மம்மூட்டி, கௌதம் மேனன் நடித்துள்ள பசூக்கா எப்படி இருக்கிறது? கதை என்ன?

பட மூலாதாரம், x/@mammukka
நடிகர் மம்மூட்டி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பசூக்கா திரைப்படம் மலையாள மொழியில் நேற்று (ஏப்ரல் 10) வெளியானது.
இதற்கு முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகர் மம்மூட்டி 'டாமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியான நிலையில் தற்போது இருவரும் இணைந்து நடித்துள்ள படம் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் மூலம் டீனோ டென்னிஸ் என்பவர் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
2023-ஆம் ஆண்டில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. சுமார் இரண்டு ஆண்டு நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்த திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பசூக்கா திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா?
படத்தின் கதை என்ன?
கேரளாவில் உள்ள கொச்சி நகரத்தைச் சேர்ந்த துணிச்சலான ஒரு காவல்துறை அதிகாரி பெஞ்சமின் ஜோஷ்வா (கௌதம் வாசுதேவ் மேனன்).
அவர் தொடர் கொலைகளை செய்து வரும் குழுவை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இந்த குழு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுகிறது.
விசாரணை செய்ததில், அந்த கொலையாளிகள் பப்ஜீ வீடியோ கேமைப் போலவே கொள்ளையடிக்கிறார்கள் என்பதை பெஞ்சமின் ஜோஷ்வா அறிகிறார். அதே நேரத்தில், பிரபல தொழிலதிபரும், ஹேக்கருமான ஆண்டனி ஜான் (மம்மூட்டி), குற்றம் செய்யும் இந்த குழுவைக் கண்டுபிடிக்க பெஞ்சமினுக்கு உதவுகிறார்.
அவர்கள் இந்த கும்பலை கண்டுபிடித்தனரா? இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

பட மூலாதாரம், x/@mammukka
திரைக்கதை எப்படி இருக்கிறது?
"இது ஒரு ஸ்டைலான தொழில்நுட்பம் சார்ந்த த்ரில்லராக இருந்திருக்கக்கூடிய படம், இயக்குனரின் மோசமான திரைக்கதையால் வீணடிக்கப்பட்டுள்ளது", என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த விமர்சனத்தில், "இந்த படத்தில் உயர் தொழில்நுட்பம், நேர்த்தியான விளையாட்டுகளின் காட்சிகள் இருக்கும் என்று ஒருவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் சூப்பர் மரியோ மற்றும் டெம்பிள் ரன் போன்ற பழைய விளையாட்டுகளின் குறிப்புகளே இருக்கின்றன. அது இந்த படத்திற்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது", என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சில இடங்களில் ஆரம்பக் காட்சிக்கும் கதையின் மற்ற பகுதிக்கும் உள்ள தொடர்பு குறித்த கேள்விகள் எழலாம். ஆனால் இறுதியாக அனைத்து புள்ளிகளும் எவ்வாறு இணைகின்றன என்பதும், 'பசூக்கா'வைச் சுற்றியுள்ள மர்மம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதும் தெரியவருகிறது'' என்று மனோரமா இணையதளம் கூறியுள்ளது.
மேலும் "ஒரு படத்திற்கான அனைத்து கூறுகளையும் இந்த படம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கடைசி 20 நிமிடங்கள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்து சிலிர்ப்பையும் சஸ்பென்ஸையும் தருகின்றன", என்கிறது மனோரமா.
"இருப்பினும் இடைவேளைக்குப் பிறகு, படத்தின் கதையானது ரசிகர்களை தக்கவைக்க போராடுகிறது. மந்தமான நடுப்பகுதியை தவிர்க்க, திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்'' என்று இந்திய டுடே விமர்சனம் தெரிவித்துள்ளது.
மம்மூட்டியின் நடிப்பு ரசிக்க வைத்ததா?
மம்மூட்டியை இதுவரை கண்டிராத புதிய அவதாரத்தில் இந்த படத்தில் காணலாம் என்று மனோரமா இணையதளம் கூறியுள்ளது.
"மம்மூட்டி ஸ்டைலில் ஜொலித்தாலும், கடைசி வரை படத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு எதுவும் இல்லை. அவரது கதாபாத்திரம் இறுதியில் ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தைப் பெற்றாலும், மம்மூட்டியின் மற்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது இது சராசரியாகவே உள்ளது," என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்துள்ளது.
"இந்த படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு கதையில் முக்கியத்துவம் இல்லை. அவர்களுக்கு வலுவான பின்னணி என்று எதுவும் இல்லை" என்று இந்தியா டுடே அதன் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், x/@mammukka
"மூத்த எழுத்தாளர் கலூர் டென்னிஸின் மகனான டீனோ டென்னிஸ் ஒரு பாராட்டத்தக்க படத்தை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. எதுவும் மிகையாகத் தெரியவில்லை", என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
"மம்மூட்டி மிகவும் சிறப்பாக திரையில் தோன்றுகிறார். அதற்கான பெருமை அவரது ஆடை வடிவமைப்பாளர் மற்றும் ஒப்பனை கலைஞர் ஆகியோருக்குச் சொந்தமானது. ஆனால் படத்தின் ஒளிப்பதிவில் கூடுதல் க்ளோஸ் அப் காட்சிகள் காரணமாக சில காட்சிகள் சிறப்பாக இல்லை. படத்தின் சண்டை காட்சிகள் மற்றும் நடன அமைப்பு ஈர்க்கக்கூடியதாக உள்ளது", என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டியுள்ளது.
"மம்மூட்டியின் ஆக்ஷன் காட்சிகள், கௌதம் மேனனின் மெருகூட்டப்பட்ட ஆங்கில வசனங்கள் ஆகியவை இந்த படத்தின் சிறப்பம்சங்களாகும்'' என்று மனோரமா தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












