மக்களவைத் தேர்தலை பாதிக்கும் வெப்ப அலை - யாரெல்லாம் வெயிலில் செல்லக் கூடாது?

    • எழுதியவர், ரிஷி பானர்ஜி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் 18-ஆவது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்குகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தியாவில் இந்த ஆண்டின் வெப்பமான நாட்கள் தொடங்கியிருக்கும் நேரத்தில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது.

ஏப்ரல் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவின் பல மாநிலங்கள் கடும் வெப்பத்தை சந்தித்து வருகின்றன. பல பகுதிகள் வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றன. சில பகுதிகளில் ஏப்ரல் மாதத்திலேயே வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்பம் நிலவுகிறது. குறிப்பாக வடக்கு, மேற்கு மற்றும் தென்னிந்தியாவின் சில மாநிலங்களில், ஒவ்வொரு ஆண்டும் வெப்ப அலைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் இந்தாண்டு ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியிலும், மே மாதத்திலும் பல பகுதிகளில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் இந்த ஆண்டின் கோடை காலம் அதிக வெப்பமாக இருக்கும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். இந்நிலையில், இதே காலகட்டத்தில் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கும் இந்த தேர்தல் ஜூன் 1 வரை நடைபெறுகிறது. இதன் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்படும்.

தேர்தல்களில் எந்தளவு கட்சி சார் அரசியல் போட்டி நிலவுமோ, அதே அளவுக்கு கட்சிகளுக்கும், மக்களுக்கும் இந்தாண்டு வெப்ப அலைகளும், வெயிலும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த காலகட்டத்தில் வழக்கமான சராசரியை விட அதிக வெப்ப அலைகளை எதிர்க்கொள்ள வேண்டிவரும் என்று கணித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் கடுமையான வெப்பம் நிலவும் என்றும் அது எச்சரித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின்படி, ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவில் வெப்பநிலை சராசரியை விட அதிகமாக இருக்கும் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தெற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் இத்தகைய நிலை காணப்படும் என்றும் அது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த முறை என்ன கணிப்பு?

வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா கூறுகையில், "இந்த கோடைகாலத்தில் குஜராத்தின் சவுராஷ்டிரா-கட்ச், மகாராஷ்டிரா, வட கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பம் மிக அதிகமா இருக்கும். சில பகுதிகள் வெப்ப அலைகளை எதிர்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.

வழக்கமாக கோடைகாலத்தின் மூன்று மாதங்களில், வெப்ப அலைகள் சராசரியாக நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் 10 முதல் 20 நாட்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், வடக்கு ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் கடும் வெப்பம் நிலவ வாய்ப்புள்ளது.

2023 ஆம் ஆண்டைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு கோடைகாலத்திலும் பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலைகள் உருவாக உள்ளது . பொதுவாக, பசிபிக் பெருங்கடலில் எல் நினோ ஏற்படும் போது, ​​உலகம் முழுவதும் வெப்பநிலை உயரும்.

இருப்பினும், வழக்கமான சராசரியை விட 2023 ஆம் ஆண்டின் ஒவ்வொரு மாதமும் வெப்பம் அதிகமாக இருப்பது இதுவே முதல் முறை.

மஹாபத்ராவின் கூற்றுப்படி, "எல் நினோ ஜூன் 2023 இல் தொடங்கியது மற்றும் அதன் தாக்கம் டிசம்பரில் குறைந்தது. இதன் காரணமாக அந்த சமயத்தில் உலக வெப்பநிலை அதிகரித்தது. வெப்பநிலை அதிகரிப்புக்கு எல் நினோ மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது, ஆனால் எல் நினோ காரணமாக, ஆண்டில் நிலவிய வெப்ப அலைகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் அதிகரிக்கிறது.”

எல் நினோ என்பது காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் இது இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் உருவாகிறது. அதே சமயம் அவை உலகெங்கிலும் நிலவும் வானிலையில் ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வுத் துறை விஞ்ஞானி டாக்டர் சோம் சென் ராய், "இயல்பை விட அதிக வெப்பநிலை என்பது இனி புதிய விஷயம் ஒன்றும் இல்லை” என்று கூறினார்.

“குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கவலைக்குரிய விஷயம். இந்த ஆண்டு வெப்ப அலைகளின் எண்ணிக்கையும், அது தொடர்ந்து நீடிக்கும் கால அளவும் அதிகமாக இருக்கும். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பகல் மற்றும் இரவிலும் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சராசரி வெப்பநிலையும் அதிகரித்துள்ளது."

மக்களவைத் தேர்தலின் முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 191 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து மே 7, 13, 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். ஏழாவது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 296 மக்களவைத் தொகுதிகளுக்கு மே மாதம் தேர்தல் நடைபெறுகிறது.

57 மக்களவைத் தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஒரே தேதியில் தேர்தல் நடந்தாலும், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மே மாதத்திலேயே நடக்கும்.

நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவும் நேரத்தில், 353 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் அதிகரிக்கும்

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், மே மாதம் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்கள் அரசியல் ரீதியாகவும், இடங்கள் அடிப்படையிலும் மிகவும் முக்கியமானவை.

உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மக்களவைத் தொகுதிகளுக்கு மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதே போல், குஜராத், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கோவா, டெல்லி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் மே மாதத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த மாநிலங்களில் மே மற்றும் ஜூன் மாதம் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதில் சில பகுதிகளில் மே மாதத்தில் சராசரி வெப்பநிலை 41 முதல் 42 டிகிரி வரை இருக்கும். சில நேரங்களில் வெப்பநிலை 45 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை கூட செல்லும்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் திலீப் மாவலங்கர் கூறுகையில், "மே மாதத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே தேர்தல் பணிகளிலும் அதன் தாக்கம் தெரிவது இயல்பானது தான். மக்கள் முன்பு போல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்பதில்லை. இந்நிலையில் அனைவருக்கும் வசதியாக, பெரும்பாலான பேரணிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் மாலையில் நடத்தப்பட வாய்ப்புள்ளது." என்கிறார்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் குஜராத் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பெங்களூரில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஹைதராபாத்திலும் மார்ச் மாதத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தென்னிந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 'கடுமையான வெப்ப அலை' ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அரசு, 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 14 மாநிலங்களில் வெப்பச் சலனம் காரணமாக 264 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தது.

2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே வட இந்தியா முழுவதும் வெப்ப அலை தொடங்கிவிட்டது. உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் டெல்லியில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. அந்த ஆண்டு முழுவதும் 49 நாட்களுக்கு கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலைகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, 2003 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் வெப்ப அலை மற்றும் கடுமையான வெப்பத்தால் 9675 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை அளவீடு ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தேர்தல் பிரசார வாகனத்தின் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அந்த வீடியோவில், பிரசாரத்தின் போது, அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கருவியின் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது போல் பதிவாகியிருந்தது.

தேர்தலில் பிரதிபலிக்கும் கடும் வெப்பம்

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. இது அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசு நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்து தரப்பினரையும் சோதிக்கும் ஒன்று.

இந்நிலையில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் வாக்குச்சாவடிகளுக்கு மக்களை அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

திலீப் மாவலங்கர் கூறுகையில், "இயற்கையாகவே இந்த காலகட்டத்தில் மக்களின் வாக்குப்பதிவு குறைவாக இருக்கும். இதனால் அரசியல் நிகழ்வுகள் மட்டுமின்றி வாக்குப்பதிவும் பாதிக்கப்படும். மக்களை வாக்குசாவடிகளுக்கு அழைத்து வர தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்” என்கிறார்.

மதிய வேளையில் வாக்குப்பதிவு மந்தமாக இருக்கும் என்பதால் தேர்தல் ஆணையம் அதற்கும் தயாராக வேண்டும் என்று கூறுகிறார் அவர்.

சிஎஸ்டிஎஸ் மையத்தின் இயக்குநரும், பேராசிரியருமான சஞ்சய் குமார் பேசுகையில், “குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வாக்கு சதவீதம் அதிகமாகவும், மதியம் வாக்கு சதவீதம் குறைவாகவும் இருக்கும்” என்கிறார்.

மேலும், "2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களும் கோடைகாலத்தில் தான் நடந்தது. அதில் பதிவான ஓட்டு சதவீதம் நன்றாக இருந்தது. மக்களவைத் தேர்தலின் காரணமாக, அரசியல் கட்சிகள், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்காளர்கள் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை தாண்டியும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எனவே அரசியல் கட்சிகள் பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யும்போது கூரைகள், குடிநீர் மற்றும் பிற தேவைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்." என்று கூறுகிறார் அவர்.

நிபுணர்களின் கூற்றுப்படி அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை நிலவும் போது அரசியல் செயல்பாடுகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றில் பங்கேற்பது உடல் நலத்தை பாதிக்கும் என்று கூறுகின்றனர்.

மக்களவைத் தேர்தலின் போது கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தேர்தல் ஆணையம் கணித்துள்ளது.

எனவே, இந்த நிலையை கையாள்வதற்கான இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது தேர்தல் ஆணையம்.

இதற்காக ஏழு கட்ட வாக்குப்பதிவு அறிவிப்போடு சேர்த்து , தேர்தல் ஆணையம் ஒரு ஆலோசனையையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெப்பச் சலனத்தைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரிகளும் உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்ச வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளது.

டாக்டர் சோம் சென் ராய் கூறுகையில், "மே மாதத்தில் நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுவதால், வானிலை ஆய்வு மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் தேர்தல் ஆணையம் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. முடிந்தவரை வாக்களிப்பதில் அதிகமான மக்கள் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

வெப்ப அலை என்றால் என்ன?

ஒரு பகுதியில் நிலவும் வெப்பநிலை உள்ளூர் வானிலை ஆய்வு மையம் நிர்ணயித்த வெப்பநிலையை விட அதிகமாகச் சென்று, சில நாட்கள் நீடித்தால், அது 'வெப்ப அலை நிகழ்வு' என்று அழைக்கப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வழிகாட்டுதல்களின்படி, சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேலும், குளிர் அலைகளின் சராசரி வெப்பநிலை 10 டிகிரிக்கு குறைவாகவும் இருந்தால் அது வெப்ப அலை எனப்படும்.

வெப்ப அலைகள் மனிதர்கள் உட்பட பல உயிரினங்களை பாதிக்கிறது. மேலும் இது நீரிழப்பு, சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி, வயிற்று வலி, வியர்வை, ஹைபர்தர்மியா அல்லது வெப்ப பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்.

இதயம் தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கு தாங்க முடியாத வெப்பத்தால் பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து திலீப் மாவலங்கர் கூறும்போது, ​​“மக்கள் கூட்டம், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் கவனமாக இருக்க வேண்டும். வெயிலில் சென்றால் தண்ணீர் மற்றும் குடையை எடுத்துச் செல்ல வேண்டும். திறந்த வெளியில் நிற்க வேண்டிய சூழல் வந்தால், உங்கள் தலையை மூடிக்கொள்ள வேண்டும்." என்கிறார்.

"நீண்ட நேரம் வெப்பத்தில் நிற்பது நீரிழப்பு மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அதிக அபாயம் உள்ளது."

தமிழ்நாட்டின் நிலை என்ன?

மக்களவைத் தேர்தலின் முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி 40 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சாரங்கள் மற்றும் இதர அரசியல் நிகழ்வுகள் ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் பரப்புரைகளில் செய்தி சேகரிக்க சென்ற நமது பிபிசி செய்தியாளர்களே கூட கடும் வெப்பத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பிபிசி செய்தியாளர் சாரதா கூற்றுப்படி, தமிழ்நாட்டின் பல கிராமப்புறங்களிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. அங்கெல்லாம் இடையில் ஓய்வெடுக்க கூட அதிகம் இடமில்லாத காரணத்தால் மக்கள் வெயிலை பொறுத்துக் கொண்டுதான் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பல வேட்பாளர்களே கூட தேர்தலை குறைந்தபட்சம் ஏப்ரல் மாதத்தில் வைத்துவிட்டது நல்லது என்று கருதுவதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் பல கிராமப்புறங்களில் காற்றில் உள்ள ஈரப்பதமும், அதீத வெப்பநிலையும் சேர்ந்து உடலில் இருந்து வெளியேறும் வியர்வையை வெளியேற விடாமல் செய்வதால் வெப்பம் உடலுக்குள் அதிகமாவதை உணர முடிந்ததாக கூறினார் சாரதா.

சூழலியல் ஆர்வலரான பிரபாகரன் வீரஅரசுவும் இதே கருத்தை தெரிவித்தார்.

வரலாற்றின் அதிக வெப்ப மிகுந்த மாதம்

தமிழ்நாட்டில் நிலவும் வெப்பநிலை குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த பிரபாகரன் வீரஅரசுவிடம் பேசுகையில், சென்னையில் கடந்த ஆண்டு 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு எல் நினோ வேறு இருப்பதால் இன்னும் ஒரு டிகிரி அதிகரிக்கலாம் என்று கூறுகிறார்.

மேலும் பேசிய அவர், “சமீப காலமாக வெட் பல்ப் வெப்பநிலை (Wet Bulb Temperature) எவ்வளவு இருக்கிறது என்று ஆய்வு செய்யப்படுகிறது. அது 35 டிகிரியை தாண்டும் பட்சத்தில், ஆரோக்கியமான மனிதர்கள் கூட 4-5 மணிநேரம் வெயிலில் சென்று வந்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும்” என்கிறார்.

பொதுவாக உடலில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்ள உடல் வியர்வையை வெளிப்படுத்தும். ஆனால், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் அந்த வியர்வை வெளியே வராமல் வெப்பம் உடலுக்குள்ளேயே தங்கி உறுப்புகளை செயலிழக்க கூட செய்யும்.

“தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வெட் பல்ப் வெப்பநிலை 31 டிகிரி பதிவாகியுள்ளது. அதுவும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களில் 31-32 டிகிரி வரை பதிவாகியுள்ளது. இதுவும் இந்த முறை அதிகரிக்கலாம்” என்கிறார் பிரபாகரன்.

“கடந்த ஆண்டு கூட வெயிலால் தேர்தல் பரப்புரைகளில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் தான் இதுவரை பதிவான அதிக வெப்பநிலை மாதங்களிலேயே அதிகமானது என்று கணக்கிடப்பட்டுள்ளது.”

இந்நிலையில் வரக்கூடிய மாதங்களும் அதிக வெப்ப அலைகளை கொண்டதாகத்தான் இருக்கும். எனவே வாக்குப்பதிவு நடக்கும்போது இதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதே நல்லது என்று எச்சரிக்கிறார் பிரபாகரன் வீரஅரசு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)