சீனா இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதா? - ஜெய்சங்கர் அளித்த விரிவான பதில்

சீனா - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்தது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் தற்போது நிலவும் பதற்றம், இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்ததால் ஏற்படவில்லை. மாறாக இரண்டு நாடுகளின் ‘ஃபார்வேர்ட் டிப்ளாய்மெண்ட்’ காரணமாக ஏற்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கூற்று இது.

மோதி அரசின் ஒன்பது ஆண்டுகள் நிறைவையொட்டி வெளியுறவு அமைச்சகம் ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஜெய்சங்கர் பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதா?

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதா என்ற கேள்வி இந்தியர்களின் மனதில் இருப்பதாக செய்தியாளர் சந்திப்பின்போது ஜெய்சங்கரிடம் நேரடியாகக் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த எஸ். ஜெய்சங்கர், "இது ஒரு சிக்கலான விஷயம்," என்றார்.

"நாடுகளின் துருப்புகள் பொதுவாக LAC க்கு (அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில்) மிக அருகில் நிறுத்தப்படுவதில்லை. வீரர்கள் தங்கள் முகாம்களில் நிறுத்தப்படுகிறார்கள்.

அங்கிருந்து அவர்கள் முன்னேறிச்செல்வார்கள். 2020ஆ ஆண்டுக்குப் பிறகு வந்துள்ள மாற்றம் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலிருந்தும் ஃபார்வேர்ட் டிப்ளாய்மெண்ட் செய்யப்பட்டுள்ளது. அதாவது இரு நாடுகளுமே தங்கள் படைகளை எல்லைக்கு அருகில் நிறுத்தியுள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.

"இந்தப் பிரச்னையை நாம் தீர்க்க வேண்டும். இந்தப் பிரச்னை நிலம் பற்றியது அல்ல. இது ஃபார்வேர்ட் டிப்ளாய்மெண்ட் பற்றியது. இரு நாட்டு வீரர்களும் நேருக்கு நேர் நிற்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் இந்தப் பதற்றமானது கல்வானில் நடந்தது போல் வன்முறை வடிவத்தை எடுக்கலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது குறித்து வெளியுறவு அமைச்சரிடம் மற்றுமொரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “பாங்கோங் சாவ்வில் பாலம் கட்டப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கூறுகிறார். 1962ஆம் ஆண்டு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில்தான் பாலம் கட்டப்பட்டுள்ளது,” என்றார்.

“அருணாச்சல பிரதேசத்தில் ’மாதிரி கிராமம்’ கட்டப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் நாடாளுமன்ற பதிவேடுகளைப் பார்த்தால் 1959இல் சீனா ஆக்கிரமித்த இடத்தில் இது அமைந்திருப்பது தெரிகிறது. 1950களிலேயே இந்தியாவின் நிலத்தை சீனா கைப்பற்றிவிட்டது," என்றார் அவர்.

"அடிப்படை பிரச்னை என்னவென்றால் அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நமது ராணுவம் பொதுவாக முகாமில் இருந்து ரோந்து சென்று பின்னர் முகாமுக்குத் திரும்பும். இது 2020 முதல் மாறிவிட்டது. ஏனெனில் சீனா ஒப்பந்தங்களை மீறியது மற்றும் எல்லைக்கு அருகே அதிக எண்ணிக்கையிலான துருப்புகளை நிறுத்தியது. இதைத்தொடந்து நாமும் ஃபார்வேர்ட் டிப்ளாய்மெண்ட் செய்ய வேண்டியிருந்தது. இது பதற்றத்தை உருவாக்கியது,” என்று ஜெய்சங்கர் கூறினார்.

சீனா - இந்தியா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோதி. 2019 அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட படம்.

சீனாவுடன் நல்லுறவை விரும்பும் இந்தியா

கடந்த ஒன்பது ஆண்டுகளில் சீனாவை தவிர உலகின் அதிகார மையமாக இருக்கும் பெரும்பாலான நாடுகளுடனான இந்தியாவின் உறவு மேம்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் கூறினார்.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, ஜப்பான், வளைகுடா நாடுகள், ஆசிய நாடுகளுடன் தூதாண்மை உறவுகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் மோதியின் தலைமையில் வெளியுறவுக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

"ஆனால் சீனாவுடன் இது நடக்கவில்லை. ஏனெனில் 2020ஆம் ஆண்டில் சீனா வேண்டுமென்றே இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களை மீறி எல்லைக்கு நெருக்கமான பகுதிகளில் தனது ராணுவத்தை நிலைநிறுத்த முடிவு செய்து தனது வலிமையை வெளிப்படுத்தியது," என்று அவர் குறிப்பிட்டார்.

"எல்லையில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்பாத வரை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்று சீனாவுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படாததற்கு இதுவே காரணம்."

சீனா - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 'அணிமை கொள்கையின்’ கீழ் அண்டை நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் சீனா விஷயத்தில் இது நடக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சி அண்டை நாடுகளைச் சார்ந்தே ஏற்பட்டுள்ளது என்றாலும்கூட மிகப்பெரிய சவாலும் அங்கிருந்துதான் வந்துள்ளது என்றார் ஜெய்சங்கர்.

"நேபாளம், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவுகள், மியான்மர் ஆகிய நாடுகளுடன் நமது உறவுகள் வலுப்பெற்றுள்ளன. முதல்முறையாக இங்கு பிராந்திய பொருளாதாரம் உருவாகியுள்ளது," என்று அவர் கூறினார்.

"ஆனால் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சவால்கள் உள்ளன. அணிமை கொள்கை உள்ளது என்பதற்காக பயங்கரவாதத்தை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. சீனாவை பொருத்தவரை அந்த நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்தோம். ஆனால் எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவும்போதுதான் இது நடக்கும்."

"ஒப்பந்தங்கள் மீறப்படும்போது நம்மால் உறவை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. கல்வானுக்கு முன்பும் நாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தோம். ’எல்லைக்கு அருகில் உங்கள் வீரர்கள் காணப்படுகின்றனர். அது ஒப்பந்தங்களை மீறுவதாக உள்ளது’ என்று நாம் சீனாவை எச்சரித்தோம்."

"தற்போதைய எல்லைப் பதற்றம் சீனாவின் நலனுக்கு ஏற்புடையது என்று நான் நினைக்கவில்லை. பரஸ்பர உறவு மீது தாக்கம் ஏற்படுத்துவதால், துருப்புகளைப் பின்னோக்கி நகர்த்துவதற்கான வழியை இரு நாடுகளும் கண்டுபிடிக்க வேண்டும். எல்லையில் பதற்றம் நிலவும்போதிலும் உறவு சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது சரியில்லை."

சீனா - இந்தியா

பட மூலாதாரம், ANI

ரஷ்ய யுக்ரேன் போர் மற்றும் சீனா

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு இருந்து வருகிறது. ஆயினும் ரஷ்ய- யுக்ரேன் போருக்குப் பிறகு சீனாவுடனான ரஷ்யாவின் நெருக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. இது இந்திய-ரஷ்ய உறவு மீது தாக்கத்தை ஏற்படுத்துமா என்றும் ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர்,”போரின் தாக்கம் ஒவ்வொரு நாடு மீதும் வெவ்வேறு விதமாக இருக்கும். இப்போது ரஷ்யாவுடனான சீனாவின் உறவு எப்படி இருக்கும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள்,” என்றார்.

"1955ஆம் ஆண்டில் ரஷ்யா ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தது. அதன் பின் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் உறுதியாக உள்ளது. கடந்த பல தசாப்தங்களில் உலகம் மாறினாலும் நமது உறவு மாறவில்லை. ஏனென்றால் இரு நாடுகளின் தலைமையும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன,” என்றார் அவர்.

"இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எதையும் இந்தியா செய்யவில்லை.”

சீனா குறித்த மோதியின் அறிக்கை

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியிருந்தார். அவரது கூற்று எஸ். ஜெய்சங்கரின் இந்தக் கருத்துடன் ஒத்துப்போகிறது.

2020 ஜூன் மாதம் சீனா விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி, "நமது ராணுவம் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் முழு திறன் கொண்டது" என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உறுதியளித்தார்.

"நம் எல்லைக்குள் யாரும் நுழையவில்லை. நமது எந்த எல்லைச்சாவடியும் வேறு யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை" என்று அவர் கூறினார்.

“நமது புலனாய்வு அமைப்புகள் எந்தவிதத்திலும் தோல்வியடையவில்லை” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தக் கூட்டத்தில் கூறினார்.

ஆனால் பிரதமரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சீன ஆக்கிரமிப்பின்போது இந்திய நிலத்தை பிரதமர் நரேந்திர மோதி அவர்களிடம் ஒப்படைத்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

"இந்த நிலம் சீனாவுக்குச் சொந்தமானது என்றால், நமது வீரர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் எங்கே கொல்லப்பட்டார்கள்?" என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

சீனா - இந்தியா

பட மூலாதாரம், ANI

சமூக ஊடகங்களில் விவாதம்

எஸ். ஜெய்சங்கரின் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு அவரது அறிக்கை தொடர்பான விவாதம் சமூக ஊடகங்களில் தொடர்கிறது.

"பிரச்னை நில ஆக்கிரமிப்பு தொடர்பானது அல்ல, ஃபார்வேர்ட் டிப்ளாய்மெண்ட் பற்றியது என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.

சீனாவின் ஃபார்வேர்ட் டிப்ளாய்மெண்ட் காரணமாக 2020க்கு முன்பு ரோந்து சென்ற இடங்களுக்கு நம்மால் இப்போது செல்ல முடியவில்லை என்றால் இது நிலம் தொடர்பான பிரச்னைதான்,” என்று கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த உறுப்பினர் சுஷாந்த் சிங் குறிப்பிட்டார்.

"துருப்புகளை அவர்கள் நிறுத்தியிருப்பது, இந்தியாவின் ரோந்து உரிமையைப் பாதிக்கவில்லை என்றால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் சீனா தடையை உருவாக்குகிறது.

அங்கு அசல் கட்டுப்பாட்டுக் கோட்டின் இந்திய பக்கத்தில் அவர்களது ஃபார்வேர்ட் டிப்ளாய்மெண்ட் உள்ளது," என்று மற்றொரு ட்வீட்டில் அவர் எழுதியுள்ளார்.

நிரந்தர தீர்வாக இதை மோதி அரசு ஏற்கிறதா?

"உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக அரசு உண்மையைத் திரித்துக் கூறி வருகிறது. அதனால்தான் எல்லையில் சீனா ’சலாமி ஸ்லைஸிங்’ தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறது," என்று வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான ஸ்ரீநாத் ராகவன் எழுதுகிறார்.

தூதாண்மையைப் பொருத்தவரையில் சலாமி ஸ்லைஸிங் என்பது கலவையான, பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடிய சிறிய சிறிய சம்பவங்களின் தொடராகும்.

“இதுதான் சீனாவுக்கு வெளியுறவு அமைச்சர் அளித்துள்ள வலுவான செய்தியா? அதுவும் சுற்றி வளைத்துக் கொடுக்கப்பட்ட செய்தி,” என்று கீர்த்தி தியோல்கர் வினவினார்.

"இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்று ஜெய்சங்கர் ஐரோப்பிய யூனியனிடம் புகார் செய்தார். அதேநேரம் சீனா இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் கூறுகிறார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவை ஆதரித்திருந்தால் அதன் கோபம் அதிகரித்திருக்கும். ஏனென்றால் உண்மையிலேயே இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பது அதன் அர்த்தமாக இருந்திருக்கும்,” என்று 'பெல்ட் அண்ட் ரோடு: எ சைனீஸ் வேர்ல்ட் ஆர்டர்' புத்தகத்தின் ஆசிரியர் புரூனோ மர்சியாஸ் எழுதியுள்ளார்.

"சீனாவிடமிருந்து நமது சொந்த நிலத்தை நம்மால் காப்பாற்ற முடியவில்லை என்றால், ’ஒன்றுபட்ட இந்தியா’ என்று பேசுவது அர்த்தமற்றது.

அருணாச்சல பிரதேசத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது. இது நாட்டின் மக்கள்தொகையியல் (demography) மீது பாதிப்பை ஏற்படுத்தாது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நீங்கள் புத்திசாலி,” என்று விஜய் பங்கா எழுதியுள்ளார்.

சீனா - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

ஜெய்சங்கர் வேறு என்ன சொன்னார்?

  • இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் இறந்து கொண்டிருக்கின்றன என்ற ராகுல் காந்தியின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், "நாட்டின் அரசியலை நாட்டிற்கு வெளியே எடுத்துச் செல்வது நாட்டின் நலனுக்கு உகந்தது என்று நான் நினைக்கவில்லை," என்றார்.
  • போலி ஆவணங்களின் அடிப்படையில் கனடாவுக்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் தொடர்பாகப் பேசிய அவர், மாணவர்கள் முழு மனதுடன் படிக்கச் சென்றதாகவும், ஆனால் அவர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறினார். இப்படிப்பட்ட நிலையில் மாணவர்களைத் தண்டிப்பது முறையற்ற செயல் என்று அவர் குறிப்பிட்டார்.
  • கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் குறித்துப் பேசிய அவர், பிரிவினைவாதிகள் மற்றும் வன்முறை ஆதரவாளர்களுக்கு அங்கு இடம் கிடைக்கிறது. இது கனடாவிற்கோ அல்லது இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவுகளுக்கோ நல்லதல்ல என்று கூறினார்.
  • 'குளோபல் சவுத்’ இந்தியாவை நம்பகமான மற்றும் பயனுள்ள வளர்ச்சிப் பங்காளியாகப் பார்க்கிறது.
  • இந்தியா 78 நாடுகளுக்கு ஏதோ ஒரு திட்டத்தில் உதவி வருகிறது. கயானா, கென்யா, மொசாம்பிக், மொரீஷியஸ், ஜிபூட்டி போன்ற நாடுகளில் இந்திய அரசும் இந்திய நிறுவனங்களும் முதலீடு செய்து நவீனமயமாக்கலுக்கு உதவுகின்றன.
  • இந்தியாவின் பிம்பம் இன்று பொருளாதார பங்காளியாகக் கட்டமைக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பொருளாதார முனைகளில் நம்மால் தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. இலங்கையைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், தேவைப்படும் போது அண்டை நாடுகளுக்கு உதவ நாம் துணை நின்றுள்ளோம் என்றார்.
  • யுக்ரேன் பிரச்னையில் நமது நிலைப்பாடு முன்பே தெளிவாக இருந்தது. நெருக்குதல் வரும் என்றும் எதிர்பார்த்தோம். இந்த விஷயத்தில் நமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.
  • இந்தியாவின் தூதாண்மை காரணமாக நாட்டில் உரம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகளைக் கட்டுப்படுத்த முடிந்தது. இதன் காரணமாக பணவீக்கமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: