'ரூ.24 கோடிக்கு தகுதியானவன்' என்று நிரூபித்த ஸ்டார்க்: கொல்கத்தா - லக்னௌ ஆட்டத்தில் என்ன நடந்தது?

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மிட்செல் ஸ்டார்க்கின் துல்லியமான பந்துவீச்சு, நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தியின் நெருக்கடி தரும் சுழற்பந்துவீச்சு, பில் சால்ட்டின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால், லக்னெள அணியை எளிதாக வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

கொல்கத்தாவில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 26 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அசத்திய ஸ்டார்க் மற்றும் பில் சால்ட்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வங்காள புத்தாண்டில் ரசிகர்களுக்கு மறக்க முடியாத பரிசை ஸ்டார்க், பில் சால்ட் அளித்துள்ளனர். பந்துவீச்சில் ஸ்டார்க்கும், பேட்டிங்கில் சால்ட்டும் மிரட்டி, வெற்றியை எளிதாக்கினர்.

அதிரடியாக பேட் செய்த பில் சால்ட் 26 பந்துகளில் அரைசதம் அடித்து, 47 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். 2 முக்கிய கேட்சுகளையும் பிடித்த சால்ட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பந்துவீச்சில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், தன்னை கொல்கத்தா அணி 24.75 கோடி ரூபாய் ொடுத்து வாங்கியது சரிதான் என்று இந்த போட்டியில் நிரூபித்தார். 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னெள அணியை சுருட்ட முக்கியக் காரணமாகினார்.

அது மட்டுமல்லாமல், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருவரும் சுழற்பந்துவீச்சில் லக்னெள பேட்டர்களின் கரங்களைக் கட்டிப் போட்டனர். இருவரும் ஓவருக்கு 5.8 ரன் வீதம் 8 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடிய ஆடுகளம் தான். ஆனால், சிறிது நிலைத்து நிதானமாக பேட் செய்ய வேண்டும். ஆனால் லக்னெள அணியில் பூரன் ஒருவரைத் தவிர வேறு எந்த பேட்டரும் சராசரியாக 5 ஓவர்கள் கூட நிலைத்து பேட் செய்யவில்லை. 50 ரன்களுக்கு கூட யாரும் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை.

லக்னெள அணி தோற்றது ஏன்?

இக்கட்டான நேரத்தில் ஆங்கர் ரோல் எடுக்கும் கேப்டன் ராகுல் (39), கடந்த போட்டியில் அதிரடியாக பேட் செய்த பதோனி (29), பூரன் (45) ஆகியோர் மட்டுமே ஓரளவு ரன் சேர்த்தனர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

தேவ்தத் படிக்கல் தொடர்ந்து சொதப்புகிறார் என அவருக்குப் பதிலாக ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்ட தீபக் ஹூடாவும் சரிவர திறமையை வெளிப்படுத்தவில்லை.

லக்னெள அணிக்காக ஷாமர் ஜோஸப் இன்று முதல் போட்டியில் ஆடினார். பந்துவீச்சில் மோசமாக செயல்பட்ட ஜோஸப் 4 ஓவர்கள் வீசி 47 ரன்களை வாரி வழங்கினார், இதில் 3 வைடுகள், 3 நோபால்கள் என ஜோஸப் உதிரிகளையும் விட்டு வைக்கவில்லை.

பீல்டிங்கிலும் லக்னெள அணி கட்டுக்கோப்பாகச் செயல்படவில்லை. பில் சால்ட்டுக்கு மட்டும் இன்று இரு கேட்சுகளை தவறவிட்டனர். இதில் ஏதாவது ஒரு கேட்சைப் பிடித்திருந்தாலே அவரை குறைந்த ரன்னில் ஆட்டமிழக்கச் செய்திருக்கலாம். இரு கேட்சுகளை கோட்டைவிட்டதற்கான விலையை லக்னெள அணி கொடுத்தது.

அது மட்டுமல்லாமல் கொல்கத்தா அணி உதிரிகளாக 8 ரன்கள் மட்டுமே கொடுத்தது. ஆனால், லக்னெள அணி 22 ரன்களை வாரி வழங்கியது. மேலும் 20 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை அடிக்க கொல்கத்தா பேட்டர்களை அனுமதித்தது. இதுவே 24 பந்துகளில் 100 ரன்களை வாரி வழங்கி தோல்வியை எளிதாக ஒப்புக்கொண்டுவிட்டது.

இதில் உதிரிகள் வரிசையில் 22 ரன்களையும் சேர்த்தால் 122 ரன்கள் கொல்கத்தா அணிக்கு எளிதாகக் கிடைத்துவிட்டது. இந்தத் தவறுகளுக்கு எல்லாம் லக்னெள அணி விலை கொடுத்துள்ளது.

லக்னெள அணிக்கு ஆறுதலான அம்சம், மோசின்கான் பந்துவீச்சு தான். பவர்ப்ளே ஓவர்களிலேயே கொல்கத்தா அணியின் சுனில் நரேன் (6), ரகுவன்ஷி (7) விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து நெருக்கடி அளி்த்தார். ஆனால், மோசின்கான் அமைத்துக் கொடுத்த பாதையை சக வேகப்பந்துவீச்சாளர்களான யாஷ் தாக்கூர், ஜோஸப் இருவரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சுழற்பந்துவீச்சிலும் குர்னல் பாண்டியா, பிஸ்னோய் பந்துவீச்சும் பெரிதாக அணிக்கு உதவவில்லை.

லக்னெள அணி பந்துவீச்சில் பெரிதாக திணறுவதற்கும், 160 ரன்களுக்கு மேல் அடித்தும் டிஃபெண்ட் செய்ய முடியாமல் திணறுவதற்கும் இளம் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இல்லாதது முக்கியக் காரணமாகும். அது மட்டுல்லாமல் பந்துவீச்சுக்கு ஏராளமான வீரர்கள் பெஞ்சில் இருந்தாலும் அதை பயன்படுத்தாமல் இருக்கிறது. நவீன் உல் ஹக்கிற்கு பதிலாக அல்ஜாரி ஜோஸப் களமிறங்கினர்.

நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றி, இந்திய பந்துவீச்சாளர் ஷிவம் மாவி, சுழற்பந்துவீச்சில் அனுபவம் நிறைந்த அமித் மிஸ்வை பயன்படுத்தி இருக்கலாம்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் கெயில் மேயர்ஸ்க்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. சிறந்த கலவை இல்லாதது, தொடர்ந்து ஒரே மாதிரியான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது எதிரணி எளிதாக வியூகத்தை அமைத்துவிடக் கூடும்.

'தோல்வியை பற்றி யோசிக்காமல் மீண்டெழுவோம்'

லக்னெள அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில் “எங்களுக்கு இது கடினமான நாள். எங்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு அணியும் இதுபோன்றுதான் வெற்றி பெற நினைக்கிறது. ஒவ்வொரு போட்டியைப் பற்றியும் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கக்கூடாது. எங்கு தவறு நடந்தது என்பதை கண்டறிந்து சரிசெய்து அடுத்த போட்டியில் மீண்டெழுவோம்."

"நாங்கள் மோசமான ஷாட்கள் அடித்தோம் எனக் கூறமுடியாது. அதை சரியாக முறையில் செயல்படுத்தவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் விட்டதும் தோல்விக்கு காரணம். நாங்கள் 30 ரன்கள் குறைவாக சேர்த்துள்ளோம். விக்கெட் கைவசம் இருந்திருந்தால், கூடுதலாக ரன்கள் சேர்த்திருப்போம்" என்று கூறினார்.

மேலும், "பந்துவீச்சில் தான் போட்டியை கோட்டை விட்டிருக்கிறோம். தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுத்தாலும் அதிகமான பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தோம். தொடர் தோல்விகளால் பதற்றப்படவில்லை, முடிவுகளைப் பற்றி நினைக்காமல் நம்பிக்கையுடன் ஆட்டத்தை எதிர்கொள்வோம்"

"கடந்த 2 ஆட்டங்களாக எங்களால் 160 ரன்களுக்கு மேல் குவிக்க முடியாமைக்கு என்ன காரணம் என்று ஆலோசிப்போம். 180 முதல் 200 ரன்களை எட்டுவதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து அணிக்குள் ஆலோசிப்போம்” எனத் தெரிவித்தார்

விக்கெட் சரிவு

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டீ காக், ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் முதல் இரு பந்துகளில் பவுண்டரி அடித்து டீ காக் அதிரடியாகத் தொடங்கினார்.

அரோரா வீசிய 2வது ஓவரில் ராகுல் சிக்ஸர் விளாச, அதே ஓவரின் கடைசிப்பந்தில் நரேனிடம் கேட்ச் கொடுத்து டீ காக் 10 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து தீபக் ஹூடா களமிறங்கினார். ஸ்டார்க் ஓவரில் திணறிய ஹூடா ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ராகுலிடம் வழங்க, அவர் பவுண்டரி விளாசினார்.

ஸ்டார்க் வீசிய 5-வது ஓவரில் நினைத்தது போலவே நடந்தது. ஸ்டார்க் ஓவரில் திணறிய ஹூடா 8 ரன்னில் ராமன்தீப் சிங்கிடம் பேக்வேர்ட் பாயின்ட்டில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த பதோனி, ராகுலுடன் சேர்ந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் சேர்த்திருந்தது.

திணறடித்த நரைன் மற்றும் சக்ரவர்த்தி

நரைன், ஹர்சித் ராணா வீசிய இரு ஓவர்களிலும் ராகுல், பதோனியால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. இருவரும் சேர்ந்து லக்னோ ரன்ரேட்டை கட்டிப் பிடித்தனர். 2 ஓவர்களுக்குப் பின் வருண் வீசிய 10-வது ஓவரில் தான் பதோனி பவுண்டரி அடித்தார்.

ரஸல் வீசிய 11-வது ஓவரில் கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் டீப் மிட்- விக்கெட்டில் ராமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ராகுல் 39 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் வந்த வேகத்தில் ரஸல் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார்.

வருண் சக்ரவர்த்தி வீசிய 12வது ஓவரில் பதோனி சிக்ஸர் விளாசிய நிலையில் அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்டாய்னிஷ் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த பூரன், பதோனியுடன் சேர்ந்தார்.

நரைன், சக்ரவர்த்தி இருவரும் லக்னோ அணியின் ரன்ரேட்டுக்கு பெரிய தடைக்கல்லாக மாறினர். சக்ரவர்த்தி வீசிய 14வது ஓவரில் பூரன் ஒரு சிக்ஸர் விளாசி அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு உயர்த்தினார்.

ஆறுதல் அளித்த பூரன்

நரைன் வீசிய 15-வது ஓவரில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டது. முதல் பந்திலேயே பதோனி கால்காப்பில் வாங்க அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் நடுவர் அக்சய் அவுட் வழங்க மறுத்துவிட்டார். 3வது நடுவர் சென்றும் அவுட் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. நரைன் ஓவருக்கு திணறிய பதோனி அதே ஓவரின் 4வது பந்தில் ரகுவன்ஷியிடம் கேட்ச் கொடுத்து 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

6வது விக்கெட்டுக்கு குர்னல் பாண்டியா களமிறங்கி, பூரனுடன் சேர்ந்தார். இரு ஓவர்களாக லக்னோ அணி ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட அடிக்கவில்லை. 16-வது ஓவரை வீசிய வருண், லக்னோ பேட்டர்களை ரன் சேர்க்கவிடாமல் திணறவிட்டார்.

18-வது ஓவரை வீசிய அரோராவின் பந்துவீச்சை குறிவைத்து பூரன் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். அவரின் ஓவரில் பூரன் இரு சிக்ஸர்களை விளாசி 18 ரன்களைச் சேர்த்தார்.

19-வது ஓவரை ஹர்சித் ராணா வீசினார். இந்த ஓவரையும் குறிவைத்த பூரன் 2 பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் சால்டிடம் கேட்ச் கொடுத்து பூரன் 45 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த அர்ஷத் கானும் 5 ரன்னில் ஸ்டார்க் பந்தில் போல்டாக லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது.

கொல்கத்தா அணித் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நரைன், சக்கரவர்த்தி இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர், சராசரியாக ஓவருக்கு 5.80 ரன்கள் விட்டுக் கொடுத்தனர். 16 டாட் பந்துகளையும் வீசினர்.

கொல்கத்தா அணி எளிதான வெற்றி

162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. பில் சால்ட், நரைன் ஆட்டத்தைத் தொடங்கினர். மோசின் கான் வீசிய 2 ஓவரில் நரைன் 6 ரன்னில் ஸ்டாய்னிஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரகுவன்ஷியும் 7 ரன்னில் மோசின்கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இரு விக்கெட்டுகளை பவர்ப்ளே ஓவரில் கொல்கத்தா இழந்தது.

3வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ், சால்டுடன் இணைந்தார். குர்னல் பாண்டியா ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய சால்ட் ஆட்டத்தால் பவர்ப்ளேயில் கொல்கத்தா 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்தது. சால்ட் 31 ரன்கள் சேர்த்திருந்தபோது மீண்டும் 2வது முறையாக அவர் கொடுத்த கேட்சை லக்னெள வீரர்கள் கோட்டைவிட்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய சால்ட், அர்ஷத் கான் ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகள் விளாசி, 26 பந்துகளில் அரைசதம் நிறைவு செய்தார்.

அதேபோல யாஷ் தாக்கூர் வீசிய 14-வது ஓவரிலும் சால்ட் 3 பவுண்டரிகளை விளாசி ஃபினிஷிங் டச் கொடுத்தார். மோசின் கான் வீசிய 15-வது ஓவரில் மிகப்பெரியசிக்ஸர் விளாசினார். சால்ட் 47 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து(14 பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சால்ட் அதிரடியாக பேட் செய்ய ஸ்ரேயாஸ் நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தார். பெரிய ஷாட்களுக்கு செல்வதை ஸ்ரேயாஸ் தவிர்த்தார். கொல்கத்தா அணி இலக்கை நெருங்கிய போதுதான் அர்ஷத்கான், பிஸ்னோய் ஓவரில் பவுண்டரிகளை விளாசி வெற்றியை விரைவுப்படுத்தினார்.

ஸ்ரேயாஸ் 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ்-சால்ட் இருவரும் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற்றுக் கொடுத்தனர்.

புள்ளிப் பட்டியலில் மாற்றம்

கொல்கத்தா அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் நிலையில் லக்னெள அணி தொடர்ந்து 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது. கொல்கத்தா அணி 5 போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வி என 8 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் 1.688 என்ற கணக்கில் வலுவாக 2வது இடத்தில் நீடிக்கிறது.

லக்னெள அணி 6 போட்டிகளில் 3 தோல்வி, 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் 0.038 என்ற கணக்கில் 5வது இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு தோல்வியைச் சந்தித்தால் லக்னெள அணியின் நிகர ரன்ரேட் மைனசில் சென்றுவிடும் என்பதோடு, இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை வென்றாலே லக்னெளவுக்கு புள்ளிக்கணக்கில் நெருக்கடிக்கு வந்துவிடும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)