அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை நிரந்தரமாகப் பறிக்கும் நோய்

இந்தியாவின் கால்பங்கு மக்கள்தொகை கண்சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் குணப்படுத்தக்கூடிய, சரியே செய்ய முடியாத, தடுத்து நிறுத்தக் கூடிய வகையிலான வெவ்வேறு விதமான கண் சார்ந்த பாதிப்புகள் உள்ளன.

அதில் ஒன்றான கிளாக்கோமா சமீபத்தில் பலரையும் அச்சுறுத்தும் ஒரு பாதிப்பாக மாறியுள்ளது. காரணம் இது பல நேரங்களில் எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் தொடங்கி, ஒரு நபர் தனது கண்பார்வையை குறிப்பிட்ட அளவு இழந்த பிறகே தெரிய வருகிறது.

இதனால், இழந்த கண்பார்வையை மீட்க முடியாத நிலையும் உருவாகிறது. உண்மையில் இந்த நோயின் அறிகுறிகள் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே அதை எப்படி கண்டறிவது? அதற்கான சிகிச்சைகள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கிளாக்கோமா என்றால் என்ன?

கிளாக்கோமா என்பது கண்களை பாதிக்கும் ஒரு நோய். கண்களை மூளையோடு இணைக்கும் நரம்புகளை இந்த நோய் பாதிக்கிறது.

பிரிட்டிஷ் பொது சுகாதார சேவையின் (NHS) கூற்றுப்படி, கண்களில் குவியும் இயல்புக்கு மாறான திரவம் அதன் மீது அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி நரம்புகளை சேதப்படுத்துகிறது.

கிளாக்கோமாவை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை இழப்பு மற்றும் முழுமையான கண்பார்வை பறிபோவதற்கு வழிவகுக்கும்.

கிளாக்கோமா வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இதில் 70 முதல் 80 வயதுடையவர்களுக்கு அபாயம் அதிகம்.

கிளாக்கோமாவின் அறிகுறிகள் என்ன?

கிளாக்கோமா ஏற்படுகிற ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறிகளும் தெரிவதில்லை. இதனால் அதை பரிசோதனைகள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

இது பல ஆண்டுகளாக படிப்படியாக அதிகரிக்கிறது. இதன் நீட்சியாக பார்வையையும் பாதிக்கிறது. இது மெதுவான விளைவுகளைக் கொண்டிருப்பதால், பலரும் தங்களது பார்வையில் எந்த விதமான மாற்றங்களையும் உணர்வதில்லை.

இது படிப்படியாக முன்னேறி குறிப்பிட்ட அளவு பார்வை பாதிக்கப்படும் போது பாதிக்கபட்டவர்களால் தங்களை சுற்றி எதையும் பார்க்க முடியாது. உடனடியாக சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் முழுமையாக பார்வை பறிபோகவும் வாய்ப்புள்ளது.

மங்கலான பார்வை மற்றும் பிரகாசமான விளக்குகளைச் சுற்றி வானவில் போன்ற வளையங்கள் தெரிவது போன்றவையும் கிளாக்கோமாவின் அறிகுறிகள் தான்.

இந்த நோய் இரு கண்களையும் பாதித்தாலும், அவற்றில் ஒன்று கூடுதலாக பாதிக்கப்படலாம்.

இதன் அறிகுறிகள் திடீரென்று தொடங்கும். அவற்றில் முக்கியமான மற்றும் பொதுவானவை..

  • கண்களில் கடுமையான வலி
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • கண்கள் சிவத்தல்
  • தலைவலி
  • கண்களைச் சுற்றி மென்மையாக மாறுதல்
  • ஒளியைச் சுற்றி வட்டங்கள் தெரிவது
  • மங்கலான தோற்றம்

எப்போது சிகிச்சை பெற வேண்டும்?

இந்த குறைபாடு என்றில்லாமல், உங்கள் பார்வையில் எந்த விதமான குறைபாடு இருப்பதாக உங்களுக்கு சந்தேகம் வந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கிளாக்கோமாவின் ஆரம்ப நிலையிலேயே அதை கண்டறிந்து சிகிச்சை அளித்து விட வேண்டும். இல்லையென்றால் படிப்படியாக அதிகரித்து முழுமையாக பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.

எனவே, மேற்காணும் ஏதேனும் அறிகுறிகளை உணர்ந்தாலே உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும். இது ஒரு மருத்துவ அவசரநிலை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

கிளாக்கோமாவின் வகைகள்

கிளாக்கோமாவில் பல வகைகள் உள்ளது. ஆனால், இவற்றில் மிகவும் பொதுவான வகை ஓப்பன் ஆங்கில் கிளாக்கோமா (open angle glaucoma) ஆகும். இது பல ஆண்டுகளாக கண்ணுக்குள் இருந்து பொறுமையாக வளர்ச்சியடைகிறது.

அக்யூட் ஆங்கில் க்ளோஸர் கிளாக்கோமா (Acute Angle Closure Glaucoma) - இது மிகவும் அரிதானது. கண்ணுக்குள் திரவங்கள் பாயும் பாதை திடீரென தடைப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, கண்ணில் அழுத்தம் அதிகரிக்கிறது. இது கிளாக்கோமாவுக்கு வழிவகுக்கிறது.

இரண்டாம் நிலை கிளாக்கோமா (Secondary Glaucoma) - கண் அழற்சி நோய் அல்லது யுவைடிஸ் போன்ற எந்த விதமான கண் நோய்களினாலும் இது ஏற்படலாம்.

கான்ஜெனிட்டல் கிளாக்கோமா(Congenital Glaucoma) - இந்த வகை மிகவும் அரிதாக இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய ஒன்று. இதில் கண்களை அமைப்பு வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும்.

கிளாக்கோமா ஏற்பட காரணம் என்ன?

கிளாக்கோமா ஏற்பட பல காரணங்கள் உண்டு. கண்களில் காணப்படும் திரவம் அதன் பாதையில் சரியாக பயணிக்காத போது கிளாக்கோமா ஏற்படுகிறது. இது கண்ணில் எதிர்மறை அழுத்தத்தை உருவாக்குவதால், அது கண்களை மூளையுடன் இணைக்கும் பார்வை நரம்பை சேதப்படுத்துகிறது.

கிளாக்கோமா உருவாகும் அபாயம் பல காரணங்களால் அதிகரிக்கிறது.

வயது - வயது முதிர்வு கிளாக்கோமா ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

இனம் - ஆப்பிரிக்கர்கள், கரீபியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு கிளாக்கோமா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இவர்களில் 40 வயதை கடந்தவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படுகிறது.

குடும்பம் - உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களில் ஒருவருக்கு கிளாக்கோமா இருந்தால், உங்களுக்கும் அது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உடல்நலப் பிரச்சனைகள் - பார்வைக் குறைபாடுகள் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு கிளாக்கோமா ஏற்படும் அபாயம் உள்ளது.

கிளாக்கோமாவைத் தடுக்க முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தொடர் கண் பரிசோதனைகள் மூலம், கிளாக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

கிளாக்கோமா பரிசோதனை

வழக்கமான தொடர் கண் பரிசோதனைகள் மூலம், அறிகுறிகள் ஏதும் தென்படாதபோதும் கூட இதைக் கண்டறிய முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

கிளாக்கோமாவை மிக வேகமான மற்றும் வலியற்ற பரிசோதனை மூலம் கண்டறியலாம். பரிசோதனையில் கிளாக்கோமா இருப்பது தெரியவந்தால், தாமதிக்காமல் கண் மருத்துவரை அணுக வேண்டும்.

கிளாக்கோமாவிற்கான சிகிச்சை என்ன?

கிளாக்கோமாவால் ஒருவருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டால், அவர்களின் பார்வையை மீண்டும் கொண்டு வர முடியாது. பார்வை இழப்பு லேசானதாக இருந்தால், உடனடி சிகிச்சையின் மூலம் மேலும் பார்வையிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

இதற்கான சிகிச்சை அந்த நபரை பாதித்துள்ள கிளாக்கோமாவின் வகையைப் பொறுத்தது. அதனடிப்படையில் கீழ்காணும் சிகிச்சைகள் வழங்கப்படலாம்.

சொட்டு மருந்து (Drops) - கண்களில் அழுத்தத்தை குறைக்கும்.

லேசர் சிகிச்சை - இந்த சிகிச்சை மூலம் கண்களில் உள்ள திரவம் பயணிக்கும் பாதையில் உள்ள அடைப்புகளை நீக்க முடியும். கண்களில் குறைந்த திரவ உற்பத்தியைக் கட்டுப்படுத்த லேசர் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

அறுவைசிகிச்சை - இதில் கண்ணில் உள்ள திரவம் வெளியேறும் பாதை மாற்றியமைக்கப்படுகிறது.

இந்த சிகிச்சைகளின் மூலம் இழந்த பார்வையை மீட்டெடுக்க முடியாது. மாறாக, மீதம் உள்ள பார்வை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக சிகிச்சையின் போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், மருத்துவரிடம் தெரிவிக்கவும். அனைவரும் வழக்கமான தொடர் கண்பரிசோதனைகள் மூலம் இந்த நோய் இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து விடலாம். அப்படி குடும்பத்தில் ஒருவருக்கு இருப்பது தெரிய வந்தாலும் கூட, பிற குடும்ப உறுப்பினர்களும் இந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)