பிகாரில் பார்க்கிங் சண்டையில் கொல்லப்பட்ட நான்கு பேர் - சிறிய பிரச்னை தீவிரமானது எப்படி?

சமீபத்தில் வெளிவந்து பலதரப்புகளிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது ‘பார்க்கிங்’ திரைப்படம், வாகனம் நிறுத்துவதால் வரும் பிரச்னைகள் எவ்வளவு தீவிரமானவையாக உருவெடுக்கக் கூடும் என்பதைப் பற்றிப் பேசியிருந்தது.
ஆனால் சமீபத்தில் பிகாரில், பார்க்கிங் பிரச்னை மூலம் நடந்த தகராறினால் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் பிகார் மாநிலம் ஔரங்காபாதில் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 15) நடந்துள்ளது.
இப்போது ஔரங்காபாதில் உள்ள நபிநகர் காவல் நிலையத்தின் கீழ் வரும் தேத்ரியா சௌக்கில் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு அங்கு அமைதி நிலவுகிறது. கண்ணுக்கு எட்டும் தூரம்வரை கடைகள், வீடுகள் அனைத்தும் மூடிக்கிடக்கிடந்தன.
மேலும் வன்முறை மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் போலீன்சார் ஆங்காங்கு நிற்பதை பார்க்க முடிகிறது.
ஒளரங்காபாதில் பார்க்கிங் தொடர்பாக திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். ஒரு முதியவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
என்ன நடந்தது?
கடந்த திங்களன்று பார்க்கிங் தகராறு தொடர்பாக மூண்ட சண்டை நான்கு பேர் இறக்கும் அளவுக்கு உச்சத்தை எட்டியது.
சுமார் 60 வயதுடைய ராம்ஷரண் செளஹான் என்பவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவார். அவர் துப்பாக்கி குண்டு தாக்கியதில் காலமானார்.
பலாமுவில் இருந்து காரில் வந்த ஐந்து இளைஞர்கள் தங்கள் காரை ஒரு கடையின் முன் நிறுத்தியபோது தகராறு தொடங்கியது என்று ஒளரங்காபாத் கண்டோன்மெண்ட் எஸ்.டி.பி.ஓ அமானுல்லா கான் கூறினார்.
இந்த ஐந்து இளைஞர்களின் வயது 25 முதல் 35 வயது வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தப் பகுதி ஜார்கண்ட் மாநிலத்தின் பலாமு எல்லைக்கு அருகில் உள்ளது. இவர்கள் தேத்ரியா வழியாக பிகாரின் டெஹ்ரி ஆன்சோன் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தேநீர் குடிப்பதற்காக இங்கு வண்டியை நிறுத்தினர்.
கார் நிறுத்தப்பட்டதன் காரணமாக இந்தக் குறுகலான சாலையில் நெரிசல் ஏற்பட்டது. எனவே அப்பகுதி கடைக்காரர்களும், பொதுமக்களும் வாகனத்தை அங்கிருந்து அகற்றுமாறு கூறினர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த முகேஷ் சௌஹான் என்ற உள்ளூர் இளைஞரும் காரை நகர்த்துமாறு காரில் இருந்தவர்களிடம் கூறியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
இதை அடுத்து காரில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டார். இந்த தோட்டா அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு முதியவரை தாக்கியது. இதனால் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் துப்பாக்கியால் சுட்ட இளைஞரை அடிக்கத்தொடங்கினர். அவர் வயலை நோக்கி ஓடினார். அவரை துரத்திச்சென்ற கும்பல் கண்மூடித்தனமாக அவரைத்தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மக்கள் அவரது உடலை அருகிலுள்ள கால்வாயில் வீசினர்.
மறுபுறம் உள்ளூர் மக்கள் கூட்டம் காரில் இருந்த மற்ற இளைஞர்களையும் அடிக்க ஆரம்பித்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காரில் இருந்த 2 வாலிபர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
"போலீசார் வந்த பிறகு மக்கள் அமைதியடைந்தனர். காயமடைந்த மூன்று இளைஞர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் ஒருவர் வழியில் இறந்துவிட்டார்," என்று அமானுல்லா கான் தெரிவித்தார்.
காரில் பயணம் செய்த அஜீத் ஷர்மா மற்றும் வக்கீல் அன்சாரி என்ற இரு இளைஞர்கள் கயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்த முதியவரின் குடும்பத்தினர் சொல்வது என்ன?
திங்கள்கிழமை மதியம் காய்கறி வாங்குவதற்காக தனது தந்தை சந்தைக்கு சென்றதாகவும், அப்போது அவர்மீது தோட்டா பாய்ந்ததாகவும் ராம்ஷரண் செளஹானின் மகன் தீரேந்திர செளஹான் பிபிசியிடம் கூறினார்.
"சந்தையில் தந்தை சுடப்பட்டதாக சுமார் இரண்டேமுக்கால் மணியளவில் ஒருவர் எங்களிடம் கூறினார். அப்போது நாங்கள் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தோம். நான் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையை நோக்கிச்சென்றேன். ஆனால் அவர் இறந்துவிட்டார். தந்தையின் இந்த விஷயத்தில் எங்கள் முழு கவனமும் இருந்தது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று எங்களுக்கு எதுவும் தெரியாது. காவல்துறை எங்களிடம் எதுவும் சொல்லவில்லை," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

போலீசார் என்ன சொல்கின்றனர்?
இதனிடையே நபிநகர் போலீஸார் புதன்கிழமை காலை வரை 6 பேரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது திடீர் தகராறுதான். இதற்கு பின்னால் எந்த திட்டமிடலும் இல்லை என்று நபிநகர் காவல் நிலையப் பொறுப்பாளர் கூறினார்.
தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினருக்கும் ஒருவரையொருவர் தெரியாது. எனவே இதற்குப் பின்னால் வேறு எந்த சதியும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக பலாமுவில் இருந்து வந்த இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இளைஞர்களை தாக்கிய முன்பின் தெரியாத நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியையும் போலீஸார் மீட்டுள்ளனர். மேலும் காரில் இருந்த இளைஞர்களுக்கு குற்றப்பின்னணி உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் எதற்காக கைத்துப்பாக்கி வைத்திருந்தார்கள், இவர்களுக்கு குற்றப் பின்னணி உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒளரங்காபாத் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்களில் எவர்மீதும் பலாமுவில் ஏற்கனவே வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் சமீபத்திய சம்பவம் பிகாரில் நடந்துள்ளதால் பிகார் காவல்துறைதான் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்க முடியும் என்றும் ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரிஷ்மா ரமேசன் பிபிசியிடம் தெரிவித்தார்.

சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்களின் பின்னணி என்ன?
ஜார்கண்ட் எல்லை, தேத்ரியாவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதாவது இந்த பகுதி பிகார் - ஜார்கண்ட் எல்லையில் உள்ளது. இளைஞர்கள் குடித்திருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஒளரங்காபாத் மாவட்ட அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தப்பகுதி எல்லையில் உள்ளதால் இங்கு மது கடத்தல் சம்பவங்களும் அதிகம் நடக்கிறது.
நபிநகர் காவல் நிலையத்தில் ஜார்கண்ட் நம்பர் பிளேட் கொண்ட பல வாகனங்களைப் நாங்கள் பார்த்தோம். இந்த வாகனங்களில் பெரும்பாலானவை மது கடத்தலுடன் தொடர்புடையவை என உள்ளூர் போலீசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் தொடர்புடைய இந்த இளைஞர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக எஸ்.டி.பி.ஓ அமானுல்லா கான் கூறினார்.
இவர்கள் உத்தரபிரதேசத்தில் இருந்து பலாமுவில் சமீபத்தில் குடியேறியவர்கள் என்றும், எனவே அவர்களைப் பற்றிய அதிக தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும் பலாமு காவல்துறை, ஒளரங்காபாத் காவல்துறையிடம் கூறியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக சில உள்ளூர் மக்களிடம் பேசுவதற்கும் நாங்கள் முயற்சித்தோம். ஆனால் யாரும் பேச முன்வரவில்லை.
இந்த தகராறு நடந்த இடத்தில் யாரும் இல்லை. இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த சண்டையின் வீடியோ மற்றும் வேறு சில வீடியோக்கள் மூலம் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் தற்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












