சச்சின் சாதனை தகர்ந்தது: ஷோயிப் அக்தர் வார்த்தைகளை நிஜமாக்கிய 'சேஸிங் மாஸ்டர்'

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"கோலியின் ஃபார்ம் மோசமாகிவிட்டது என்று யார் சொன்னது? ஒரே ஒரு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வையுங்கள். கோலியின் ஒட்டுமொத்த ஃபார்மும் கண் முன் வந்து நிற்கும்"

இந்த வார்த்தைகளைக் கூறியது வேறு யாருமல்ல, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப்பில் பேசியிருந்தார்.

நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் கோலி தொடர்ந்து மோசமாக ஆடிவரவே, அவ்வளவுதான் கோலியின் கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிட்டது, டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்றெல்லாம் கதைகள் பறக்கவிடப்பட்டன. அப்போதுதான் கோலி குறித்த தனது அசைக்க முடியாத நம்பிக்கையை ஷோயப் அக்தர் வெளியிட்டார்.

" நான் எப்போதும் சந்தேகத்துக்குரியவனாக இருந்ததில்லை" என்று விராட் கோலியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதன் மூலம் தன்னுடைய பேட்டிங், ஃபார்ம் குறித்து எப்போதும், யாரும் சந்தேகப்படத் தேவையில்லை எப்போது வெளிப்படுமோ அந்த தேவையை நிறைவேற்றுவேன், என் மீது சந்தேகம் எனக்கு வரும்போது களத்தில் இருக்கமாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி இருந்தார்.

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'கோலியின் ஆட்டத்தில் வியப்பில்லை'

ரோஹித் சர்மா நேற்று போட்டி முடிந்தபின் அளித்த பேட்டியில் " நாங்கள் விராட் கோலியின் சதத்தைப் பார்த்து வியப்படையவில்லை. ஏனென்றால் ஓய்வறையில் எங்களிடம் நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் ரிலாக்ஸாக இருங்கள் என விராட் சொல்லிவிட்டார். அதனால் தான் சதம் அடித்துவிட்டார்" என்று தெரிவித்தார்.

சதத்தின் மூலம் பதில்

கோலி சதம் அடிப்பாரா என்று கவலைப்பட்டவர்கள் அல்லது வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் லெக் ஸ்பின்னில் ஆட்டமிழந்த இவரா சேஸிங்கில் உதவப் போகிறார் என கவலைப்பட்டவர்கள், இந்த மெதுவான ஆடுகளத்தில் கோலி சதம் அடிப்பாரா என்று கேள்வி எழுப்பியவர்கள் அனைவருக்கும் கோலி கடைசியில் ஒரு பவுண்டரி அடித்து சதத்துடன் இந்திய அணியை வெல்ல வைத்த போது பதிலை அளித்துவிட்டார்.

கோலி என்பவர் "மாஸ்டர் கிளாஸ் பேட்டர்". கோலியிடம் ஃபார்ம் இல்லை, ஃபார்ம் குறைந்துவிட்டது என்று இதுபோன்ற ஆல்டைம் கிரேட் பேட்டர்களிடம் கேள்விகளை வைப்பது தவறானது.

ஏனென்றால், கோலி போன்ற பேட்டிங் ஜாம்பவான்கள், ஏதாவது ஒரு போட்டியில் ஃபயர் ஆகிவிட்டாலே ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, திகைக்க வைத்துவிடுவார்கள். ஆதலால், கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களுக்கு ஃபார்ம் எப்போதுமே ஒரு பொருட்டல்ல.

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

கோலியின் கவர் ட்ரைவ் ஷாட்

துபாய் ஆடுகளம் மெதுவானது, பந்து நின்றுதான் பேட்டருக்கு அருகே வரும். தொடக்கத்திலேயே ரோஹித் விக்கெட்டை இந்திய அணி இழந்த நிலையில் வெற்றிக்கு 200 ரன்கள் தேவை, 45 ஓவர்கள் மீதமிருக்கிறது என்ற நிலையில்தான் கோலி நேற்று களமிறங்கினார். கோலி சதம் அடிப்பாரா ஆட்டத்தை வெற்றி பெறவைத்துக் கொடுப்பாரா என்ற கேள்விகளுடன், இயல்பான கவர் ட்ரைவ் ஷாட் அடிக்கும் வரை கோலியை முழுமையாக அறியாதவர்கள் சந்தேகத்துடனே பார்த்தார்கள்.

விராட் கோலியின் "பிராண்ட் ஷாட்" என்று சொல்லப்படும் அந்த கவர் ட்ரைவ் ஷாட்டை அடித்தபோது, அவரின் பேட்டிங் ஆழத்தை அறிந்தவர்கள் கூறியது, இன்று கோலி ஏதோ களத்தில் மாயஜாலம் நிகழ்த்தப் போகிறார், அணியின் வெற்றி மட்டுமல்ல, சதம் அடித்தாலும் வியப்பில்லை என்று எக்ஸ் தளத்திலும், தொலைக்காட்சி வர்ணனையிலும் பேசத் தொடங்கினர்.

விராட் கோலி கடந்த 3 ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஒரு அரைசதம், ஒரு சதம் என அடித்த போதே இவரின் ஃபார்ம் எங்கும் செல்லவில்லை, தேவைப்படும் போது ஒட்டிக்கொள்ளும் பட்டாம்பூச்சி என்பதை நிரூபித்தார். கடந்த 2024 டி20 உலகக் கோப்பைத் தொடரில் லீக் ஆட்டங்கள், அரையிறுதி என அனைத்திலும் ஒரு போட்டியில்கூட கோலி சிறப்பாக ஆடவில்லை. கோலியின் ஃபார்ம் குறித்து தெரியாதவர்கள்தான் விமர்சித்து பேசினர். ஆனால், கோலியைப் பற்றி தெரிந்தவர்கள், புரிந்தவர்கள், ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஆனால், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பைனலின் போது விராட் கோலி களத்தில் ஆடிய ஆட்டம் மாஸ்டர் கிளாஸ் பேட்டிங். அந்த ஒருபோட்டியில் வெளிப்படுத்திய ஆட்டம், அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளித்து சென்றது.

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

சேஸிங் மாஸ்டர் கோலி

ஒருநாள் போட்டியில் சேஸிங்கின் போது அதிகமான ரன்கள் குவித்தவர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் தற்போது விராட் கோலி இருக்கிறார். "சேஸ் மாஸ்டர்" என்று அழைக்கப்படும் கோலி 7979 ரன்கள் சேர்த்துள்ளார் என்று க்ரிக் இன்போ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2008 முதல் 2025 வரை 165 போட்டிகளில் 158 இன்னிங்ஸ்களில் 28 சதங்கள், 40 அரைசதங்களுடன், 7979 ரன்களை கோலி சேஸிங்கில் குவித்துள்ளார். சேஸிங்கில் கோலியின் பேட்டிங் சராசரி 64.34 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 93.33 ஆகவும் இருக்கிறது. சேஸிங்கின் போது கோலி 4 முறை மட்டுமே டக்அவுட் ஆகியுள்ளார். ஆக ஒருநாள் போட்டிகளில் கோலி சேர்த்த 14 ஆயிரம் ரன்களில், ஏறக்குறைய 8ஆயிரம் ரன்கள் சேஸிங்கின் போது அடிக்கப்பட்டவை எனும் போது " சேஸ் மாஸ்டர்" என்றுதானே கூற முடியும்.

36 வயதான விராட் கோலி, ஒருநாள் போட்டிகள் முதல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் டெஸ்ட் போட்டி வரை சகாப்தத்தையே நடத்தியுள்ளார். 2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் விராட் கோலி 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்த சதத்தை நிறைவு செய்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

"தலைதாழ்த்தி உழைப்பேன்"

விராட் கோலி நேற்றைய ஆட்டம் முடிந்தபின் பேசுகையில் " நான் சொல்லும் முக்கிய விஷயங்களில் ஒன்று, நான் களத்தில் இருக்கும்போது சிறிது மனச்சோர்வாக உணரும் போதெல்லாம் - நான் பீல்டிங் செய்யும் ஒவ்வொரு பந்திலும் எனது 100% பலத்தையும் வெளிப்படுத்துவேன். என்னுடைய கடின உழைப்புக்கும், மைதானத்தில் என்னுடைய பங்களிப்புக்கும் சில நேரங்களில் வெகுமதி கிடைத்திருக்கிறது. அதனால்தான் கடினமாக உழைக்கும்போது நான் பெருமைப்படுவேன், பீல்டிங் செய்யும்போதும் அசரமாட்டேன்.

நாம் தலையைத் தாழ்த்தி போதுமான அளவு கடினமாக உழைக்கும்போது, கடவுள் நமக்கு அதற்கேற்ப வெகுமதி அளிப்பார் என்று நான் நினைக்கிறேன், எனவே நான் கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவனாகவும் நன்றியுள்ளவனாகவும் இருக்கிறேன்.

இந்த ஆட்டத்தில் என்னுடைய வேலை தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது. நடுப்பகுதி ஓவர்களை கட்டுப்படுத்த வேண்டும், அதன்பின் வேகப்பந்துவீச்சாளர்களைக் கையாள வேண்டும். அதனால்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் பெரிதாக நான் ரிஸ்க் எடுக்கவில்லை, அதனால் ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தேன்.

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

"என் ஸ்டைலில் விளையாடுகிறேன்"

சரியான பார்ட்னர்ஷிப் அமையும்வரை ஸ்ட்ரைக்கை மாற்றுவது கடினம்தான், ஆனால் ஸ்ரேயாஸ் போன்ற சிறந்த வீரர் வரும்போது, எளிதாக ஸ்ட்ரைக்கை மாற்றி, ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.

இந்த ஸ்டைலில்தான் நான் ஒருநாள் போட்டியை விளையாடுகிறேன், என்னுடைய இந்த விளையாட்டால் நான் பெருமைப்படுகிறேன். நானும் மனிதன்தான் வெளியே இருந்து ஏராளமான கருத்துக்கள், சத்தங்கள் என் கவனத்தை திசை திருப்புகின்றன. இருப்பினும் எனக்குரிய இடத்தை தக்கவைக்க நான் முயற்சிக்கிறேன், என்னுடைய சக்தியின் அளவை பராமரிக்கிறேன். நான் என்ன யோசிக்கிறேன், என் எண்ணங்கள், என்னவென்றால், நான் விளையாட்டுகளைச் சுற்றியுள்ள இது போன்ற எதிர்பார்ப்புகள் மற்றும் வெறித்தனங்களுக்குள் நான் எளிதில் சிக்கிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

கவனம், தீர்க்கம், தீர்மானம்

விராட் கோலி நேற்று தீர்மானத்தோடுதான் களமிறங்கினார். தொடக்கத்தில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துதான் சுப்மான் கில்லுடன் ஆடினார், அதன்பின் அவருக்குரிய பிராண்ட் கவர் ட்ரைவ் ஷாட்டில் பவுண்டரிகள் சில அடித்தபின்புதான் கோலியின் தீர்மானம் தெரிந்தது. சுழற்பந்துவீச்சில் தான் பலவீனம் எனத் தெரிந்தபின் அதை மிகவும் கவனமாக கோலி கையாண்டார்.

பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமது பந்துவீச்சில் 30 பந்துகளை எதிர்கொண்ட கோலி ஒரு பவுண்டரி உள்பட 16 ரன்கள் மட்டுமே சேர்த்தார். லெக் ஸ்பின்னில் ஆட்டமிழந்துவிடுவார் என விமர்சிக்கப்பட்ட நிலையில் அதை நேர்த்தியாக கோலி நேற்று கையாண்டார்.

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

சச்சினை முந்தி விராட் கோலி புதிய சாதனை

பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து வெற்றியை மட்டும் கோலி பெற்றுத் தரவில்லை அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லையும் எட்டினார்.

ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை மிக விரைவாக எட்டி, சச்சின் சாதனையை முறியடித்தார். விராட் கோலி தனது 1000-வது ரன்களில் இருந்து 14 ஆயிரம் ரன்கள் வரை மிக விரைவாக ஸ்கோர் செய்து சச்சினை முந்தியுள்ளார்.

14 ஆயிரம் ரன்களை எட்ட சச்சின் 350 இன்னிங்ஸ்களும், சங்ககாரா378 இன்னிங்ஸ்களும் எடுத்துக்கொண்ட நிலையில் கோலி 287 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் 51-வது சதத்தையும் கோலி நேற்று அடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தற்போது 58.20 சராசரி வைத்துள்ளார். சச்சின் 44.19, சங்கக்கரா 41.73 மட்டுமே சராசரி வைத்திருந்தனர். அது மட்டுமல்லாமல் விராட் கோலி 14,984 பந்துகளைச் சந்தித்து 14 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். சச்சினைவிட, சங்ககாராவைவிட குறைவான பந்துகளை கோலி சந்தித்துள்ளார்.

சச்சின் 16,292 பந்துகளையும், சங்ககாரா 17789 பந்துகளையும் சந்தித்து இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோலி தனது 175வது இன்னிங்ஸில் 8 ஆயிரம் ரன்களை எட்டினார். அதன்பின் 112 இன்னிங்ஸ்களில் 6ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். கோலி தன்னுடைய 14 ஆயிரம் ரன்களில் 8 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேஸிங்கில் மட்டுமே சேர்த்துள்ள போதே அவரின் தீர்க்கம் தெரியவரும்.

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

"கோலி ஃபார்மில் இல்லை என யார் சொன்னது?"

பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் நேற்று கோலி குறித்து பேசுகையில் " கோலியின் கடின உழைப்பைப் பார்த்து வியப்படைகிறேன். என்ன மாதிரியாக உழைக்கிறார். கோலி ஃபார்மில் இல்லை என்று உலகமே சொல்கிறது, ஆனால், இங்கு வந்து மிகப்பெரிய போட்டியில் அவரின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, அசாத்தியமாக ரன்களையும், சதத்தையும் விளாசியுள்ளார்.

போட்டியையும் வென்று கொடுத்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். கோலியின் கடின உழைப்புக்கு எனது பாராட்டுகள், அவரின் உடற்தகுதிஅற்புதமானது. கோலியை ஆட்டமிழக்கச் செய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து வழிகளையும் கையாண்டோம், சிறப்பானவற்றையும் செய்தோம் ஆனால், முடியவில்லை. இங்கு வருவதற்கு முன் அவர் எவ்வளவு கடினமான உழைத்துள்ளார் என்பது களத்தில் தெரிந்தது. 36 வயதில் இந்த ஆட்டம் வியப்பானது"என குறிப்பிட்டார்.

ஆதலால் கோலி போன்ற ஜாம்பவான்களின் ஃபார்ம் குறித்தோ, அவர்களின் பேட்டிங் தரம் குறித்தோ விமர்சிப்பவர்கள், அதை கேள்வியாகக் கேட்பவர்களுக்கு இந்த சதம் பதிலாக அமைந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)