You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் நெரிசலில் சிக்கிய முதல்வர் வாகனம் - என்ன நடந்தது?
ஏ.ஆர். ரஹ்மான் சென்னைக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமையன்று நடத்திய இசை நிகழ்ச்சி மிக மோசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக, அந்த நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின்போது அதிக கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்தில் பெரும் குளறுபடிகள் நிலவின.
அப்போது முதலமைச்சரின் வாகனமே நெரிசலில் சிக்கியது. ஆகையால் பள்ளிகரணை சட்டம், ஒழுங்கு காவல் துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அளவுக்கு அதிகமாக டிக்கெட்கள் விற்கப்பட்டதாகவும், எந்த ஒழுங்கான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும் பலரும் புகார் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இசை நிகழ்ச்சியில் எங்கே தவறு நடந்தது?
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 30 ஆண்டுக்கால இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்று கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் மழை பெய்ததால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
அதற்குப் பிறகு, செப்டம்பர் 10ஆம் தேதியன்று சென்னைக்கு அருகில் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால், இந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றவர்கள், தாங்கள் உள்ளே நுழைய முடியவில்லை என்பதோடு, போக்குவரத்து நெரிசலிலும் கூட்ட நெரிசலிலும் சிக்கிக்கொண்டதாக சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தனர். பலர் வீடியோக்களையும் வெளியிட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குச் சென்ற சாருலதா என்பவர், தான் கூட்டத்தில் சிக்கியபோது மிக மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதாகவும் அதன் பாதிப்பு இப்போது வரை நீங்கவில்லை என்றும் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
மாலை ஏழு மணியளவில் ஆரம்பித்த நிகழ்ச்சி இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது. மாலை ஏழு மணிக்குத்தானே நிகழ்ச்சி என்ற எண்ணத்தில் தாமதமாகச் சென்ற பலர் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதோடு, உள்ளே நுழைய முடியாமலும் தவித்தனர்.
முப்பது ஆண்டுகளாக ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்களாக இருந்தவர்கள், இந்த நிகழ்ச்சியில் அடைந்த துன்பத்தால் மாறவிட்டதாகவும் கூறியிருந்தனர்.
ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தையைக் காணவில்லை என்று அழுத வீடியோ காட்சியும் வெளியானது. ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியும் உள்ளே நுழையவே முடியாமல் திரும்பிச் சென்றதாகவும் பலர் கூறினர்.
நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம், சென்னை நகரிலிருந்து சுமார் 20 - 25 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்தது. இந்த இடத்திற்குச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலை மிகக் குறுகலானது என்பதால், அந்தப் பகுதியில் இந்த நிகழ்ச்சியின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனப் போக்குவரத்து காவல்துறை காலையிலேயே தெரிவித்திருந்தது.
இருந்தபோதும், மாலை 4 மணியிலிருந்தே கிழக்குக் கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், நான்கு மணிக்குப் பிறகு நிகழ்ச்சிக்கென புறப்பட்டவர்கள், அந்த இடத்தை வந்தடையவே முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால், நிகழ்ச்சி ரத்தான தருணத்தோடு ஒப்பிட்டால் இந்த முறை பரவாயில்லை என்கிறார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.
"கடந்த முறை நான்கு மணிக்குப் புறப்பட்டோம். சிறிது நேரத்திலேயே போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்து, 4.55 மணியளவில் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட் செய்தார். இருந்தபோதும் அந்த இடத்தை விட்டுப் புறப்படவே 8 மணி ஆகிவிட்டது," என்கிறார் நிகழ்ச்சியில் பங்கேற்ற திவ்யா மருந்தையா.
அதனால், "இந்த முறை இரண்டு மணிக்கே போய்விட்டோம். அப்போது 50 பேர்தான் அங்கே இருந்தார்கள். நான்கரை மணியளவில் உள்ளே அனுமதிக்க ஆரம்பித்தார்கள். நிகழ்ச்சி ஏழு மணிக்குத் துவங்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 7.10க்கு நிகழ்ச்சி தொடங்கிவிட்டது.
இருந்தபோதும் எட்டரை மணிவரைக்கும்கூட ஆட்களை உள்ளே அனுமதித்துக்கொண்டே இருந்ததால், நிகழ்ச்சி முடியும்வரை அவர்கள் இடம் தேடி அலைந்தது மற்றவர்களுக்குத் தொந்தரவாகவே இருந்தது.
நிகழ்ச்சியில் நிறுத்தப்பட்டிருந்த பவுன்சர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. அவர்களும் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் கூப்பிட்டுச் சொன்ன பிறகு கொஞ்சம் வாசலை மாற்றி வைத்து ஒழுங்கு படுத்தினார்கள்.
நிகழ்ச்சி ஆரம்பித்து சில மணிநேரம் கழித்து, "Are you safe?" என்றெல்லாம் குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தன. அப்போதுதான் வெளியில் ஏதாவது நடந்திருக்கலாம் என்பது புரிந்தது. இம்மாதிரியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள்தான், இதையெல்லாம் சரியாக முறைப்படுத்தியிருக்க வேண்டும்," என்கிறார் நிகழ்ச்சியில் பங்கேற்ற திவ்யா மருந்தையா.
இந்த நிகழ்ச்சிக்கு ரூ. 2,000, ரூ. 4000, ரூ. 5,000, ரூ. 10,000, ரூ. 50,000 எனக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. 5,000 ரூபாய், பத்தாயிரம் ரூபாய் டிக்கெட்டுகளை வாங்கியவர்கள்கூட உள்ளே நுழைய முடியாமல் திரும்பிச் சென்றதாகவும் கூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறியதாகவும் கூறி வருகின்றனர்.
தற்போது இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனவர்களுக்கு அவர்களுடைய நுழைவுச் சீட்டுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனப் பதிவிட்டிருக்கிறார்.
"அன்புள்ள சென்னை மக்களே, நுழைவுச் சீட்டு வாங்கி, துரதிர்ஷ்டமான சூழலில் பங்கேற்க முடியாமல் போனவர்கள் உங்கள் டிக்கெட்டின் பிரதியையும் உங்கள் குறைகளையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யுங்கள். எங்கள் அணியினர் விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்கள்," என்று அந்த ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திய ஏசிடிசி ஈவென்ட் நிறுவனம், நிகழ்ச்சியில் பங்கேற்காமல் போனவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகக் கூறியுள்ளது.
இந்த நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னைக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த ஆதரவும் திகைக்க வைக்கும் கூட்டமும் நிகழ்ச்சியை மிகப் பெரிய வெற்றிகரமான நிகழ்ச்சியாக்கியுள்ளது.
அதிக கூட்டத்தால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனவர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம். நாங்கள் இதற்கு முழுமையான பொறுப்பேற்றுக் கொள்கிறோம். உங்களுடன் இருக்கிறோம்," என அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியோடு தொடர்புடைய ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, பெயரைத் தெரிவிக்க விரும்பாமல் என்ன நடந்தது என்பதைத் தெரிவித்தார்.
"நடந்த நிகழ்வுகள் துரதிர்ஷ்டவசமானவை. போக்குவரத்து நெரிசலுக்கு நாங்கள் காரணமில்லை. அது தவிர, அந்தப் பகுதியில் வேறு சில காரணங்களாலும் போக்குவரத்து நிகழ்ச்சி நடக்கும் பகுதியை நோக்கி திருப்பிவிடப்பட்டது.
பாதிக்கப்பட்டதாகச் சொல்பவர்கள் எல்லாம் சற்றுத் தாமதமாக வந்தவர்கள். ஆனால், அதற்க முன்பு வந்தவர்கள் நன்றாகவே நிகழ்ச்சியைப் பார்க்கவும் ரசிக்கவும் முடிந்தது.
நாங்கள் இருந்த இருக்கைகளைவிட அதிக டிக்கெட்களை விற்றுவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். அது உண்மையில்லை. எவ்வளவு இருக்கைகள் இருந்ததோ, அதைவிடக் குறைவாகவே விற்கப்பட்டது. பல இடங்கள் காலியாகக்கூட இருந்தன.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இந்த நிகழ்ச்சியில் இரண்டு பிரிவுகளாக ரசிகர்கள் அமர வைக்கப்பட்டார்கள். அதில் வலது பக்கத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இடது பக்கம் ஒரே நேரத்தில் அதிகம் பேர் குவிந்தனர்.
இதைப் பார்த்த சிலர், மைதானம் நிரம்பிவிட்டது என்று கருதி உள்ளே நுழைபவர்களைத் தடுத்து நிறுத்தினர். ஆனால், மற்றொரு பக்கம் இடங்கள் காலியாகவே இருந்தன. இதுதான் பிரச்னைக்குக் காரணம்.
பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ஆயிரம் பேர் இருக்கலாம். அவர்களுக்கெல்லாம் கட்டணத்தைத் திருப்பித் தர முடிவு செய்திருக்கிறோம். ஆனால், யார் நிகழ்ச்சிக்குள்ளேயே வராமல் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைக் கண்டறிவது கடினம்.
இருந்தபோதும் கேட்பவர்களுக்கு கட்டணத்தைத் திருப்பித் தர முடிவு செய்திருக்கிறோம். விரைவில் நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம் வெளியிடும்," என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 45,000 பேர் வரை கலந்துகொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 46,000 இருக்கைகள் இந்த நிகழ்ச்சிக்கு போடப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோடு தொடர்புடையவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் அந்தப் பகுதியில் அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டமும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த தாம்பரம் காவல்துறை ஆணையருக்கு தமிழ்நாடு காவல்துறை தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்.
போக்குவரத்து நெரிசலும் அளவுக்கு அதிகமான கூட்டமும் ஏற்பட்டதற்கான காரணம், வாகன நிறுத்துமிடம் எப்படியிருந்தது, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தனவா, தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனரா என்பதெல்லாம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்