சல்மான் ருஷ்டி: 'ஒரு கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது'

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.
    • எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி
    • பதவி, பிபிசி

சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார்.

புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார்.

தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார்.

ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார்.

"என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.

'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்'

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.
படக்குறிப்பு, ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள்.

இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது.

சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார்.

"ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?'

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது.

முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார்.

நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது.

"அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது.

ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது.

ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்?

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது.

சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது.

இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை.

இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார்.

தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம்.

"நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது.

இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார்.

தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார்.

லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார்.

லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார்.

"நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி.

ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது.

நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக.

மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)