ஆதிபுருஷ் திரைப்படத்தை நேபாள தலைநகரில் திரையிட தடைவிதிக்கப்பட்டது ஏன்?

ஆதிபுருஷ் திரைப்பட சர்ச்சை

பட மூலாதாரம், @KRITISANON

சில தினங்களுக்கு முன் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஓர் வசனம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘இந்திய தாயின் மகள் சீதை’ என்ற இந்த வசனம் தான் சர்ச்சைக்கு காரணம். குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடான நேபாள மக்கள் மத்தியில் சீதை குறித்த இந்த சித்தரிப்பு கடும் சீற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேபாளத்தின் ஜனக்பூரை ஆண்ட ஜனகனின் மகளாக அறியப்படும் சீதையை, ‘இந்திய தாயின் மகள்’ என்று ஆதிபுருஷ் திரைப்படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று காத்மாண்டு நகர மேயரான பலன் ஷா தெரிவித்திருந்தார்.

அத்துடன் இந்த வசனத்தை நீக்க படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நேபாள அரசு மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தது. இந்த நிலையில், ஆதிபுருஷ் உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்கள் எதையும் இனி திரையிடக்கூடாது என்று தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் நகர மேயர் பலன் ஷா இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

“சீதை குறித்து ஆதிபுருஷ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபத்துக்குரிய வசனத்தை நீக்கும்படி, படத்தின் தயாரிப்பாளர்களை மூன்று நாட்களுக்கு முன் நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். இந்த நிலையில், நேபாளத்தின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் சுய மரியாதையை காக்க வேண்டியது அரசு மற்றும் நேபாள குடிமக்கள் அனைவரின் பொறுப்பாக உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, சர்ச்சைக்குரிய வசனம் படத்தில் இருந்து நீக்கப்படும் வரை காத்மாண்டு நகரில் உள்ள எந்த திரையரங்கிலும் இந்திய சினிமாக்கள் திரையிடப்படாது” என்று ஷா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

“படத்தில் இடம்பெற்றுள்ள சீதை குறித்த தவறான சித்தரிப்பை சரிசெய்யாமல் படத்தை திரையிட அனுமதித்தால், அது நேபாளத்தின் கலாசாரம் மற்றும் தேசிய அடையாளத்தின் மீது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிடும்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

‘ஆதிபுருஷ்’ திரைப்படம் நேபாளத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் மற்றும் இந்து ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதிபுருஷ் திரைப்பட சர்ச்சை

பட மூலாதாரம், T-SERIES

ஆட்சேபம் தெரிவித்த திரைப்பட தணிக்கை வாரியம்

எந்த ஒரு திரைப்படத்தையும் திரையரங்குகளில் திரையிடுவதற்கு முன், அதை திரைப்பட தணிக்கை வாரியத்தின் நிர்வாகிகள் பார்க்கும் நடைமுறை நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அவற்றில் ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்கள் ஏதேனும் இடம்பெற்றிருந்தால் அவற்றை நீக்க, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் கோருவதற்கு வசதியாக இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆதிபுருஷ் திரைப்படத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது என்கிறார் நேபாள திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர் ரிஷிராஜ் ஆச்சார்யா.

“ஆதிபுருஷ் திரைப்படத்தை நாங்கள் கடந்த புதன்கிழமை பார்த்தோம். அதில் இடம்பெற்றிருந்த ஆட்சேபகரமான வசனங்களை நீக்கிய பிறகு தான் நேபாளத்தில் படத்தை திரையிட அனுமதிக்க முடியும் என்று படத்தின் வினியோகிஸ்தர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சர்ச்சைக்குரிய வசனங்கள் வரும் இடங்களில் ‘பீப்’ ஒலியை ஒலிக்க செய்யலாம் என்று சிலர் யோசனை கூறினர்" என்று பிபிசி உடனான உரையாடலில் கூறியிருந்தார் ரிஷிராஜ் ஆச்சார்யா.

திரைப்பட மேம்பாட்டு வாரியத்தின் புவன் கேசி இந்த விவகாரம் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ நேபாளத்தின் வரலாற்று கதாபாத்திரமான சீதையை, இந்தியாவின் மகளாக சித்தரிக்கும் திரைப்பட வசனம் உலகின் எந்தப் பகுதியில் ஒலித்தாலும், அதற்கு வாரியம் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறது” என்று தமது அறிக்கையில் புவன் தெரிவித்திருந்தார்.

ஆதிபுருஷ் திரைப்பட சர்ச்சை

பட மூலாதாரம், MANOJ MUNTASHIR

வசனகர்த்தாவின் விளக்கமும், அதிகரித்த சர்ச்சையும்

ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு நேபாளத்தில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து, படத்தின் வசனகர்த்தாவான மனோஜ் முண்டா ஷிரின் பிரபல தொலைக்காட்சி சேனலான ‘ஆஜ் தக்’-ல் பேசியபோது விளக்கம் அளித்திருந்தார்.

