ஹமாஸுடன் உடன்பாடு எட்டப்படாத நிலையில் முழுவீச்சில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அலெக்ஸ் பிலிப்ஸ் & ஹஃப்ஸா கலீல்
- பதவி, பிபிசி செய்திகள்
புதன்கிழமை காஸாவில் ஒரு வளாகம் சேதமடைந்ததில் ஐ.நா.வின் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றவர்கள் காயமடைந்ததாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கான பின்னணி தெளிவாகத் தெரியவில்லை.
பாலத்தீன பிரதேசத்தின் ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் இஸ்ரேலிய தாக்குதலே இதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியது. மேலும், ஐந்து படுகாயமடைந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்தது. டெய்ர் அல்-பலாவில் உள்ள ஐ.நா. வளாகத்தைத் தாக்கியதை இஸ்ரேல் ராணுவம் மறுத்தது.
இரண்டு மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு காஸாவில் மீண்டும் சண்டையைத் தொடங்குவதாக இஸ்ரேல் கூறியதைத் தொடர்ந்து இது நடந்துள்ளது. இஸ்ரேல் முழுவீச்சில் தாக்குதல்களைத் தொடங்கியதில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலத்தீன பகுதிகளில் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்குவதாக இஸ்ரேல் அறிவித்த பிறகு காஸா முழுவதும் நேற்று இரவு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்-மவாசி மனிதாபிமான பகுதிக்கு அருகே ஒரு கூடாரத்தின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் காயமடைந்திருப்பதாக ரெட் கிரசென்ட் மருத்துவப் பணியாளர்களை மேற்கோள் காட்டி பாலத்தீன வாஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது குண்டுகளை ஏவத் தயாராக இருந்த ஹமாஸ் ராணுவ தளத்தைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் படை தெரிவித்தது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த கப்பல்களும் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
மோதல் இன்னும் முழு பலத்துடன் தொடரும் என்றும், "இது வெறும் தொடக்கம்தான்," எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்த பின்னர் இந்தச் சண்டை நடைபெற்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அந்தத் தாக்குதலை போன்ற அதே அளவு தீவிரத் தாக்குதல் நேற்று நடத்தப்படவில்லை என்றாலும், இஸ்ரேல் தாக்குதலை இன்னும் கைவிடவில்லை என்பதைக் காட்டுகிறது.
மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரக்கால நிவாரணத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலாளர் டாம் பிளெட்சர், செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதல்கள் குறித்துக் கூறுகையில், "இந்தத் தாக்குதலில் அளவிட முடியாத அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன" என்றார்.
சமீபத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை காஸாவின் சுகாதார அமைச்சகம் இன்னும் தெரிவிக்கவில்லை.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம் ஜனவரி 19ஆம் தேதி அமலுக்கு வந்த பிறகு, கடந்த செவ்வாய்கிழமை நடத்தப்பட்டதுதான் மிகவும் தீவிரமான தாக்குதல். போர் நிறுத்தத்தை ஆரம்பக் கட்டத்தைத் தாண்டி எப்படி எடுத்துச் செல்வது என்பதில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே உடன்பாடு எட்டப்படாத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இருதரப்பும் செய்துகொண்ட ஒப்பந்தம் மூன்று கட்டங்களைக் கொண்டது. இதில் இரண்டாம் கட்டத்தில் இடம்பெற்றிருந்த பேச்சுவார்த்தைகள் ஆறு வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இது இன்னும் நடைபெறவில்லை.

பட மூலாதாரம், Getty Images
முதலில் முன்மொழியப்பட்ட திட்டத்தின்படி இரண்டாம் கட்டத்தில் காஸாவில் இருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், முதல் கட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்றும், பாலத்தீன கைதிகளுக்கு மாறாக மேலும் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் இஸ்ரேலும், அமெரிக்காவும் வலியுறுத்தின.
மீண்டும் சண்டை தொடங்கப்பட்டிருப்பது, பணயக் கைதிகளை மீட்பது மற்றும் ஹமாஸை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் முக்கியக் குறிக்கோள்களை அடைவதற்காகத்தான் என நெதன்யாகு சித்தரித்தார். ஆனால் பணயக் கைதிகளின் குடும்பத்தினர், அரசு தங்கள் அன்புக்கு உரியவர்களைக் கைவிட்டதை இந்த முடிவு காட்டுவதாக விமர்சித்துள்ளனர்.
ஹமாஸ் இன்னமும் 50 கைதிகளை வைத்திருப்பதாவும், அதில் 24 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில் இடைத்தரகராகச் செயல்பட்ட எகிப்து, இந்தப் புதிய தாக்குதல்கள், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான விதி மீறல் எனத் தெரிவித்துள்ளது.
காஸாவுக்குள் நுழையும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் முன்பு முற்றிலுமாக நிறுத்தியது, இது சர்வதேச அளவில் பரவலான அச்சத்தை ஏற்படுத்தியது.
"இரண்டு வாரங்களாக, உணவுப் பொருட்கள் எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மருந்துகள் காலாவதியாகி வருகின்றன, தண்ணீர் வசதி இல்லை. கான் யூனிஸுக்கு வடக்குப் பகுதியில் இரவைத் தாண்டி புதன்கிழமை வரை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பெண்ணும் குழந்தையும் கொல்லப்பட்டதாகவும் காஸா நகர் மீதான தாக்குதலில் வேறு நான்கு பேரும் கொல்லப்பட்டுள்ளனர்" என்று வாஃபா தெரிவித்தது.
"மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது - இவை அனைத்தும் பொது மக்களை மேலும் தண்டிக்கவே செய்யப்பட்டுள்ளன", என்று டாம் பிளெட்சர் பிபிசி ரேடியோ 4இன் டுடே நிகழ்ச்சியில் கூறினார்.
இந்த முற்றுகையை நீக்கி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வருவதற்கும், பணயக் கைதிகளை விடுவிப்பதற்கும், செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுடன் பேசியதாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், EPA
செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் அரசின் தலைவர் இஸாம் அ-டலீஸ் உள்படத் தனது பல தலைவர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் உறுதி செய்துள்ளது.
இதற்கிடையில், தற்போதைய மோதலைத் தூண்டிய 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் பங்கேற்ற இஸ்லாமிய ஜிகாத், தனது ஆயுதப்படை பிரிவின் முக்கிய செய்தித்தொடர்பாளர் அபு ஹம்ஸா என்பவர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால் உயிரிழந்தவர்களில் பல டஜன் கணக்கான குழந்தைகள் உள்பட ஏராளமான பொதுமக்களும் இருப்பதாகக் கருதப்படுகிறது. தாக்குதலைக் குறைப்பதற்குப் பிடித்து வைத்திருக்கும் சில இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என பிராந்திய முகவர்கள் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் எதிர்காலத்தில் அனைத்து போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளும் தாக்குதலுக்கு இடையில்தான் நடக்தப்படும் என நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் முதல் கட்ட போர் நிறுத்தத்தின்போது 25 பேர் உயிருடன் விடுவிக்கப்பட்டனர்.
ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் விதமாக இஸ்ரேல் மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை நடத்தியது. இதில் 48,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் வீடுகள் மற்றும் கட்டமைப்புகளும் கடுமையான சேதத்தைச் சந்தித்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












