லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை: சட்ட விரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் டிரம்ப் தீவிரம் - என்ன நடக்கிறது?

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கெய்லா எப்ஸ்டீன், பெர்ன்ட் டெபஸ்மேன் & கிறிஸ்டல் ஹேய்ஸ்

கடந்த வார இறுதியில், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற குடியேற்ற கைது நடவடிக்கைகள், டிரம்ப் நிர்வாகத்துக்கும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறைக்கும் (ICE) எதிராக வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர 4,000 தேசிய காவல் படை வீரர்களை அனுப்ப அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்தார். இது, அவரின் சட்ட விரோத குடியேறிகளை நாடு கடத்தும் பெரும் அளவிலான திட்டத்தில் ஒரு புதிய அத்தியாயமாக மாறியுள்ளது.

சட்டவிரோத குடியேறிகளை அகற்றுவதிலும், சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதிலும் வேகம் காட்ட விரும்பிய டிரம்ப் நிர்வாகத்துக்கு இது பொது மக்கள் முன்னிலையில் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

"வீரர்களை அனுப்புவது என்பது ஒரு சர்வாதிகார அதிபரின் குழப்பமான கற்பனை" என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், டிரம்பின் முக்கிய விமர்சகருமான ஆளுநர் கவின் நியூசம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சலிஸில் நடக்கும் சோதனைகள், கைது மற்றும் நாடு கடத்தல் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக உள்ளன.

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குடியேற்ற சோதனைகளுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து, கலிபோர்னியா தேசிய காவல் படை வீரர்கள் மற்றும் வாகனங்கள் ஞாயிற்றுக் கிழமை லாஸ் ஏஞ்சலஸுக்கு அனுப்பப்பட்டன.

டிரம்பின் முக்கியக் கொள்கையில் (சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவது) முன்னேற்றம் காட்ட வேண்டும் என அழுத்தம் அதிகரிக்கும் காரணத்தால், சமீபத்திய வாரங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் (ICE) துறை, தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜூன் 4ஆம் தேதியன்று ஒரே நாளில் அந்தத் துறை 2,200 பேரை கைது செய்ததாக என்பிசி (NBC) செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் 'கைது செய்வதற்கு மாற்று' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக என்பிசி கூறியது. இந்தத் திட்டம் ஆபத்தானவர்கள் என்று கருதப்படாத நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டாலும், அவர்கள் அமெரிக்காவில் வாழ உதவுகிறது.

டிரம்ப் அதிபராக இருந்த முதல் 100 நாட்களில் ஒரு நாளைக்கு சுமார் 660 பேர் கைது செய்யப்பட்டு இருந்ததைவிட, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை ஒரு நாளைக்கு 3,000 பேர் வரை கைது செய்யும் அளவுக்கு முன்னேறும் என வெள்ளை மாளிகை நம்புவதாக, நாடு கடத்தல் கொள்கையின் அறிவுசார் வடிவமைப்பாளராக பரவலாகப் பார்க்கப்படும் வெள்ளை மாளிகை துணைத் தலைவர் ஸ்டீபன் மில்லர் பலமுறை கூறியுள்ளார்.

"அதிபர் டிரம்ப் ஒவ்வொரு நாளும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடர்ந்து முயல்வார்" என்று மில்லர் மே மாத இறுதியில் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியிருந்தார்.

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

டிரம்ப் நிர்வாகத்தின் முதல் 100 நாட்களில் நடந்த பெரும்பாலான நாடு கடத்தல்கள், ஜோ பைடன் அதிபராக இருந்தபோது அவரது கடைசி ஆண்டில் நடந்த நாடு கடத்தல்களுடன் ஒப்பிடும்போது சமமாகவும், சில நேரம் குறைவாகவும் இருந்தன.

கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தினசரி நாடு கடத்தப்பட்டுள்ளவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிடுவதை வெள்ளை மாளிகை நிறுத்தியது.

"எண்ணிக்கைகளில் நான் திருப்தி அடையவில்லை", "நாம் அதிகரிக்க வேண்டும்" என்று டிரம்ப் நிர்வாகத்தின் எல்லை நிர்வாக அதிகாரி டாம் ஹோமன் மே மாத இறுதியில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

டிரம்ப் நிர்வாகம் (இந்தத் துறையில்) "குழுக்களைப் பெரிதும் அதிகரித்துள்ளது" என்றும், "கைதுகளின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றும் ஹோமன் குறிப்பிட்டார்.

குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் (ICE) துறையைச் சேர்ந்த அதன் உயர் குடியேற்ற அதிகாரி கென்னத் ஜெனலோ உள்பட, பல மூத்த அதிகாரிகளும் சமீபத்திய மாதங்களில் அத்துறையில் இருந்து வெளியேறிவிட்டனர்.

நாடு கடத்தல்களை மேற்பார்வையிடும் இரண்டு உயர் அதிகாரிகளையும், அந்தத் துறையின் தற்காலிக இயக்குநரான காலேப் விட்டெல்லோவையும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை பிப்ரவரியில் இடமாற்றம் செய்தது.

சமீபத்திய மறுசீரமைப்பின்போது, இந்த மாற்றங்களை அமைப்புக்குள் செய்யப்பட்ட மாற்றங்கள் என அத்துறை விவரித்தது. அதனால், "சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கைது செய்து நாடு கடத்துவது, அமெரிக்க சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க மக்களின் இலக்கை" நிறைவேற்ற குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை உதவும் என்று தெரிவித்தது.

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

சமீபத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், கைது செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோரில் பாலியல் குற்றங்கள், கொள்ளை, போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் பிற குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் உள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஆனாலும், உள்ளூர் குடியேற்ற ஆதரவாளர்களும் சமூக உறுப்பினர்களும், குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு குடியேறியுள்ள அமைதியான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

திங்கட்கிழமை நடந்த பேரணியில், லாஸ் ஏஞ்சலஸ் நகர கவுன்சில் உறுப்பினர் இசபெல் ஜுராடோ, ஃபேஷன் மாவட்டத்தில் (லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் உள்ள Fashion District) அமைந்துள்ள கிடங்கில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற சோதனை, "பொதுப் பாதுகாப்புக்காகச் செய்யப்படவில்லை. இது மக்களை அமைதிப்படுத்த, மிரட்ட, மற்றும் காணாமல் ஆக்குவதற்கான அச்சத்தால் உந்தப்பட்ட அரச வன்முறையாக அமைந்துள்ளது" என்று தெரிவித்தார்.

லாஸ் ஏஞ்சலஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டிரம்பின் குடியேற்றக் கொள்கைகள் பெரும்பான்மையான அமெரிக்கர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறினாலும், அவரது ஆதரவாளர்களில் சிலர் அந்தக் கொள்கைகளை அமல்படுத்தும் முறைகள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.

உதாரணமாக, 'லத்தீன்ஸ் ஃபார் டிரம்ப்' அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் ஃப்ளோரிடா மாகாண செனட்டர் இலியானா கார்சியா, "நாங்கள் வாக்களித்தது இதற்காக அல்ல" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"குற்றம் செய்த வெளிநாட்டவர்களை நாடு கடத்துவது முக்கியம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இப்போது நடப்பது, குடியேற்ற விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் மக்களையும் சிக்கவைக்க தன்னிச்சையாக நடக்கின்ற சோதனைகள். இவை அனைத்தும், மில்லர் போன்ற ஒருவரின் நாடு கடத்தல் இலக்கை நிறைவேற்றும் முயற்சியே," என்று இலியானா கார்சியா கூறினார்.

அமெரிக்கா முழுவதும், ஜனநாயகக் கட்சியையும் குடியரசுக் கட்சியையும் ஆதரிக்கும் மாகாணங்களில் கூட்டாட்சி அதிகாரிகள் அடிக்கடி குடியேற்ற சோதனைகளை நடத்தி வருகின்றனர். டென்னசி போன்ற குடியரசுக் கட்சிக்கு ஆதரவு நிறைந்துள்ள சில மாகாணங்கள், இந்தச் சோதனைகளில் கூட்டாட்சி அதிகாரிகளுக்கு உதவியுள்ளன.

"கலிபோர்னியா எதிர்க்கத் தயாராக இருந்தது," என்று அமெரிக்காவில் பேச்சு சுதந்திரம் மற்றும் போராட்டங்களைப் பற்றி ஆய்வு செய்யும் எமோரி சட்டப் பள்ளியின் அசோசியேட் டீன் ஜான் அசெவெடோ கூறினார்.

லாஸ் ஏஞ்சலஸ் தெருக்களில் ஏற்பட்ட வன்முறை மற்றும் எதிர்ப்பைக் காட்டும் படங்கள், தேசிய காவல் படையை நிலைநிறுத்துவதற்கு டிரம்புக்கு ஓர் ஊக்கமாக அமைந்தன.

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

"அவரது ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, இது அதிகம் பயனளிக்கிறது. அவர் கடுமையான நபர் என்பதை இது காட்டுகிறது. மேலும் தனது [குடியேற்ற] விதிகளை அமல்படுத்த தேவையான அனைத்து வழிகளையும் அவர் பயன்படுத்தத் தயார் என்பதையும் இது நிரூபிக்கிறது," என்கிறார் பேராசிரியர் அசெவெடோ.

லாஸ் ஏஞ்சலஸ் "புகலிட நகரம்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது, கூட்டாட்சி குடியேற்ற அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்காமல் இருக்கிறது. நிர்வாகம், குறிப்பாக அந்த நகரத்தைத் தேர்வு செய்துள்ளது என போராட்டக்காரர்கள் நம்புகிறார்கள். ஆனால், அதை அவர்கள் விரும்பவில்லை.

"இவர்கள் என் மக்கள், நான் எங்களுக்காகப் போராடுகிறேன்," என்று கூறுகிறார் மெக்சிகன்-அமெரிக்கரான மரியா குட்டரெஸ்.

லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள பாரமவுண்ட் நகரில் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகளை மக்கள் கண்டதும், போராட்டம் எழுந்தது. அந்த நகரத்தில் மரியா இரண்டு நாட்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அங்கு ஏற்பட்ட போராட்டத்தால் சூறையாடப்பட்ட அந்த இடத்தில் ஒரு காரும் எரிக்கப்பட்டது. அங்கிருந்த அதிகாரிகள் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர்.

லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில், காம்ப்டன் நகரம் போன்ற இடங்களில் சிலர் குடியேற்ற அதிகாரிகளிடம் இருந்து நகரத்தைப் பாதுகாக்கப் போராடுகிறார்கள் என்றும், டிரம்ப் நிர்வாகம் விடுக்கும் அச்சுறுத்தல்களை அவர்கள் ஒரு சவாலாகவே பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காம்ப்டனில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குள் கொள்ளையர்கள் நுழைந்தனர்.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் ஆவணமற்ற குடியேறிகளைத் தடுப்பது முக்கியம் என்று கருதும் குட்டரெஸ், கடினமாக உழைத்து நல்ல வாழ்க்கையை வாழப் போராடும் மக்களைக் குறிவைக்கக் கூடாது என்று கூறுகிறார்.

"இது எங்கள் நகரம். நாங்கள் கோபமாக இருக்கிறோம், எங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று எங்களுக்குத் தெரியும். இது எங்களை பயமுறுத்தப் போவதில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் சமூகம் ஒன்றுபடவில்லை. பாரமவுண்ட் அருகே வசிக்கும் ஜுவான், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வந்து பின்னர் குடிமகனாக ஆனவர்.

ஆனால், அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை அவர் ஆதரிக்கிறார்.

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

"உங்களையும் என்னையும் போலவே குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் அதிகரிகாரிகளுக்கும் ஒரு வேலை இருக்கிறது," என்கிறார் ஜுவான்.

அந்தப் பகுதியில் ஃபெடரல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், தனது குடும்பப் பெயரை மறைக்குமாறு பிபிசியிடம் ஜுவான் கேட்டுக்கொண்டார்.

அவர் பல ஆண்டுகளாக தினக்கூலியாக வேலை செய்ததாகவும், ஆனால் குடியுரிமை பெற்றதாகவும், கல்லூரியில் பட்டம் பெற்ற நான்கு குழந்தைகள் தனக்கு இருப்பதாகவும் கூறினார்.

"இது கடினமானது," என்று கூறிய ஜுவான், "எனக்கு ஆவணங்கள் இல்லாத குடும்பமும் உள்ளது."

ஆனால்,"நீங்கள் அனுமதியின்றி இங்கே இருந்தால், உண்மையில் அதை எதிர்த்துப் போராட வழிகள் இல்லை."

"குற்றம் என்பது குற்றம்தான்" என்கிறார் ஜுவான்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு