தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் 53% பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு - இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்,

பட மூலாதாரம், Getty Images

இன்றைய (13/03/2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 53 சதவீதம் பேருக்கு காலநிலை மாற்றம் காரணமாகவே நாள்பட்ட சிறுநீரக நோய்களும், சிறுநீரக செயலிழப்பும் ஏற்பட்டதாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக சிறுநீரக நல தினம் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் 2வது வியாழக்கிழமை (மாா்ச் 13) கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நிகழாண்டில், 'உங்களது சிறுநீரகம் நலமா' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

இந்த நிலையில், அதுதொடா்பாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன், "மனித உயிரைத் தாங்கி நிற்கும் உன்னத உறுப்புகளில் சிறுநீரகங்கள் அதிமுக்கியமானவை. ஆனால், இதய நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தில் நூறில் ஒரு பங்குகூட சிறுநீரகத்துக்குக் கொடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருகிறது," என்று தெரிவித்திருப்பதாக தினமணி குறிப்பிட்டுள்ளது.

மேலும், "அண்மையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையும் சென்னை மருத்துவக் கல்லூரியும் இணைந்து கள ஆய்வு ஒன்றை நடத்தின. அதில் இணை நோய்கள் இல்லாத 53 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவா்களில் நேரடியாக வெயிலில் அதிக நேரம் பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளா்களும், விவசாயத் தொழிலாளா்களுமே பெரும்பாலானோா் என்று தெரிய வந்துள்ளது. அதுகுறித்த விரிவான ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத வெப்பநிலை, காற்று மாசுபாடு, புறச்சூழலில் நிலவும் வேதிம மாசு உள்படப் பல்வேறு காரணங்கள்தான் ஆரோக்கியமான நபருக்கும் சிறுநீரக பாதிப்பு வரக் காரணமாக அமைந்து விடுகிறது," என்று கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

புதுச்சேரி மாநிலத்தில் மகளிர் உதவித் தொகை ரூ.2500 ஆக உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் மகளிர் உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் ரங்கசாமி, 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று(மார்ச் 12) தாக்கல் செய்தார். அப்போது பெண்கள், மாணவர்களுக்காகப் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

அந்தச் செய்தியின்படி, புதுவையில் 30 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாத, கணவரை இழந்த, வேலையற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு அவர்கள் திருமணம் செய்யும் வரை அல்லது வேலைக்குச் செல்லும் வரை மாதம் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

மேலும், "21 வயது பூர்த்தியடைந்து 55 வயதுக்கு மிகாமல் இருக்கும் அரசின் எந்தவிதமான மாதாந்திர உதவித்தொகையும் பெறாத, வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் குடும்பங்களின் தலைவிகளுக்கு மாதந்தோறும் தற்போது ரூ.1000 வழங்கப்படுகிறது. அந்த உதவித் தொகை, 2025-26ம் நிதியாண்டு முதல் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்," என்று அறிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்,

பட மூலாதாரம், @CM_Puducherry

வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலுவை இழப்பீட்டுத் தொகையை வழங்க கெடு

வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைக் கிராமத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்ட தமிழக - கர்நாடக அதிரடிப்படையினர் விசாரணை என்ற பெயரில் மலைக் கிராம மக்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்தது. பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களுக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால் தமிழக அரசு ரூ.1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக வழங்கியது. மீதித் தொகையான ரூ.3 கோடியே 79 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கவில்லை. இந்தத் தொகையையும் வழங்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது."

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், சந்தனக் கடத்தல் வீரப்பன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. (கோப்புப் படம்)

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதிமன்றம், அதிரடிப் படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய மீதித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், அதுதொடர்பான பயனாளிகள் பட்டியலை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டுமென்றும் விடியல் மக்கள் நல அறக்கட்டளைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதுகுறித்து இந்து தமிழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, வழக்கு விசாரணையின்போது, வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கி விட்டதாக விடியல் மக்கள் நல அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், "அதிரடிப் படையால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுவிட்டன. பாக்கி இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அந்தத் தொகையை வழங்க மூன்று வார காலம் அவகாசம் தேவை," என்று தெரிவித்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நடிகை சௌந்தர்யா மரணத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பா?

நடிகை சௌந்தர்யா - நடிகர் மோகன் பாபு

பட மூலாதாரம், Dinathanthi

"நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது நில அபகரிப்புக்காக நடந்த திட்டமிட்ட கொலை. இதில் தொடர்புடைய நடிகர் மோகன் பாபுவை விசாரிக்க வேண்டும்" என்று ஒருவர் காவல் துறையில் புகார் அளித்திருப்பதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சவுந்தர்யா. அவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக பெங்களூருவில் இருந்து தெலங்கானா மாநிலம் கரீம்நகருக்கு செஸ்னா-180 ரக சிறப்பு விமானத்தில் புறப்பட்டார்.

அவருடன் அவரது சகோதரர் அமர்நாத்தும் உடன் இருந்தார். ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம், பெங்களூரு வேளாண் பல்கலைக் கழகத்தின் காந்தி க்ருஷி விஷன் கேந்திரா வளாகத்தில் தீப் பிடித்து விழுந்தது. விபத்தில் சௌந்தர்யா, அவரது சகோதரர் இருவருமே உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது திட்டமிட்டு நடந்த கொலை என்று தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த எதுருகுட்ல சிட்டி மல்லு என்பவர் புகார் அளித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

அந்தப் புகாரில், "நடிகை சௌந்தர்யாவுக்கு தெலுங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் எல்லைக்கு உட்பட்ட ஜல் பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தைத் தனக்கு விற்கும்படி நடிகர் மோகன்பாபு வற்புறுத்தி வந்தார். அதற்கு சௌந்தர்யாவும், அவரது சகோதரரும் சம்மதிக்கவில்லை. இதனால் சௌந்தர்யா குடும்பத்தினர் மீது மோகன்பாபு பகையுடன் இருந்தார்.

இதைத் தொடர்ந்து தெலுங்கானா கட்சி தேர்தல் பிரசாரத்துக்கு பெங்களூருவில் இருந்து சகோதரருடன் ஹெலிகாப்டரில் புறப்பட்ட சௌந்தர்யாவை ஹெலிகாப்டர் விபத்து என்ற பெயரால் கொலை செய்து சாட்சியங்கள் இல்லாமல் செய்து விட்டனர்," என்று அவர் தெரிவித்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், "அதன்பிறகு ஜல் பள்ளியில் உள்ள சௌந்தர்யாவின் 6 ஏக்கர் நிலத்தை மோகன்பாபு ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறார். அந்த நிலத்தை அரசு பறிமுதல் செய்து ஆதரவற்ற ஆசிரமம் அல்லது ராணுவ வீரர்களுக்கு வழங்க வேண்டும். சௌந்தர்யாவின் மரணம் குறித்து மறு விசாரணை செய்ய வேண்டும்'' என்றும் அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாருக்கு நடிகை சௌந்தர்யாவின் கணவர் ரகு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தினத்தந்தி குறிப்பிட்டுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐதராபாத்தில் உள்ள சொத்து குறித்தும் மோகன்பாபு மற்றும் சௌந்தர்யா குறித்தும் பரவும் தவறான ஆதாரமற்ற தகவலை மறுக்கிறேன். மோகன் பாபு எனது மனைவி சௌந்தர்யாவிடம் இருந்து சட்டவிரோதமாக எந்தச் சொத்தையும் வாங்கவில்லை, அவருடன் எந்த நிலப் பரிவர்த்தனையும் செய்யவில்லை.

கடந்த 25 ஆண்டுகளாக மோகன் பாபுவை அறிவேன். அவரோடு எங்கள் குடும்பத்தினர் எப்போதும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையைப் பேணி வருகின்றனர். தவறான தகவலைப் பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியிருப்பதாகவும் தினத்தந்தி தெரிவித்துள்ளது.

மக்களின் காணிகளை அரச திணைக் களங்கள் திருடுவதாக எம்.பி. ரவிகரன் குற்றச்சாட்டு

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், இலங்கை செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப் பகுதிகளில், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக் களங்கள் மக்களின் விவசாய மற்றும், குடியிருப்புக் காணிகளை அத்துமீறி திருடியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளதாக வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"மக்களின் காணித் திருட்டில் ஈடுபடும் திணைக்களங்ளில் ஒன்றான வனவளத் திணைக்களம் வன்னியில் இடம்பெறும் சட்டவிரோத காடழிப்புச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி, வனவளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தெரிவித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்பு மரக்குற்றிகளால் நிரப்பப்பட்ட கனகரக வாகனங்களைக் கண்டதில்லை எனவும், மரம் அரிகின்ற இயந்திர வாள்களின் கொடூர ஓசையைக் கேட்டதில்லை எனவும் குறிப்பிட்டதோடு, வனவளத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பாதுகாத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டினார்," என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"வனப் பகுதிகள், இயற்கை வாழ்விடங்கள் என்பவை சூறையாடப்படுவதற்குக் காரணமாக இருக்கும் திணைக்களங்கள் 2010-க்கு பின்னர் வீட்டு முற்றங்களையும் வயல் நிலங்களையும், தோட்டந் துரவுகளையும், வீதிகளையும், இடுகாடுகள், சுடுகாடுகளையும்கூட திருடத் தொடங்கி விட்டார்கள்.

இதே போல் 2009ஆம் ஆண்டின் பின்னர் வனஜீவராசிகள் திணைக் களத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் மொத்தமாக 69,401 ஏக்கர் பிரதேசத்தை வனஜீவராசிகள் திணைக்களம் தங்களுடைய ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன," என்று அவர் கூறியதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)