தைவானில் காலநிலை மாற்றத்தால் காணாமல் போகும் 'கடவுளின் பூக்கள்'

பட மூலாதாரம், ZHUANG XIN-RAN/BBC
- எழுதியவர், நுயாலா மெக்கவர்ன்
- பதவி, பிபிசி நியூஸ்டே தொகுப்பாளர்
மத்திய தைவானில் உள்ள அலிஷானின் மூடுபனி நிறைந்த மலைகளில், கடவுள்களுக்கான நுழைவாயில் என்று கூறப்படும் ஒரு மலர் உள்ளது.
டென்ட்ரோபியம் ஆர்க்கிட் அல்லது கோல்டன் கிராஸ் ஆர்க்கிட் எனப்படும் இந்தப் பூக்கள், 10 முதல் 20 பச்சை மூங்கில்களுக்கு இடையே வளர்கிறது. ஆரஞ்சு நிறத்தில் வெல்வெட் போன்ற மிருதுவான நடுப்பகுதியைக் கொண்ட அழகான, ஆனால் வாசமில்லாத ஒரு மலர். சௌ (Tsou) பழங்குடி மக்களைப் பொறுத்தவரை இவை கடவுளின் பூக்கள்.
"எங்களது பழங்குடி சடங்குகள் மற்றும் விழாக்களில் இந்தப் பூக்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கடவுளால் எங்களை அடையாளம் காண முடியாது," என்கிறார் மூத்த பழங்குடி நபரான காவோ தெஷெங்.
ஒரு காலத்தில் சௌ பழங்குடி மக்களின் வீட்டுத் தோட்டங்களில் இவை அதிக அளவில் இருந்துள்ளன. ஆனால் இப்போது இந்தப் பூக்களைக் காண உயரமான மலைகளைச் சுற்றி இருக்கும் அடர்ந்த காடுகளுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
காலநிலை மாற்றம்தான் இந்த நிலைக்குக் காரணம் என பழங்குடிகள் நம்புகிறார்கள். பூக்களின் மொட்டுகள் விரிவதற்கு குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 12 டிகிரிக்கும் குறைவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வசந்த காலத்தில் பூக்கள் பூக்கும். பூக்கள் பெரும்பாலும் 800 முதல் 1,800 மீட்டர் (5,900 அடி) உயரத்தில் மிதமான வெப்பநிலையில் வளரும்.
அலிஷான் வானிலை மையத்தின் உள்ளூர் வெப்பநிலை தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் வசந்த காலம் மற்றும் குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை அளவு படிப்படியாக அதிகரித்து வருவதாக கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பு கூறுகிறது.
புவி வெப்பமடைதலின் விளைவாக, அலிஷான் மலைவாசஸ்தலத்தில் நவம்பர் மாதத்தின் சராசரி வெப்பநிலை தற்போதைய 12-14 டிகிரி என்ற அளவிலிருந்து 2050க்குள் 14-16 டிகிரியாக உயரும் என்று கிரீன்பீஸ் மதிப்பிடுகிறது.

பட மூலாதாரம், ZHUANG XIN-RAN/BBC
சமீப காலங்களில் தைவானும் தொடர்ந்து வறட்சி மற்றும் அதிகரிக்கும் வெப்பநிலை போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
சூறாவளிகள் பெரும் அழிவைக் கொண்டு வரும் என்றாலும், தீவின் முக்கிய நீர் ஆதாரமாக அவைதான் விளங்குகின்றன. எனவே இம்முறை நடந்தது போல, சூறாவளிகள் கடலில் இருந்து தீவை நோக்கி நகரவில்லை என்றால், பயிர் விளைச்சல் பொய்த்துப் போகும். இது சௌ பழங்குடியினரின் சடங்குகளை மட்டும் அல்லாமல், அவர்களது வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.
ஜுய்-சியாவ் சுங் கூறுகையில், "எங்கள் குடும்பம் பல தலைமுறைகளாக மூங்கில்களை வளர்த்து வருகிறது. ஆனால் தொடர்ந்து ஏற்படும் வறட்சியால் அதற்கு ஏற்றாற்போல விவசாயம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல் மூங்கிலின் விளைச்சல் சமீப காலங்களில் 50 சதவீதத்திற்கு மேல் குறைந்துவிட்டது.
அவருடைய தோட்டத்தில் அடர்ந்த பச்சை காபி செடிகளுக்கு அப்பால் மஞ்சள் நிற மூங்கில் தண்டுகளைப் பார்க்க முடிகிறது. காபி செடிகளும் சுங்கிற்கு சொந்தமானவையே, மழை குறைவாக இருந்ததால் அவர் மூங்கிலுக்குப் பதிலாக காபி பயிரிட முடிவு செய்திருந்தார். ஆனாலும் கூட அவரால் முழுமையான விளைச்சலைப் பார்க்க முடியவில்லை.
காபிக் கொட்டைகள் கருகுகிறது என்றால் அவை வெப்பநிலை உயர்வதன் அறிகுறி என்று கூறுகிறார் சுங். ஒரு மோசமான விளைச்சல் மூலம் அவரது வருமானம் உடனடியாகக் குறைந்துவிடும். தற்போது இருக்கும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப வேறு ஏதேனும் ஒரு பயிர் கொண்டு விவசாயம் செய்ய யோசித்து வருகிறார் சுங்.
ஆனால் சௌ பழங்குடி மக்களுக்குத்தான் கடவுளின் பூக்களுக்கு மாற்றாக வேறு எந்த மலரும் இல்லை. பூக்களைக் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அவை அழிந்து போனாலோ, அதற்கு மாற்றாக சடங்குகளில் பயன்படுத்த வேறு பூக்கள் இல்லை என்கிறார் பெரியவர் காவோ.
அத்தகைய சூழ்நிலையை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது நடந்துவிடும் என்ற பயமும் அவருக்கு இருக்கிறது. ஒரு காலத்தில் பல கடவுளின் பூக்கள் செழித்து வளர்ந்த, இப்போது காய்ந்து போய் ஒரு பெரிய தொட்டியில் வைக்கப்பட்டிருக்கும் செடியை நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.
சௌ பழங்குடியினரின் பல தெய்வங்களில் ஒன்று போர்க் கடவுள் லாஃபாஃபியோய் (Lafafeoi), போர்க்களத்தில் சண்டையிடும் இளைஞர்கள் பத்திரமாகத் திரும்பி வருவதற்கு இவரை வணங்குவது வழக்கம்.
"அந்த தெய்வத்தின் இருப்பிடத்தைச் சுற்றியே கடவுளின் பூக்கள் வளரும் என நம்பப்படுகிறது," என்கிறார் 40 வயதான ஆன் சியாவோ-மிங். "இந்த மலர்கள் குபாவின் கூரைகளில் வைக்கப்பட்டுள்ளன, இது தெய்வீக இருப்பைக் குறிக்கிறது," என்று கூறுகிறார் அவர்.
குபா என்றால் ஓலைகளால் வேயப்பட்ட கூரைகளை உடைய ஒரு மண்டபம். பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளும் மூன்று நாள் மாயாஸ்வி திருவிழாவில் சடங்குகள் மற்றும் ஆன்மீக மையமாக இருப்பது இந்த குபா மண்டபம்தான்.

பட மூலாதாரம், ZHUANG XIN-RAN/BBC
தங்கள் போர் வீரர்களை ஆசிர்வதித்து துரதிர்ஷ்டத்தைத் துடைத்தெறிய வேண்டுமென இந்தப் போர் தெய்வத்திடம் கோரிக்கை வைப்பார்கள் சௌ பழங்குடி ஆண்கள். இந்த சடங்குக்கு அவர்கள் தங்கள் தோல் தொப்பிகளில் கோல்டன் ஆர்க்கிட்டின் இலைகளைக் கோர்க்க வேண்டும், அப்போதுதான் தெய்வம் அவர்களை சௌ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் கண்டுகொள்ளும்.
பண்டைய பாரம்பரியத்தின்படி கடவுளின் பூவை செயற்கையாக வளர்க்கக்கூடாது என்று ஆணையிடப்பட்டுள்ளது. அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன், முக்கியமான விழாக்கள் தொடங்குவதற்கு முன்பு அதைக் கண்டுபிடித்துக் கொண்டு வர வேண்டும்.
சௌ பழங்குடியினர் தைவானில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 16 பழங்குடியினங்களில் ஒன்று. பெரும்பான்மையான ஹான் சீனர்கள் வருவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர்கள் இத்தீவில் வாழ்ந்து வருகின்றனர்.
இன்று, நாட்டின் மக்கள்தொகையான 23 மில்லியனில் 6,000 பேர் உள்ளனர். அவர்கள் அலிஷான் மலைகளில் வாழ்கிறார்கள், காட்டில் கோல்டன் கிராஸ் ஆர்க்கிட்கள் வளரும் பகுதிக்கு அருகில் வசிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
காலநிலை மாற்றத்தால் காணாமல் போகும் கடவுளின் பூக்கள்
காவோ தேஷெங் தனது பழங்குடியினரின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார். அரசிடமிருந்து பழங்குடியினருக்கு எத்தகைய ஆதரவு கிடைக்கிறது என்பதைப் பொறுத்து அவர்களது எதிர்காலம் இருக்கும் என அவர் கூறுகிறார். தற்போது அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நடைபெற்று வருகிறது.
அரசியல்வாதிகள் வந்து பார்வையிடுகிறார்கள், ஆனால் அவர்கள் சௌ மக்களின் வாழ்க்கை முறையில் காலநிலை மாற்றத்தின் கடுமையான தாக்கம் குறித்து கவனத்தில் கொள்ளவில்லை என்று பெரியவர் காவோ கூறுகிறார்.
தேர்தல் வேட்பாளர்களை "காலநிலை நத்தைகள்" என்று அழைக்கிறது கிரீன்பீஸ் அமைப்பு. நிலையான சுற்றுச்சூழல் கொள்கைகளை உருவாக்குவதில் அவர்கள் நத்தைகளைப் போல மெதுவாக செயல்படுகிறார்கள் என அந்த அமைப்பு கூறுகிறது.
வாக்காளர்களுக்கு காலநிலை மாற்றம் ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தாலும்கூட, மூன்று முன்னணி அதிபர் வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு இலக்குகளை அடையப் போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சௌ பழங்குடி மக்களின் நிலையைப் பொறுத்தவரை அவர்களுக்கு நேரம் குறைவாக உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












