கர்நாடக அரசியல்: சோனியா தலையீட்டுக்குப் பிறகு எப்படி முடிவுக்கு வந்தது அமைச்சரவை பதவியேற்பு இழுபறி?

கர்நாடகா காங்கிரஸ்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்திக்காக

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வென்ற காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு மே 20ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறது. புதிய முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் பதவியேற்பார்கள் என்று அறிவித்தப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் கடந்த 4 நாட்களாக கர்நாடகா காங்கிரஸ் மற்றும் அம்மாநில அரசியலில் நீடித்து வந்த பதவியேற்பு விவகாரம் தொடர்பான இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் நாடகத்தை தீர்க்க, மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான காங்கிரஸ் மேலிடம் கடைசியில் அதன் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் வீட்டுக்கே செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்க்க, சித்தராமையாவை முதல்வராக்க சோனியா முன்னிலையிலேயே தீர்மானிக்கப்பட்டது. அதே கூட்டத்தில் டி.கே.சிவக்குமாரை துணை முதல்வராக்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த முடிவு புதன்கிழமை நள்ளிரவைக் கடந்த வேளையில் எட்டப்பட்டது.

முன்னதாக, துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டீர்களா என்று டெல்லியில் செய்தியாளர்கள் சிவகுமாரிடம் கேட்டபோது, "கட்சி மேலிடம் வழிகாட்டினால் அப்பதவியை ஏற்றுக்கொள்கிறேன்" என்றும் நான் மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருக்கிறேன் என்றும் கூறினார்.

சோனியா காந்தியை சந்திக்கும்வரை கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையிலான பலம் தனக்கே இருப்பதால் முதல்வர் பதவியை தனக்கே வழங்க வேண்டும் என்று பேசி வந்தார் டி.கே. சிவகுமார். ஆனால், சோனியா காந்தியை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்ட மறுகணமே தமது மனதை மாற்றிக் கொண்டார் சிவக்குமார்.

கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலும் அவரே தொடருவார் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தமது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நம்மிடையே பேசினார்.

“நமது கட்சி சிக்கலில் உள்ளது, அதனால் பிரச்னையை பெரிதாக்க வேண்டாம். மற்ற விஷயங்களை என்னிடம் விட்டு விடுங்கள். நீங்கள் என் மகன் போன்றவர். நான் பார்த்துக் கொள்கிறேன்," என்று சோனியா காந்தி சிவகுமாரிடம் கூறினார்.

பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்ற தகவல் நள்ளிரவு 1.30 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கான மோதல் டெல்லியில் நள்ளிரவு முடிவுக்கு வந்தது.

கர்நாடகா காங்கிரஸ் அரசியல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சோனியா காந்தி

முன்னதாக, சித்தராமையா, சிவகுமார் ஆகியோரின் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா கண்டீரவா விளையாட்டரங்கில் நடைபெறும் என ஒரு போலிச் செய்தி சமூக ஊடகங்களில் புதன்கிழமையில் இருந்தே பகிரப்பட்து.

ஆனால், சித்தராமையா முதல்வராகப் பதவியேற்பார் என்ற தகவல் தவறானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சூர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறியதையடுத்து, அந்த போலிச் செய்தி சர்ச்சை முடிவுக்கு வந்தது.

சரியாகிப் போன ஊடகங்களின் கணிப்பு

காங்கிரஸ் கணிப்பு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டி.கே. சிவகுமாரை இணங்கச் செய்வதில் சோனியா காந்தியின் முயற்சியே கடைசியில் வென்றதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.

ராகுல் காந்தி வீட்டில் இருந்து சிரித்துக்கொண்டே சித்தராமையா வெளியே வந்ததும், அவர்தான் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவார் என ஊடகங்கள் செய்திகளை வெளியிடத் தொடங்கின.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்திப்பதற்கு முன், ராகுல் காந்தியை சித்தராமையா சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் கார்கேவை சந்தித்த சிவகுமார், பிறகு ராகுல் காந்தியையும் சந்தித்தார். இந்த இரண்டு கூட்டங்களில் பேசியபோதும் முதல்வர் பதவிக்கான தமது கோரிக்கையை கைவிட சிவகுமார் மறுத்துவிட்டதாகவே காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலத்தில் கட்சிப் பொறுப்பை ஏற்க எந்தத் தலைவரும் தயாராக இல்லாதபோது, சவால் நிறைந்த அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக சிவகுமார் மேலிட தலைவர்களிடம் தெரிவித்தார்.

தனது 30 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு 30 மாதங்களுக்கு சித்தராமையாவை முதலமைச்சராக்கும் திட்டத்தையும் அவர் ஏற்கவில்லை.

இதையடுத்து முதல் நாள் சந்திப்பு முடிவடைந்ததும், அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சூர்ஜேவாலா கூறியிருந்தார்.

இந்த சந்திப்புகளில் ஈடுபட்டிருந்த மூத்த தலைவர் ஒருவர் பிபிசியிடம் போசும்போது, "நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு என்பது கட்சியின் முடிவை சிவகுமார் ஏற்கும் விதத்திலேயே இருந்தது," என்றார்.

சிவகுமார் கட்சி தலைமையிடம் இரண்டு வாதங்களை முன்வைத்தார்.

முதல் கட்டமாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் குழு கூட்டத்தில், யார் தலைவர் என்ற முடிவை, உயர்நிலை குழுதான் எடுக்கும் என்று ஒரு வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறுபுறம், 1989இல் வீரேந்திர பாட்டீலாக இருந்தாலும் சரி, 1999இல் எஸ்.எஸ். கிருஷ்ணாவாக இருந்தாலும் சரி, கடந்த காலத்தில் மாநில தலைவர் பதவி வகித்தவருக்கு மட்டுமே முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது என்று வாதிட்டார் சிவகுமார்.

இதன் பின்னணியில் கட்சியின் எம்எல்ஏக்களைக் கொண்டு ரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

அந்த வாக்கு, மேலிட தலைவர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையிலான பார்வையாளர்கள் முன்னிலையில் உள்ள வாக்குப்பெட்டியில் செலுத்தப்பட்டது. அதில் சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு தங்களுக்கு விருப்பமான ஒருவரின் பெயரை உறுப்பினர்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நெருக்கடி தொடங்குவதற்கு முன்பே, "ரகசிய வாக்கெடுப்புக்கு நான் ஆதரவு. ஏனென்றால் அதுவும் ஜனநாய தேர்வில் ஒரு வழிமுறை," என்று ஊடகங்களுக்கு சித்தராமையா பேட்டி கொடுத்தார்.

மேலிடத்தில் சித்தராமையாவின் செல்வாக்கு

காங்கிரஸ் கர்நாடகா

பட மூலாதாரம், ANI

இந்த நிலையில்தான் இந்த பிரச்னையைத் தீர்ப்பதில் சோனியா காந்தியின் தலையீட்டை மேலிட தலைவர்கள் நாடினர்.

சோனியாவின் பங்கு குறித்து அரசியல் ஆய்வாளரும், மைசூரு பல்கலைக்கழகத்தின் கலைத் துறை தலைவருமான பேராசிரியர் முசாபர் ஆசாதி பிபிசியிடம் கூறுகையில்,, "சோனியா காந்தியால் மட்டுமே சிவகுமாரிடம் செல்வாக்கை செலுத்த முடியும். காரணம், சோனியாவின் சொற்படியே சிவகுமார் நடந்து கொள்வார்," என்றார்.

2020ஆம் ஆண்டு, அமலாக்கத்துறை வழக்கில் டி.கே. சிவகுமார் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவரை நேரிலேயே போய் சந்தித்தார் சோனியா. அந்த சந்திப்பால் உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்ட டி.கே. சிவகுமார், தமது விசுவாசத்தை மற்ற மேலிட தலைவர்களை விட சோனியாவிடமே அதிகமாக காட்டி வருகிறார்.

அந்த சிறை சந்திப்பின்போது சோனியா காந்தி, சிவகுமாரை கட்சியின் மாநில தலைவராக ஆக்குவதாக உறுதியளித்ததாகவும் பேசப்பட்டது. அதுபோலவே, சிறையில் இருந்து சிவகுமார் வெளியேவந்தபோது அவர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக கட்சி மேலிடத்தால் நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, சிவகுமாருடன் ஒப்பிடும்போது சித்தராமையாவுக்கே முதல்வர் பதவிக்கான தேர்வில் முன்னுரிமையை காங்கிரஸ் மேலிடம் கொண்டிருப்பதற்கான காரணத்தையும் பேராசிரியர் ஆசாதி விவரித்தார்.

"சித்தராமையா சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் எளிதாக அணுகக்கூடியவர். சமூகப் பொறியியலில் அவர் திறமையானவர். தூய்மையான செல்வாக்குடையவர். நல்ல நிர்வாகத்திற்கும் பெயர் பெற்றவர்" என்கிறார் அவர்.

மறுபுறம், சிவகுமாரின் பின்னடைவுக்கான காரணங்களாக, இரண்டு விஷயங்களை பேராசிரியர் ஆசாதி குறிப்பிட்டார்.

சிவகுமார் முதல்வரான பிறகு, அவர் மீதான வழக்குகளை மத்திய அமைப்புகள் இறுக்கி, அவரை சிறையில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அது கட்சிக்கு மாநில அளவிலும் தேசிய அளவிலும் பாதிப்பாக அமையும் என காங்கிரஸ் மேலிடம் கருதியிருக்கலாம். இந்த வாய்ப்பை ஒதுக்கி விட முடியாது என்று அவர் கூறினார்.

"அதேசமயம், சித்தராமையா ஓய்வு பெற்றதும், அடுத்த முதல்வர் வாய்ப்பு தாமாகவே சிவகுமாருக்கு வந்து சேரும். அதை தவிர்க்க முடியாது.இதை சொல்லித்தான் அவரை காங்கிரஸ் மேலிடம் சம்மதிக்க வைத்திருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார் பேராசிரியர் ஆசாதி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: