செஞ்சி கோட்டையை கட்டியது யார்? சிவாஜியின் ராணுவ தளமாக குறிப்பிட்டு யுனேஸ்கோ அங்கீகரித்ததால் சர்ச்சை

செஞ்சிக் கோட்டையின் பின்னணி

பட மூலாதாரம், Facebook/TN Tourism

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோட்டைகளில் ஒன்றான செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அங்கீகாரம் சிறு சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

புகழ்பெற்ற மராத்திய மன்னரான சிவாஜியுடன் தொடர்புபடுத்தப்பட்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதுதான் இந்த சலசலப்பிற்குக் காரணம். உண்மையில் செஞ்சிக் கோட்டையைக் கட்டியது யார்?

யுனெஸ்கோவுக்கு இந்தியா பரிந்துரை

இந்திய அரசின் கலாசார அமைச்சகம் யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலுக்கான 2024 - 25ஆம் ஆண்டு பரிந்துரையாக 'Maratha Military Landscapes' என்ற பெயரில் 12 கோட்டைகளின் பெயர்களை அனுப்பியது. அதில் சல்ஹர் கோட்டை, ஷிவ்நேரி கோட்டை, லோகட், காந்தேரி கோட்டை, ராய்கட், ராஜ் கட், பிரதாப்கட், ஸ்வர்ணதுர்க், பன்ஹலா கோட்டை, விஜய் துர்க், சிந்து துர்க், செஞ்சிக் கோட்டை ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதில் செஞ்சிக் கோட்டையைத் தவிர்த்த பிற வரலாற்றுச் சின்னங்கள் எல்லாம் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவை.

ராமதாஸ் கண்டனம்

இப்போது யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மராத்தா ராணுவ சின்னமாக கருதப்பட்டு இதற்கு அங்கீகாரம் வழங்கியருப்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டித்திருக்கிறார்.

"செஞ்சிக்கோட்டையை மாமன்னர் சிவாஜியோ, பிற மன்னர்களோ, அரசர்களோ, கட்டி காப்பாற்றினார்கள் என்று எந்த கல்வெட்டுச் சான்றும் பாடல்கள் சான்றும் இல்லையே! மாமன்னர் சிவாஜியின் மகனென அறியப்பட்ட ராஜாராம், தந்தைக்கு அடுத்து செஞ்சிக் கோட்டையில் நுழைந்த கொஞ்ச நாள்களிலேயே மொகலாய பேரரசன் ஔரங்கசீப்பிடம் மோத முடியாமல் சரண் அடைந்துள்ளார். மொகாலய ஆளுநர் சொரூப்சிங் என்பார், கொஞ்சகாலம் செஞ்சியை நிர்வாகம் செய்துள்ளார், அவருடைய மகன்தான் தேஜ்சிங் என்கிற தேசாங்சிங். இந்த ஆளுநர் மகனான தேசாங் சிங்கைத்தான் மக்கள் அறியாமையில், தேசிங்குராஜா என்றழைத்து, அவரும் வரலாற்றில் தமிழ் மாமன்னன் போல தோற்றம் பெற்று விட்டார்.

22 வயதிலேயே வயதுக்கும் தகுதிக்கும் மீறி ஆட்சி, அதிகாரம் என்று தனக்கான இடத்தை தகப்பன் மூலம் பிடித்து விட்டாலும், போதிய பக்குவம் இல்லாததால் 22 வயதிலேயே ஆற்காடு நவாப் படையிடம் மோதி ஒரு மணி நேரத்திலேயே சிறை பிடிக்கப்பட்டு சின்னாபின்னமாகிப் போனான். இவையெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை வரலாறு. இந்த வரலாற்றின் எந்தப் பக்கத்திலும், தமிழனான 'காடவ' மன்னர்கள் கட்டியதே செஞ்சிக்கோட்டை என்ற தரவு தவிர்த்து வேறொன்றை நான் பார்க்கவில்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1076 முதல் கி.பி. 1279வரை நடுநாட்டுப் பகுதிகளை ஆட்சி செய்த சிற்றரசர்களான காடவர் வம்சத்தினரே இந்தக் கோட்டையைக் கட்டியதாக அவர் குறிப்பிடுகிறார்.

செஞ்சிக் கோட்டையின் பின்னணி

பட மூலாதாரம், Facebook/TN Tourism

புதையல் செல்வத்தில் கட்டப்பட்ட செஞ்சிக் கோட்டை

தமிழ்நாட்டில் உள்ள கோட்டைகளில் மிகப் பெரிய கோட்டை வளாகம் செஞ்சிதான். பல நூறு ஏக்கர் பரப்பளவில் செஞ்சியில் உள்ள கோட்டைகள் விரிந்து பரந்திருக்கின்றன. கோன் மன்னர்கள், விஜயநகர நாயக்கர்கள், முகலாயர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாபுகள், ஐரோப்பியர்கள் என பலரும் ஆட்சி செய்யப்பட்ட பிரதேசம் இது. ஆனால், இந்தக் கோட்டையின் துவக்கம் ஒரு விநோதமான கதையோடு தொடர்புடையது.

சி.எஸ். ஸ்ரீநிவாசாச்சாரி எழுதி 1943ல் வெளியான A History Of Gingee And Its Rulers நூல் செஞ்சியின் வரலாற்றை விரிவாகக் கூறுகிறது. அந்த நூலில் செஞ்சியின் துவக்கம் சுவாரஸ்யமாக விவரிக்கப்படுகிறது. அதாவது, ஆனந்தக் கோன் என்ற இடையர் இனத்தைச் சேர்ந்தவர் மேற்கில் உள்ள மலைக்கருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது தற்செயலாக மலையிடுக்கிலிருந்து அவருக்கு பெரும் புதையலொன்று கிடைத்தது. இதையடுத்து இவர் தன்னுடன் சில போர் வீரர்களைச் சேர்த்துக் கொண்டு ஒரு தலைவனாக உருவெடுத்தான். அருகில் உள்ள தேவனூர், செயங்கொண்டான், மேலச்சேரி ஆகிய கிராமங்களில் அதிகாரம் செலுத்தியவர்களை வென்று, கமலகிரி மலையில் ஒரு சிறிய கோட்டையைக் கட்டிக்கொண்டு அதற்கு ஆனந்தகிரி எனப் பெயரிட்டான். இவருடைய ஐம்பதாண்டுகால ஆளுகைக்குப் பிறகு கி.பி. 1240ல் கிருஷ்ணக் கோன் என்பவன் ஆட்சிக்கு வந்தான். இவர் வடக்கிலிருந்த மலையில் ஒரு கோட்டையைக் கட்டி அதனை தன் பெயராலேயே அழைக்க ஆரம்பித்தான். இதற்குப் பிறகு செஞ்சி குறும்பர்கள் வசம் வந்தது.

15-16ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசு தக்காணம் முழுவதையும் மெல்ல மெல்ல தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தபோது செஞ்சியும் அவர்கள் வசமானது. 16ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் டுபாகி கிருஷ்ணப்பா என்பவர் செஞ்சியின் முதல் நாயக்க மன்னராக இருந்திருக்கலாம் என இந்தியக் கலாசார அமைச்சகத்தின் 'இந்தியன் கல்ச்சர்' இணையதளம் தெரிவிக்கிறது.

இதற்குப் பிறகு விஜயநகர மன்னர்கள் இந்தக் கோட்டையை விரிவுபடுத்தினர். 1464ல் வெங்கடபதி நாயக்கர் என்பவர் செஞ்சியின் மன்னரானார். இவருடைய காலத்தில்தான் கல்யாண மகால், தானியக் களஞ்சியங்கள், கோட்டையின் சுற்றுச் சுவரை வலுப்படுத்துவது போன்றவை நடந்தன.

இவருக்கு அடுத்து வந்த முத்தியாலு நாயக்கர் இங்கிருக்கும் வெங்கடரமண சுவாமி கோவிலைக் கட்டினார். கொஞ்சம் கொஞ்சமாக நாயக்க அரசர்கள் பலவீனமடைந்த நிலையில், 1648 டிசம்பரில் பீஜபூரை ஆட்சி செய்த முஸ்தஃபா கானிடம் வீழ்ந்தது. இதற்குப் பிறகு செஞ்சிக்கு பீஜபூர் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களது காலத்திலும் கோட்டையில் பல பகுதிகள் கட்டப்பட்டன. கோட்டை அரண்கள் புதுப்பிக்கப்பட்டன. செஞ்சிக்கு பாதுஷாபாத் என புதிய பெயர் சூட்டப்பட்டது.

செஞ்சிக் கோட்டையின் பின்னணி

பட மூலாதாரம், Facebook/TN Tourism

மராத்தியப் பேரரசர் சிவாஜி வசமான செஞ்சி

இந்தக் காலகட்டத்தில் செஞ்சி மிக மோசமாக ஆட்சி செய்யப்பட்டதாக சி.கே. ஸ்ரீநிவாஸன் எழுதிய Maratha Rule In The Carnatic 1944 என்ற நூல் குறிப்பிடுகிறது. 1677வாக்கில் ரவுஃப் கான், நஸீர் முகமது கான் ஆகியோர் செஞ்சியின் பொறுப்பாளர்களாக இருந்தனர். அந்தத் தருணத்தில் படையெடுத்து வந்த மராத்திய அரசரான சிவாஜி, செஞ்சியைக் கைப்பற்றினார்.

"பத்தாயிரம் பேரைக் கொண்ட காலாட் படையுடன் சிவாஜி இங்கே வந்தார். மகாராஷ்டிராவில் சிவாஜி அறிமுகப்படுத்திய வருவாய் முறையும் ராணுவ முறையும் எவ்வித மாற்றமும் இன்றி இங்கேயும் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் செஞ்சியைச் சுற்றி புதிய காவல் அரண்களைக் கட்டினார்," என தனது Shivaji and His Times நூலில் குறிப்பிடுகிறார் பிரபல வரலாற்றாசிரியரான ஜாதுநாத் சர்க்கார்.

ஆனால், இதற்கு மூன்றாண்டுகள் கழித்து சிவாஜி இறந்துவிட்டார். சிவாஜிக்குப் பிறகு 1680ல் சம்பாஜி ஆட்சிக்கு வந்தவுடன் செஞ்சியின் பொறுப்பாக இருந்த சுபேதார் ரகுநாத நாராயண் ஹனுமந்தேவை பதவியிலிருந்து நீக்கினார். ஹர்ஜி மகாதிக் என்பவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் செஞ்சியிலிருந்து தனித்துச் செயல்பட்டார். 1689ல் முகலாயர்கள் சம்பாஜியை சிறைப்பிடித்தனர். இதற்குப் பிறகு, அவரது இளைய சகோதரரான ராஜாராம் அரசுக்குப் பொறுப்பேற்றார். அவர், 1689ஆம் ஆண்டு ஜூலை மாத ஆரம்பத்தில் செஞ்சிக் கோட்டையை வந்தடைந்தார். அங்கிருந்து அவர் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.

ஆனால், அங்கிருந்து மராத்தியர்கள் ஆதிக்கம் பெறுவதை முகலாயர்கள் விரும்பவில்லை. செஞ்சிக்கோட்டை முற்றுகையிடப்பட்டது. பல ஆண்டு முற்றுகைக்குப் பிறகு 1697ல் செஞ்சிக்கோட்டை முகலாயர்களிடம் வீழ்ந்தது. அரசராக இருந்த ராஜாராம் செங்கம் வழியாக திருப்பத்தூர், கோலார் ஆகிய பகுதிகளுக்குச் சென்று இறுதியில் புனேவைச் சென்றடைந்தார். கோட்டையைக் கைப்பற்றிய சுல்பிகார்கான் கோட்டையை புதுப்பிக்க உத்தரவிட்டார். ஒரு கட்டத்தில் சொரூப் சிங் என்பவர் வசம் செஞ்சிக் கோட்டை ஒப்படைக்கப்பட்டது.

செஞ்சிக் கோட்டையின் பின்னணி

பட மூலாதாரம், Facebook/TN Tourism

பத்து மாதங்களே ஆட்சியிலிருந்த தேசிங்கு ராஜா

செஞ்சிக் கோட்டையைப் பற்றிப் பேசும்போது ராஜா தேசிங் என்பவரைப் பற்றிப் பேசுவது வழக்கம். ஆனால், இவரைப் பற்றி தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. "ராஜா தேசிங்கின் ஆட்சியைப் பற்றி அறிந்துகொள்ள நாம் பெரும்பாலும் தமிழ்நாட்டு நாட்டுப்புற பாடல்களையும் மெக்கென்சியின் ஆவணங்ளையும்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இவரது ஆட்சி குறுகிய காலமே (1714 ஜனவரி முதல் அக்டோபர் வரை) நீடித்தது இதற்குக் காரணமாக இருக்கலாம்" என்கிறது A History Of Gingee And Its Rulers நூல்.

நாட்டுப்புற கதைப் பாடல்கள் பல குழப்பமான தகவல்களை அளிப்பதாகவும் புத்தகம் கூறுகிறது. அதாவது தேசிங்கு ராஜாவின் தந்தை செஞ்சியின் ஆளுநராக இருந்தபோது தேசிங்கு செஞ்சியில் பிறந்ததாக நாட்டுப்புற கதைப்பாடல் கூறுகிறது. மேலும், முகலாயப் பேரரசருக்கு எதிர்பாராத விதமாகக் கிடைத்த ஒரு சிறந்த குதிரையை அடக்க அவர் தனக்கு திறை செலுத்தும் அரசர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பின்பேரில் தேசிங்கு ராஜாவின் தந்தை ஹிந்துஸ்தான் சென்றார். கணவர் செஞ்சியில் இல்லாதபோது, அவரது மனைவி தேசிங்கைப் பெற்றெடுத்தார். பிறகு, தேசிங்கு அடக்க முடியாத குதிரையை அடக்கி, தன் தந்தையை காப்பாற்றியதாகவும் அதிசயமான இந்தக் குதிரையை முகலாயப் பேரரசர் தேசிங்கிற்கு பரிசாக அளித்ததாகவும் கூறப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தக் குதிரைக் கதை ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருந்தாலும், தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு செஞ்சி தேசிங்கு வசம் வந்தது. ஆனால், ஆற்காடு நவாபிற்கு செலுத்த வேண்டிய திறையை அவர் செலுத்தாத காரணத்தால், ஆற்காடு நவாபான சதத்துல்லா கான் செஞ்சியின் மீது படையெடுத்தான். இதில் தேசிங்குராஜா கொல்லப்பட்டார். செஞ்சி ஆற்காடு நவாபுகளின் கீழ் வந்தது.

இதற்குப் பிறகு பிரெஞ்சுக்காரர்களும் அவர்களுக்குப் பிறகு, 1761ல் ஆங்கிலேயர்களும் செஞ்சியைக் கைப்பற்றினர். இதற்குப் பிறகு நடந்த இரண்டாவது மைசூர் யுத்த காலம் வரை செஞ்சி ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தது. அதற்குப் பிறகு தன் முக்கியத்துவத்தை அந்த இடம் இழந்தது. 1803ல் தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் காரோ, செஞ்சிக் கோட்டையை அழிக்க உத்தரவிட்டார். ஆனால், வருவாய் வாரியம் அவரது பரிந்துரையை ஏற்கவில்லை. ஆனால், இதற்குப் பிறகு செஞ்சி ஒரு சிறு கிராமமாக சுருங்கிப் போனது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு