You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டம்புக்கு முன்னும் பின்னும் நின்று மாயம் செய்தாரா தோனி? ஹர்திக்கும் ருதுராஜும் கூறியது என்ன?
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சிஎஸ்கேவுக்கான தோனியின் 250-வது ஆட்டம், சிஎஸ்கேயின் 150-வது வெற்றி, ரோஹித்தின் சதம், 500-வது சிக்ஸர், இந்த சீசனில் சிஎஸ்கேயின் முதல் வெளி மைதான வெற்றி, தோனியின் ஹாட்ரிக் சிக்ஸர்கள் என நேற்றைய சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் நடந்தவற்றை பட்டியலிடலாம்.
இவற்றில் ரசிகர்களுக்கு முக்கியமாக மாறியிருப்பது, 42 வயது தோனி களத்தில் இறங்கி 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு, சிஎஸ்கே அணியை 200 ரன்களுக்குமேல் கொண்டு சென்றதுதான். இதுவே ஆட்டத்தின் வெற்றிக்கான வித்தியாசமாகவும் அமைந்தது. முன்னாள் கேப்டன் தோனி மட்டும் கடைசி நேரத்தில் 20 ரன்களை அடிக்காமல் இருந்திருந்தால் சிஎஸ்கே ஸ்கோர் 185 ரன்களுக்குள் முடிந்திருக்க வாய்ப்பிருந்தது. மும்பை அணியும் ரோஹித் சர்மாவால் வெற்றி பெற்றிருக்கக்கூடும்.
போட்டியில், ரோஹித் சர்மா அடித்த சதம் மும்பை நிர்வாகத்துக்கும், கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் பதில் சொல்வது அமைந்துவிட்டது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதுகிறார்கள். இதுவரை ரோஹித் சர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது. ரோஹித் சர்மா சதம் அடித்து, ஆட்டமிழக்காமல் இருந்தும், மும்பை அணி வெற்றி பெறாமல் இருந்தது இதுதான் முதல்முறை.
ரோஹித் சர்மா கடைசிவரை மும்பை இந்தியன்ஸ் அணியைக் கைவிடவில்லை, ஆட்டமிழக்காமல் வெற்றிக்காக கடைசிப்பந்துவரை போராடினார். ஆனால், அவருடன் நிலைத்து நின்று யாரும் ஆடவில்லை.
முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில்4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில்6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோற்றது.
இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி, 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன், நிகரரன்ரேட்டில் 0.726 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.
இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி வெளி மைதானத்தில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியும் சொந்த மைதானத்தில் இந்த சீசனில் அடைந்த முதல் தோல்வியாகும்.
சிஎஸ்கே வெற்றிக்கு முக்கியத் திருப்புமுனையாக அமைந்த மதீஷா பதிரணாஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 4 ஓவர்கள் வீசிய அவர், 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பதிரணா கைப்பற்றிய 4 விக்கெட்டுகளுமே சிஎஸ்கே அணியின் வெற்றிக்கான திருப்புமுனை விக்கெட்டுகளாகும்.
வான்கடே மைதானத்தில் 207 ரன்கள் இலக்கு என்பது சேஸிங் செய்ய முடியாத பெரிய இலக்கு அல்ல. ஆனால், பேட்டர்களுக்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில் பேட்டர்களின் கரங்களைக் கட்டிப்போடுவதும், சரியான முறையில் திட்டங்களையும், ஸ்மார்ட் கிரிக்கெட் ஆடுவதும்தான் முக்கியம்.
குறிப்பாக கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி ஹர்திக் பாண்டியா ஓவரில் 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் உள்பட 20 ரன்கள் சேர்த்தது தனது உடற்தகுதியை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், சிஎஸ்கே வெற்றிக்கு முக்கியமான ஸ்கோராக மாறியது.
ரோஹித் சர்மா 30 பந்துகளில் அரைசதம் அடித்தும், 61 பந்துகளில் சதம் அடித்தும் எந்தப் பயனும் இல்லாமல் போனது. ரோஹித் சர்மா கணக்கில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும்.
மும்பை அணியில் ரோஹித் சர்மா சேர்த்த 105 ரன்கள், இஷான் கிஷன் 23 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரிடம் இருந்து ரோஹித் சர்மாவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு இஷான் –ரோஹித் கூட்டணி சேர்த்த 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், திலக் வர்மா-ரோஹித் சேர்த்த 60 ரன்கல் பார்ட்னர்ஷிப்பும்தான் அதிகபட்சமாகும். மற்ற எந்த பேட்டரும் ரோஹித் சர்மாவுக்கு துணையாக பேட் செய்யவில்லை.
ஒருவேளை ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷெப்பர்ட் ஆகியோரில் ஒருவர் நிலைத்து பேட் செய்திருந்தால், ரோஹித் சர்மா இருந்த ஃபார்மிற்கு ஆட்டம் வேறு திசையில் பயணித்திருக்கும்.
ஒட்டுமொத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோஹித் கைவிடவில்லை, ஆனால், மற்ற பேட்டர்கள் சேர்ந்து ரோஹித்சர்மாவை கைவிட்டனர்.
தோனி பற்றி ஹர்திக் கூறியது என்ன?
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ 207 ரன்கள் சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர்தான். சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நன்கு பந்துவீசினர். பதிரணா பந்துவீச்சு வித்தியாசமாக இருந்தது. சிஎஸ்கே சரியாகத் திட்டமிட்டு அதை செயல்படுத்தி ஸ்மார்டாக செயல்பட்டது. சிஎஸ்கே அணியில் ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்டு ஆலோசனைகளை வழங்கி, எதை எப்படி செய்யலாம் என்று கூறியவர்தான் காரணம்.”
“பதிரணா பந்துவீச வராதவரை ஆட்டம் எங்களிடம் இருந்தது. துபே பேட் செய்தபோது சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருக்கலாமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அந்த நேரத்தில் சூழலுக்கு எது சரியோ அதைத்தான் செய்தேன். நாங்கள் ஸ்மார்ட்டாக செயல்பட்டால் அடுத்துவரும் ஆட்டங்களில் விரும்பிய முடிவுகளை அடையலாம்” எனத் தெரிவித்தார்
வெற்றிக்கு பதிரணா காரணமாக அமைந்தது எப்படி?
மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஓவர்கள் வரை 10 ரன்ரேட்டில் வெற்றியை நோக்கி சீராக பயணித்தது. ஆனால், 8-வது ஓவரை பதிரணா வீச வந்தபோதுதான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. பதிரணா வீசிய முதல் பந்திலேயே இஷான் கிஷன்(23) மிட்விக்கெட்டில் ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 3வது பந்தில் 360 டிகிரி பேட்டர் சூர்யகுமார் டீப் தேர்டுமேன் திசையில் அடித்த ஷாட்டை முஸ்தபிசுர் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இந்த இரு விக்கெட்டுகள் மும்பை அணியின் ரன்ரேட் வேகத்துக்கு பிரேக் போட்டன.
அதன்பின் வந்த திலக் வர்மா ரோஹித்துடன் சேர்ந்து ஓரளவுக்கு ஸ்கோரை உயர்த்தி, மீண்டும் வெற்றியை நோக்கி மும்பை நகரத் தொடங்கியது, ஆட்டமும் சிஎஸ்கே கையைவிட்டு நகர்ந்தது. 14-வது ஓவரில் பதிராணா மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார். பதிரணா வீசிய ஸ்லோவர் பந்தில் மிட்ஆப்பி் திலக் வர்மா தூக்கி அடிக்க தாக்கூர் கேட்ச் பிடித்தார். வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்த மும்பை அணிக்கு மீண்டும் தடைக்கல் விழுந்தது.
ஆட்டத்தை திருப்பிய ஓவர்கள்
அதன்பின் 15-வது ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூர் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அருமையாகப் பந்துவீசினார். அதேபோல 16-வவரை வீசிய தேஷ்பாண்டே 3 ரன்கள் கொடுத்து, கேப்டன் ஹர்திக் வி்க்கெட்டை வீழ்த்தினார். இருவரும் இரு ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். இந்த இரு ஓவர்கள்தான் மும்பை அணி மீது பெரிய அழுதத்தை கொண்டு வந்து சேர்த்து, நெருக்கடியில் தள்ளியது. மும்பை வீரர்களான ஷர்துல், தேஷ்பாண்டே இருவரும் சிஎஸ்கேவுக்கு சரியான வேலையை செய்து கொடுத்தனர்.
இரு ஓவர்களில் அதிகமான டாட் பந்துகளை விட்டதால், மும்பை இந்தியன்ஸ் அணின் வெற்றிக்கான ரன்ரேட்டை கடுமையாக உயர்த்தி, களத்தில் இருந்த ரோஹித் சர்மாவுக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது.
அடுத்துவந்த டிம் டேவிட் மீதும் ரன்ரேட் அழுத்தம் இருந்தது. இதனால் முஸ்தபிசுர் வீசிய 17-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி, அதேஓவரில் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ஷெப்பர்டை கிளீன் போல்டாக்கி பதீராணா வெளியேற்றினார்.
ஆட்டத்தின் 14 முதல் 16-வது ஓவர்கள்தான் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. திலக் வர்மா ஆட்டமிழந்த 14வது ஓவர், ஷர்துல் வீசிய 15வது ஓவர், தேஷ் பாண்டே வீசிய 16வது ஓவர் ஆகியவை ஆட்டத்தின் போக்கை மாற்றி, மும்பையிடம் இருந்து வெற்றியை முழுமையாக சிஎஸ்கே பறித்துக் கொண்டது.
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ், தோனியின் பேட்டிங் பற்றி கூறியது என்ன?
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் “ நாங்கள் பெரிய ஸ்கோரை அடிக்க எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் கடைசி நேரத்தில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள்தான் காரணம். அதுதான் வெற்றிக்கான வித்தியாசமாகவும் இருந்தது. இதுபோன்ற மைதானத்தில் எப்போதுமே கூடுதலாக 15 ரன்கள் அடிக்கவேண்டும். 220 ரன்கள்வரை எதிர்பார்த்தோம். பந்துவீச்சில் நாங்கள் எங்கள் திட்டத்தை சரியாக் செயல்படுத்தினோம். எங்கள் அணியின் மலிங்கா சிறப்பாகப் பந்துவீசி யார்கர்களை கச்சிதமாக இறக்கினார். துஷார், ஷர்துலும் இரு சிறப்பான ஓவர்களை வீசினர். ஒவ்வொருவரும் சிறந்த பங்களிப்பு செய்தனர். ரஹானே தொடக்க வீரராக களமிறங்கியது வித்தியாசமாக இருந்திருக்கும்”எ னத் தெரிவித்தார்
நம்பிக்கையளித்த துபே-கெய்க்வாட் ஜோடி
சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய ஸ்கோர் உயர்வுக்கு 3வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே, கெய்க்வாட் ஜோடி சேர்த்த ரன்கள்தான் முக்கியக் காரணம். நடுப்பகுதியில் இருவரும் சேர்ந்து சிஎஸ்கே ஸ்கோரை அருமையாக நகர்த்திக் கொண்டு சென்றனர். பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் சேர்த்தநிலையில், அடுத்த 7 ஓவர்களில் இருவரின் பேட்டிங்கால் 100 ரன்கள் சேர்த்தது.
கடைசி 5 ஓவர்களில்கூட 56 ரன்கள்தான் சிஎஸ்கே சேர்த்தது. சிஎஸ்கேவுக்கு பேட்டிங்கில் திருப்புமுனையாக அமைந்தது. 7 முதல் 15-வது ஓவர்கள்தான். 7-ஆவது ஓவர்கள் முதல் 15-ஆவது ஓவர்களில் மும்பை பந்துவீச்சாளர்கள் செய்த தவறை கெய்க்வாட், துபே இருவரும் நன்கு பயன்படுத்தினர்.
துபே களமிறங்கியபின் மும்பை பந்துவீச்சை விளாசத் தொடங்கினார், கெய்க்வாடும் தனது பங்கிற்கு பவுண்டரிகள் விளாச ரன்ரேட் உயரத் தொடங்கியது. 6 ஓவர்களில் 48 ரன்கள் இருந்த சிஎஸ்கே 11 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
துபே 28 பந்துகளிலும், கெய்க்வாட் 33 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இந்த சீசனில் துபே அடித்த 2வது அரைசதம், கெய்க்வாட்டுக்கும் இது 2 வது அரைசதமாக அமைந்தது. கெய்க்வாட் 69 ரன்னில்(40 பந்துகள் 5சிக்ஸர்கள், 5பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். துபே 38 பந்துகளில் 66 ரன்களுடன்(2சிக்ஸர், 10பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மோசமான மும்பை பந்துவீச்சு
மும்பை அணியில் பும்ரா, முகமது நபியைத் தவிர வேறு எந்த பந்துவீச்சாளரும் சிறப்பாகப் பந்துவீசவில்லை. இருவர் மட்டுமே ஓவருக்கு 6 ரன்ரேட்டில் வீசியுள்ளனர். பும்ரா விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும், 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து சிஎஸ்கே பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகத் திகழந்தார். அதேபோல முகமது நபி 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். துபே சுழற்பந்துவீச்சை நன்கு விளையாடுவார் என்பதால், அவர் களத்துக்குவந்தபின் சுழற்பந்துவீச்சை ஹர்திக் பயன்படுத்தவில்லை. ஆனால், முகமது நபி, ஸ்ரேயாஸ் கோபாலை பயன்படுத்தி இருந்தால் துபே பெரிய ஷாட்களை அடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் விக்கெட் விழுந்திருக்கும். அதைச் செய்ய ஹர்திக் தவறிவிட்டார்.
மற்ற பந்துவீச்சாளர்கள் 10 ரன்களுக்கு மேல் வழங்கினர். ஆகாஷ் மத்வாலுக்கு 3ஓவர்களையும், ஸ்ரேயாஸ் கோபாலுக்கு ஒரு ஓவரையும் ஹர்திக் பாண்டியா வழங்கினார். இருவரும் ஓரளவுக்கு நன்றாகப் பந்துவீசிய நிலையில் துபே, கெய்க்வாட்டுக்கு பயந்து இருவரையும் சரியாக ஹர்திக் பயன்படுத்தவில்லை. ஆனால், அதற்குப்பதிலாக தன்னால் நன்கு பந்துவீச இயலும் என நினைத்துக்கொண்டு 3 ஓவர்களில் 43 ரன்களை வழங்கி, 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
மும்பை அணி எங்கு தோற்றது?
மும்பை வான்கடே மைதானத்தில் 207 ரன்கள் நிச்சயமாக சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர்தான். இதுபோன்ற சிறிய மைதானத்தில் ரன்களை ஓடி எடுப்பதில் கவனம் செலுத்தாமல், டாட் பந்துகளை விடாமல் சிக்ஸர் அடிக்கும் பவர்ஷாட் அடிப்பதில் மும்பை பேட்டர்கள் கோட்டை விட்டனர்.
இந்த ஆட்டத்தில் மும்பை, சிஎஸ்கே அணிகளின் பேட்டர்கள் தலா 19 பவுண்டரிகள் அடித்துள்ளனர். ஆனால், சிக்ஸரைப் பொறுத்தவரை, சிஎஸ்கே அணி 11 சிக்ஸர்களை விளாசிய நிலையில் மும்பை அணி 8 சிக்ஸர்கள் மட்டுமே அடித்தது. ஆக, தோனி கடைசி நேரத்தில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள்தான் வெற்றியைத் தீர்மானிப்பதாக அமைந்தது. மும்பை பேட்டர்கள் சிறிய கேமியோ கூட ஆடாமல் சிக்ஸர்கள் அடிக்காமல் ஆட்டமிழந்ததுதான் மும்பையை தோற்க வைத்தது.
இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)