பாப்கார்ன் செய்ய உதவும் மக்காச்சோளம் அழியும் ஆபத்து: என்ன காரணம்? தடுப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images/BBC
- எழுதியவர், மாயகிருஷ்ணன். க
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டின் வேளாண்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அதிகமான வரலாற்றைக் கொண்டது. அதில் கடந்த 50 ஆண்டுகளில்தான் நவீன வேளாண்மைக்கு விவசாயிகள் மாறத் தொடங்கினார்கள். ஆரம்பக் காலகட்டத்தில் நல்ல லாபத்தைக் கொடுத்து வந்த இந்த முறை நாளடைவில் விவசாயிகளுக்கு சிக்கல்களையும் உருவாக்கியது.
நவீன வேளாண்மையில் விவசாயிகள் ஒரு பயிர் முறையைக் கையில் எடுத்தனர். அதன்படி பருத்தி, மக்காச்சோளம் என தமிழ்நாட்டில் வணிகப் பயிர்களின் விளைச்சல் அதிகரிக்கத் தொடங்கியது.
தொடக்கத்தில் நல்ல மகசூலைத் தந்து விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும் ஈட்டியது என்ற போதிலும் தொடர்ந்து ஒரே பயிரை விளைவிப்பதால் மண்வளம் இழக்கப்பட்டதோடு நோய்த் தாக்குதலும் ஏற்படத் தொடங்கியது.
அப்படி ஒரு கொடூரமான நோய்த் தாக்குதல் சில ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் மக்காச்சோள பயிர்களைத் தாக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் மக்காச்சோளம்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் பற்றியும், அதை அழிப்பது தொடர்பாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் அசோக்குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
தமிழ்நாட்டில் விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பயிர்த் தொழிலைச் சிறப்பாகச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், நெல், கரும்பு மட்டுமில்லாது கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.
மக்காச்சோளப் பயிர் (Maize) 3 மீட்டர் உயரத்திற்கு வளர்கிறது. மக்காச்சோளத் தண்டுகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது மூங்கிலின் வடிவத்தை ஒத்தது. இவற்றில் பொதுவாக 20 கணுவிடைப் பகுதிகள் காணப்படும்.
ஒரு வருடத்தில் மூன்று போகம்

அவரது கூற்றுப்படி, மக்காச் சோளத்தை ஆண்டுக்கு மூன்று முறை பயிரிட முடியும். கடந்த 2010-11ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 19,05,726 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.
இந்த அளவு, 2017-18ஆம் ஆண்டில் 3,85,646 ஹெக்டர் பரப்பளவில் இருந்தது. தற்போது 2022ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவிற்கு அதிகமாகப் பயிரிடப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மக்காச்சோள உற்பத்தியில் 47% கோழித் தீவனமாகவும், 13% கால்நடைத் தீவனங்கள், 12% தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்கும், 14% மாச்சத்து தயாரித்தலுக்காகவும், 7% பதப்படுத்தப்பட்ட உணவுக்காகவும், 6% ஏற்றுமதிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அதிகளவு கால்நடைத் தீவன தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்திய அளவில் மக்காச்சோள உற்பத்தியில் கர்நாடகா மாநிலம் முதலிடத்திலும், மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்திலும் மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டிலும் அதிக பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகின்றது.
மக்காச்சோள ரகங்களும் பயிர் செய்யும் முறையும்

மக்காச்சோள ரகங்கள் குறித்து விளக்கிய கள்ளக்குறிச்சி வேளாண்மைத் துறை இணை இயக்குநர் அசோக் குமார், "தமிழகத்தில் கோ-1, கோ.ஹெச்-4, கோ.பி.சி -1, என்.கே.6240 உள்ளிட்ட பல்வேறு வகையான மக்காச்சோள ரகங்கள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு மூட்டைக்கு ரூ.2400 வரை விலை கிடைக்கிறது.
இதை ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், தை பட்டம் என மூன்று பட்டங்களிலும் பயிர் செய்யலாம். முதலில் நிலத்தை கொக்கிக் கலப்பை கொண்டு மூன்று முறை நன்கு உழுது ஹெக்டருக்கு 12.5 டன் தொழு உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 293 கிலோ என்ற அளவில் கலந்து அடி உரமாக இடவேண்டும்.
அதைத் தொடர்ந்து ஒரு ஹெக்டருக்கு தேவையான விதைகளை 100 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்து நான்கு அடி அகல பாத்தியில் இரண்டு வரிசை முறையில் போட வேண்டும்," என்று கூறினார்.
மேலும், "30ஆம் நாள் களையெடுத்து மண் அனைக்கவேண்டும். மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை இட்டு பாதுகாக்க வேண்டும். இதற்கு நீர் வழியாகவும் உரமிடலாம்.
விதைத்த 22ஆம் நாளில் யூரியா பொட்டாஸ் டி ஏபி ஆகியவற்ற ஏக்கருக்கு 150 கிலோ என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இந்த பயிர் அதிக வறட்சியையும் அதிக நீரையும் தாங்காது. அதனால் பயிரின் தேவைக்கு ஏற்ப நீர் பாய்ச்சினாலே போதும்," என அசோக் குமார் தெரிவித்தார்.
படைப்புழுக்களின் தாக்குதல்

மக்காச்சோள பயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நோய் என்றால் அது படைப்புழு தாக்குதல்தான் என்று கூறினார் அசோக் குமார். இதற்குத் தீர்வுகாண விவசாயிகள் வேளாண் அலுவலர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், "35லிருந்து 45 நாளில் ஒவ்வொரு முறையும் வேளாண் அதிகாரிகள் பரிந்துரைக்கும் மருந்தைத் தெளித்து பலன் அடையலாம். பால் பிடிக்கும் தருணம் மிக முக்கியமான காலம்.
இந்த நேரத்தில்தான் படைப்புழு தாக்குதல் அதிகரிக்கும். இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மகசூல் குறையும்," என்றும் கூறினார் அவர்.
ஸ்போடாப்டிரா புருஜிபர்டா என்று அழைக்கப்படும் படைப்புழுக்களின் தாக்குதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் அசோக் குமார்.
பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள ஒட்டுரகம் மற்றும் இதர ரகங்களில் படைப்புழுக்களின் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது என்கின்றனர் வேளாண்துறை அதிகாரிகள்.
"குளிர்ச்சியான பருவ காலத்தில், விட்டு விட்டுப் பெய்யக்கூடிய மழைக் காலங்களில் இந்தப் புழுவின் தாக்குதல் அதிகரிப்பது வழக்கம். மக்காச்சோளப் பயிரில் 15 நாள்கள் முதல் வளரக்கூடிய குருத்துப் பகுதியில் இந்தப் புழுக்கள் சேதத்தை விளைவிக்கின்றன. இந்தப் புழுக்கள் உண்பதால் இலைகளில் வரிசையான, சிறிய, பெரிய வட்ட வடிவம் அல்லது வடிவமற்ற துவாரங்கள் காணப்படுகின்றன," என்றும் விளக்கினர்.
"சில செடிகளில் இலைகளின் மேல் பகுதி முற்றிலும் உண்ணப்படுவதால் இலை மடிந்துவிடும். இந்தப் புழுக்கள் கதிர்களின் நுனி மற்றும் காம்புப் பகுதியை உண்ணும் திறன் கொண்டவை. தாய் அந்துப் பூச்சிகள் 100-200 முட்டைகளைக் குவியலாக இலைகளில் இட்டு, அதை வெள்ளை நிற ரோமத்தால் மூடிவிடும்."
படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வேளாண் இணை இயக்குநர் அசோக் குமார் கள்ளக்குறிச்சி அருகே அகர கோட்டாலம் கிராமத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட சக்திவேல் என்ற விவசாயி நிலத்திற்கு அழைத்துச் சென்று அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தெளிவான விளக்கத்தை வழங்கினார்.
அதுகுறித்து விளக்கியபோது, ஆழமான உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்கள் வெளிப்படும். அப்போது சூரிய ஒளி மற்றும் பறவைகளால் அவை அழிக்கப்படும். அவ்வாறு செய்வதால் அந்துப்பூச்சி உருவாவதைத் தடுத்து, அடுத்து பயிரிடும் பருவத்துக்கு பாதிப்பு வராமல் தடுக்க இயலும் என்றார்.
"உழவு செய்யும்பொழுது ஒரு ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை மண்ணில் இடுவதன் மூலம் கூட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தி அந்துப்பூச்சி வெளிவருவதைத் தடுக்க இயலும்.
மக்காச்சோளப் பயிரில் கதிர் உருவாகும் பருவத்தில் படைப் புழுக்களைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை எளிதில் தெளிப்பதற்கு ஒவ்வொரு 10 வரிசை பயிருக்கும் 75 செ.மீ. இடைவெளி விடவேண்டும்," என்றார்.
இதுமட்டுமின்றி, தாய் அந்துப்பூச்சிகளைக் கவனிக்க, கட்டுப்படுத்த விளக்குப் பொறிகள் அல்லது சாதாரண மின் விளக்குகளுக்குக் கீழே ஓர் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து ஹெக்டேருக்கு 1 என்ற வீதத்தில் அடிக்கடி இடம் மாற்றி வைக்க வேண்டும் என்றும் கூறினார்.
மக்காச்சோளத்தை ஒரே நிலத்தில் பயிர் செய்வதைட்ப தவிர்க்க வேண்டும். பயிர் சுழற்சி முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த இயலும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
"படைப்புழு தாக்கத்தில் இருந்து மக்காச்சோளப் பயிரைப் பாதுகாக்க வேளாண் துறை அலுவலரிடம் நேரடியாக அணுகி அல்லது அவர்களை நிலத்திற்கு அழைத்துச் சென்று காண்பித்து அவ்வப்போது உரிய ஆலோசனைகளைப் பெற்று, அவர்கள் பரிந்துரைக்கும் பூச்சி மருந்துகளைத் தெளித்தும் பயன் பெற முடியும்.
பூச்சி மருந்தை செடியின் குருத்துப் பகுதியை நோக்கித் தெளிக்க வேண்டும்," என்று கூறினார் இணை இயக்குநர் அசோக் குமார்.
அமெரிக்காவில் இருந்து கர்நாடகா வரை

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் பற்றியும் அதை விவசாயிகள் இயற்கை முறையில் எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில விவசாய அலுவலர்களுக்கு வயல்வெளி பள்ளிப் பயிற்சியை வழங்கியவரும், திருச்சி மாவட்டம் துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியருமான 'பூச்சி' செல்வம் பிபிசி தமிழிடம் பேசினார்.
"மக்காச்சோளத்தைத் தாக்கி சீரழிக்கும் படைப்புழுவின் தாயகம் அமெரிக்கா. அங்கு அது பலத்த சேதத்தை விளைவித்தது. அங்கிருந்து 2016ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவுக்கு சென்று அங்குள்ள பயிர்களுக்கு 44 நாடுகளில் பலத்த சேதங்களை விளைவித்தது," என்று அதன் வரலாற்றை விளக்கினார் 'பூச்சி' செல்வம்.
இந்தப் புழு இந்தியாவுக்கு எப்படி வந்திருக்கும் எனக் கேட்டபோது "இந்தியாவில் 2018ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள சிவமோகா பகுதியில் மே மாதம் இந்தப் புழு கண்டுபிடிக்கப்பட்டது. இது விதை, தானியங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும்போது வந்திருக்கலாம், அல்லது படைப்புழுவின் முதிர்வுப் பருமான அந்துப்பூச்சியானது நாளொன்றுக்கு 200 முதல் 300 கி.மீ பறக்கும் திறன் வாய்ந்தது. எனவே இது காற்றின் மூலமாகவும் பரந்து வந்திருக்கலாம்," என்று கூறினார்.
இது காற்றடிக்கும் திசையை நோக்கி வேகமாகப் பறக்கும் 25 நாட்களுக்குள் பல ஆயிரம் கிலோமீட்டரை கடக்கும் திறன் வாய்ந்தது என்றும் கூறினார் அவர்.
"இதில் இரண்டு வகையான படைப்புழுக்கள் உள்ளன. அதில் ஒன்று மக்காச்சோளத்தைத் தாக்கும் வகை. மற்றொன்று நெற்பயிர்களை தாக்கும் வகை. நல்ல வேளையாக மக்காச்சோளத்தைத் தாக்கும் படைப்புழு மட்டுமே இங்கு பரவியுள்ளது. தற்போது கர்நாடக மாநிலத்தில் ராகி பயிரிலும் இந்தப் படைப்புழுக்களின் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த படைப்புழுவின் நாச வேலையைக் கட்டுப்படுத்துவதற்கு இதனுடைய வாழ்க்கை சுழற்சியை விவசாயிகள் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக அதனுடைய வாழ்க்கை நிலைகளைக் கண்டறிந்து சிறு பருவத்திலேயே அவற்றை அழித்திட வேண்டும். இல்லையென்றால் அதை அழிப்பது மிகவும் கடினம்.
முதலில் முட்டைப் பருவம் அடுத்து புழு, பிறகு கூட்டுப் புழு பருவம், இறுதியாக பூச்சிப் பருவம். இதில், முட்டை பருவத்திலேயே இவற்றை அழித்தொழிக்க வேண்டும்.
இந்த பூச்சியானது இதன் கூட்டுப் புழு பருவத்தை மண் பகுதியிலேயே கழிக்கின்றது. இது ஒராண்டு காலம் மண்ணில் இருந்து அடுத்த ஆண்டு விவசாயிகள் பயிரிடும் மக்காச்சோள பயிரில் மீண்டும் பூச்சியாக வெளிவந்து பயிரை அழிக்கும் திறன் கொண்டது," என்று கூறினார் பேராசிரியர் 'பூச்சி' செல்வம்.
சட்டை உரிக்கும் புழு

பேராசிரியர் 'பூச்சி' செல்வத்தின் கூற்றுப்படி, மக்காச்சோளம் விதைத்து பத்து முதல் 15 நாட்களில் வெளிப்படும் பயிர் வாசமே இந்தப் புழுவை மண்ணிலிருந்து வெளியே வரவைக்கும் சிக்னல். அப்படி வெளியே வந்த இந்தக் கூட்டுப்புழு பூச்சியாக மாறும். பெண் பூச்சி நாள் ஒன்றுக்கு 250 முட்டைகள் வீதம் இடுகின்றன.
எனவே, "விவசாயிகள் நிச்சயமாக கோடை உழவு செய்ய வேண்டும். இதனால் சூரிய வெளிச்சத்தில் 50% கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படும். அதைத் தாண்டி ஏக்கருக்கு 100 கிலோ வேப்பங்கொட்டை தூளை மக்காச்சோளம் விதைப்பதற்கு முன்பாகத் தூவ வேண்டும். இதன்மூலம் 25 சதவீத பூச்சிகளை ஒழித்து விடலாம்."
இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி ஆரம்பத்திலேயே ஒழிக்காமல் வந்த பின்பு யோசிக்க கூடாது என்கிறார் அவர். மேலும், "இனக் கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 5-7 பொறிகள் சரியான அளவில் பயிர் மட்டத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். இந்த பொறியில் வைக்கப்படும் மாத்திரைகள் சரியாக இருக்க வேண்டும் பயிர் வளர்ந்து நிற்கும் உயரத்தில் இந்த பொரி அமைக்கப்பட வேண்டும்.
இந்த பூச்சிகள் இரவு நேரத்தில் தனது செயல்பாடுகளை அதிகரிக்கிறது. குறிப்பாக ஆண் பூச்சியைத்தான் முதலில் அழிக்க வேண்டும். ஒரே நாளில் ஒவ்வொரு ஆண் பூச்சியும் 16 பெண் பூச்சிகளுடன் இணை சேரும் ஆற்றல் கொண்டது. இதனால் முட்டைப் பெருக்கம் அதிகமாகும்.
பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் விளக்குப் பொறிகளை வயலில் வைத்தும் இதை அழிக்க முடியும். பொறியில் வைக்கப்படக்கூடிய மாத்திரை லூர் என்று அழைக்கப்படுகிறது. மக்காச்சோளத்தில் இடப்படும் முட்டைகளை விவசாயிகள் நேரடியாகக் களைந்து எடுக்கலாம். இது இரண்டு மூன்று நாட்களிலேயே உடனே வளர்ந்து செடிகளைச் சாப்பிட ஆரம்பிக்கும். இவை காற்றின் மூலம் பயிரிலிருந்து அடுத்தடுத்த பயிர்களுக்கு மாறி சென்று அவற்றையும் அழிக்கத் தொடங்கும்," என்று விளக்கினார் பேராசிரியர் 'பூச்சி' செல்வம்.
இந்தப் படைப்புழுக்கள் மக்காச்சோளத்தில் 15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை இலையின் பின்புறம் மறைந்துகொண்டு அவற்றை உண்ணத் தொடங்கும். பாதிப்புகளும் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கும். இந்தப் புழுவானது 50 மடங்கு உணவை உண்டு 48 முறை இது கழிவு நீக்கம் செய்யும். ஏறக்குறைய இது பாம்பு சட்டையை உரிப்பது போல் தோலை உரித்து அதன் வடிவம் மற்றும் வண்ணத்தை மாற்றும் திறனுடையது.
மேலும் இது எச்சத்திற்கு இடையில் உள்ளே ஒளிந்துகொண்டு பயிர்களை அழித்துக் கொண்டிருக்கும். கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக இருந்த புழுவானது சுண்டுவிரல் அளவிற்கு வளர்ந்துவிடும். தொடர்ந்து கதிர் வரும் நேரத்தில் அதை நன்கு சாப்பிடத் தொடங்கும். இதை அழிப்பது மிகக் கடினம். ஆரம்ப நிலையில் அழிப்பதே சிறந்தது."
மாற்று வழிமுறைகள் என்ன?

படைப்புழுக்களை அழிக்க வேறு மாற்று வழிகள் உள்ளனவா எனக் கேட்டபோது, "மக்காச்சோளம் பயிரிடும்போது ஊடுபயிராக தட்டைப்பயிர், அல்லது உளுந்தை செய்யலாம். மேலும் மக்காச்சோளம் நில வரப்பைச் சுற்றி மஞ்சள் சாமந்தி பூச்செடிகள் அல்லது மஞ்சள் நிறத்தில் பூ வைக்கும் துவரை, உளுந்து போன்ற பயிர்களைப் பயிரிடலாம்," என்று விளக்கினார் பேராசிரியர் செல்வம்.
"படைப்புழுவை உண்டு வாழும் பூச்சிகளை வரவழைக்கும் திறன் இந்த மஞ்சள் நிற பூக்களுக்கு உண்டு. எனவே இது மிக எளிதானது. 25 வரிசைக்கு ஒரு வரிசையாவது நிச்சயமாக மஞ்சள் நிற பூக்களை வைக்கும் பயிர்களை ஊடுபயிராகவும் வரப்புப் பயிராகவும் பயிர் செய்ய வேண்டும்.
பூஞ்சைகளைப் பயன்படுத்தியும் இந்தப் புழுக்களை அழிக்க முடியும். இது மெட்டாரைசியம் என்று அழைக்கப்படும். வேப்பங்கொட்டை வெள்ளைப் பூண்டு கரைசலையும் பயன்படுத்தலாம். வேப்பங்கொட்டை கரைசலை 15 நாள் பயிராக இருக்கும்போதே தெளிக்கலாம்.
இது எளிதான வழி. இதையெல்லாம் தாண்டி பூச்சிக்கொல்லிகளை தெளித்துதான் அழிக்க வேண்டும் என்றாலும் அதில் 50% மட்டுமே தடுக்க முடியும். ஆனால் இது சூழலுக்கு மாசு ஏற்படுத்தும். மீண்டும் அடுத்த ஆண்டு மக்காச்சோள பயிரைப் பயிர் செய்தால் மீண்டும் அதே சிக்கல் தொடரும் எனவே ஆரம்பக் காலத்திலேயே இதை அழிக்க வேண்டும்," என்றார் பேராசிரியர் 'பூச்சி' செல்வம்.
மேலும் அதிகப்படியான படைப்புழு தாக்கத்தால் நஷ்டம் அடையும் விவசாயிகள் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களுக்கு மக்காச்சோளம் பயிரிடாமல் மாற்று பயிர் செய்யலாம் என்றார்.
லாபத்தை அதிகரிக்க உதவும் எந்திரங்கள்

பட மூலாதாரம், Getty Images
மக்காச்சோள பயிர் செய்து நல்ல மகசூலை எடுத்து வரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தாகப்பிள்ளை பிபிசி தமிழிடம் பேசியபோது, "நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக எனது நிலத்தில் இரண்டு பகுதிகளாகப் பிரித்து மாற்றி மாற்றி மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றேன்.
நல்ல மகசூல் கிடைக்கின்றது. இந்த ஆண்டுகூட எனக்கு ஏக்கருக்கு 40 மூட்டைகள் கிடைத்துள்ளன. தற்போது ஒரு மூட்டை ரூபாய் 2,300இல் இருந்து 2500 வரை நல்ல விலை கிடைக்கின்றது. மருந்து தெளிப்பதற்கு, நடவுக்கு என 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது, மீதி 50,000க்கு மேல் எனக்கு லாபம்தான்," என்றார்.
தற்போது விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாகி வருவதால், மிக எளிதாக இயந்திரங்களைக் கொண்டு நடவு செய்து, களை எடுப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். இருப்பினும் படைப்புழுவின் தாக்குதலை முழுமையாகத் தவிர்க்க முடியவில்லை என்றும் குறைக்க மட்டுமே முடிவதாகவும் கூறுகிறார் விவசாயி தாகப்பிள்ளை.
தற்போது விவசாயிகளுக்காக வேளாண்மை அலுவலர்கள் அனைவரும் தினசரி விளை நிலங்களுக்கு வந்து ஆலோசனைகள் கூறி வருவதால் படைப்புழுவின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் முழுமையாக அழிக்க முடியவில்லை, என்று பெரம்பலூர் மாவட்டம் புதூரைச் சேர்ந்த விவசாயி ராஜி கூறினார்.
மக்காச்சோள விவசாயத்தின் பலன்கள்

பட மூலாதாரம், Getty Images
விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் வணிகப் பயிரான மக்காச்சோளம் வெகுஜன மக்களின் விருப்ப நொறுக்கு உணவாக உள்ளது என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த புனிதா.
சுற்றுலா தலங்கள் சினிமா தியேட்டர்கள் என்று பொழுதுபோக்கு இடங்கள் எங்கு சென்றாலும் அங்கு நிச்சயமாக பாப்கார்ன் கிடைக்கும். பாப்கார்ன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் நொறுக்குத் தீனி. இது உடலுக்குக் கேடு தராத திண்பண்டம் என்பதால் அனைவரும் வாங்கிச் சாப்பிடுகின்றனர்.
பாப்கார்னில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், மாங்கனீசு, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் அடங்கியுள்ளது. இதனால், பலவித நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. வேக வைக்கப்பட்ட மக்காச்சோள கதிரையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி உண்கின்றனர். வீட்டிலேயும் இதை குழந்தைகளுக்கு வேகவைத்துக் கொடுக்கின்றனர்.
அதேபோல் "ஸ்வீட் கான் பணியாரம், மக்காச்சோளம் இட்லி, தோசை வகைகள், மக்காச்சோள சில்லி பொரியல், மக்காச்சோள பிரிஞ்சி ரைஸ், மக்காச்சோள சூப், மக்காச்சோள பிரட் சாண்ட்விச், வடை என பல்வகை உணவு பண்டங்களும் இதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன," என்று கூறினார் புனிதா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












