3 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் கொண்டாடப்படும் தமிழ் - சிங்கள புத்தாண்டு: கள நிலவரம் என்ன?

சிங்கள தமிழ் புத்தாண்டு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கிய இலங்கை மக்கள், மூன்று வருடங்களின் பின்னர் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை இம்முறை கொண்டாடுகின்றனர்.

இலங்கையில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு, 2019ம் ஆண்டே இறுதியாக கொணடாடப்பட்டது.

2020ம் ஆண்டு முதல் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று, இலங்கை மக்கள் முழுமையாக முடக்கியிருந்தது.

இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் அடையாளம் காணப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 2020ம் ஆண்டு மார்ச் மாத நடுப்பகுதியில் நாடளாவிய ரீதியில் முடக்க நிலைமை அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக, சித்திரை புத்தாண்டு உள்ளிட்ட எந்தவொரு பண்டிகைகளையும் வழமை போன்று கொண்டாட முடியாத நிலைமை ஏற்பட்டது.

எனினும், 2022ம் ஆண்டு கொரோனா நிலைமை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மக்கள் வீதிகளிலேயே கொண்டாடியிருந்தனர்.

இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்திருந்த நிலையில், ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கடந்த ஆண்டு வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு, மக்கள் வீதிகளில் சித்திரை புதுவருட பிறப்பை கொண்டாடியிருந்தனர்.

இவ்வாறான நிலையில், கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிலிருந்து மீண்டெழுந்த இலங்கை மக்கள், இம்முறை சித்திரை புத்தாண்டை மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

நாட்டிலுள்ள நகர் மற்றும் கிராம பகுதிகளில் அதிகளவான மக்கள் பொருள் கொள்வனவுகளில் ஈடுபட்டு வருகின்றதை காண முடிந்தது.

ஆடை கொள்வனவு, அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு, தங்காபரண கொள்வனவு என பெருந்திரளாக மக்கள் வீதிகளிலும், வர்த்தக நிலையங்களிலும் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

சிங்கள தமிழ் புத்தாண்டு

பட மூலாதாரம், Getty Images

புதுவருட வியாபாரம் தொடர்பில் வர்த்தகர்கள் என்ன கூறுகின்றார்கள்?

சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் பாரம்பரிய மட்பாண்ட விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரியான மேர்வின் அல்விஸ்ஸிடம் பிபிசி தமிழ் வினவியது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வியாபாரம் மிகவும் குறைந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

சுமார் 50 வீதத்தினால் வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்புக்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என கூறிய அவர், அவ்வாறான நிலையிலும் வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றார்.

கொழும்பு - ஐந்துலாம்பு சந்தியில் பழ விற்பனையில் ஈடுபடும் ரவியிடம் பிபிசி தமிழ் வினவியது.

''கடந்த ஆண்டு வியாபாரம் செய்யவில்லை. இந்த ஆண்டு பரவாயில்லை. ஓரளவு சமாளித்து செல்லக்கூடியதாக இருக்கின்றது. பொருட்கள் எல்லாம் இலகுவாக கிடைக்கின்றன" என ரவி கூறினார்.

எனினும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன என நுகர்வோர் கூறுகின்றனர்.

இலங்கை தமிழர்கள் எவ்வாறு சித்திரை புத்தாண்டை கொண்டாடுவார்கள் தெரியுமா?

சிங்கள தமிழ் புத்தாண்டு

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் தமிழர்களுடன் இணைந்ததாக சிங்களவர்களும் அதேநாளில் புத்தாண்டு தினத்தை கொண்டாடுகின்றனர்.

ஏப்ரல் மாதம் 13ம் தேதி பழைய வருடமாக கருதப்படுகின்றது. அதற்கு அடுத்தநாளான 14ம் தேதி அதிகாலை வீடுகளில் பால் பொங்கி, வீடுகளில் வழிபாடுகளை செய்து, பட்டாசு கொளுத்தி புதுவருட பிறப்பை வரவேற்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, 14ம் தேதி விடிந்தவுடன், விசூ புண்ணியக் காலத்தில் மருத்து நீர் வைத்து நீராடுவது வழக்கமானது. வயதில் முத்தவர்கள், இளையோருக்கு மருத்து நீர் வைத்து அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதாக இலங்கையின் பிரபல எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

பல வகை பூக்கள், பல வகை இலைகள், அருகம்புல், மஞ்சள், பால் போன்ற மூலிகைகளை கொண்டு மருத்து நீர் செய்யப்பட்டு நீராடுவது வழக்கமாகும்.

அதன்பின்னர், ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு, வயதிற்கு முதியோரின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

பின்னர், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இனிப்பு பண்டங்களை உட்கொண்டு, விளையாட்டுக்களை விளையாடி புதுவருட பிறப்பை கொண்டாடுகின்றனர்.

கைவிசேடம் வழங்கப்படுவதை இலங்கையர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

இலங்கையில் பல்வேறு வகையிலான விளையாட்டுக்களை, அதாவது போர்த் தேய்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், கிளித்தட்டு, யானைக்கு கண் வைத்தல், ஊஞ்சலாடுதல், முட்டி உடைத்தல், தலையனை சண்டை உள்ளிட்ட போட்டி விளையாட்டுக்களை முன்னர் விளையாடிய போதிலும், அந்த விளையாட்டுக்கள் தற்போது விளையாடுவது அரிதாகி விட்டது.

தற்போது புதிய ஆடைகளை அணிந்து, ஆலயங்களுக்கு சென்று, வீடுகளில் உணவுகளை சமைத்து உட்கொண்டு புதுவருடத்தை இலங்கை வாழ் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் - சிங்கள புதுவருட பிறப்பு என முன்னர் கூறிய போதிலும், அது தற்போது இந்து - சிங்கள பெருநாள் என்ற பெயரில் சிலரால் அழைக்க ஆரம்பிக்கப்படுவதாக எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் குறிப்பிடுகின்றார்.

இந்து சமயத்தை பின்பற்றிய தமிழர்களில் சிலர் ஏனைய சமயங்களை பின்பற்ற ஆரம்பித்த நிலையிலேயே, தமிழ் - சிங்கள புத்தாண்டு, இந்து - சிங்கள புத்தாண்டு என்ற பெயரை பெற்றுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: