பாலியல் துன்புறுத்தல் பற்றி இந்திய வீராங்கனைகள் வெளிப்படையாக பேசாதது ஏன்?

இந்திய விளையாட்டு வீராங்கனைகள்- பாலியல் துன்புறுத்தல்கள்

பட மூலாதாரம், SAJAD HUSSAIN

    • எழுதியவர், ஜான்வி மூலே
    • பதவி, பிபிசி மராத்தி

இந்தியாவில் புகழ்பெற்ற குத்துசண்டை வீராங்கனைகளில் ஒருவரான வினேஷ் போகாட் கடந்த ஜனவரி 18ஆம் தேதி டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் ஆகியோரும் இந்த தர்ணாவில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங், குறைந்தது 10 மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக வினேஷ் போகாட் மற்றும் பிறர் குற்றம்சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டை பிரிஜ் பூஷண் சரண் சிங் மறுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரனை நடத்த குழு ஒன்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அமைத்தது.

இந்திய விளையாட்டு துறையின் மீ டூ தருணம் என்று சிலர் இந்த நிகழ்வை குறிப்பிடுகின்ற அதேவேளையில் இது குறித்து வினேஷ் போகாட், மற்ற வீராங்கனைகள் முன்னரே பேசாதது ஏன் என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

“ஏன் அவர் முன்பே எதுவும் கூறவில்லை”? என்ற இந்த கேள்வி, ஒரு பெண் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைக்கும்போதெல்லாம் எழுப்பப்படுகிறது.

பாலியல் துஷ்பிரயோகம் பற்றி பேசுவது அவ்வளவு எளிதானது அல்ல என உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், இந்திய விளையாட்டுத் துறையில் நிலவும் சூழல், இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து பெண்கள் பேசுவதை மேலும் கடினமாக்குகிறது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்திய விளையாட்டுத் துறையின் அதிகார கட்டமைப்பு

இந்தியாவில் உள்ள விளையாட்டு கூட்டமைப்புகளில் பெரும்பாலானவற்றின் தலைவராக ஆண்களே உள்ளனர் என்பது வெளிப்படையான உண்மையாகும். இவர்கள் அரசியல் தொடர்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் அதிகாரம் நிறைந்த அல்லது பண வளம் மிக்க தொழிலதிபர்களாக இருப்பார்கள்.

தேசிய அளவில் என்றில்லை, உள்ளூர் அளவிலும் அதிகாரம் பொருந்திய ஆண்களே விளையாட்டு அமைப்புகளில் முக்கிய பதவிகளில் உள்ளனர்.

“அதிகாரம் பொருந்திய ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படும்போது நிச்சயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றே அனைவரும் கருதுகின்றனர்” என பெயரை குறிப்பிட விரும்பாத பளு தூக்கும் வீராங்கனை ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

“இதுபோன்ற சக்திவாய்ந்த நபர்கள் உள்கட்டமைப்பை உருவாக்க உதவுவார்கள் மற்றும் விளையாட்டிற்கு 'அந்த அமைப்பு' வேலை செய்ய உதவுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களில் சிலர் கூட்டமைப்பே தங்களுக்கு சொந்தமானது போன்றும் விளையாட்டு வீராங்கனைகள் தங்களுக்கு சொந்தமானவர்கள் போன்றும் நடந்துகொள்கின்றனர். இத்தகையவர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல” என்றும் அந்த வீராங்கனை நம்பிடம் கூறினார்.

அணியில் இருந்து நீக்கப்படுவது என இதன் பின்விளைவுகள் என்பதும் கடுமையாக இருக்கும். இது வீராங்கனைகளின் விளையாட்டு எதிர்காலத்தை பாதிப்பதோடு அவர்களை மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கும். நம்மிடம் பேசிய வீராங்கனை விஷயத்தில், அவர் விளையாடுவதையே விட்டுவிட முடிவு செய்தார்.

பயிற்சியாளர் - வீரர்கள் உறவில் கூட இத்தகைய ஆதிக்க நிலை உள்ளது.

இந்திய விளையாட்டு வீராங்கனைகள்- பாலியல் துன்புறுத்தல்கள்

பட மூலாதாரம், Ani

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சேகரித்த தரவுகளின்படி, `2010 முதல் 2020 வரை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் 45 பாலியல் துன்புறுத்தல் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.` இதில் 29 புகார்கள் பயிற்சியாளர் மீதானது. எனினும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது மிகவும் சொற்பமே. 5 பயிற்சியாளர்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்டது. ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இருவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

பெண் பயிற்சியாளர்களும் பெண் உதவியாளர்களும் இருப்பது வீராங்கனைகளுக்கான சூழலை மேம்படுத்தும் என நிபுணர்கள் பலரும் கருதுகின்றனர். எனினும், தற்போதைய சூழலில் திறன் படைத்த பெண் பயிற்சியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.

மும்பையில் செயல்பட்டுவரும் ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸின் பயிற்சியாளரும் சர்வதேச நடுவருமான வர்ஷா உபதேவும் இதையே கூறுகிறார். ஜிம்னாஸ்டிக்கை பொறுத்தவரை பயிற்சியின்போது வீரர்களை பயிற்சியாளர்கள் தொடுவதற்கு அவசியம் ஏற்படலாம். எனவே, பயிற்சியாளர், விளையாட்டு வீரர்கள் இடையேயான நம்பிக்கை என்பது மிக முக்கியமானது

“ஆண் பயிற்சியாளர் இருந்தாலும் பெண் உதவியாளர்கள் உடன் இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி. ஆனால், பல நேரங்களில் இந்த விதி பின்பற்றப்படுவதில்லை” என்று வர்ஷா கூறுகிறார்.

“காலம் மாறிவிட்டது என்பதையும் தாங்கள் சொல்வதுதான் இறுதியானது என்ற கலாசாரம் மலையேறிவிட்டது என்பதையும் பயிற்சியாளர்கள் உணர வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

புகார் குழுக்களை அணுகுவதில் நிலவும் சிக்கல்

தனக்கு எதிரான பாலியல் சீண்டல் குறித்து தைரியமாக வெளிப்படையாக பேச ஒரு விளையாட்டு வீராங்கனை முடிவு செய்தாலும், அவர் எங்கே போவது? அதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவானது, சில வேளையில் அதற்கு வாய்ப்பும் இல்லாமல் போகிறது.

2011 ஆம் ஆண்டின் இந்திய தேசிய விளையாட்டு மேம்பாட்டுக் குறியீட்டின்படி, ‘விளையாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வது விளையாட்டுக் கூட்டமைப்புகள் மற்றும் பிற விளையாட்டு அமைப்புகளின் பொறுப்பாகும்.'

உள் புகார் குழுக்களை அமைக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இந்த குழுவின் தலைவராக பெண் இருக்க வேண்டும், பெண்களின் உரிமைகளுக்கான செயல்படும் அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் வெளிப்புற உறுப்பினராக இருக்க வேண்டும் மற்றும் குழுவின் மொத்த உறுப்பினர்களில் பெண்களுக்கு 50 சதவீதம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.

எனினும், ஒருசிலவற்றை தவிர பெரும்பாலான கூட்டமைப்புகள் இத்தகைய குழுக்களை ஏற்படுத்தவில்லை. யாரை அணுக வேண்டும் போன்ற விபரங்களையும் அவர்களது வலைதளத்தில் குறிப்பிடவில்லை.

இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பில், இது தொடர்பாக ஒரே ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே உள்ளார்.

“இத்தகைய குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தாலும் இந்தியாவில் உள்ள பிறவற்றை போல் இதுவும் முறையாக பின்பற்றப்படுவதில்லை. ஆனால், தற்போது அனேக நிறுவனங்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன்” என்று துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் ஒருவர் பிபிசியிடம் குறிப்பிட்டார்.

இந்த விழிப்புணர்வு விளையாட்டுக்கு வெளியேயும் நேர்மறையான விளைவுகளை உருவாக்கும் என்று அவர் கருதுகிறார்.

அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் தடகள வீரரும், ஒலிம்பிக் விருது வென்றவரும் தற்போது இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ள அடில்லே சுமரைவாலா, விளையாட்டின் இயக்கவியலை நன்கு அறிந்தவர்.

பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் குறித்து அவரிடம் கேட்டபோது, “ஆம் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது உண்மைதான். நிச்சயம் இவை தடுக்கப்பட வேண்டும். வெளிப்படையான விசாரணை நடைபெறவும், அனைவரின் நலன் பாதுகாக்கப்படவும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்திய தடகள கூட்டமைப்பு முன்னாள் தடகள வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜ் தலைமையில் ஒரு SAHAS (விளையாட்டு வீராங்கனைகளை துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பது) கமிட்டியை அமைத்துள்ளது. இதன் உறுப்பினர்களில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் உள்ளனர்.

“நான் இதை பாதுகாப்புக் கொள்கை என்று அழைக்கிறேன், ஏனெனில் இது அனைவரையும் உள்ளடக்கியது, இருப்பினும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். தவறான நோக்கத்துடன் தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டது கண்டறியப்பட்டால், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற விதிமுறையும் இந்தக் கொள்கையில் உள்ளது,” என்றும் அடில்லே குறிப்பிட்டார்.

பயிற்சியாளர் மட்டுமல்லாது விளையாட்டு நிர்வாகத்திலும் அதிக பெண்களை அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தும் அவர், கூட்டமைப்புடன் விளையாட்டு வீரர்கள் கொண்டுள்ள பந்தம் என்பது முக்கியமானது என்பதால், நிர்வாகிகள் நம்பிக்கையான சூழலை உருவாக்குவது அவசியம் என்று குறிப்பிட்டார்.

இந்திய விளையாட்டு வீராங்கனைகள்- பாலியல் துன்புறுத்தல்கள்

பட மூலாதாரம், Getty Images

ஆக்ரோஷமான கலாசாரம்

“விளையாட்டு என்பது வீரர்களை தனிமைப்படுத்துவதுடன் போட்டி வாழ்க்கையை நடத்துவதில் அவர்கள் அதிக கவனம் செலுத்தும்படியும் செய்கிறது. எனவே, உங்களுக்கான பாதுகாப்பை அரணை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்,” என்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

மேலும் பேசிய அவர், “துப்பாக்கி சுடும் அரங்கில் நான் எப்போதுமே எனது நண்பர்களுடன் நெருக்கமாகவே இருப்பேன். நாங்கள் போட்டியாளர்களாக இருந்தாலும், ஒருவருக்கு ஒருவராக நாங்கள் இருந்தோம். ஏதாவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக உணர்ந்தால், நான் எப்போதும் அதைப் பற்றி வெளிப்படையாக பேசுவேன். அது என்னைப் பேசுவதில் வலிமையானவளாக உணரவைக்கும்,” என்கிறார்.

தற்போது போட்டியாளர்கள் அதிகமாகிவிட்டதால் அத்தகைய சூழல் காணாமல் போய்விட்டது என்று கூறும் அவர் “பெண்களுக்கு தோழமையும் சகோதரத்துவமும் தேவை. நீங்கள் ஒன்றாகப் பேசும்போதும், குரல் கொடுக்கும்போதும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என தெரிவித்தார்.

விளையாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்குமே இத்தகைய பாதுகாப்பு வளையம் இருப்பதில்லை. இதேபோல், விளையாட்டின் ஒரு அங்கமாக உள்ள ஆக்ரோஷமும் பிரச்சனையாக உள்ளது.

ஆக்ரோஷத்தில் அதிக கவனம் செலுத்துவது சில நேரங்களில் பிறரை கொடுமைப்படுத்தும் கலாசாரத்தை இயல்பானதாக மாற்றுகிறது., இது இறுதியில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் உரிமை ஆர்வலர் பயோஷ்னி மித்ரா இதையே வலியுறுத்தியுள்ளார்.

“பாலியல் துன்புறுத்தல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சூழல், அதிகாரத்தில் இருப்பவர்களின் துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தை எப்படியோ இயல்பாக்கப்பட்டுள்ளது. வினேஷ் போகாட், சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் ஊடகங்களுக்கு கொடுத்த போட்டியை பார்த்தபோது, என் கவனம் இதைச் சுற்றியே இருந்தது. ”

“விளையாட்டுகளில் இந்த படிநிலை உள்ளது, அதை நாம் கவனிக்க வேண்டும், மேலும் இந்த படிநிலை அதிகார துஷ்பிரயோகத்தை உருவாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிறந்த விளையாட்டு வீரர்கள் வெளியே வந்து பேசுவது ஒரு பெரிய விஷயம், ”என்று என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில் பயோஷ்னி கூறினார்

விளையாட்டு வீராங்கனைகள் வலிமையானவர்கள் போன்று பார்க்கப்படுகின்றனர். ஆனால், அவர்கள் மனிதர்களும் கூட என்பதை உணர வேண்டும்.

இந்திய விளையாட்டு வீராங்கனைகள்- பாலியல் துன்புறுத்தல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாரி நாசர்

2018 ஆம் ஆண்டில், அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் முன்னாள் மருத்துவர் லாரி நாசருக்கு எதிராக 150 க்கும் மேற்பட்ட ஜிம்னாஸ்ட்கள் புகார் அளித்தனர். இது தொடர்பான வழக்கில் அவருக்கு 175 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்கா போன்ற முழு நிபுணத்தும் பெற்ற அமைப்பிலும் துஷ்பிரயோகம் நிகழலாம் என்பதையும் வீராங்கனைகள் அவர்களுக்கு வழிகாட்டுபவர்களாகவும் பயிற்சியளிப்பவர்களாகவும் இருப்பவர்களாலேயே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகலாம் என்பதையும் நாசர் வழக்கு மீண்டும் நினைவூட்டியது.

ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் நட்சத்திர அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீரருமான சிமோன் பைல்ஸ், இத்தகைய சம்பவம் தொடர்பாக தாங்கள் முன்பே பேசுவதில் உள்ள அழுத்தங்கள் குறித்து குறிப்பிடுகிறார்.

"நாம் விஷயங்களை பகுத்துப் பார்ப்பதில் திறமையானவர்கள் என்று நான் நினைக்கிறேன், எனவே இதுபோன்ற விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. ஏனென்றால் யாரும் அதைப் பற்றி சிந்திக்க விரும்பவில்லை, அல்லது நாங்கள் அதைப் பற்றி சிந்திக்க விரும்பவில்லை. " என என்பிசியில் தி டுடே ஷோவுக்கு அளித்த பேட்டியில், சிமோன் கூறினார்.

தொடர்ச்சியாக விளையாடுவதற்கான அழுத்தமும் இத்தகைய துஷ்பிரயோகம் குறித்து வீராங்கனைகள் பேசுவதை கடினமாக்குகிறது.

இதில் எந்தளவு அழுத்தம் இருக்கிறது? வர்ஷா விவரிக்கிறார், “பல பெண்கள் ஏழை அல்லது நடுத்தர வர்க்க பின்னணியில் இருந்து வந்தவர்கள். விளையாட்டு என்பது வறுமையில் இருந்து தங்களை மீட்டெடுக்கும் ஒரு வழி. அது ஒரு வேலையைத் தருகிறது, அது போல தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய எதையும் செய்ய யாரும் விரும்பவில்லை. அதனால் அவர்கள் புகார் செய்வதில்லை.”

வர்ஷா மேலும் கூறுகையில், “மாவட்ட அளவில் இருந்து இத்தகைய அழுத்தம் தொடங்குகிறது. தங்கள் மகள் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று பெற்றோர்களும் ஆசைப்பட தொடங்கிவிட்டனர். எனவே சில நேரங்களில், அவர்கள் கூட விஷயங்களை புறக்கணிக்க முனைகிறார்கள். எங்கு, எல்லை மீறப்படக்கூடாது என்பதை பெற்றோர்களும் அறிந்திருக்க வேண்டும். பயிற்சியாளர்- விளையாட்டு வீரர் என்பது ஒரு தொழில்முறை கூட்டாண்மை, அந்த தொழில்முறை பராமரிக்கப்பட வேண்டும்”என்றார்.

வீரர்கள் பேசுவதால், அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் இது கவனத்தை ஈர்த்துள்ளது என்றும், சிறப்பாக முடிவு வெளிவரும் என எதிர்பார்ப்பதாகவும் வர்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் இப்போதைக்கு, வீரர்கள் விளைவுகளைப் பற்றி எச்சரிக்கையாக உள்ளனர்.

டெல்லியில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில், வினேஷ் தனது கவலையை வெளிப்படுத்தினார்,

“நான் துன்புறுத்தல் தொடர்பாக பிரதமரிடம் புகார் அளித்ததில் இருந்து எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. இன்று நான் அதை வெளிப்படையாகச் சொன்னேன், நாளை நான் உயிருடன் இருப்பேனா என்று எனக்குத் தெரியாது. ” என்று அவர் கூறியிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: