You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வறுமையில் மாற்றுத்திறனாளி வீராங்கனை - பயிற்சியாளர் வேலை வழங்கிய தமிழக அரசு
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை தீபா(40) வறுமையின் பிடியில் சிக்கி இருப்பதாக பிபிசி தமிழ் உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்த செய்தியை அடுத்து, தமிழ்நாடு அரசு அவருக்கு பகுதி நேர பயிற்சியாளர் பணியை வழங்கியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் இந்தியாவை முன்னிறுத்தி பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் எனப் பல பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனையான தீபா சென்னையில் ஒரு விடுதியில் சமையல் பணியாளராக வேலை செய்து வந்தார்.
அவரது வறுமை நிலை குறித்த செய்தியை ஜனவரி 26அம் தேதியன்று பிபிசி தமிழ் வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை அடுத்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்ததாகவும் தற்போது பயிற்சியாளர் வேலை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தீபா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''மறைந்த முதல்வர் கருணாநிதி 2010ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வீரமங்கைக்கான கல்பனா சாவ்லா விருதை எனக்கு அளித்தார்.
தமிழ்நாட்டை முன்னிறுத்தி பல தேசிய போட்டிகளிலும், இந்தியாவை முன்னிறுத்தி சர்வதேச அளவிலான போட்டிகளிலும் ஊக்கத்துடன் பங்கு பெற்று பதக்கங்களை வாங்கியபோதும், எனக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
நிலத்தை விற்று வெளிநாடுகளுக்கு அனுப்பிய என் பெற்றோரும் வறுமையில் வாடினர். அவர்களுக்கும் என்னால் உதவ முடியவில்லை. என் இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு சமையல் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தேன்.
பிபிசி தமிழில் என்னுடைய வறுமை நிலை பற்றிய செய்தி வெளியானதை அடுத்து, எனக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.
என் தகுதிக்கு ஏற்ப வேலை தரப்படும் என உத்தரவாதம் தந்தார்கள். தற்போது, பகுதி நேர தடகள பயிற்சியாளராகப் பணி ஆணை வழங்கியுள்ளனர். ஆறு மாதங்களில் நிரந்தர பணி அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். பிபிசி தமிழுக்கு நன்றி,'' என்றார் தீபா.
போலியோவால் இடது கால் பாதிப்புக்கு ஆளான நிலையிலும், பள்ளி பருவத்திலிருந்து விளையாட்டுப் போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தவர் தீபா. மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டிகளில் பங்குபெற்று 50க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
முதன்முதலாக, 2002இல் பெங்களூருவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பூப்பந்து போட்டியில் கலந்து கொண்டு, தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். அதே சர்வதேச போட்டியில் வட்டு எறிதலில் தங்கப் பதக்கமும் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.
2004இல் பெல்ஜியத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் குண்டு எரிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் இரண்டு வெண்கல பதக்கங்களைப் பெற்றார்.
2005இல் ஜெர்மனியில் நடந்த பாரா ஒலிம்பிக்ஸ் போட்டி, 2006இல் மலேசியாவில் நடைபெற்ற ஏசியன் கேம்ஸ் எனப் பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு, வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இதற்கிடையில் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
தொடர்ந்து விளையாட்டுகளில் பங்குபெற்று வந்த தீபா, தனது இரண்டு மகள்களும் விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் இருந்ததால், அவர்களையும் ஊக்கப்படுத்தினார். அவரது கணவர் மரிய ஜான்பால் ஹாக்கி விளையாட்டு பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார்.
''இரண்டு பெண் குழந்தைகளுக்கும் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்தபோது, அவர்களுக்காகப் பொருள் ஈட்டவேண்டும் என்பதால், கிடைக்கும் வேலைகளைச் செய்தேன். சமையல் பணியாளராகவும் ஆறு மாதங்கள் வேலை செய்தேன். பிபிசி தமிழில் வெளியான செய்தியைப் பார்த்த பலரும், எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.
முதல்வர் அலுவலகத்தில் இருந்து என்னிடம் பேசினார்கள். விளையாட்டுத்துறை அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் என்னுடைய சாதனைகளைப் பற்றிக் கேட்டனர். வீட்டுக்கும் வந்து என்னைப் பார்த்தனர். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணி ஆணையை எனக்குக் கொடுத்தார்,'' என்று பூரிப்புடன் பேசினார் தீபா.
மதுரையில், எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கத்தில் பகுதி நேர பாரா தடகள பயிற்சியாளராக இன்று (மார்ச் 7) பணிக்குச் சேர்ந்த தீபா மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது பணியைத் தொடங்கியுள்ளார்.
''விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கு பெண்களுக்குப் பல வாய்ப்புகள் உள்ளன. பெண் போட்டியாளர்கள், மாற்றுத்திறனாளி போட்டியாளர்களை நான் ஊக்குவித்து தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பேன்,'' என்றார் தீபா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்