ஜின்னா - ரத்தி காதல் திருமணம் பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் பேசப்பட்டது ஏன்?

முகமது அலி ஜின்னா, ரத்தி தம்பதி

பட மூலாதாரம், PAKISTAN NATIONAL ARCHIVE

படக்குறிப்பு, முகமது அலி ஜின்னா, ரத்தி தம்பதி
    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி

மும்பையின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான சர் தின்ஷா பெட்டிட், காலை உணவின் போது தனக்கு விருப்பமான செய்தித்தாளான பாம்பே க்ரானிக்கிளின் எட்டாவது பக்கத்தைத் திறந்தார். அதில் ஒரு செய்தியைப் பார்த்தவுடனே, செய்தித்தாள் அவரது கையிலிருந்து நழுவியது.

அது 1918ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி. முந்தைய நாள் மாலை, முகமது அலி ஜின்னா, சர் தின்ஷாவின் மகள் லேடி ரத்தியைத் திருமணம் செய்துகொண்டார் என்பதுதான் அந்த செய்தி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர் தின்ஷா, தனது நண்பரும் வழக்கறிஞருமான முகமது அலி ஜின்னாவை டார்ஜிலிங்கிற்கு அழைத்திருந்தார்.

தின்ஷாவின் 16 வயது மகள் ரத்தியும் அங்கு இருந்தார். அந்த காலகட்டத்தில் அவர் மும்பையில் மிக அழகான பெண்களில் ஒருவராகக் கருதப்பட்டார். ஜின்னா இந்திய அரசியலில் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.

ஜின்னாவுக்கு அப்போது 40 வயது. ஆனால், டார்ஜிலிங்கின் பனிமூடிய மலைச்சிகரங்களுக்கு நடுவே ரத்தியும் ஜின்னாவும் ஒருவரை ஒருவர் சந்தித்து பழக ஆரம்பித்தனர்.

இந்தப் பயணத்தின் போது தான், ஜின்னா, சர் தின்ஷா பெட்டிடிடம் அவரது மகளைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கேட்டார் என 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஜின்னா - தி மேரேஜ் தட் ஷூக் இந்தியா' என்ற புத்தகத்தை எழுதிய ஷீலா ரெட்டி கூறுகிறார்.

"டார்ஜிலிங்கில் ஒருநாள் இரவு உணவுக்குப் பிறகு, வெவ்வேறு மதங்களுக்கு இடையேயான திருமணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று சர் தின்ஷாவிடம் ஜின்னா கேட்டார்," என்று புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

ஜின்னாவின் திருமண முன்மொழிவு

இது தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று ரத்தியின் தந்தை உடனடியாக பதிலளித்தார். இந்தக் கேள்விக்கு ஜின்னாவால் கூட இவ்வளவு சிறப்பான ஒரு பதிலை அளித்திருக்க முடியாது. உடனே, ஒரு கணத்தை கூட வீணாக்காமல், அவரது மகளைத் திருமணம் செய்ய விரும்புவதாக தின்ஷாவிடம் ஜின்னா கூறினார்.

ஜின்னாவின் முன்மொழிவு தின்ஷாவை மிகவும் கோபப்படுத்தியது. உடனடியாக தன் வீட்டை விட்டு வெளியேறுமாறு அவர் ஜின்னாவை கேட்டுக்கொண்டார். ஜின்னா தனது வாதத்தை முன்வைக்க தம்மால் இயன்றவரை முயற்சித்தார், ஆனால் தின்ஷாவை சம்மதிக்க வைக்க முடியவில்லை.

முகமது அலி ஜின்னாவின் மனைவி ரத்தி

பட மூலாதாரம், PAKISTAN NATIONAL ARCHIVE

இரண்டு மதங்களுக்கிடையிலான நட்புக்காக அவர் திட்டம் முதல் முயற்சியிலேயே தோல்வியடைந்தது. அதன் பின்னர் தின்ஷா ஜின்னாவிடம் பேசவே இல்லை. தனது வீட்டில் இருக்கும் வரை ரத்தி, ஜின்னாவை சந்திக்கக் கூடாது என்று அவர் கட்டுப்பாடு விதித்தார்.

அதுமட்டுமல்ல, ரத்தி பெரியவராகும் வரை ஜின்னாவால் அவரைச் சந்திக்க முடியாது என்று நீதிமன்ற உத்தரவையும் அவர்கள் பெற்றனர். இருப்பினும், இதையும் மீறி, ரத்தியும் ஜின்னாவும் ரகசியமாக சந்தித்துக்கொண்டதோடு, ஒருவருக்கொருவர் கடிதங்களும் எழுதிக்கொண்டனர்.

18 வயது பெண்

"ஒருமுறை தின்ஷா, ரத்தி ஒரு கடிதத்தைப் படிப்பதைப் பார்த்தார். அது நிச்சயமாக ஜின்னாவின் கடிதமாக இருக்கும் என்று அவர் உரக்கக் கத்தினார். ரத்தியிடமிருந்து அந்தக் கடிதத்தைப் பறிக்க, அவர் உணவு மேசையைச் சுற்றி ஓடினார். ஆனால், அவரால் ரத்தியைப் பிடிக்க முடியவில்லை." என்கிறார் ஷீலா ரெட்டி.

அவர்கள் சேரக்கூடாது என்பதற்காக வழக்குகளில் அரிதாகவே தோல்வியடையும் ஒரு வழக்கறிஞரை (பாரிஸ்டரை) சர் தின்ஷா சந்தித்திருந்தார். தின்ஷா மிகவும் பிடிவாதமாக இருந்தார். ஆனால், நீண்ட காலமாக ஒருவரை ஒருவர் பிரிந்திருந்த இந்த காதல் ஜோடி, அவரைவிடவும் பிடிவாதமாக இருந்தது.

இவர்கள் இருவரும் பொறுமையாகவும், அமைதியாகவும், உறுதியாகவும் ரத்திக்கு 18 வயதாகும் வரை காத்திருந்தனர்.

ஜின்னாவின் மற்றொரு வாழ்க்கை வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஷரீஃப் அல் முஜாஹித் கூறுகையில், பிப்ரவரி 20, 1918 அன்று, ரத்திக்கு 18 வயதானவுடன், ஒரு குடையையும் ஒரு ஜோடி உடைகளையும் எடுத்துக்கொண்டு தனது தந்தையின் வீட்டைவிட்டு வெளியேறினார்.

ஜின்னா, ரத்தியை ஜாமியா மஸ்ஜிதுக்கு அழைத்துச் சென்றார். அங்கு, ரத்தி இஸ்லாமிற்கு மாறினார். ஜின்னாவும் ரத்தியும் ஏப்ரல் 19, 1918 அன்று திருமணம் (நிக்காஹ்) செய்துகொண்டனர்.

இந்திய சமூகத்தின் மனநிலை

ஜின்னா பிரிட்டிஷ் இந்திய நாடளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் சிவில் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்திருந்தால், ஒருவேளை அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்திருக்கலாம் என ரத்தி-ஜின்னா பற்றி புத்தகம் எழுதிய க்வாஜா ராஸி ஹைதர் சொல்கிறார்.

அதனால்தான் அவர்கள் இஸ்லாமிய மரபுகளின்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். ரத்தியும் இதற்குத் தயாராக இருந்தார். இந்தத் திருமணத்தில் (நிக்காஹ்நாமா), 1001 ரூபாய் வரதட்சணை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஜின்னா, ரத்திக்கு ஒரு லட்சத்து இருபத்தைந்து ஆயிரம் ரூபாயை பரிசாக வழங்கினார். 1918ஆம் ஆண்டில் இந்தத் தொகை மிகப் பெரியதாக இருந்தது.

ஜின்னா, தன்னைவிட 24 வயது இளைய பெண்ணைத் திருமணம் செய்தார். இது அந்தக் காலத்திய பழமைவாத இந்திய சமூகத்திற்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

தனது சகோதரி விஜயலட்சுமி பண்டிடுடன் ஜவர்ஹர்லால் நேரு

பட மூலாதாரம், hkrdb.kar.nic.in

படக்குறிப்பு, தனது சகோதரி விஜயலட்சுமி பண்டிடுடன் ஜவர்ஹர்லால் நேரு

ஜவாஹர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட், 'தி ஸ்கோப் ஆஃப் ஹேப்பினஸ்' என்ற சுயசரிதையை எழுதியுள்ளார்.

அதில் அவர், "சர் தின்ஷா என்ற பணக்கார பார்ஸி மனிதரின் மகளை ஜின்னா திருமணம் செய்தது இந்தியா முழுவதும் ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரத்தியும் நானும் ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள். ஆனால், நாங்கள் வெவ்வேறு விதமாக வளர்க்கப்பட்டோம்."

"அந்த காலகட்டத்தில் ஜின்னா இந்தியாவில் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தார். இந்த விஷயங்கள் ரத்திக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதனால்தான் அவர் பார்ஸி சமுதாய மக்கள் மற்றும் தமது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக ஜின்னாவை திருமணம் செய்துகொண்டார்," என்று எழுதியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ரத்தியின் காதல்

இந்தியாவின் கவிக்குயில்' என்று அழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு, சையத் மகமூதுக்கு எழுதிய கடிதத்தில் ஜின்னாவின் திருமணத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

"இறுதியாக, ஜின்னா தனது விருப்பத்தை நிறைவேற்றினார். அந்தப் பெண்ணுக்கு தான் எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறோம் என்பதே தெரியாது என்று நினைக்கிறேன். ஆனால், ஜின்னா அதற்கு தகுதியானவர். அவர் தனது மனைவியை நேசிக்கிறார். இது அவரது சுயநலமான மற்றும் உள்முகமான ஆளுமையின் மனிதாபிமான பக்கமாகும்," என அவர் எழுதினார்.

ரத்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய க்வாஜா ராஸி ஹைதர்

பட மூலாதாரம், KHWAJA RAZI HAIDAR

படக்குறிப்பு, ரத்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய க்வாஜா ராஸி ஹைதர்

சரோஜினி நாயுடுவும் ஜின்னாவின் ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார் என எழுதுகிறார் க்வாஜா ராஸி ஹைதர். 1916 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டின்போது அவர் ஜின்னாவைப் பற்றி ஒரு கவிதை கூட எழுதியிருந்தார்.

ஜின்னாவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஹெக்டர் பொலித்தோ, தனது புத்தகத்தில் ஒரு வயதான பார்ஸி பெண்ணைப் பற்றி குறிப்பிடுகிறார். சரோஜினியும் ஜின்னாவை காதலித்தார் என அந்தப் பெண் நம்பினார். ஆனால், ஜின்னா அதற்கு பதிலளிக்கவில்லை. அவர் ஒட்டாமலே இருந்தார்.

சரோஜினி நாயுடுவும் ஜின்னாவை காதலித்தாரா?

சரோஜினி நாயுடு மும்பையின் குயிலாக அறியப்பட்டார், ஆனால் அவரது இனிமையான பாடல்கள் ஜின்னாவின் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. .

நான் ஷீலா ரெட்டியிடம், சரோஜினி நாயுடுவும் ஜின்னாவை காதலித்தாரா என்று கேட்டேன். அவர் இல்லை என்று பதிலளித்தார். இருப்பினும், சரோஜினிக்கு ஜின்னா மீது பெரும் மரியாதை இருந்தது.

ஜின்னாவின் மற்றொரு வாழ்க்கை வரலாற்றாசிரியர் அசிஸ் பேக், தனது புத்தகத்தில் ரத்தி மற்றும் சரோஜினி நாயுடு இருவருக்கும் ஜின்னா மீது இருந்த காதலை 'இரண்டு அழகிய பெண்கள்' (Two Winsome Women) என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியுடன் சரோஜினி நாயுடு

பட மூலாதாரம், Douglas Miller/Getty Images

படக்குறிப்பு, மகாத்மா காந்தியுடன் சரோஜினி நாயுடு

"பிரெஞ்சு பழமொழி ஒன்று பெண்கள் ஒருவரை ஒருவர் வெறுக்க ஆண்கள்தான் காரணம் என கூறுகிறது. ஆனால், ரத்தியைப் பார்த்து சரோஜினி பொறாமைப் படவில்லை. சொல்லப்போனால் ஜின்னா ரத்தியைத் திருமணம் செய்துகொள்ள சரோஜினி உதவினார்." என அசிஸ் பேக் எழுதியுள்ளார்

1918இல், ஜின்னா மற்றும் ரத்தியின் ஒளிரும் முகங்களைப் பார்க்கும் போது அவர்கள் இருவரும் ஒருவர் மற்றொருவருக்காகவே உண்டாக்கப்பட்டதாகத் தோன்றியது.

ஜின்னாவும் ரத்தியும்

ரத்தி, சிவப்பு மற்றும் தங்கம், வெளிர் நீலம் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் மெல்லிய உடைகளை அணிந்திருந்தார். வெள்ளி மற்றும் மார்பிள் சிகரெட் ஹோல்டரில் வைக்கப்பட்டிருந்த ஆங்கில சிகரெட்டுகளை புகைத்தபோது, அவரது ஆளுமை வெளிப்பட்டது.

ஆனால், அவரது ஒவ்வொரு சைகையும், தன்னிச்சையான புன்னகையும் அவரது இருப்பை மேலும் இனிமையாக்கியது.

"மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஜின்னா - தி மேரேஜ் தட் ஷூக் இந்தியா" புத்தகம்

பட மூலாதாரம், Sheela Reddy

படக்குறிப்பு, "மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஜின்னா - தி மேரேஜ் தட் ஷூக் இந்தியா" புத்தகம்

ஜின்னாவும் ரத்தியும் தங்களது தேனிலவுக்காக லக்னோவில் மகமூதாபாத் ராஜாவான அமீர் அகமது கானின் அரண்மனையில் தங்கியிருந்தபோது, அவருடைய மகன் அமீர் அகமது கானுக்கு நான்கரை வயது.

ரத்தி, வெள்ளை, தங்கம் மற்றும் கருப்பு விளிம்பு கொண்ட புடவை அணிந்திருந்தார். ரத்தி தேவதையைப் போலத் தோன்றினார். 1923இல், ஜின்னாவும் ரத்தியும் டெல்லியில் உள்ள மெண்டிஸ் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, ராஜா அமீர் கான் அவர்களை மீண்டும் சந்தித்தார். அப்போது, அவர் ஒரு பொம்மை வாங்குவதற்கு ரத்திக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்தார்.

"எனது கண்கள் அவர்களை விட்டு நகரவில்லை. அவர்களது குதிரை வண்டி என் கண்களுக்கு முன்பு கடந்து செல்லும் வரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்," என ரத்தி, ஜின்னாவின் நண்பரான காஞ்சி துவாரகா தாஸ், தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஆளுநர் இல்லத்து நிகழ்வுகள்

ரத்தி மற்றும் ஜின்னாவை குறித்து க்வாஜா ராஸி ஹைதர் ஒரு சுவாரஸ்யமான கதையைப் பகிர்கிறார். ஒருமுறை, பாம்பே கவர்னர் வில்லிங்டன், ஜின்னா தம்பதியை இரவு உணவுக்கு அழைத்திருந்தார். ரத்தி, லோ-கட் உடை ஒன்றை அணிந்து சென்றார்.

ரத்தி உணவு மேசையில் அமர்ந்தபோது, லேடி வில்லிங்டன், தனது உதவியாளரிடம் (ADC) ரத்திக்கு ஒரு சால்வை கொண்டு வரச் சொன்னார். ரத்திக்கு குளிராக இருக்கலாம் என்று நினைத்தார்.

இதைக் கேட்டவுடன் ஜின்னா உடனடியாக எழுந்தார். "திருமதி ஜின்னாவுக்கு குளிராக இருந்தால், அவர் தானே சால்வை கேட்பார்," என அவர் கூறினார்,

எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அவரும் அவரது மனைவியும் உணவு அரங்கை விட்டு வெளியேறினர். அதன்பிறகு, வில்லிங்டன் கவர்னராக இருக்கும்வரை ஜின்னா ஒருமுறை கூட கவர்னர் மாளிகைக்குச் செல்லவில்லை.

ரத்தியும் இயல்பாகவே துடிப்பான பெண்ணாக இருந்தார். "1918இல், லார்ட் செம்ஸ்ஃபோர்ட் இருவரையும் சிம்லாவில் உள்ள வைஸ்ராய் லாட்ஜில் இரவு உணவுக்கு அழைத்தார். அப்போது, ரத்தி இந்திய முறையில் கைகளை கூப்பி வைஸ்ராயை வரவேற்றார்," என ஷீலா ரெட்டி கூறுகிறார்,

செம்ஸ்ஃபோர்ட், ரத்தியிடம், 'உங்கள் கணவரின் அரசியல் வாழ்க்கை செழிக்க விரும்பினால், ரோமில் ரோமானியர்கள் நடந்துகொள்வதைப் போல் நடந்து கொள்ளுங்கள்,' என்று அறிவுறுத்தினார் என ரெட்டி கூறுகிறார்.

அதற்கு, 'எக்ஸலன்ஸி, நீங்கள் கூறியவாறே செய்தேன். இந்தியாவில் இந்திய முறையில் உங்களை வரவேற்றேன்!', என ரத்தி உடனடியாக பதிலளித்தார் என்று ஷீலா ரெட்டி தனது புத்தகத்தில் எழுதுகிறார்.

இருவருக்கும் இடையிலான இடைவெளி

க்வாஜா ராஸி ஹைதர் மற்றொரு சம்பவத்தைப் பற்றிக் கூறுகிறார். ஒருமுறை, ரத்தி, வைஸ்ராய் லார்ட் ரெடிங்குடன் உணவு மேசையில் அமர்ந்திருந்தார்.

ஜெர்மனி பற்றிய பேச்சு வந்தபோது, லார்ட் ரெடிங், 'நான் ஜெர்மனிக்குச் செல்ல விரும்பினேன். ஆனால், போருக்குப் பிறகு, ஜெர்மானியர்கள் எங்களை (பிரிட்டிஷாரை) விரும்புவதில்லை... எனவே, நான் அங்கு செல்ல முடியாது,' என்றார். அதற்கு ரத்தி உடனடியாக பதிலளித்தார், 'பிறகு ஏன் இந்தியாவுக்கு வந்தீர்கள்?' (இந்திய மக்களும் உங்களை விரும்புவதில்லை.)

நீதிபதி எம். சி. சாக்லா

பட மூலாதாரம், photodivision.gov.in

படக்குறிப்பு, நீதிபதி எம். சி. சாக்லா

ஜின்னாவின் பரபரப்பான வாழ்வும், இருவருக்கிடையேயான வயது வித்தியாசமும் ஜின்னாவுக்கும் ரத்திக்கும் இடையே படிப்படியாக பிளவை உருவாக்கியது.

"ஜின்னாவும் நானும் ஒரு சட்ட விவகாரத்தைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும்போது, ரத்தி அடிக்கடி வந்து ஜின்னாவின் மேசையில் அமர்ந்து, கால்களை ஆட்டிக்கொண்டிருப்பார். ஜின்னா விவாதத்தை முடித்துக்கொண்டு தன்னுடன் வெளியே செல்ல அவர் காத்திருப்பார்," என ஜின்னாவின் செயலாளரும், பின்னாளில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சருமான எம்.சி. சாக்லா எழுதுகிறார்,

ரத்திக்கு ஜின்னாவின் பதில்

ஜின்னாவின் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட அதிருப்தியை வெளிப்படுத்தும்வகையில் வராது. ரத்தி அங்கு இல்லாதது போலவே அவர் தனது வேலையைத் தொடர்வார்.

சாக்லா, 'ரோஸஸ் இன் டிசம்பர்' என்ற தனது சுயசரிதையில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைப் பகிர்ந்துள்ளார்.

"ஒருமுறை, ரத்தி, ஜின்னாவின் ஆடம்பரமான நீண்ட காரில் மும்பையில் உள்ள டவுன் ஹாலுக்கு வந்தார். காரிலிருந்து இறங்கியபோது, அவர் கையில் ஒரு டிபன் கூடை வைத்திருந்தார்."

"படிக்கட்டுகளில் ஏறும்போது, அவர், 'ஜே' (ஜின்னாவை அவர் இப்படித்தான் அழைத்தார்) என்று கூறி, 'நான் உங்களுக்கு மதிய உணவுக்கு என்ன கொண்டு வந்தேன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்,' என்றார். ஜின்னா, 'எனக்குத் தெரியவில்லை, நீ என்ன கொண்டு வந்தாய்?' என்று பதிலளித்தார். அதற்கு ரத்தி, 'நான் உங்களுக்கு பிடித்த ஹாம் சாண்ட்விச் கொண்டு வந்தேன்,' என்றார்."

"அதற்கு ஜின்னா, 'கடவுளே, நீ என்ன செய்துவிட்டாய்? நான் தேர்தலில் தோல்வியடைய வேண்டும் என விரும்புகிறாயா? நான் முஸ்லிம்களுக்கான தனி தொகுதியிலிருந்து போட்டியிடுகிறேன் என்பது உனக்குத் தெரியாதா? நான் மதிய உணவுக்கு ஹாம் சாண்ட்விச் சாப்பிடுகிறேன் என்று எனது வாக்காளர்களுக்கு தெரிந்தால், நான் வெற்றி பெற ஏதாவது நம்பிக்கை இருக்குமா?' என்றார்."

"இதைக் கேட்டு ரத்தியின் முகம் வாடியது. உடனடியாக டிபனை எடுத்துக்கொண்டு அவர் படிக்கட்டுகளில் வேகமாக இறங்கிச் சென்றார்."

முகமது அலி ஜின்னா

பட மூலாதாரம், www.npb.gov.pk

படக்குறிப்பு, முகமது அலி ஜின்னா

இருவருக்கிடையேயான பிளவு அதிகரிக்க அரசியலும் ஒரு காரணம் என ராஸி ஹைதர் நம்புகிறார். 1926ஆம் ஆண்டு வாக்கில், ஜின்னாவிற்கு இந்திய அரசியலில் முந்தைய முக்கியத்துவம் இல்லை. 1916இல் அவருக்கு இருந்த முக்கியத்துவம் இல்லை. அவர் மதவாத அரசியலை கையிலெடுத்திருந்தார். ரத்தியும் இப்போது நோய்வாய்ப்பட தொடங்கியிருந்தார்.

ரத்தியின் இறுதி நாட்கள்

ரத்தி பிரான்ஸில் நோய்வாய்ப்பட்டு இந்தியாவுக்குத் திரும்பும்போது, எஸ்எஸ் ராஜபுதனா என்ற கப்பலில் இருந்து ஜின்னாவுக்கு ஒரு கடிதம் எழுதினார், "நீங்கள் எனக்காக செய்த அனைத்திற்கும் நன்றி, என் அன்பே."

"நான் உங்களை மற்ற எந்த ஆணையும் விட அதிகமாக நேசித்தேன். என்னை நீங்கள் பறித்த மலராக நினைவில் வைத்திருங்கள், கசக்கிய மலராக அல்ல."

ரத்தி ஜின்னா, பிப்ரவரி 20, 1929 அன்று, 29 வயதில் மரணமடைந்தார். அவரது இறுதி நாட்களில் அவரது நண்பர் காஞ்சி துவாரகா தாஸ் அவருடன் இருந்தார்.

"ரத்தி தனது இறுதி நாட்களில் மிகவும் மனச்சோர்வில் இருந்தார். ஒருமுறை நான் அவரிடம், சிறிது நேரத்தில் வருவேன் என்று கூறியபோது, அவர் மிகவும் சோகமான குரலில், 'நான் அவ்வளவு நேரம் உயிருடன் இருந்தால்...' என்றார்.

பின்னர், காஞ்சி, மும்பையில் அவரை சந்திக்க வந்த ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளரிடம், ரத்தி தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்து தற்கொலை செய்துகொண்டார் என்று கூறியதாக காஞ்சி எழுதியிருப்பதாக ஷீலா ரெட்டி கூறுகிறார்.

க்வாஜா ராஸி ஹைதர் எழுதிய புத்தகம்

பட மூலாதாரம், KHWAJA RAZI HAIDER

படக்குறிப்பு, க்வாஜா ராஸி ஹைதர் எழுதிய புத்தகம்

ரத்தியின் உடல்நிலை மோசமடைந்த செய்தி ஜின்னாவை டெல்லியில் உள்ள வெஸ்டர்ன் கோர்ட்டில் அமர்ந்திருந்தபோது அடைந்தது.

மும்பையிலிருந்து அவருக்கு ஒரு ட்ரங்க் கால் வந்தது. மறுமுனையில் அவரது மாமனார் தின்ஷா பெட்டிட் பேசினார்.

பத்து ஆண்டுகளில் அவர்கள் பேசிக்கொண்டது அதுதான் முதல்முறை. செய்தியைக் கேட்டவுடன் ஜின்னா உடனடியாக ரயிலில் மும்பைக்கு புறப்பட்டார்.

வழியில், வைஸ்ராய் மற்றும் பிற முக்கியஸ்தர்களிடமிருந்து கடிதங்கள் வரத் தொடங்கின. பின்னர் ரத்தி இறந்துவிட்டார் என்று அவருக்குத் தெரியவந்தது. மும்பை ரயில் நிலையத்தில் இறங்கியவுடன், அவர் நேராக கல்லறைக்குச் சென்றார். அங்கு மக்கள் அவருக்காகக் காத்திருந்தனர்.

"ரத்தியின் உடல் புதைக்கப்பட்ட பிறகு, கல்லறையில் மண்ணைப் போட வேண்டும் என்று ஜின்னாவிடம் கூறப்பட்டது," என்கிறார் ஷீலா ரெட்டி.

"இதைக் கேட்டவுடன் ஜின்னா கண்ணீர் விட்டு கதறினார். ஜின்னா தனது உணர்வுகளை பொதுவெளியில் வெளிப்படுத்திய முதல் மற்றும் கடைசி முறை இதுதான்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு