மும்பையின் தவறுகள் திருத்தப்பட்டனவா? பும்ராவை ஹர்திக் கச்சிதமாகப் பயன்படுத்தியது எப்படி?

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சொந்த மைதானம், 360 டிகிரி வீரர் சூர்யகுமார் அணிக்குத் திரும்பியது, பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு என பல சாதகமான அம்சங்களை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட மும்பை அணி ஐபிஎல் தொடரில் 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. 197 ரன்களை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 27 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை ஒருவெற்றி மட்டும்தான் வெற்றுள்ளது, அதன்பின் தொடர்ந்து 5 தோல்விகளால் துவண்டுபோயுள்ளது. 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் ஆர்சிபி பின்தங்கி இருக்கிறது, நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.124 ஆகக் குறைந்துள்ளது.

மும்பை வான்கடே மைதானம் மிகச்சிறியது, அதிலும் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி என்று வர்ணிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, ஆர்சிபி அணி சேர்த்த 196 ரன்கள் என்பது பேட்டிங் பலமுள்ள மும்பை அணிக்கு எதிராக நிச்சயமாகப் போதாது. 250 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தால்தான், வான்கடே மைதானத்தில் சவாலான இலக்காக இருந்திருக்கும். 197 ரன்கள் சேஸிங் என்பது வான்கடே மைதானத்தில் அதிலும்மும்பை அணி சேஸிங் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

பும்ராவும், மற்ற பந்துவீச்சாளர்களும்

டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் இரு மாதங்களே இருக்கும் நிலையில் பும்ராவின் பந்துவீச்சு மெருகேறுவது இந்திய அணிக்கு சாதகமான அம்சம். இந்த ஆட்டத்தில் கிங் கோலி, டூப்பிளசிஸ் உள்பட 5 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தி, ஆர்சிபி பேட்டிங் சரிவுக்கு காரணமாகினார். 4 ஓவர்கள் வீசிய பும்ரா 13 டாட்பந்துகளுடன், 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

பும்ரா வீசிய 19வது ஓவரில் 3-ஆவது பந்தில் சவுகானும், 4வது பந்தில் வியாசக்கும், 17-வது ஓவரை வீசும்போது 4வது பந்தில் டூப்பிளசிஸும், 5வது பந்தில் லாம்ரோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவுடன் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அவரை மேலே தூக்கி கொண்டாடினார்.

டெல்லி அணிக்கு எதிராக கடந்த ஞாயின்று நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 439 ரன்கள் குவித்தாலும், பும்ராவின் பந்துவீச்சு மட்டும் தனித்து நின்றது. அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சும் பேட்டர்களால் பந்தாடப்பட்டநிலையில் பும்ராவின் பந்துவீச்சை பேட்டர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்திலும் பும்ரா 4 ஓவர்கள் வீசி 22ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனித்து காணப்பட்டார்.

ஆர்சிபி அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராதான். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் 2வது முறையாகவும் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், 21 முறை 3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 4வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி, மும்பை பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 31.3 ஓவர்கள் வீசி,6 விக்கெட்டுகளை வீழ்த்தி, 32 பவுண்டரி, 25 சிக்ஸர்களை வழங்கினர். இவர்களின் எக்னாமி ரேட்டும்11.80 ஆகவும், சராசரியும் 62 ஆக இருந்தது, டாட்பால் சதவீதம் 32.28 ஆக இருந்தது.

ஆனால், பும்ரா மட்டும் இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி ஒரு பவுண்டரி,ஒரு சிக்ஸர், 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ராவின் எக்னாமி 5.25 என மிகக்குறைவாகவும், சாரசரி4.20 என்றும், டாட்பால் சதவீதம் 54.17 என அதிகமாகவும் இருக்கிறது. 12 பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 372 ரன்கள் வழங்கிய நிலையில் பும்ரா மட்டும் 21 ரன்கள் வழங்கிசிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

“என்னுடைய அதிர்ஷ்டமே இவர்தான்”

வெற்றிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ அற்புதமான வெற்றி, இதைதான் விரும்புகிறோம். நாங்கள் வென்றவிதமும் சிறப்பு. இம்பாக்ட் வீரரால் எங்களுக்கு கூடுதலாக பந்துவீச்சாளரை பயன்படுத்த முடிந்தது இது இன்னும் உதவியாக இருந்தது. ரோஹித், கிஷன் சிறப்பான தொடக்கத்தை அளித்து எளிதாக முடிக்க உதவினர். இலக்கு குறைவானது அல்ல, ரன்ரேட் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். பும்ரா என்னுடன் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம். ஒவருக்கு ஓவர் அற்புதம் செய்கிறார். ஒவ்வொரு ஓவரிலும் நான் அவரிடம் விக்கெட் கேட்பேன்.”

“அதிகமான அனுபவம், நம்பிக்கை கொண்டவர் பும்ரா. சூர்யாவின் வருகையும், அரைசதமும் வரவேற்கக்கூடியது. சூர்யாவுக்கு எதிரான அணியிலும் கேப்டனாக நான் இருந்திருக்கிறேன், எந்த பேட்டரையும் இதுபோன்று ஷாட்கள் அடித்து நான் பார்த்தது இல்லை” எனத் தெரிவித்தார்

வான்கடேவும் மும்பையும் 50வது வெற்றியும்

மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலம், வான்ஹடே மைதானத்தில் 50 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது.ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 50 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது.(இதில் சூப்பர் ஓவர் வெற்றி சேர்க்கப்படவில்லை)

ஆர்சிபி அணி 11-வது முறையாக ஆர்சிபி அணிக்கு 190 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட ஸ்கோரை டிபெண்ட் செய்ய தவறியுள்ளது. அது மட்டுமல்லாமல் 9-வது முறையாக 190 ரன்களுக்கு மேல் மும்பை இந்தியன்ஸ் அணி 190 ரன்களுக்கு அதிகமான ஸ்கோரை வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக பவர்ப்ளே ஓவருக்குள் 4 பேட்டர்கள் இதுவரை அரைசதம் அடித்துள்ளனர். அதில் 2 முறை இஷான் கிஷன் (ஆர்சிபி, சன்ரைசர்ஸ்) அடித்துள்ளார், 2008ல் ஜெயசூர்யாவும், 2014ல் லின்டல் சிம்மன்ஸும் அடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் கூட்டணி முதல்விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் தொடக்க ஜோடி 100ரன்களுக்கு மேல் சேர்த்தது இதுதான் முதல்முறையாகும். ரோஹித் சர்மா இதுவரை 92 இன்னிங்ஸ்களில் தொடக்க வீரராகக் களமிறங்கியும் ஒருமுறைகூட 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இல்லை, அதிகபட்சமாக குயின்டன் டீ காக்குடன் சேர்ந்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்டது. ஆனால் 100 ரன்கள் எனும் மைல்கல் நேற்றுதான் அடைந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் பேட்டர்களின் அதிரடி

மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 3 பேட்டர்கள், ஒரு பந்துவீச்சாளர்தான் முக்கியக் காரணம். இஷான் கிஷன்69(34பந்துகள்), ரோஹித் சர்மா38, சூர்யகுமார் யாதவ்52(19பந்துகள்), பும்ரா(5 விக்கெட்) ஆகியோரின் பிரதான பங்களிப்புதான். இஷான், ரோஹித்சர்மா இருவரும் மிகப்பெரிய ஸ்கோரை துரத்திச் செல்லும் பயணத்தில் 8 ஓவர்களில் 100 ரன்கள் எனும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துப் பிரிந்தனர்.

ரோஹித் சர்மா 38 ரன்கள் சேர்த்தாலும் தனக்கே உரிய ஸ்டைலில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதிலும் இஷான் கிஷன் முதல் இரு ஓவர்களக்குப்பின் ஆர்சிபி வீரர்கள் வீசிய பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்கவிட்டு 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

3வது விக்கெட்டுக்கு வந்த 360 டிகிரிவீர் சூர்யகுமார் காயத்தால் நீண்ட காலத்துக்குப்பின் களமிறங்கினார். முதல் போட்டியில் டக்அவுட்டான சூர்யகுமார், அனைத்துக்கும் சேர்த்து பதிலடி கொடுத்து, 17 பந்துகளில் அதிரடியான அரைசதத்தை அடித்து இலக்கை துரத்தும் பணியை எளிதாக்கினார்.

இந்த ஐபிஎல் சீசனில் குறைந்தபட்ச பந்துகளில் அரைசதம் அடித்த 2வது வீரராக சூர்யகுமார் இடம் பெற்றார். சன்ரைசர்ஸ் பேட்டர் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் அடித்தநிலையில், சூர்யகுமார் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிலும் டாப்ளேயின் 13-வது ஓவரில் 4,6,4,4 என விளாசி ஸ்கை அரைசதம் அடித்தார். ஒட்டுமொத்தமாக ஸ்கை கணக்கில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடக்கம். சூர்யகுமார் 15 ரன்கள் சேர்த்திருந்தபோதே ஆட்டமிழந்திருக்க வேண்டும், ஆனால் மேக்ஸ்வெல் கேட்சை நழுவவிட்டதற்கு ஆர்சிபி விலை கொடுத்தது.

கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 3 சிக்ஸர்கள் உள்பட 6 பந்துகளி்ல் 21 ரன்களும், திலக் வர்மா 16 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

மும்பை போன்ற தட்டையான, பேட்டர்களுக்கு மட்டும் ஒத்துழைக்கும் மைதானத்தில் 250 ரன்கள் சேர்த்தாலும், சிஎஸ்கே, ஆர்சிபி, கொல்கத்தா போன்ற வலுவான பேட்டர்களை வைத்திருக்கும் அணிகளுக்கு சவாலான ஸ்கோராக இருக்கப் போவதில்லை.

தினேஷ் கார்த்திக்கின் ‘மாஸ்டர் கிளாஸ்’

2018ம் ஆண்டு இலங்கையில் நடந்த நிடாஸ் கோப்பைக்குப்பின் தினேஷ் கார்த்திக்கின் ஆக்ரோஷமான ஆட்டத்தை நேற்று காணமுடிந்தது. ஆர்சிபி பேட்டர்கள் அனைவருக்கும் சிம்மசொப்னமாக பந்துவீசிய பும்ராவின் பந்துவீச்சை எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸர் அடித்தபோது ரசிகர்களின் ஆரவாரக்குரல் அரங்கை அதிரச் செய்தது. ஒருகாலத்தில் மும்பை அணிக்கு டிகே விளையாடிய நினைவு வந்து ரசிக்கர்கள் டிகே, டிகே என்று உச்சரித்தனர்.

டிகே இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், ஒவ்வொரு போட்டியிலும் ஆர்சிபி அணிக்காக ஆகச்சிறந்த பங்களிப்பை பேட்டிங்கில் டிகே அளித்து வருகிறார். ஆர்சிபி அணி முதல் வெற்றி பெற்றதே டிகேயின் அற்புதமான பேட்டிங்கான். டிகே அடித்த ஷாட்கள் அனைத்தும் அற்புதமானவை, யாருடைய பந்துவீச்சு எனப் பார்க்காமல் வெளுத்துவாங்கினார்.

ஒரு கட்டத்தில் டிகேவுக்கு எப்படி பந்துவீசுவது என்பது குறித்து கேப்டன் பாண்டியா களத்தில் சிறிய ஆலோசனை நடத்தும் நிலை ஏற்பட்டது. அதிலும் மத்வால் வீசிய 16-வது ஓவரில் ஸ்கூப்பில் 2 பவுண்டர்களிள் அடித்து 19 ரன்களைச் சேர்த்தார். மத்வால்வீசிய கடைசி ஓவரிலும் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 17 ரன்களை டிகே சேர்த்து, 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். டிகே தான் சந்தித்த கடைசி 9 பந்துகளில் மட்டும் 1,1,6,6,0,6,6,4,1 என்று ரன்களை விளாசினார்.

2023ம் ஆண்டு சீசனில் ஆர்சிபிக்காக ஆடி ரன்கள் சேர்த்ததைவிட, டிகே இந்த சீசனில் அதிகமாக ரன்கள் சேர்த்துவிட்டார். இந்தப் போட்டியிலும் டிகேயின் பங்களிப்பு முக்கியத்துவமானது என்றாலும், எதுவுமே ஆர்சிபிக்குப் போதவில்லை, அதை தக்கவைக்கும் திறனுள்ள பந்துவீச்சுஇல்லை.

ஆர்சிபி தோல்விக்கு காரணம் என்ன?

ஆர்சிபி அணியில் நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் டூப்பிளசிஸ்(61), பட்டிதார்(50) டிகே(53) ஆகியோரின் பங்களிப்புதான் பிரதானமாகும். தொடக்க ஆட்டக்காரர்களான கோலி(8), வில் ஜேக்ஸ்(8), மேக்ஸ்வெல்(0), லாம்ரோர்(0), சவுகான்(9) ஆகியோர் ஏமாற்றினர்.

அதிலும் மேக்ஸ்வெல் இந்த சீசனில் 5வது போட்டியிலும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். இதே வான்ஹடே மைதானத்தில்தான் உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒற்றை பேட்டராக ஆட்டத்தை மேக்ஸ்வெல் வென்று கொடுத்தார், ஆனால், இந்த சீசனில் இதுவரை மேக்ஸ்வெல் பேட்டிங்கில் பெரிதாக எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை.

‘கேஜிஎப்’ தோல்வி

கேஜிஎப் எனப்படும் கோலி, மேக்ஸ்வெல், டூப்பிளசிஸ் ஆகியோர்தான் ஆர்சிபியின் தூண்கள் என்று ரசிகர்களால் நம்பப்பட்டு வருகிறது, இவர்கள்தான் நட்சத்திர பேட்டர்கள் இவர்கள் சொதப்பும்போது அணிக்கு பெரிதாக ஸ்கோர் வராது. இந்த 3 பேரில் யாரேனும் ஒருவர்தான் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆடுகறார்களேத் தவிர 3 பேரும் ஒரே நேரத்தில் சிறப்பாக பேட் செய்வதில்லை. இதனால் ஆர்சிபி அணியால் பெரிய ஸ்கோருக்கு செல்ல வேண்டிய வாய்ப்புகள் இருந்தபோதிலும் அந்த வாய்ப்பு நழுவிப்போகிறது.

இதுவரை விராட் கோலி ஒரு சதம், அரைசதம், டூப்பிளசிஸ் அரைசதம் என்று கணக்கை தொடங்கினாலும் மேக்ஸ்வெல் களத்தில் நின்று பேட் செய்த நிமிடங்களை எண்ணிவிடலாம். 5 போட்டிகளில் மேக்ஸ்வெல் 2 முறை டக்அவுட் ஆகியுள்ளார். பந்துவீச்சிலும் மேக்ஸ்வெல் பெரிதாகப் பங்களிப்பும் செய்யவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணியில் மேக்ஸ்வெல் இருந்தபோது ‘என்ன செய்தாரோ அதே பணியை’ தற்போது ஆர்சிபி அணிக்கு செய்து வருகிறார்.

பந்துவீச்சு ஒட்டுமொத்த தோல்வி

ஆர்சிபி அணி அடுத்துவரும் போட்டிகளில் எத்தனை பெரிய ஸ்கோர் அடித்தாலும் அதை டிபெண்ட் செய்ய முடியாது. ஏனென்றால் அதற்குத் தகுதியான பந்துவீச்சாளர்கள் இல்லை என்று ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் விமர்சிக்கிறார்கள்.

சுழற்பந்துவீச்சில் சர்வதேச அனுபவம் கொண்ட ஒரு சுழற்பந்துவீச்சாளர்கூட இல்லை, வேகப்பந்துவீச்சில் சிராஜ் பந்துவீச்சை எளிதாக அடிக்கிறார்கள், மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குகிறார்கள். இந்த ஆட்டத்தில் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் அனைவரும் 12 ரன்ரேட்டுக்கு அதிகமாகத்தான் ஓவருக்கு வாரி வழங்கினர்.

வான்கடே விக்கெட்டில் எந்த அளவுக்கு வேகத்தை அதிகப்படுத்தி பேட்டருக்கு ஒரு பந்துவீச்சாளர் வீசுகிறாரோ அதைவிட பன்மடங்கு வேகத்தில் பந்து சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் செல்லும். இது ஆடுகளத்தின் ரிப்போர்டாகும். அதனால்தான் பும்ரா தனது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களையும், வேகத்தைக் குறைத்தும் வீசினார். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் வேரியேஷன்களை தேடும்நிலைதான் இருந்தது. பேட்டர்களுக்கு எந்தச் சிரமும் இல்லாமல் பேட்டுக்கே பந்தை வீசி, பவுண்டரி, சிக்ஸர்களை வாரி வழங்கினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)