உயிரைக் காக்கும் 'தோல் தானம்' செய்வது எப்படி? யாரெல்லாம் தானம் செய்யலாம்?

தோல் தானம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சுசிலா சிங்
    • பதவி, பிபிசி தமிழ்

டிசம்பர் 11, 2023. அது ஒரு மாலை நேரம்.

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலின் கரோண்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ஏழு வயது சிறுவனான சித்ரான்ஷ் விளையாடிக் கொண்டிருந்தார்.

சித்ரான்ஷின் தாய் மனிஷா அவருக்கு அருகில் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்த மனிஷா திகைத்துப் போனார்.

அலறியடித்து வேகமாக தனது மகன் சித்ரான்ஷைப் பிடித்துக் கொண்டு பக்கத்து வீட்டுக்காரரின் உதவியுடன் மருத்துவமனைக்கு விரைந்தார்.

இதுகுறித்து சித்ரான்ஷின் தந்தை கஜேந்திர டங்கி கூறும்போது, ​​“ஒரு நாள் முன்புதான் நாங்கள் இந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தோம். என் குழந்தை இரும்பு கம்பியை வீசி மாடியில் விளையாடிக் கொண்டிருந்தான். அந்த கம்பி ஹைடென்ஷன் வயரில் உராய்ந்து, அதிலிருந்து தீப்பொறி ஏற்பட்டு விபந்து நேர்ந்தது." என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “வலியில் துடிக்கும் என் குழந்தையை இப்படியொரு நிலையில் பார்க்க எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எங்கள் வலியை வெளியே சொல்ல முடியாமல் நானும், என் மனைவியும் அமைதியாக இருந்தோம்.”

இந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்த பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை நிபுணரான டாக்டர் சுனில் ரத்தோர் கூறுகையில், ‘‘இந்தக் குழந்தை மருத்துவமனையில் சேர்ந்த போது உடலில் 60 சதவீதம் எரிந்திருந்தது. முதுகு மற்றும் கால்களின் ஒரு பகுதி மட்டுமே தீக்காயத்தில் இருந்து தப்பித்து இருந்தது. இந்த குழந்தை பல நாட்கள் வென்டிலேட்டரில் இருந்தது.” என்றார்.

தோல் தானம் செய்வதில் தயக்கம்

தோல் தானம்

குழந்தைக்கு வழங்கிய சிகிச்சை குறித்து மருத்துவர் விளக்கினார். "நாங்கள் முதலில், குழந்தையின் தோலை காயத்தின் மீது ஒட்டினோம், ஆனால் தோல் போதுமானதாக இல்லை. இதற்குப் பிறகு குழந்தையின் தந்தையுடைய காலில் இருந்து தோலை எடுத்து சிகிச்சை அளித்தோம். இப்படிச் செய்ததன் மூலமாக குழந்தையின் ஒரு கையில் இருக்கும் தோல் பாதுகாக்கப்பட்டது. அந்த கையில் காயத்திற்கு மருந்து அளித்து வருகிறோம். ஆனால் அந்த குழந்தைக்கு எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.”

இது போன்ற விபத்துகளின் போது குழந்தைகளுக்கு தோலை தானமாக தர பெற்றோர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால் பெரியவர்களுக்கு தோல் தானம் செய்ய யாரும் முன்வருவதில்லை என்கிறார் டாக்டர் சுனில் ரத்தோர்.

குடும்ப வன்முறையாலும், தீக்காயத்தாலும் பாதிக்கப்பட்ட சினேகா ஜாவலே கூறுகையில், "சில சம்பவங்களால் தீக்காயம் அடைந்தவர்கள் அதிர்ச்சியிலும் வேதனையிலும் உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் சொந்த உடலில் இருந்து தோலை எடுப்பது வலியை இன்னும் அதிகரிக்கும். இதுபோன்ற சூழலில் உறவினர்கள், பொது மக்கள் தோல் தானம் செய்ய முன்வர வேண்டும்,” என்றார்.

தனது உடலில் 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதாகவும், தோலை தானம் செய்ய யாரும் வரவில்லை என்றும் அவர் கூறுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க அவரது உடலில் இருந்தே தோல் எடுக்கப்பட்டது.

”எனக்கு வேறு யாராவது தோல் தானம் செய்திருந்தால், நான் இரண்டாவது முறையாக அந்த வலியை அனுபவிக்க வேண்டியிருக்காது. என்னுடைய காயமும் விரைவில் குணமடைந்திருக்கும்.”

பிபிசியிடம் பேசிய தேசிய தீக்காய மருத்துவ மையத்தின் இயக்குனரும், பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை நிபுணருமான டாக்டர் சுனில் கேஸ்வானி, தோல் தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

”நமது உடலில் தோல் ஒரு பெரிய உறுப்பு. வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் தோலை நாம், தொற்று, வெப்பம், குளிர்ச்சி, தீக்காயம் போன்றவற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். மனிதர்களின் நலனுக்கு தோல் ஒரு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது.”

மும்பையில் வசிக்கும் டாக்டர் கேஸ்வானி பிபிசியிடம் பேசும் போது, "ஒரு பெண் அல்லது ஆணுக்கு தீக்காயம் ஏற்படும் போது இந்த தோல் பாதிப்படைகிறது. இதன் மூலமாக அவர்களின் பாதுகாப்பு அரணில் குறை ஏற்படுகிறது.”

இதனால் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளால் தொற்று ஏற்பட்டு மனிதர்கள் இறக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிறார் மருத்துவர் கேஸ்வானி. இதை தடுக்க மக்கள் தோல் தானம் செய்ய முன்வர வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

இந்தியாவில் தீக்காயம்

தோல் தானம்

பட மூலாதாரம், SNEHA JAWALE

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் ஒவ்வொர் ஆண்டும் 10 லட்சம் பேர் வரை லேசான மற்றும் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகின்றனர்.

டெல்லியிலுள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை பிரிவின் தலைவரான டாக்டர் ஷலப் குமார், ”நோயாளிகள் பலர் சிறிய கிளினிக்குகளுக்குச் செல்லும் போது அவை முறையாக பதிவு செய்யப்படுவதில்லை, இதனால் தீக்காயாத்திற்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்,” என்கிறார்.

ஒரு வருடத்திற்கு 7000க்கும் மேற்பட்ட தீக்காய நோயாளிகள் தனது மருத்துவமனைக்கு வருவதாகவும், அதில் பெரும்பாலான தீக்காயங்கள் சமையலறையில் ஏற்படும் விபத்துகளால் ஏற்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

இது தவிர, தொழிற்சாலைகள் மற்றும் பிற இடங்களில் ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்படுவர்களும், ஆசிட் வீச்சுக்கு இலக்காகும் நபர்களும் தீக்காயத்திற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்கின்றனர்.

இந்தியாவில் உயிருடன் இருப்பவர்கள் தோல் தானம் செய்ய முடியாது என்றும், அப்படி நடந்தால் அது சட்டவிரோதமானது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் தோல் வங்கி

தோல் தானம்

பட மூலாதாரம், Getty Images

இதை மேலும் தெளிவுபடுத்தும் டாக்டர் சுனில் கேஸ்வானி, “இந்தியாவில் தோல் வங்கிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி தோல் வங்கி இல்லாத இடங்களில் உயிருடன் இருக்கும் நபர்களால் தோலை தானமாக கொடுக்க முடியும்.”

இப்படியான சூழலில், கஜேந்திரன் டங்கி தனது மகனுக்கு தோலை தானமாக கொடுப்பது சட்ட விரோதம் அல்ல. ஏனென்றால் அவர் வாழும் போபாலில் தோல் வங்கி இல்லை.

கடந்த மாதம் வரையிலான தரவுகளைப் பார்க்கும் போது, இந்தியாவில் இதுவரை 27 தோல் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன என்கிறார் டாக்டர் சுனில் கேஸ்வானி.

இந்தியாவிலுள்ள பெரும்பாலான தோல் வங்கி, தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளன. வட இந்தியாவின் முதல் தோல் வங்கி, டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது பல மாநிலங்களில் தோல் வங்கிகளை திறக்கின்றன.

யார் தோல் தானம் செய்யலாம்?

  • இறந்தவர்கள், அவர்களின் தோலை தானமாக கொடுக்கலாம்.
  • இறந்தவரின் தோலை ஆறு முதல் எட்டு மணி நேரத்திற்குள் உடலில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும்.
  • தோல் தானம் கொடுக்கும் நபரின் வயது, 18 வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது.
  • அவருக்கு எந்த விதமான தோல் வியாதியும் இருக்கக்கூடாது.
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் தோல் தானம் செய்யமுடியாது.
  • 100 வயது முதியவர் கூட தோல் தானம் செய்யலாம்.
  • தோல் தானம் செய்யும் நபர் எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி மற்றும் சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது.

வங்கியில் தோல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?

தோல் தானம்

பட மூலாதாரம், Getty Images

டாக்டர் சுனில் கேஸ்வானி மற்றும் டாக்டர் ஷலப் குமார் ஆகிய இருவரும் தோலை பாதுகாக்க, தோல் வங்கியில் கிளைசரால்(glycerol) என்று அழைக்கப்படும் ரசாயனம் இதற்காக பயன்படுத்தப்படுவதாக கூறுகிறார்கள்.

இந்த ரசாயனத்தை பயன்படுத்தி, 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 45 நாட்களுக்கு தோலை பாதுகாப்பாக பதப்படுத்தும் செயல்பாடு நடக்கும்.

பதப்படுத்தப்படும் தோலை, ஐந்தாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்கலாம். ஆனால் இந்தியாவில் தோலுக்கான தேவை அதிகமாக உள்ளதால், அவ்வளவு நாட்கள் வரை தோல் இருப்பதில்லை.

தோல் மாற்று அறுவை சிகிச்சை எளிதானது

தோல் தானம்

பட மூலாதாரம், Getty Images

கல்லீரல். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சையின் போது பெறுநருக்கும், நன்கொடையாளருக்கும் திசு பொருத்தம் இருப்பது அவசியம். ஆனால் தோல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இந்த நடைமுறை தேவையில்லை என்று விளக்குகின்றனர் மருத்துவர்கள்.

இதையே பிளாஸ்டிக் சர்ஜரி என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். ஆனால் அழகுபடுத்த மேற்கொள்ளப்படும் சிகிச்சை அல்ல, உயிரைக் காப்பாற்ற தோலை ஒட்டி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்கிறார் டாக்டர் சுனில்.

நமது தோலில் இரண்டு அடுக்குகள் உள்ளன. மேல்தோல்(epidermis) மற்றும் உள்தோல்(dermis) . அறுவை சிகிச்சையின் போது மேல்பகுதியில் உள்ள தோல் மட்டுமே அகற்றப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தோல் தானம் செய்யும் நபர்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படும் என்றும், அவை தற்காலிகமானது என்கிறார் டாக்டர் சுனில்.

தோல் தானம் செய்பவர்களுக்கு,

  • நடப்பதில் சிரமம் ஏற்படும்
  • காயம் குணமடைய மூன்று வாரங்கள் ஆகும்.
  • இரண்டு வாரங்களில் வலி நீங்கும்
  • அதன் பிறகு உங்கள் அன்றாட வேலைகளை செய்யலாம்.

'மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'

தோல் மாற்று அறுவை சிகிச்சை எந்த உறுப்பையும், தசையையும் பாதிக்காது என்றும், உடலில் பலவீனம் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தோல் தானம் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், தேசிய சுகாதாரக் கொள்கையிலும், மாற்றங்களை அரசுக் கொண்டு வர வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)