"இந்த திரைப்படத்தின் கதை நிகழும் காலத்தில் நேபாளம் இந்தியாவின் ஒரு பகுதியாக தான் இருந்தது. 1903 அல்லது 1904 இல் தான் நேபாளம் இந்தியாவில் இருந்து பிரிந்தது. சீதாவை இந்தியாவின் மகள் என்பதற்கு, நேபாளம் கண்டனம் தெரிவித்தால், பிறகு எந்த நேபாளம் இந்தியாவில் இருந்து பிரிந்தது?" என்று கேள்வி எழுப்பிய மனோஜ், "இந்த விஷயத்தில் நேபாளத்தின் எதிர்ப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மனோஜ் முண்டாஷிரின் இந்த விளக்கத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நேபாளத்தைச் சேர்ந்த ஆர்வலரான நவிதா ஸ்ரீகாந்த். “நேபாள கலாசாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த மனோஜின் பார்வையை அறிந்து நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். ஒரு நாட்டின் கலாசாரம் மற்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட எல்லைகள் குறித்த புரிதலில் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். புத்தரின் பிறப்பிடமான லும்பினியை போல, நேபாளத்தின் புவியியல் எல்லையில் அமைந்திருந்த ஜனக்பூரை சேர்ந்தவர் சீதா தேவி” என்று நவிதா கூறியுள்ளார்.

“நேபாளத்தின் மகளான சீதை, இந்தியாவில் கடவுளாக வழிபடப்படுகிறார். கலையும், கலாசாரமும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டுமே தவிர, தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குபவையாக இருக்கக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஆதிபுருஷ் திரைப்பட சர்ச்சை

பட மூலாதாரம், @KRITISANON

சீதைக்கும், நேபாளத்திற்கும் இடையேயான தொடர்பு

புராணக் கதாபாத்திரமான சீதை. நேபாளத்தின் ஜனக்பூரில் பிறந்தவர் என்று அந்த நாடு உரிமை கொண்டாடி வருகிறது.

ராமரின் மனைவியான சீதை, ஜனக்பூரில் பிறந்தவர் என்றும், அவரின் தந்தையான ஜனகன் ஜனக்பூரை ஆட்சி புரிந்த அரசன் எனவும் இந்தியாவிலும் நம்பப்படுகிறது. ஜனகனின் மகள் என்பதால் ஜானகி என்ற பெயரிலும் சீதை அழைக்கப்படுகிறார்.

முன்னதாக, கடந்த 2020 இல் கௌதம புத்தர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியிருந்ததற்கு, நேபாளத்தின் அப்போதைய பிரதமர் கேபி சர்மா ஒலி வருத்தம் தெரிவித்திருந்தார்.

அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஜெய்சங்கரிடம். நீங்கள் நினைவில் வைத்திருக்கும் சிறந்த இந்தியர்கள் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், கௌதம புத்தர் மற்றும் மகாத்மா காந்தி என்று பதிலளித்திருந்தார்.

அமைச்சரின் இந்த பதிலுக்கு. நேபாளத்தின் முன்னாள் பிரதமர் மாதவ் குமாரும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.

“நேபாளத்தில் அமைந்துள்ள லும்பினியில் தான் கெளதம புத்தர் பிறந்தார் என்பது நிரூபணமான, யாராலும் மறுக்க முடியாத உண்மை. இதற்கு வரலாற்று மற்றும் தொல்லியல் சான்றுகளும் உள்ளன. புத்த மதம் தோன்றிய இடமான லும்பினி, யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது” என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் அப்போது விளக்கம் அளித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தது.

“நேபாளத்தின் கடும் எதிர்ப்பை அடுத்து, இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இந்திய வெளியுறவு அமைச்சகம் இறங்கியது. கௌதம புத்தர் நேபாளத்தில் அமைந்துள்ள லும்பினியில் பிறந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெளத்த பராம்பரியத்தை பற்றி தான் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார்” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்தது.

இந்தியா, நேபாளம் இடையே தொடரும் சர்ச்சைகள்

பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்தியாவிற்கும், நேபாளத்திற்கு இடையே சமீபகாலமாக சர்ச்சைகள் இருந்து கொண்டு தான் உள்ளன.

காலாபானி பகுதி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கடந்த ஆறு தசாப்தங்களாக இருநாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிரச்னை இவற்றில் முக்கியமானது.

காஷ்மீருக்கான சிறப்பு மாநில அந்தஸ்தை இந்திய அரசு 2019 இல் நீக்கியது. அப்போது வெளியிடப்பட்ட புதிய வரைபடத்தில் காலாபானி இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பதிலடியாக, தனது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. அதில், காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவை நேபாள எல்லைக்கு உட்பட்ட பகுதிகளாக நேபாளம் குறிப்பிட்டு காட்டியது.

சமீபத்தில், இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவின்போதும் இந்தியாவுக்கும், நேபாளத்திற்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்றுள்ள வரைபடத்தில், கௌதம புத்தரின் பிறப்பிடமான லும்பினி, பண்டைய இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டிருந்தது.

இதற்கு நேபாளம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அத்துடன் காத்மாண்டு நகர மேயர், தனது அலுவலகத்தில் நேபாள நாட்டின் வரைபடத்தை (Greater Nepal) பார்வைக்கு வைத்திருந்தார். அதில் இந்தியாவின் பல பகுதிகள், நேபாளத்தின் ஓர் பகுதியாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: