தக்காளி: தோலுடன் சாப்பிடுவது உடலுக்கு கேடா? சமைக்காமல் உண்ணலாமா?

சாம்பார், ரசம், குழம்பு, சட்னி...

தக்காளி பொதுவாகச் சமையலறையில் இருக்கும் ஒரு ‘சகலகலா காய்கறி’.

அதை கிட்டத்தட்ட எதனுடன் வேண்டுமானாலும் சேர்க்கலாம். அது எந்த உணவின் சுவையையும் அதிகரிக்கிறது.

அதன் விலை இன்று எவ்வளவு அதிகரித்திருந்தாலும், தக்காளி இல்லாமல் உணவு சமைப்பது என்பது கடினமாகவே உள்ளது.

இவை அனைத்திற்கும் மேலாக, தக்காளியை நாம் பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால், நமது உடலுக்குப் பல நன்மைகளையும் வழங்குகிறது.

தக்காளியில் சுமார் 10,000 வகைகள் உள்ளன. அவை அளவு, வடிவம் மற்றும் நிறத்தில் வேறுபடுகின்றன. ஆனால் பயன்பாட்டில் முதன்மையாக இருப்பது சிவப்புத் தக்காளி.

தக்காளி நிறத்திற்கும் அதன் சத்துக்கும் என்ன சம்பந்தம்?

மேலும், துல்லியமாகச் சொல்வதெனில், தக்காளியின் நிறமே ஊட்டச்சத்து விஷயத்தில் அதனை சுவாரசியமான உணவாக ஆக்குகிறது என்கிறார் கேட்டலோனியாவில் இருக்கும் ஓபன் பல்கலைகழகத்தின் ஊட்டச்சத்துப் பேராசிரியரான ஜெம்மா சிவா-பிளாஞ்ச்.

"காய்கறிகளின் நிறம் பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் எனப்படும் சில பொருட்களால் உண்டாகிறது. அவை மஞ்சள் (எலுமிச்சை) முதல் ஊதா (உதாரணமாக கத்தரிக்காய்) வரை நிறமாற்றங்களை உருவாக்குகிறது.

"தக்காளிகள் சிவப்பு நிறத்தில் உள்ளன, ஏனெனில் அவை இந்தச் சேர்மங்களை அதிக அளவில் கொண்டிருக்கின்றன. இருப்பினும் பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகளின் வெவ்வேறு கலவைகளைக் கொண்ட வெவ்வேறு வண்ணங்களில் தக்காளி வகைகள் உள்ளன," என்கிறார் சிவா-பிளாஞ்ச்.

‘பயோ-ஆக்டிவ் சேர்மங்கள்’ (bioactive compounds) எனப்படும் இப்பொருட்கள் ஆன்டி-ஆக்சிடன்ட் ஆகவும், வீக்கங்களைத் தடுக்கவும் உதவுகின்றன.

இதய நோய்களைத் தடுக்கும் தக்காளி

80 கிராம் தக்காளியில் ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு தேவையான பொட்டாசியத்தில் 5% உள்ளது.

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்பது பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும்.

தக்காளியில் லைகோபீன் (lycopene) என்ற சேர்மம் உள்ளது. இது ஆன்டி-ஆக்சிடன்ட ஆகவும், வீக்கங்களைத் தடுப்பதோடு, பல ஆய்வுகளின்படி, இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

தக்காளி அரைத்து உணவில் சேர்க்கப்பட்டால், லைகோபீன், உடலில் நன்றாக உறிஞ்சப்படும் என்று சிவா-பிளாஞ்ச் கூறுகிறார்.

மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போலவே, தக்காளியும் அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தப்படும்போது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை இழக்கிறது என்பது உண்மைதான், ஆனால், இதற்கு மாறாகப் பல்வேறு ஆய்வுகள், லைகோபீனின் ஆன்டி-ஆக்சிடன்ட் தன்மை வெப்பத்துடன் அதிகரிக்கிறது.

அதேபோல், ஆலிவ் எண்ணெயுடன் சமைத்த தக்காளியை உட்கொள்வதும் அதிலிருக்கும் சேர்மங்களை உடல் நன்கு உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

பிபிசியின் குட் ஃபுட் பத்திரிக்கையின் படி, தக்காளியின் கரோட்டினாய்டுகளின் (carotenoid) பெரும்பகுதி அதன் தோலில் உள்ளது. எனவே தக்காளியில் தோலை உரிக்காமல் உட்கொள்வது நல்லது.

கண்களையும் பாதுகாக்கும் தக்காளி

தக்காளியில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்களின் (phytochemicals) எனப்படும் சேர்மங்கள், கண் ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன. இவை வயதானவர்களுக்கு வரும் ஒளிக்குவியச் சிதைவு நோய் மற்றும் பிற கண் நோய்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு விளைவைக் கொண்டிருக்கின்றன என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுபவதற்கான அதிக சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தக்காளியை அதிகமாக உட்கொண்டால் அவர்களது தசைகள் கெட்டிப்பதும் தன்மை (sclerotic load) குறைகிறது. “எனவே அவர்களுக்கு இதய நோய் ஏற்படும் ஆபத்து குறைவாக உள்ளது," என்று சிவா-பிளாஞ்ச் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: