தென் ஆப்ரிக்காவை வெளியேற்றி, ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சாம்பியன்ஸ் டிராபி தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், பி பிரிவில் ஆஸ்திரேலியா தவிர, அரையிறுதிக்கு முன்னேறும் இன்னொரு அணி எது என்பதற்கான கோதாவில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இறங்குகின்றன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபையில் நடக்கின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றாலும் எந்த அணி முதலிடம் பெறுவது என்பதில் இன்னும் போட்டி நீடிக்கிறது.
பி பிரிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது என்பதில் தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து போட்டித் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.
அதேசமயம், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளில் யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா ஆட்டத்தின் முடிவில்தான் தெரியும்.
ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முழுமையாக நடந்திருந்தால் உறுதியான நிலை கிடைத்திருக்கும். ஆனால், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி தரப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால், தென் ஆப்ரிக்கா 3 புள்ளிகளுடன் 2.140 வலுவான நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியும் 3 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட்டில் தென் ஆப்ரிக்க அணியைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது.

லாகூரில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
274 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்திருந்த போது மழை குறுக்கிட்டது. டிராவிஸ் ஹெட் 59 ரன்களுடனும், ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நீண்ட நேரமாகியும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. மழை நின்றபின் போட்டியை நடத்தும் சாத்தியங்கள் குறித்து நடுவர்கள் பலமுறை மைதானத்தை ஆய்வு செய்தனர்.
ஆனால், மைதானத்தில் மழைநீர் வடியவில்லை என்பதால், ஆட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, போட்டி கைவிடப்படுவதாக போட்டி நடுவர் அறிவித்தார். ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
தென் ஆப்ரிக்காவுக்கு என்ன வாய்ப்பு?
தென் ஆப்ரிக்க அணிக்கு பி பிரிவில் இங்கிலாந்து அணியுடன் கடைசி லீக் ஆட்டம் மட்டும் இருக்கிறது. ஏற்கெனவே தென் ஆப்ரிக்கா 3 புள்ளிகளுடன் 2.140 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால், 5 புள்ளிகளுடன் அரையிறுதியை உறுதி செய்வதுடன் பி பிரிவில் முதலிடத்தையும் தென் ஆப்ரிக்கா பிடிக்கும். தோல்வி அடைந்தாலும் மோசமான தோல்வியாக இல்லாமல் இருந்தால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு தென் ஆப்ரிக்காவுக்கு உண்டு.
- ஒருவேளை இங்கிலாந்து - தென் ஆப்ரிக்க ஆட்டமும் மழையால் ரத்தானால், தென் ஆப்ரிக்க அணி 4 புள்ளிகள் மற்றும் வலுவான நிகர ரன்ரேட்டுடன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதி முன்னேறும்.

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானுக்கு நூலிழை வாய்ப்பு
பி பிரிவில் 3 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி -0.99 நிகர ரன்ரேட்டுடன் 3வது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல வேண்டுமானால், அது இங்கிலாந்து அணியின் கரங்களில்தான் இருக்கிறது.
அதாவது, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 301 ரன்களை சேஸிங் செய்யும் போது, 207 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி சேஸிங் செய்தால் தென் ஆப்ரிக்க அணி நிர்ணயிக்கும் 300 ரன்கள் இலக்கை 12 ஓவர்களுக்குள் சேஸிங் செய்ய வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
ஆகவே, ஏதேனும் ஆச்சர்யம் நிகழ்ந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பது தற்போதைய நிலை. இல்லாவிட்டால் தென் ஆப்ரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். பி பிரிவில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும்.
ஏ பிரிவைப் பொருத்தவரை, இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டன. எனினும், அந்த இரு அணிகளும் மோதும் போட்டிக்குப் பிறகு ஏ பிரிவில் எந்த அணி முதலிடம் பிடிக்கும் என்பது தெரியவரும் . அதன் பிறகே, அரையிறுதியில் எந்த அணி, எந்த அணியுடன் மோதும் என்ற விவரம் தெரியவரும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












