நகைச்சுவை வனவிலங்கு விருதுகள்: வேடிக்கையான 10 விலங்கு புகைப்படங்கள்

முகத்தில் புல்லால் அடிவாங்கிய பறவையோ அல்லது பிரேக் டான்ஸ் ஆடும் நரிகளோ, அவை அனைத்திற்கும் ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்க முடியும்.

நிகான் நகைச்சுவை வனவிலங்கு விருதுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு போட்டியில் 109 நாடுகளிலிருந்து 10,000 புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. இது இப்போட்டியின் 10 ஆண்டு கால வரலாற்றிலேயே மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

2015-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பால் ஜாய்ன்சன்-ஹிக்ஸ் என்பவரால் இந்த விருது உருவாக்கப்பட்டது.

தன்னிடம் இருந்த விலங்குகளின் புகைப்படக் குவியலைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தபோது, ஏன் இப்படி ஒரு போட்டியை உருவாக்கக்கூடாது என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.

வெற்றியாளர்: 'ஹை ஃபைவ்'

ருவாண்டாவில் ஒரு கொரில்லா தனது திறமைகளைக் காட்டிப் பெருமைப்படுகிறது. வெற்றி பெற்றுள்ள இந்த புகைப்படம் மார்க் மெத் கோன் என்பவரால் எடுக்கப்பட்டது.

கொரில்லா குடும்பங்களைத் தேடி அவர் பனிமூட்டமான மலைகளில் நான்கு நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்.

விரைவில் அவர் 'அமஹோரோ' (Amahoro) குடும்பத்தைக் கண்டறிந்துள்ளார். அங்கிருந்த ஒரு இளம் ஆண் கொரில்லா, வித்தைகளைக் காட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியது.

"அது சுழன்று ஆடுவது, உருண்டு விழுவது மற்றும் கால்களை உயர்த்தி உதைப்பது போன்றவற்றைச் செய்தது. அதன் செயல்திறனைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது," என்கிறார் மார்க்.

ஜூனியர் பிரிவில் வென்றவர்

16 வயது மற்றும் அதற்குட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவில் கிரேசன் பெல் தங்கப்பதக்கம் வென்றார்.

அமெரிக்காவில் பச்சைத் தவளைகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த கிரேசன், வீட்டிற்குச் செல்லும் வரை இந்தத் தருணத்தைப் படம் பிடித்ததை உணரவில்லை.

"இதைப் பார்த்த என் பெற்றோர் மிகவும் ரசித்தனர், இது எனக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக மாறியது. ஒரு தவளை மற்றொன்றுக்கு ஞானஸ்நானம் (Baptism) செய்வது போலவே இது இருப்பதாக நாங்கள் அனைவரும் நினைத்தோம்" என்று பகிர்ந்து கொள்கிறார் கிரேசன் பெல்.

இளம் புகைப்படக் கலைஞர் பிரிவின் வெற்றியாளர்

இந்த செந்நிற நரிகள் (red foxes) தங்களின் நடனத் திறமையை வெளிப்படுத்தி மகிழ்ந்து கொண்டிருந்தன.

நெதர்லாந்தில் பவுலா ரஸ்டேமியர் என்பவரால் இந்தப் படம் எடுக்கப்பட்டது. இவர் 25 வயது மற்றும் அதற்குட்பட்டோருக்கான பிரிவில் வெற்றி பெற்றார்.

"நரிகளின் விசித்திரமான குணாதிசயங்களையும் அவை விளையாடுவதையும் பார்க்கும்போது உங்களுக்குச் சிரிப்பு தானாகவே வரும்," என்கிறார் பவுலா.

உங்களைச் சிரிக்க வைக்கும் வேறு சில புகைப்படங்கள்

நம் எல்லோருக்குமே தலைமுடி சரியில்லாத நாள் என சில நாட்கள் இருக்கும்.

கனடாவில் உள்ள இந்தச் சாம்பல் நிற அணிலுக்கு அப்படி ஒரு நாள் தான் அது.

பின்லாந்தில் உள்ள இந்த 'ரெட்-த்ரோட்டட் லூன்' (red-throated loon) பறவையின் நெகிழ்வுத்தன்மையைப் பாருங்கள்.

எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும் ஒருவரை நீங்கள் சந்தித்ததுண்டா?

இதோ நார்வேயில் இருக்கும் இந்த 'பிரிடில்ட் கில்லெமோட்ஸ்' (bridled guillemots) பறவைகள் அருகருகே உள்ளன. ஆனால், இந்தப் பேச்சு நீடித்தால் அது தொடருமா என்பது சந்தேகமே!

ஜப்பானின் பனிப்பொழிவில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.

தான் பிடித்து வைத்த மீனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் இந்த 'ஸ்டெல்லர் கடல் கழுகு' (Steller's sea eagle), அந்த உணவை யாருடனும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு