ஃபெட்எக்ஸ் மோசடி : கொரியர் வந்ததாகக் கூறி மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் - இழந்த பணத்தை மீட்க எளிமையான வழி

    • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
    • பதவி, பிபிசி தமிழ்

வழக்கமான ஒரு சனிக்கிழமை காலை தனது வார விடுமுறை நாளை எப்படி தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த முருகேஷுக்கு திடீரென்று ஒரு மொபைல் அழைப்பு வந்தது.

மொபைலின் மறுமுனையில் ஃபெட்எக்ஸ் நிறுவனத்தின் ஐவிஆர் சேவையின் கணினி குரல் பேச, ஒரு கொரியருக்காக காத்திருந்த முருகேஷ் அது சொன்னபடியே செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் உண்மையான மனிதக்குரலில் பேசிய நபர் ஒருவர், நீங்கள் தாய்லாந்துக்கு அனுப்பிய பார்சல் ஒன்று மும்பை காவல்நிலையத்தில் இருக்கிறது. அதில் சட்டவிரோதமான 5 பாஸ்போர்ட் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளது என்று பயமுறுத்தும் குரலில் பேசியுள்ளார்.

குழம்பிப்போன முருகேஷ் உரையாடலை தொடர, முதலாம் நபர் மும்பை காவலர் என்று இரண்டாம் நபர் ஒருவரை அந்த அழைப்பில் இணைத்துள்ளார்.

அவரோ தன்னை மும்பை அந்தேரி காவல்நிலைய காவலர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு முருகேஷின் ஆதார் எண் உட்பட அனைத்தையும் அப்படியே ஒப்பித்துள்ளார்.

முருகேஷும் அவர் உண்மையான காவலர் தான் என்று நம்பி விட, முதலில் ஏதோ கொரியர் பிரச்னை என்று தொடங்கியவர்கள், பின்னர் உங்கள் பெயரை பயன்படுத்தி யாரோ சட்டவிரோத பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது வரை புகாரை அடுக்கியுள்ளனர்.

பின்னர் சிபிஐ விசாரணை என்று கூறி ஸ்கைப் மூலமாக வீடியோ காலில் இணைத்து இணையம் வழியாகவே ஓர் அறைக்குள் ஒரு சில மணிநேரங்கள் எங்கேயும் போக விடாமல் அவரை அமர வைத்துள்ளனர்.

பின் ஒரு கட்டத்தில் அந்த அதிகாரிகள் முருகேஷின் வங்கிக்கணக்குகள், அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது உட்பட விவரங்களை கேட்டுவிட்டு, அவற்றில் உள்ள மொத்த பணத்தையும் நாங்கள் அனுப்பும் அரசின் வங்கி எண்ணுக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்தமுறை சந்தேகம் அதிகமாகி சுதாரித்து கொண்ட முருகேஷ் அந்த அழைப்பை துண்டிக்காமலேயே அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று உடனே புகார் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த உண்மையான காவல்துறை அதிகாரிகள் போனை வாங்கி பேச, மும்பை காவல்துறையினர் போனை துண்டித்து விட்டு ஓடிவிட்டனர். பின்னர்தான் தெரிகிறது அது ஒரு மோசடி கும்பல் என்பது. முதலில் ஏமாந்தாலும், ஒரு நிமிட சிந்தனையால் பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து விட்டார் முருகேஷ்.

ஆனால் முருகேஷ் ஒன்றும் இந்த வலையில் சிக்கிய முதல் நபரல்ல. சென்னையை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் இதே பாணியில் கடந்த நவம்பர் மாதம் அழைப்பு வந்துள்ளது.

இதே பாணியில் விசாரணையும் நடந்துள்ளது. அதன் நீட்சியாக தன்னுடைய வங்கிக்கணக்கில் இருந்த ரூ.62.99 லட்சம் பணத்தை இழந்துவிட்டார் அவர்.

டிஜிட்டல் உலகில் புதிய புதிய பெயர்களில் ஒவ்வொரு நாளும் இணையவழி பண மோசடிகள் நடைபெறுகின்றன. அதில் தற்போது இணைந்துள்ள நவீன மோசடிதான் இந்த ஃபெட்எக்ஸ் மோசடி.

யாரெல்லாம் வங்கிக்கணக்கில் அதிக பணம், நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit) வைத்திருக்கிறார்களோ அவர்களை குறிவைத்தே இந்த மோசடி நடைபெறுகிறது என்கிறார் சென்னையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளராக இருக்கும் வினோத்குமார்.

அதுவும் தனியார் வங்கிகளில் அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கே இந்த மோசடி நடக்கிறது. இதற்கான தரவுகள் அந்த வங்கிகளின் வழியாகவோ அல்லது மூன்றாம் நபர்களின் வாயிலாக இந்த சைபர் குற்றவாளிகளின் கைகளுக்கு செல்கிறது என்கிறார் அவர்.

இதில் அதிகம் பாதிக்கப்படுவது வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஐடி துறையில் பணியாற்றுபவர்கள் தான் என்கிறார் சைபர் கிரைம் ஆய்வாளர் சங்கர்ராஜ் சுப்ரமணியன். கடந்த ஆண்டில் இருந்தே பெங்களூரில் இதே மோசடி அதிகம் நடந்துள்ளதாக செய்தியறிக்கைகள் கூறுகின்றன.

இந்த மோசடி கும்பல் பிரபலமானவர்களையும் கூட குறிவைத்துள்ளது. சமீபத்தில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவும் கூட தனது சமூக வலைதள பக்கத்தில் இதுபோன்றதொரு சம்பவத்தை பகிர்ந்திருந்தார்.

இதுகுறித்து அவரிடம் பேசியபோது, “இதே போல் ஃபெட்எக்ஸ் நிறுவனத்தில் இருந்து அழைக்கிறோம் என்று அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இதை பற்றி ஏற்கனவே அறிந்திருந்த அவர் இது என்ன மோசடியா என்று கேட்டவுடன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஃபெட்எக்ஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது, அது ஒரு மோசடி தவிர்த்து விடவும் என்று கூறினர்” என்றார்.

எப்படி இந்த மோசடி நடக்கிறது?

காவல் ஆய்வாளர் வினோத் குமார் கூறுகையில், “குற்றாவளிகள் Fedex நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என்று அழைத்து நீங்கள் அனுப்பிய பார்சலில் அல்லது உங்களுக்கு வந்த பார்சலில் சட்ட விரோத பொருட்கள் உள்ளதாக கூறுவார்கள்”

“நீங்கள் உங்களுடையது இல்லை என உறுதியாக பேசிவிட்டால் அழைப்பை துண்டித்து விடுவார்கள். ஆனால், நீங்கள் கொஞ்சம் பலவீனமாக பேசுவதாக தெரிந்தாலும் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள்” என்கிறார்.

அடுத்த கட்டத்தில் முருகேஷுக்கு நடந்தது போலவே காவல்துறை அதிகாரி போல பேசி, உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை டெப்பாசிட் செய்ய சொல்வார்கள். பரிவர்த்தனை சரியாக இருந்தால் அது மீண்டும் உங்களுக்கே வந்து விடும் என்று கூறுவார்கள்.

அதிலும் உங்களது தரவுகள் அனைத்தும் அவர்களிடம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் சொல்வது எல்லாமே உண்மை தான் என்பதால் அவர்கள் உண்மையான அதிகாரிகள் என்ற மனநிலை உங்களுக்கு வந்துவிடும்.

உங்களது வங்கிக்கணக்கு எண்ணை அவர்கள் கொடுக்கும் ஒரு ஆர்பிஐ எண்ணுடன் இணைக்க சொல்வார்கள். அது முடிய 4 மணிநேரம் ஆகும். அதுவரை உங்களிடம் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பின்னர் அது முடிந்து நீங்கள் பணத்தை பரிமாற்றம் செய்தவுடன் உங்களை அனைத்து வகையான வழிகளிலும் பிளாக் செய்துவிட்டு பணத்தை மோசடி செய்துவிடுவார்கள்.

“பெரும்பாலும் தங்களது வங்கி கணக்கில் அதிக பணம் வைத்திருப்பவர்கள் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கோ அல்லது வெளிநாடு பயணம் போன்றவற்றிற்காக வைத்திருப்பார்கள். அது போன்ற சூழலில் வழக்கு என்று சொல்லும்போது இந்த நிகழ்வுகள் பாதிக்கப்படுமோ என்று பயந்து நீங்களும் பதட்டமடைந்து அவர்கள் சொல்வதை செய்வதால் தான் ஏமாறுகிறீர்கள்” என்கிறார் வினோத்குமார்.

எப்படி இலக்கை தேர்ந்தெடுக்கிறார்கள்?

முருகேஷிடம் பேசிய மோசடிக் கும்பல் நீங்கள் அடிக்கடி ஹோட்டல்களில் அறை எடுத்து தாங்குவீர்களா? அதன் மூலம் கூட உங்கள் தரவுகளை யாராவது எடுத்து சட்டவிரோதமாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

இதில் நகைச்சுவை என்னவென்றால் அதை சட்டவிரோதமாக பயன்படுத்தியதே அந்த மோசடிக்கும்பல்தான். ஆனால், எப்படி அந்த கும்பலுக்கு சென்னையில் இருக்கும் முருகேஷின் ஆதார் எண் உள்ளிட்ட தரவுகள் கிடைத்திருக்கும்? சங்கர்ராஜ் சுப்ரமணியனிடம் அதற்கு பதில் உள்ளது.

மார்க்கெட்டிங் துறையில் தரவுத்தளம் என்பது பொதுவானதாக இருக்கிறது. அந்த துறையில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அதை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அதை பணம் கொடுத்து யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்கிறார் அவர்.

“கொரியரை பொறுத்தவரை யாருக்கு டெலிவரி செய்ய வேண்டும் என்பதும், அந்த நபர்களின் தகவல்களும் அந்நிறுவனத்திடம் இருக்கும். எனவே அங்கு இருக்கும் யாரோ ஒருவர் மூலம் அந்த தகவல்கள் மற்ற ஒருவரின் கைகளுக்கு செல்கிறது.”

உதாரணத்திற்கு டார்க் வெப்பில் மட்டும் 75 மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவுகள் விற்பனைக்கு உள்ளதாக கூறுகிறார் சங்கர்ராஜ் சுப்ரமணியன்.

“அந்த வகையில் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து சட்டபூர்வமாகவே ஏதாவது கொரியர் வருவதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால் கூட, அந்த தகவலை தெரிந்துக் கொள்ளும் குற்றவாளிகள் உங்களது பகுதியில் Open Source Intelligence (OSINT) என்ற முறையின் வழியாக உங்களை குறித்த தகவல்களை பெற முடியுமா என்று பார்ப்பார்கள்.”

“பின்னர் உங்களுக்கு போன் மூலமாக அழைத்து மேல் சொன்ன வழிகளில் மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். அதற்கு நீங்கள் மறுத்தால் உங்கள் அலுவலக முகவரியோ அல்லது வீட்டு முகவரியோ சொல்லி அங்கு காவலர்களை அனுப்புவதாக மிரட்டுவார்கள்.”

நீங்களும் உங்கள் பெயர் கெட்டு விடுமோ என்று பயந்து அவர்கள் சொல்வதை செய்ய தொடங்கி விடுவீர்கள். இப்படி கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் 390க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன என்கிறார் அவர்.

எங்கிருந்து இந்த கும்பல் இயங்குகிறது?

இதுபோன்ற மோசடிக் கும்பல்கள் சீனா வழியாகவே பயிற்சி பெற்று, இயங்குவதாக கூறுகிறார் காவல் ஆய்வாளர் வினோத்குமார்.

குறிப்பாக “கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பல அறைகள் இருக்கும் வீடுகளை வாடகை எடுத்து ஒரு கால் சென்டர் போல இவர்கள் இயங்குகிறார்கள். துபாயில் கூட இது போன்ற ஒரு குழு இருப்பதாக கூறப்படுகிறது” என்கிறார் அவர்.

ஆனால், இந்தியாவில் மொபைல் அழைப்பு மூலம் மோசடி செய்யும் கும்பல் பெரும்பான்மையாக உள்நாட்டை சேர்ந்தவையே என்று கூறுகிறார் சங்கர்ராஜ் சுப்ரமணியன்.

“வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகள் விகித அடிப்படையில் குறைவுதான். அங்கிருந்து அதிகமாக ஈமெயில் வழியாகவே இது மாதிரியான மோசடிகள் நடைபெறுகிறது” என்கிறார் அவர்.

சமீபத்தில் கூட நம்மில் பலருக்கும் வாட்சப் குறுஞ்செய்தி வழியாக பல வெளிநாட்டு எண்களில் இருந்து மோசடி செய்திகள் வந்தது. அப்போது தேசிய சைபர் குற்றப்பிரிவு இந்த தகவல்களை நம்பவேண்டாம் என்று அறிவிப்பே வெளியிட்டது.

“மொபைல் அழைப்புகள் வழியாக அதிக மோசடியில் ஈடுபவர்கள் இந்தியாவில் தான் இயங்குகின்றனர். இந்தியாவிலேயே இது போன்ற ஆயிரக்கணக்கான கால் சென்டர்கள் உள்ளன. குறிப்பாக வடஇந்தியாவில் உள்ள பல போலி கால் சென்டர்களில் இருந்து இது போன்ற அழைப்புகள் அதிகம் வருகின்றன. இங்கிருந்துதான் புதுப்புது பெயர்களில் இந்த மோசடிகள் நடைபெறுகின்றன” என்கிறார் சங்கர்ராஜ் சுப்ரமணியன்.

அழைப்பு வந்தால் உடனே செய்யவேண்டியது என்ன?

இது போன்ற அழைப்புகள் வரும்போது மக்கள் உடனே காவல்துறையை அணுக வேண்டும் என்கின்றனர் வினோத் குமார் மற்றும் சங்கர்ராஜ் சுப்ரமணியன்.

“இது போன்ற மோசடி அழைப்புகள் வரும்போது பயப்படாமல் அந்த கும்பலிடம் எங்களது வட்டார காவல்நிலையத்தில் சொல்லுங்கள். அவர்களிடம் நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்று சொல்லலாம். அதேபோல் நீங்களே உங்களது வீட்டிற்கு அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று இது குறித்து கேட்டு உண்மையை அறிந்துக் கொள்ளலாம்” என்கிறார் வினோத்குமார்.

அதைவிடுத்து குறுக்குவழியில் அதை பார்த்துக்கொள்ளலாம். பணம் கொடுத்துவிட்டால் பிரச்னை உடனே முடிந்துவிடும் என்று நினைத்தால் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் கூறுகிறார் அவர்.

காவல்நிலையம் செல்லாமலே பணத்தை காப்பாற்ற முடியும்

இதுபோன்ற இணைய மோசடிகளை தடுப்பதற்காக மத்திய அரசின் 1930 என்ற எண்ணும், www.cybercrime.gov.in என்ற ஈமெயில் முகவரியும் செயல்பட்டு வருகிறது என்று கூறுகிறார் வினோத்குமார்.

இந்த எண்ணில் அல்லது ஈமெயில் முகவரியில் மோசடி நடந்த உடனேயோ அல்லது எவ்வளவு சீக்கிரம் புகார் பதிவு செய்கிறீர்களோ அவ்வளவு வேகத்தில் உங்களது பணம் பாதுகாக்கப்படும்.

முதலில் இந்த எண்ணில் புகார் தெரிவித்தவுடன் உங்களுக்கு 15 இலக்க புகார் பதிவு எண் வழங்கப்படும். இதில் நீங்கள் புகார் தெரிவிக்கும்போது நீங்கள் செய்த பணப்பரிமாற்றத்தின் பதிவு எண்ணை கேட்பார்கள்.

அதை சரியாக கொடுத்துவிட்டால் உடனடியாக உங்களது வங்கிக்கணக்கில் இருந்து எந்த கணக்கிற்கு அந்த பணம் போகிறதோ அந்த கணக்கு உடனடியாக முடக்கப்படும்.

அதுவே அந்த கணக்கில் இருந்து வேறு ஒரு வங்கிக்கணக்கிற்கு அல்லது அடுத்தடுத்த வங்கிக்கணக்குகளுக்கு அந்த பணம் போயிருந்தாலும் அவை அனைத்துமே உடனடியாக முடக்கப்படும்.

அதுமட்டுமின்றி முடக்கப்படும் வங்கிக்கணக்குகளில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விவரமும் உங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

நீங்கள் எவ்வளவு சீக்கிரம் புகார் செய்கிறீர்களோ அந்த வேகத்தில் 100% உங்களது பணம் பாதுகாக்கப்படும் என்கிறார் வினோத்குமார்.

இதற்கு பின்பு உங்களது வட்டார காவல்நிலையத்தில் இந்த புகார் விவரங்களை கொண்டு வழக்கு பதிவு செய்ய வேண்டும். அங்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு , நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பின்னர் அங்கிருந்து உத்தரவு பெற்று உங்களது பணம் மீண்டும் உங்களிடமே ஒப்படைக்கப்படும். இதற்கு 4 முதல் 6 வாரங்கள் மட்டுமே ஆகும் என்கிறார் அவர்.

ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி, மோசடி நடந்து 3 நாட்களுக்குள் புகார் தெரிவித்தால் வேகமாக உங்கள் பணத்தை மீட்டு விடலாம்.

நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காதா?

ஒரு நிறுவனத்தின் பெயரில் மோசடி நடப்பது ஒன்றும் இது முதல்முறையல்ல. சமீபத்தில் கூட ஒரு பெரிய உணவு டெலிவரி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண் வழியாகவே மோசடி நடந்தது என்கிறார் சங்கர்ராஜ் சுப்ரமணியன்.

சில நாட்களுக்கு முன்பு உணவு டெலிவரி செய்வதில் பிரச்சனை என்று கூறி ஒருவர் கூகுளில் இருந்த அந்நிறுவனத்தின் கட்டணமில்லா எண்ணை அழைத்து பேசியுள்ளார்.

அந்த பக்கம் பேசிய நபரும் சரி உங்களது பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறோம் என்று கூறி ஒரு லிங்கை கிளிக் செய்ய சொல்லியிருக்கிறார்கள். லிங்கை கிளிக் செய்தவுடன் அவரிடம் இருந்த 45000 திருடப்பட்டுள்ளது.

இறுதியில் கூகுளில் இருந்த தொடர்பு எண் போலியானது என்று கணடறியப்பட்டது. அப்படிதான் தற்போது ஃபெட்எக்ஸ் நிறுவனத்தின் பெயரிலும் மோசடி நடக்கிறது.

ஆனால், கண்டிப்பாக இது அந்த நிறுவனத்திற்குள் பணியாற்றும் ஒருவரின் செயலாகவே இருக்கும். அந்த நபரே வாடிக்கையாளர்களின் தரவுகளை வெளியே கசிய விட்டிருக்க வேண்டும். அது யார் என்று கண்டுபிடித்துவிட்டால் இதை குறைக்கலாம் என்கிறார் சங்கர்ராஜ்.

ஃபெட்எக்ஸ் நிறுவனம் கூறுவது என்ன?

ஃபெட்எக்ஸ் நிறுவனத்தின் பெயரில் நடக்கும் இந்த மோசடி குறித்து யாராவது புகார் தெரிவிக்க வேண்டுமெனில் வழக்கம் போல் வாடிக்கையாளர் சேவை மையத்தின் ஐவிஆர் சேவை வழியாகவே செய்ய வேண்டும்.

அது தவிர இதுபோன்ற மோசடிகளில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது எப்படி என்று ஒரு சில முன்னெச்சரிக்கை தகவல்களை அந்நிறுவனம் தனது இணையதளத்தில் வழங்கியுள்ளது.

இந்த சமீபத்திய மோசடி குறித்து நாமும் அவர்களது வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகிய போது, இதுகுறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியே தரப்படாது என்று கூறப்பட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம். அதற்கு பதிலளித்துள்ள அந்நிறுவன தரப்பு,

“வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் இருந்து அழைப்பு வந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் எனவும், நிறுவன தரப்பிலிருந்து எந்த வழியிலும் இதுபோல் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படாது” என்றும் கூறியுள்ளது.

ஆனால், இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எந்த விதமான தகவல்களும் வழங்கப்படவில்லை.

இந்த மோசடி கும்பலை கைது செய்வது சாத்தியமா?

கடினம் என்றாலும் குறைந்தபட்சம் 4 மாதங்களாவது செலவிட்டால் இது போன்ற கும்பல்களை பிடிக்க முடியும் என்று கூறுகிறார் வினோத்குமார். ஆனால், அதற்கு அரசின் பல்வேறு வழிமுறைகள் உள்ளது.

பக்கத்து மாநிலத்தில் ஒருவரை கைது செய்ய வேண்டுமென்றாலே பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதுவே வெளிநாடு என்றால் சொல்லவா வேண்டும்? அதற்கென்று இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தமே போட வேண்டுமாம்.

அதன்படி “இந்தியாவும், அந்த குற்றவாளிகள் ஒளிந்திருக்கும் நாடும் MLAT (Mutual Legal Agreement Treaty) மற்றும் Extradition Treaty ஆகிய ஒப்பந்தங்களில் பரஸ்பரம் கையெழுத்திட்டிருக்க வேண்டும்” என்கிறார் வினோத்துகுமார்.

இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இது போன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களின் தகவல்களை பெற்று இந்தியாவுக்கு அழைத்து வர முடியும். அந்த வகையில் இந்தியா 40க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அதே சமயம் உள்ளூரோ வெளியூரோ இந்த மோசடி கும்பல்களை பிடிப்பதில் வேறு ஒரு சவாலும் இந்திய சைபர் குற்றப்பிரிவுக்கு இப்பதாக கூறுகிறார் சங்கர்ராஜ் சுப்ரமணியன்.

“மெய்நிகர் எண்கள்(Virtual Numbers) மூலமாக வரும் அழைப்புகளை கண்டுபிடிப்பது தான் அந்த சவால். இதன் மூலமாகவே பல மோசடிகள் நடக்கின்றன. ஆனால், அதை ட்ராக் செய்யும் தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் இல்லை” என்கிறார் அவர்.

"அதேபோல் வழக்கமான மொபைல் எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளை கண்டறிய முயற்சி செய்தால் அதன் முகவரி முதல் அனைத்து தகவல்களும் போலியாக உள்ளன. தற்போது ஒரு சில மொபைல் நிறுவனங்கள் சிம் வழங்கும் முறையை கண்டிப்பானதாக மாற்றிவிட்டாலும் கூட ஏதோ ஒரு ஓட்டை வழியாக போலி சிம்கார்டுகள் புழக்கத்தில் தான் உள்ளது. அதையும் என்ன என்று கண்டறிந்து சரி செய்தால் மட்டுமே மோசடிகளை குறைக்க முடியும்" என்று கூறுகிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)