You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடைசி விவசாயி: நல்லாண்டிக்கு சம்பளம் எவ்வளவு? அவர் இறந்த பிறகு குடும்பம் எப்படி இருக்கிறது?
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
'கடைசி விவசாயி' திரைப்படத்திற்கு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து இத்திரைப்படத்தில் விவசாயியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நல்லாண்டியின் மகள் மொக்கத்தாயி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் ஊசி, குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டு சென்றுதான் தனது தந்தை 'கடைசி விவசாயி' திரைப்படத்தில் நடித்திருந்தார். மத்திய அரசு அவருக்கும் தேசிய விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி என்கிறார் அவர்.
அதேவேளையில் தன் தாய்க்கு அரசாங்கம் உதவ வேண்டுமெனவும் என்றும் மொக்கத்தாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் சேடப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேரையூர் வட்டத்தில் அமைந்திருக்கிறது விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் பெருங்காமநல்லூர் கிராமம்.
இந்த கிராமம் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான இடமாக இருந்து வருகிறது.
தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக்
ஆம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராகப் போராடி இந்த கிராமத்தைச் சேர்ந்த 17 பேர் உயிர் நீத்தனர்.
இதனால், இது தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் என இன்றளவும் அனைவராலும் நினைவு கூரப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே சுதந்திரத்திற்காகப் போராடிய பெருங்காமநல்லூர் கிராமம் தற்போது விவசாயத்தின் முக்கியத்துவத்தை நாடு முழுவதும் எடுத்துக் கூறியுள்ளது.
விஜய் சேதுபதி தயாரித்த 'கடைசி விவசாயி'
கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி 'கடைசி விவசாயி' என்ற திரைப்படம் நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ஒ.டி.டி-யில் வெளியாகியது.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு உசிலம்பட்டி-பெருங்காமநல்லூர் மலையடிவார பகுதிகளில் 2017 முதல் 2019 வரை நடைபெற்றது.
இந்தத் திரைப்படத்தில் கடைசி விவசாயி மாயாண்டி கதாபாத்திரத்தில் பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லாண்டி என்பவர் நடித்திருந்தார்.
இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தும் உசிலம்பட்டி, எழுமலை உள்ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டன. நாள்தோறும் விவசாயி நல்லாண்டியை திரைப்படக் குழுவினர் அழைத்துச் சென்று திரைப்படத்தைக் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.
திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த சிறிது காலத்திலேயே விவசாயி நல்லாண்டி உடல் நலக்குறைவு காரணமாக 2019ஆம் ஆண்டு ஜூன்10ஆம் தேதி காலமானார்.
கொரோனாவால் தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்
திரைப்படம் வெளியாகத் தயாராக இருந்த நேரத்தில் 2019-இன் இறுதியில் கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் ஏற்பட்டது. இதனால் திரைப்படத்தின் வெளியீடு தொடர்ச்சியாக தள்ளிப் போனது.
இறுதியாகப் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. சோனி பிக்ஸ் ஒ.ஒ.டி ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தை வெளியிட்டது.
பாராட்டு மழையில் நனைந்த நல்லாண்டி
இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக மாயாண்டி கதாபாத்திரத்தை ஏற்று 'கடைசி விவசாயியாக' நடித்திருந்த நல்லாண்டியின் நடிப்பினை அனைவரும் பாராட்டியிருந்தனர்.
அந்தத் திரைப்படத்தில் கடைசி விவசாயியாகவே நல்லாண்டி வாழ்ந்து இருப்பதாகத் தெரிவித்தனர்.
நல்லாண்டியை ஒரு விவசாய நிலத்தில் அவர் எப்போதும் பார்ப்பது போல விவசாய வேலையை செய்யச் சொல்லி அதைப் பல்வேறு கோணங்களில் கேமரா வழியாக காட்சிப்படுத்தி இருந்ததே படம் நேர்த்தியாகவும், எதார்த்தமாகவும் அமைய மிக முக்கியக் காரணம், என்றும் விமர்சகர்கள் கூறியிருந்தனர் .
சிறப்பு தேசிய விருது
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி 69ஆவது தேசிய விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.
அதில் 'கடைசி விவசாயி' படத்துக்கு சிறந்த தமிழ் மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதும், அந்த திரைப்படத்தில் நடித்த மாயாண்டி கதாபாத்திரமான நல்லாண்டிக்கு சிறப்பு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.
இது அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்து கொள்வதற்காக பிபிசி தமிழ் பெருங்காமநல்லூர் கிராமத்திற்கு நேரடியாகச் சென்றது.
கடைசி விவசாயி படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
விவசாயி நல்லாண்டிக்கு இரண்டு ஆண், மூன்று பெண் பிள்ளைகள். அவரது மகள் மொக்கத்தாயை நேரில் சந்தித்து இந்த விருது கிடைத்தது குறித்துக் கேட்டோம்.
இது குறித்து அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டபோது, “எனது தந்தை நல்லாண்டி, ஆரம்ப காலத்திலிருந்தே நெல், கரும்பு, காய்கறி விவசாயம் பார்த்து வந்தார். மேலும் அவ்வப்போது 100 நாள் வேலைக்கான பணிக்கும் செல்வார்.
"அப்படி எனது தந்தை சென்றிருந்தபோது இயக்குநர் மணிகண்டன் 'கடைசி விவசாயி' படத்திற்காக விவசாயி கதாபாத்திரத்துக்கான ஆள் தேர்வில் இருந்தார்.
"எனது தந்தையைப் பார்த்து அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி இருப்பதால் படத்தில் நடிக்க அழைத்தார். எங்களிடம் கூறி விட்டு படத்தில் நடிக்கச் சென்றார்,” என்று பெருமித்துடன் கூறினார் மொக்கத்தாயி.
தினசரி ஊதியம் ரூ.1000
இரண்டரை முதல் மூன்று மாதம் தனது தந்தை அந்தத் திரைப்படத்தில் விவசாயியாக நடித்ததாகவும் அதற்காக அவருக்கு தினசரி ரூ.1000 ஊதியமாக வழங்கப்பட்டதாகவும் மொக்கத்தாயி தெரிவித்தார்.
"இந்தத் திரைப்படத்தில் நடிக்கச் சென்ற சில நாட்களிலேயே எனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவமனை சென்று ஊசி மற்றும் குளுக்கோசை எடுத்துக் கொண்டே தான் திரைப்படத்தில் வரும் இறுதிக்கட்ட நீதிமன்ற காட்சிகளை அவர் நடித்துக் கொடுத்தார்,” என்று கண்கள் கலங்கியப்படி கூறினார் அவர்.
திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தனது தந்தை மறைந்துவிட்டார் என்று வேதனையுடன் கூறிய மொக்கத்தாயி, "நாங்கள் படத்தை திரையரங்கில் சென்று பார்த்தோம். நன்றாக இருந்தது," என்றார்.
தற்போது மத்திய அரசின் சார்பில் இந்தத் திரைப்படத்திற்கும், தனது தந்தைக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறுகிறார் மொக்கத்தாயி.
"இயக்குநர் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை"
தனது தந்தைக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து பெருமிதம் தெரிவிக்கும் மொக்கத்தாயி, தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது தந்தை வாழ்ந்த வீடு மிகவும் மோசமடைந்து பல இடங்களில் இடிந்து இருக்கிறது. எனது தாய் சிவனம்மாள் அந்த வீட்டில் வசிக்க வேண்டும் என விருப்பப்படுகிறார்.
"நான்தான் கூலி வேலைக்குச் சென்று என் அம்மாவை கவனித்து வருகிறேன். அவருக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்,” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், இயக்குநர் மணிகண்டன் தனது தந்தையிடம் வீடு கட்டிக் கொடுப்பதாகக் கூறியிருந்தார் எனவும், ஆனால் அவர் இறந்தபின் அதுதொடர்பாக இயக்குநர் எதுவும் கூறவில்லை என்றும் கூறுகிறார் மொக்கத்தாயி.
அத்துடன், தனது தந்தை இறந்து ஓராண்டுக்குப் பிறகுதான் இயக்குநர் மணிகண்டன் வீட்டுக்கு வந்து தங்களைப் பார்த்துவிட்டுச் சென்றதாகவும் அவர் கூறுகிறார்.
விவசாயத்தில் ஆல் ரவுண்டர்
நல்லாண்டியின் மனைவி சிவனம்மா. 80 வயதை தாண்டிய இவருக்குக் கண் பார்வை சற்று மங்கிவிட்டது.
அவர் பிபிசி தமிழிடம் பேசும்போது, “எனது கணவர் மிகவும் எதார்த்தமாக பழகக் கூடியவர். அனைவரிடமும் சண்டை சச்சரவு இன்றி பழகுவார். நல்ல உழைப்பாளி.
"நிலத்தை உழுதல், நெல் விதைத்தல், தண்ணீர் பாய்ச்சுதல் சந்தைக்குச் செல்லுதல், ஆடு, மாடுகளை மேய்த்தல் என அனைத்து வேலைகளையும் எனது கணவரே செய்வார்.
"இயக்குநர் மணிக்கண்டனுக்கு நன்றாக வேலை பார்த்தார்; நல்ல முறையில் வந்தார்; ஆனால் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்,” என்று சோகத்துடன் கூறுகிறார் சிவனம்மா.
மேலும், “இந்த வீட்டில் தான் நாங்கள் பேரன், பேத்தி எல்லாம் வளர்த்தோம். அரசாங்கம் ஏதேனும் எங்களுக்கு உதவி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். எனது மகள் மொக்கத்தாயிதான் என்னை தற்போது பாதுகாத்துப் பராமரித்து வருகிறார்,” என்றார் அவர்.
கஷ்டப்படும் விவசாயிகள்
நல்லாண்டியின் பேரன் சிவராமன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். அதை இந்தத் திரைப்படத்தின் மூலம் எங்கள் தாத்தா நல்லாண்டி மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார்.
"தற்போதைய இளைஞர்களுக்கு விவசாயம் குறித்த புரிதலை இந்த திரைப்படத்தின் மூலம் எடுத்துச் சென்றுள்ளார். இதற்கு இயக்குநர் மணிகண்டன் அண்ணன் மிக முக்கியக் காரணம்.
"தற்போதைய சூழலில் விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு பின்தங்கி இருக்கிறார்கள். அவர்களை முன்னேற்ற அரசாங்கம் உதவ வேண்டும். இதுதான் எனது தாத்தா, கடைசி விவசாயி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் சேதுபதியின் ஆசை," என்று அவர் கூறினார்.
இயக்குநர் மணிகண்டன் என்ன சொல்கிறார்?
நல்லாண்டியின் மகள் மொக்கத்தாயி இயக்குநர் மணிகண்டன் மேல் வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் கேட்க பிபிசி தமிழ் அவரைத் தொடர்புகொள்ள முயன்றது.
ஆனால் அவர் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் இப்போது பேச முடியாது என்று அவர் தரப்பில் இருந்து பதில் வந்தது.
இக்குற்றச்சாட்டு பற்றி அவர் தரப்பு விளக்கத்தை அவர் அளித்தால், அது இக்கட்டுரையில் சேர்க்கப்படும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்