மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி பிரிவுக்கு உள் இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டுமென சில கட்சிகள் கோரியுள்ளன. இந்தப் பிரச்னையின் பின்னணி என்ன?
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதத்தை ஒதுக்கீடு செய்யும் மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு நாரி ஷக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இந்திய நாடாளுமன்றத்தில் பலமுறை அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படாமல் போன இந்த மசோதா, பல கட்சிகள் தற்போது ஆதரிப்பதால் இந்த முறை நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டாலும் உடனடியாக அதாவது வரவுள்ள சட்டமன்றத் தேர்தல்களிலோ, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலோ அமலுக்கு வராது என்றும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்ட பிறகே இது அமலுக்கு வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மேலும், இந்த இட ஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும், இந்த இட ஒதுக்கீட்டிற்குள் பட்டியலினத்தோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு இருக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறை தொகுதி மறுசீரமைக்கப்படும் போதும் பெண்களுக்கான தொகுதிகள் மாற்றி அமைக்கப்படும்.
தற்போது தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேசம், அசாம், பிகார், சட்டீஸ்கர், குஜராத், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. அதுதவிர பழங்குடியினர், பட்டியலினத்தோருக்கான இட ஒதுக்கீடும் அமலில் இருக்கிறது.
ஆனால், சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. தற்போதைய நாடாளுமன்றத்தில் மக்களவையில் பெண் உறுப்பினர்களின் விகிதம் 15 சதவீதமாகவும் மாநிலங்கள் அவையில் சுமார் 14 சதவீதமாகவும் இருக்கிறது.
சட்டமன்றங்களை எடுத்துக்கொண்டால், நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, இமாச்சால பிரதேசம் போன்ற முக்கியமான மாநிலங்களில் பெண் உறுப்பினர்களின் விகிதம் வெறும் 5 சதவீதத்தில்தான் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் இந்த மசோதா மிக முக்கியமானதுதான். ஆனால், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி ஆகியவை நீண்ட காலமாகவே ஒரு கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்.
அதாவது, பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால், அதற்குள் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை உள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென இந்தக் கட்சிகள் கோரி வருகின்றன.
கடந்த 2010இல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அதைக் கடுமையாக எதிர்த்தார். இப்போதும் அந்தக் கட்சி அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறது.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் தேவை என வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், "பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது பாலின நீதியும் சமூக நீதியும் இணைந்ததாக இருக்க வேண்டும். இதில் பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர், பழங்குடியினர் ஆகியோருக்கான சதவீதம் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். "பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எங்கள் கட்சி ஆதரிக்கிறது. ஆனால், பழங்குடியினர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்," என்று செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார் மாயாவதி.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்.
"நாடாளுமன்ற மாநிலங்களவையில் (இதற்கு முன்பு) நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டு சட்ட முன்வரைவில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டிருக்கிறது.
இதை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட சமூக நீதிக் கட்சிகளின் நிலைப்பாடும், கோரிக்கையும் ஆகும்.
இந்தக் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பான்மையாக இருக்கும் பிற பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பிரதிநிதித்துவம் கிடைக்காமலேயே போய்விடும்.
அதனால், சமூகநீதி சார்ந்த இந்த கோரிக்கையை மத்திய அரசு ஆராய வேண்டும். இது உடனடியாக சாத்தியமில்லை என்றால், அடுத்த வாய்ப்பில் அதற்கான திருத்தம் செய்யப்பட வேண்டும். அதுதொடர்பாக நாட்டு மக்களுக்கு மத்திய அரசு உறுதிமொழி அளிக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், BBC/GOPALSHUNYA
இது மிக நியாயமான கோரிக்கை என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான கோ. கருணாநிதி.
"அகில இந்திய அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை எடுத்துக்கொண்டால், குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் பிராமணர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து வந்த பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இப்போது பெண்களுக்கென இட ஒதுக்கீடு செய்யப்பட்டால், பெரும்பாலான இடங்களை உயர் சாதியைச் சேர்ந்த பெண்களே கைப்பற்றும் சூழல் இருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில்கூட ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்கள்தான் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் எம்.பிக்களாக நிறுத்தப்படுவார்கள். ஆகவே, இதில் உள் ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கை சரியானது," என்கிறார் கோ. கருணாநிதி.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு தரவேண்டும் என்பது சரியான கோரிக்கைதான் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.
"ஓபிசி பெண்களுக்கு உள் ஒதுக்கீடு தரப்படாவிட்டால், மகளிருக்கான ஒதுக்கீட்டை உயர்சாதியினரே நிரப்பிக்கொண்டு விடுவார்கள் என எஸ்.பி., பி.எஸ்.பி, ஜனதா தளம் போன்ற கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றன.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டபோது அங்கு பல்வேறு கட்சிகளின் கருத்துகள் கேட்கப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. முதலான கட்சிகள் எஸ் சி ,எஸ் டி ,ஓ பி சி மற்றும் சிறுபான்மையினப் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தன.
இந்தியா கூட்டணிக் கட்சிகளில் பெரும்பாலான மாநிலக் கட்சிகள் இந்த நிலைபாட்டில்தான் உள்ளன. உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் என்று கருதுகிறேன்," என்கிறார் து. ரவிக்குமார்.

பட மூலாதாரம், Getty Images
தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் மசோதா, நாடாளுமன்ற மக்களவைக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், மாநிலங்கள் அவைக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிடும் ரவிக்குமார், அதிலும் உள் ஒதுக்கீடு தேவை என்கிறார்.
"ஆனால், இதெல்லாம் நடைமுறைக்கு வருமா என்பதெல்லாம் சந்தேகமாகவே இருக்கிறது. புதிதாக தொகுதி மறுசீரமைப்பு நடந்த பிறகுதான் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்கிறார்கள்.
அதற்கு புதிதாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அடுத்த கணக்கெடுப்பு 2031இல் நடந்தால், அதன் முடிவுகள் தொகுக்கப்பட 2035 ஆகிவிடும்.
அதற்குப் பிறகு தொகுதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். அதற்கு அடுத்த தேர்தல் 2039இல் தான் நடக்கும். அப்போது என்ன நடக்கும் என்பதை யார் சொல்ல முடியும்?" என்கிறார் ரவிக்குமார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீட்டை எப்படிச் செய்வது?
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டை எப்படிச் செய்வது என்ற கேள்வியும் அதைச் சட்டம் அனுமதிக்கிறதா என்ற கேள்வியும் இருக்கின்றன.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பை சட்டம் அளித்திருப்பதைச் சுட்டிக்காட்டும் கருணாநிதி, அதைப் போன்ற திருத்தத்தை இந்தச் சட்டத்திலும் கொண்டு வரலாம் என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
"இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 243D (6), பிரிவு 243T (6) ஆகியவை உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை அனுமதிக்கின்றன. அதே சட்டப்பரிவை, சட்டமன்றங்கள் நாடாளுமன்றத்திற்கும் விரிவுபடுத்தினால் போதுமானது," என்கிறார் கோ. கருணாநிதி.
தற்போது தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டாலும், அதில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.
பட்டியலினத்தோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு மட்டுமே அமலில் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பொதுப் பிரிவினருக்கான இடங்களில் பெரும்பான்மையான இடங்களை பிற்படுத்தப்பட்டோரே கைப்பற்றுவதால் தனியாக இட ஒதுக்கீடு தேவையில்லை. ஆனால், நாடாளுமன்ற இடங்களில் அப்படி நடக்காது. ஆகவே உள் ஒதுக்கீடு தேவை என்கிறார் அவர்.
ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும், படாவிட்டாலும் இந்தச் சட்டத்தை இந்தத் தருணத்தில் ஆதரிக்க எல்லாக் கட்சிகளுமே தயாராக இருப்பதாகவே தெரிகிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












