான கொள்கைகளை வகுக்க முடியும்” என்று அவரது மசோதா கூறுகிறது. 1931-ம் ஆண்டு முதல் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியவில்லை, அல்லது நடத்த விருப்பமில்லாமல் உள்ளது, எனவே அந்த அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என கூறுகிறது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வில்சன், “ கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ஆய்வுத் தரவுகள் இல்லை என கூறி நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசன சட்டத்தின் 105 வது திருத்தத்தின்படி பிரிவு 342 – ஏ – 3, மாநில அரசுகள் சாதிப் பட்டியல் மட்டுமே வைத்துக்கொள்ளலாம். கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. தற்போதே மாநில அரசுகளின் நிர்வாக உதவியுடன் தான் பத்து ஆண்டுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மத்திய அரசுக்கு ஆட்கள், கட்டமைப்பு இல்லை. எனவே மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரத்தை வழங்குவது நியாயமே” என்றார்.

இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பு, 1931-ம் ஆண்டு ஆங்கிலேய காலத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் தரவுகளே இப்போதும் பொது வெளியில் இருக்கும் அதிகாரப்பூர்வ தரவுகள் ஆகும். இதனை ஆதாரமாக கொண்டே 1980ல் மண்டல் ஆணையம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை அறிவித்தது. தற்போதும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்கள் 1931-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அமல்படுத்தப்படுகின்றன. எனவே சாதிவாரி கணக்கெடுப்பை புதிதாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாகவே பல்வேறு அரசியல் கட்சிகளும் மாநில அரசுகளும் வைத்து வருகின்றன.

2011 சாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகள் ஏன் வெளியிடப்படவில்லை?

2011-ம் ஆண்டு, நாடு முழுவதும் நடத்தப்பட்ட Socio Economic Caste Census எனப்படும் சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அந்த விபரங்களை அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸும் வெளியிடவில்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசும் வெளியிடவில்லை.

“அந்த கணக்கெடுப்பின் விபரங்கள் 98.37% துல்லியமாக இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. அந்த விபரங்கள் தற்போது நிதி-ஆயோக்கிடம் தரப்பட்டுள்ளன. அந்தக் கணக்கெடுப்பின் தரவுகளை வெளியிட்டால் இட ஒதுக்கீட்டின் வரம்பு 50%க்கு மேல் போய்விடும். அதனால் தான் முடிவுகளை வெளியிட மறுக்கிறார்கள்.” என்கிறார் வில்சன்.

2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் தரவுகளை அரசியல் காரணங்களுக்காக வெளியிட முடியவில்லை என்றும் இப்போது பாஜக அதை வெளியிடலாமே என்கிறார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர். அவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, “ காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட சமூக பொருளாதார சாதிவாரி ஆய்வின் தரவுகள் மத்திய அரசிடமும் மாநில அரசுகளிடமும் இருக்கின்றன. பல்வேறு அரசியல் சூழல் காரணமாக அந்த தரவுகளை அப்போது வெளியிட முடியவில்லை. அதனை தற்போது பாஜக வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இல்லையென்றால் புதிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும், அல்லது மாநிலங்கள் நடத்திக் கொள்ள அதிகாரம் வழங்க வேண்டும்.” என்றார்.

2011 கணக்கெடுப்பின் தரவுகளை வெளியிட்டால் சமூகத்தில் பிளவுகள் ஏற்படலாம் என்ற பயத்தினால் காங்கிரஸ் வெளியிடாமல் இருந்திருக்கலாம் என்று பிபிசியிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் இல்லை, பாஜக கூட்டணியில் தான் இருக்கிறோம் என கூறும் பாட்டாளி மக்கள் கட்சியும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் தரவுகளை பாஜக வெளியிட வேண்டும் என பாமக வலியுறுத்துமா என பா.ம.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலுவிடம் பிபிசி தமிழ் கேட்ட போது, “2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது உண்மை நிலையை வெளிப்படுத்தும் கணக்கெடுப்பு அல்ல. பீகாரில் செய்வது போல மாநில அரசே சாதி கணக்கெடுப்பை நடத்த எந்த தடையும் இல்லாத போது ஏன் தி.மு.க அதை செய்யவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு

மத்திய பாஜக அரசு பொருளாதாரத்தில் நலிவடைந்த (இட ஒதுக்கீட்டில் வராத) சாதிகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய பிறகே இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் எழுந்துள்ளது. தி.மு.க.வின் முயற்சியில் உருவாக்கப்பட்ட அகில இந்திய சமூக நீதி சம்மேளனத்தின் முதல் மாநாட்டிலேயே 10% இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்ததுடன், சாதிவாரி கணக்கெடுப்பிற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

“மக்கள் தொகையில் 2% இருப்பவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 80% இருப்பவர்களுக்கு 27% வழங்கப்படுகிறது. சாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் இது சீர் செய்யப்படும். பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் இல்லையா?” என்று வில்சன் கேள்வி எழுப்புகிறார்.

மெட்ராஸ் வளர்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் லக்ஷ்மணன், 10% இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசன மோசடி என்கிறார். “மண்டல் ஆணையம் அமலாகும் போது அதற்கான தரவுகள் என்ன என்று கேட்டனர். 10% பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு என்ன தரவுகள் உள்ளன?” என்று கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு சாதிய சக்திகளை வலுவடைய செய்யுமா?

ஒருபுறம் சமூக நீதியை முழுமையாக அமல்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. மறுபுறம் சாதிகளுக்கான வலிமையை பறைசாற்றும் நோக்கிலும் சாதி கணக்கெடுப்பின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை நிலை நாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பது தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் வில்சனின் வாதமாக உள்ளது.

இதே நோக்கத்தையே காங்கிரஸ் கட்சியும் வெளிப்படுத்துகிறது. “விகித்தாச்சார அடிப்படையில் சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் ஒவ்வொரு பகுதியில் பிற்படுத்தப்பட்டவர்களில் யார் ஆதிக்க சாதியோ அவர்களுக்கு தான் முன்னுரிமைகள் கிடைக்கின்றன. மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஓபிசி வாக்கு வங்கிக்காக இந்த கோரிக்கையை எழுப்பவில்லை,” என்கிறார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்.

அரசியல் காரணங்களுக்காகவே பா.ஜ.க.வும் காங்கிரஸ்-ம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறார்கள் என்கிறார் பா.ம.க வழக்கறிஞர் பாலு. “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் ஒவ்வொரு சாதியும் அரசியல் ரீதியாக தங்கள் பலத்துக்கு ஏற்ப கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்ற காரணத்தினாலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதியை குறிப்பிடுவதை முன்னாள் பிரதமர் நேரு தடுத்து விட்டார். தற்போது இந்த கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை,” என்கிறார்.

சாதிவாரி கணக்கெடுப்பு தற்போது இந்தியாவுக்கு தேவையில்லை என்ற கருத்தையும் சில நிபுணர்களும் ஆய்வாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.

பேராசிரியர் லக்ஷ்மணன் பேசும்போது, “சாதிவாரி கணக்கெடுப்பை 1951 அல்லது 1961-ல் நடத்தியிருக்க வேண்டும். இந்தியாவில் 3,000 முதல் 4,000 சாதிகள் உள்ளன. எப்போது பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு வந்ததோ அப்போதே சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. சாதிக்கு பதிலாக, நிலமில்லாத விவசாய தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், சொத்து இல்லாதவர்கள் என்பது போன்ற பிரிவுகளை ஏற்படுத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என வலியுறுத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், அதே நேரம் அதன் விளைவுகளையும் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும், அரசியல் காரணங்களுக்காக இந்த கோரிக்கையை கையில் எடுக்கக் கூடாது என்கிறார்.

“இந்திய ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் மத பெரும்பான்மைவாதம். சாதி கணக்கெடுப்பு நடத்தினால் சாதி பெரும்பான்மைவாதத்துக்கு வழி வகுக்கும். சாதிய கட்சிகளுக்கு இந்த தரவுகள் அவர்களின் சாதிய உணர்வுக்கு ஆதாரமாக விளங்கும். சமூகம் துண்டுதுண்டாக பிளவுபடும். மண்டல் ஆணையத்துக்குப் பிறகு சாதி கணக்கெடுப்புக்கான அவசியம் கண்டிப்பாக உள்ளது. ஆனால் அதன் பாதகங்களை கையாள்வது குறித்து உரிய ஆலோசனை வேண்டும்,” என்று அவர் எச்சரிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: